பதிவு செய்த நாள்
21
ஜூன்
2013
10:06
தமிழகத்தில், மழை பெய்ய வேண்டி, பல்வேறு கோவில்களில் நேற்று, யாகம் நடந்தது. இன்றும் பல்வேறு கோவில்களில், யாகம் நடக்க உள்ளது. பல்வேறு மாவட்டங்களில், ஜூலை, 1ம் தேதி வரை, யாகம் நடக்கிறது. தமிழகத்தில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போனது; இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுடன், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. விவசாயம் பெரும் பிரச்னைக்குள்ளானது. இதனால், தமிழகமே அவதிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, ஐந்து பெரிய கோவில்களில், மழை வேண்டி யாகம் நடத்த, இந்து சமய அறநிலையத் துறை, அனைத்து மாவட்ட இணை ஆணையர்களுக்கும், கடந்த வாரம் உத்தரவிட்டது. பல கோவில்களில், வருண பகவானுக்கு நேற்று யாகம் நடந்தது. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த யாகத்தில், அமைச்சர் செந்தூர் பாண்டியன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கோவிலுக்கும், ஆகம விதிகளுக்கு தகுந்தாற்போல், யாகம் நடத்தப்படுகிறது. முருகன் கோவில்களில், ருத்ராபிஷேகம்; பெருமாள் கோவில்களில், திருமஞ்சனம்; சிவன் கோவில்களில், நந்தி சிலைக்கு கழுத்து வரை பொன்னாடை போர்த்தி, தொட்டி போல் அமைத்து, பூஜை; அம்மன் கோவில்களில், பால், தயிர், இளநீர் அபிஷேகம் நடத்தப்படும். மேலும், திருஞானசம்பந்தர் மழை வேண்டி பாடிய பாடல்கள் பாடப்படும். வீணையில், ஆனந்த பைரவி, ரூபவாகிணி ராகங்கள் இசைக்கப்படும். யாகத்தின் போது, 60 வேத விற்பன்னர்களை ஈடுபடுத்தவும், ஹோமத்தில் திரளான பக்தர்களை கலந்து கொள்ள செய்யவும் ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்கான பணிகளை, அந்தந்த கோவில் நிர்வாகமே மேற்கொள்கிறது. தமிழகத்தில் உள்ள, 160 பெரிய கோவில்களில், யாகம் நடத்துவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. - நமது நிருபர்