பதிவு செய்த நாள்
21
ஜூன்
2013
04:06
பரத்வாஜரின் வழிகாட்டுதலின் படி சித்ரக்கூடத்தில் வீடு அமைக்கப்பட்டது. அந்த வீட்டில் குடியேறுவதற்கு முன் கிருஹப்பிரவேச சாந்திகள் நடந்தன. சீதாதேவி சுபமுகூர்த்த நேரத்தில் பர்ணசாலை என அழைக்கப்பட்ட அந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள். யானைகள், பாம்புகள், கரடிகள், மான்கள், ஆகியவற்றின் சப்தம் அமைதி நிறைந்த அந்த இடத்தை அவ்வப்போது ஆக்கிரமித்தது. அவர்கள் வீடு அமைத்திருந்த இடத்தின் அருகே மால்யவதி என்ற ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு புண்ணிய நதி. தினமும் மூவரும் அந்த நதியில் நீராடி அயோத்தியை விட்டு வந்த துக்கத்தையே மறந்து போயிருந்தார்கள். இந்நிலையில் வால்மீகி முனிவரையும் அவர்கள் கண்டார்கள். அவரது ஆசியைப் பெற்றார்கள். காட்டில் இப்படி காட்சி நடந்து கொண்டிருக்க, அயோத்தியில் சூழ்ந்த இருள் இன்னும் விலகாமல் இருந்தது. அமைச்சர் சுமந்திரர் நாடு வந்து சேர்ந்தார். அவரைப்பார்த்த மக்கள், எங்கள் ராமனை எங்கே? அவரை எங்கே விட்டு வந்தீர்கள். உங்களால் ராமனை விட்டு விட்டு உயிரோடு திரும்பவும் முடிந்ததா? என்று ஆவேசத்தோடும் துக்கத்தோடும் கேட்டனர். சுமந்திரர் ஹீனமான குரலில்,அன்புக்குரிய மக்களே, ராமபிரான் கங்கைக்கரையில் என்னை நிறுத்தி விட்டார். நான் அவரோடு வருவதாக வாதம் புரிந்தேன். தந்தையை பார்த்துக்கொள்வது உங்கள் கடமை என உத்தரவிட்டு விட்டு அவர் காட்டுக்குள் சென்று விட்டார். நம் இளையராஜாவின் கட்டளையை நிறைவேற்றவே உயிரோடு திரும்பினேன், என்றார்.
அவரது கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் கொட்டியது. அங்கிருந்து அரண்மனையை நோக்கி சென்றார் சுமந்தரர். தசரதர் தங்கியிருந்த அறைக்கு சென்றார். ராஜபத்தினிகள் சுமந்திரரை சூழ்ந்து கொண்டனர். அவர்களது கண்களில் ராமன் எங்கே என்ற கேள்வி தொக்கி நின்றது. சுமந்திரர் தடுமாறிய கால்களுடன் தசரதர் இருக்கும் அறைக்குள் நுழைந்தார். உயிர் இருக்கிறதா இல்லையா என்ற நிலையில் அசைவற்று போயிருந்த தசரத மகாராஜாவின் கால்களில் விழுந்தார். ஹோவென கதறினார். அதைப்பார்த்து ராஜபத்தினிகள் என்ன நடந்தது என்பதை யூகித்து கொண்டனர். கவுசல்யாவும் சுமித்ராவும் பிணம் போல் கிடந்த தசரதருக்கு தங்களால் ஆன சேவையை செய்து கொண்டிருந்தனர். கவுசல்யாவுக்கு துக்கம் தாளவில்லை. என் அன்புக்குரியவரே! என் மகனோடு தாங்கள் அனுப்பிய தூதர் திரும்பி விட்டார். நீங்கள் கைகேயிக்கு மிகச்சுலபமாக வரத்தை கொடுத்து விட்டீர்கள். அதன் விளைவுகளைத்தான் அனுபவித்து கொண்டிருக்கிறீர்கள். அப்போது யோசிக்காமல் இப்போது வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை.
உங்கள் மகனை காட்டுக்கு அனுப்பியதற்காக யார் முகத்திலும் விழிக்காமல் இப்போது வெட்கப்பட்டு என்ன பலன்? நடந்து முடிந்ததை நினைப்பவர்கள் எதிலும் வெற்றியடையாமல் போகிறார்கள். நீங்கள் துக்கப்படுவது போல வேஷம் போட்டால் எனது துக்கம் குறைந்து விடும் என்று கருதுகிறீர்களா. ஒரு வேளை உலகத்திற்கு பயந்து துக்கப்படுவது போல நடிக்கிறீர்களா? அல்லது கைகேயி இருக்கிறாள் என பயந்து தூதுரிடம் எதுவும் கேட்காமல் இருக்கிறீர்களா? அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். அவள் இப்போது இங்கு இல்லை. எனவே அவளைப்பற்றிய பயத்தை விடுங்கள். என் மகன் என்ன ஆனான்? என கேட்டு சொல்லுங்கள், எனக்கதறினாள்.தசரதருக்கு மனம் பொறுக்கவில்லை. கவுசல்யாவின் நிலைமையை அவர் புரிந்து கொண்டார். இதற்குள் அரண்மனைக்குள் நாட்டு மக்களும் புகுந்து விட்டார்கள். ராமனுக்கு என்ன ஆயிற்று என உடனடியாக கேட்டு சொல்லுங்கள் என மகாராஜாவை வற்புறுத்தினர். கண்களில் நீர் ததும்ப,சுமந்திரா! என் மகன் தர்மத்தின் தலைவன். காட்டில் இப்போது எந்த மரத்தின் கீழ் படுத்து உறங்குகிறான். இத்தனை நாளும் பஞ்சு மெத்தையில் புரண்ட அவன் எந்த சருகின் மீது படுத்திருக்கிறான்.
சொந்தத்தை விட்டு விலகாத அவன் அனாதை போல எப்படித்தான் உறங்குகிறானோ? அவன் வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் ஒரு படையே பின்னால் செல்லும். ஆனால் தன்னந்தனியாக காட்டில் என்ன செய்கிறான். ஒரு பெண்ணின் பாவத்தையும் சுமந்து கொண்டேனே. சீதாப்பிராட்டி எப்படி இருக்கிறாள்? புலியும் பாம்பும் சூழ்ந்த அந்த காட்டில் என்னதான் செய்கிறாளோ! என் லட்சுமணன் ஏதாவது சொல்லி அனுப்பினானா? நீ இங்கிருந்து சென்றது முதல் ராமன் வனத்திற்குள் புகுந்தது வரை உள்ள செய்திகளை அனைவரும் அறியும்படியாக சொல்,என்றார். சுமந்திரர் ராமன் சொன்னதை எல்லாம் சொல்ல ஆரம்பித்தார். அரசே! ராமபிரான், தங்களை குறித்து ஒரு வார்த்தை கூட வருத்தப்பட்டு சொல்லவில்லை. என் தந்தைக்கும் அந்தப்புறத்தில் இருக்கும் ராஜபத்தினிகளுக்கும் என் தாய்க்கும் எனது வணக்கத்தை சொல்லுங்கள் என ராமபிரான் சொல்லி அனுப்பினார். உங்கள் திருவடிகளின் ஆசி என்றும் வேண்டும் என கூறினார். பரதனை சக்கரவர்த்தியாக ஏற்று அவனது கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என உத்தரவிட்டார், என்றார். லட்சுமணனைப்பற்றியும் சுமந்திரர் குறிப்பிட்டார்.
ராமனைப்போல் லட்சுமணன் அமைதியாகப் பேசவில்லை. மிக கடுமையாக தங்களை கண்டித்தார். என்ன காரணத்திற்காக என் அண்ணனை காட்டிற்கு அனுப்பினார் என கடிந்து கொண்டார். இனி உங்களை தந்தையாக கொள்ள முடியாது. ராமபிரானே இனி எனக்கு தந்தை என சொல்லிவிட்டார். சீதாப்பிராட்டி தன் கணவனைப்பற்றி அதிகமாக கவலை கொண்டுள்ளார். நேற்று வரை பூக்களின் மீது நடந்து சென்ற தன் கணவன் கொடிய காட்டில் எப்படித்தான் நடந்து செல்வாரோ என மனம் வருந்துகிறார், என்றார். சுமந்திரர் சொன்னதை கேட்ட தசரதர் அசையாமல் அமர்ந்திருந்தார். ஊரே அவரை தூற்றியது. ஆனால், நடந்ததெற்கெல்லாம் தன் முன்வினைப்பாவமே காரணம் என்பதை தசரதர் அறிந்திருந்தார். கவுசல்யாவிடம் ராமனை தான் பிரிந்ததற்கான காரணத்தை சொல்ல துவங்கினார். கவுசல்யா! என்னை எல்லாரும் தூற்றுகிறீர்கள். ஆனால், இப்போது நடக்கும் சம்பவங்களின் பின்னணியைக் கேள். நமக்கு அப்போது திருமணம் ஆகவில்லை. மக்களைக்காக்க ஒரு முறை வேட்டைக்கு புறப்பட்டேன். எனக்கு சப்தவேதனம் என்ற வித்தை தெரியும். மிருகங்களின் சப்தத்தை வைத்தே, அவை எங்கு நிற்கின்றன என்பதை நுணுக்கமாக அறிந்து எங்கு நிற்கிறேனோ, அங்கிருந்த படியே அந்த மிருகத்தை அம்பால் வீழ்த்தும் கலையே சப்தவேதனம் ஆகும். இதற்கென்றே விசேஷமாக ஒரு பாணத்தையும் வைத்திருந்தேன். சரயு நதிக்கரையில் மிருகங்களுக்காக காத்திருந்தேன். அங்கு தான் பல மிருகங்கள் தண்ணீர் குடிக்க வரும். அப்போது யானை தண்ணீர் குடிப்பது போல ஓரிடத்தில் சப்தம் எழுந்தது. நானும் அந்த இடத்தை நோக்கி அம்பை எய்தேன். அந்த இடத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டது.