சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவில் கடந்த 2009ம் ஆண்டு முதல் அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படுகிறது. அப்போது முதல் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் 9 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை உண்டியல் திறக்கப்படுகிறது. நேற்று 22வது முறையாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், ஆய்வாளர் தங்கராஜ், மேலாளர் முத்துக்குமார் மேற்பார்வையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், வங்கி ஊழியர்கள் காணிக்கை பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் காணிக்கையாக 9 லட்சத்து 25 ஆயிரத்து 631 ரூபாய் ரொக்கம், 12 கிராம் தங்கம், 65 கிராம் வெள்ளி, மலேசியா ரிங்கட் 445, அமெரிக்கா டாலர் 55, ஓமன் பைசா 100, ஆஸ்திரேலியா டாலர் 10, இங்கிலாந்து பவுண்ட் 20 ஆகியவை இருந்தன.