அவிநாசி: ஓம்சக்தி கோஷம் முழங்க, துலுக்கமுத்தூர் மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.துலுக்கமுத்தூரில் உள்ள மாகாளியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் திருப்பணி நிறைவுற்று கும்பாபிஷேக விழா, கடந்த 17ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நான்காம் கால நிறைவு யாக பூஜைகள் நேற்று அதிகாலை 5.00 மணிக்கு துவங்கின. மஹா பூர்ணாஹூதியை அடுத்து, விநாயகர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கலசங்களை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோபுரம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகம் செய்தனர்.தொடர்ந்து, மாகாளியம்மனுக்கு மஹா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பாலசந்திரசேகர சிவம் தலைமையில் சிவாச்சாரி யார்கள் கும்பாபிஷேக பூஜைகளை மேற்கொண்டனர். இன்று முதல் 48 நாட்களுக்கு தினமும் மதியம் 12.00 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது.