பதிவு செய்த நாள்
03
மார்
2011
04:03
கெட்டவர்கள் பிறருக்கு நல்லுரை சொல்வது போல நடிப்பது ஒரு தனிக்கலை. அந்தக்கலைக்கு அடிபணியாத ரசிகர்களே இல்லை. இப்போது ஒரு ரசிகையில் நிலையில் இருந்த கைகேயி, மந்தரையின் சொற்களைக் காது கொடுத்து கேட்க ஆரம்பித்தாளோ இல்லையோ? இதுதான் சமயமென மந்தரை தன் பேச்சில் கவர்ச்சியைக் கூட்டினாள். பேச்சு... எல்லாருக்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷம். அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் உலகம் வாழும். கெட்ட வழியில் பயன்படுத்தி மூளைச்சலவை செய்தால் ஒரு சாம்ராஜ்யத்தையே சரித்து விடும். இதனால் தான் பேச்சைக் குறை என்கிறார்கள். பேச்சால் நல்லதை விட கெட்டதே அதிகமாக நடக்கும். இந்த பேச்சு தான் கிடைத்தற்கரிய ராம ராஜ்யத்தை சரித்தும் விட்டது. இரு மனசாக ஊசலில் இருந்த கைகேயி, இப்போது மந்தரையின் மந்திரப் பேச்சுக்கு எப்படியோ கட்டுப்பட்டு பேச்சுக்கு எப்படியோ கட்டுப்பட்டு விட்டாள். மந்தரை தொடர்ந்தாள். கைகேயி, என் வாதத்திற்கு ஆதாரமாக இன்னும் சில சொல்கிறேன், கேள். நீ இங்கு திருமணமாகி வந்த புத்தில், உன் மூத்தாள் கவுசல்யாவை பலமுறை அவமானப்படுத்தியது நினைவில் இருக்கிறதா? இதை மனதில் கறுவிக் கொண்டு தானே இருப்பாள் அவள். சமயம் வரட்டுமென காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் சந்தர்ப்பமே கொடுக்கக்கூடாது தோழி! அந்த அவமானங்களுக்கு ராமனின் ஆட்சி வந்ததும், உன்னைப் பதிலுக்கு அவமானப்படுத்துவாள் அவள். ராமன் நல்லவன் என்ற கோணத்திலேயே இதுவரை சிந்தித்துக் கொண்டிருந்த கைகேயியை கவுசல்யாவால் ஆபத்து என்ற ரீதிக்கு மாற்றி விட்டாள் மந்தரை.
அடுத்து ஆசை விதைகளை விதைத்தாள். கைகேயி! உன் மகன் பரதன் தான் பட்டத்துக்கு உரியவனாக இருக்க வேண்டும். அவன் ராஜாவாகி விட்டால், உன் சொல் மட்டும் தான் இந்த நாட்டில் எடுபடும். உன்னை யாராலும் அசைக்க இயலாது. உன் விரல் அசைவுக்கு இந்த நாடே தலை வணங்கும், என்றதும் கைகேயியின் மனது சற்று சபலப்படவும் செய்தது. அவள் அநேகமாக மந்தரை சொன்னதை சரி என்றே ஒப்புக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்து விட்டாள். இருப்பினும் அமைதியாக இருந்தாள். பேச்சாளர்களுக்கு தெரியாதா? கேட்பவர்களின் மனம் எதை யோசித்துக் கொண்டிருக்குமென்று? கைகேயி! நான் சொல்வதை சரியென்று உன் மனம் ஒப்புக்கொண்டு விட்டது போல் தோன்றுகிறது. ஆனால், இதை எப்படி உன் கணவரிடம் கேட்பது என்று தானே தயங்குகிறாய்? என்றாள் மந்தரை. கைகேயியும் குழப்பமான நிலையில் தலையை ஆட்டினாள். அடி அப்பாவிப் பெண்ணே! உன் வலிமை உனக்கே புரியாமல் நீ இப்படி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளாய்? என்ன சொல்கிறாய் மந்த்ரா? அடியே! நீ இந்த வீட்டுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த காலத்தை மறந்து விட்டாயா? உன் மூத்தாளுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லாததால், தசரதர் உன் ஊருக்கு வந்தார். கேகய நாட்டின் கோமானான உன் தந்தையிடம், தசரதர் உன்னை இரண்டாம் தாரமாகக் கேட்டார். அப்போது உன் தந்தை என்ன கேட்டார் என்று உனக்கு நினை விருக்கத்தானே செய்கிறது?என்று கேட்டதும் கைகேயி பழைய நினைவுகளை அசை போட்டாள். அப்போதிருந்த நிலையில், ராஜ்யத்தின் எதிர்கால நன்மைக்காக கேகய மன்னனிடம் கைகேயியை பெண் கேட்டார் தசரதர்.
மன்னன் தன் மகளின் வாழ்க்கை நலன் கருதி,சக்ரவர்த்தி, தாங்கள் கேட்பது சரிதான். ஏற்கனவே முதல் மனைவி இருக்கிறாள். அவளும் அழகிதான். இளமையுடன் இருப்பவள் தான். இந்த திருமணத்துக்கு பிறகு அவளுக்கும் குழந்தை பிறக்காது என்பது என்ன நிச்சயம்? அதனால் நான் ஒரு நிபந்தனை விதிப்பேன், என்றார் கேகய மன்னர். அது என்ன? என்ற தசரதரிடம், அரசே! தங்களுக்கும் கைகேயிக்கும் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு தான் நீங்கள் பட்டம் சூட்டவேண்டும். முதல் ராணிக்கு குழந்தை பிறந்தாலும் பட்டம் சூட்டக்கூடாது. இதற்கு சம்மதமென்றால் பெண் தருகிறேன் என்றார். சற்று கூட சிந்திக்காமல், தசரதர் சரியென வாக்கு கொடுத்து விட்டார். கைகேயி! உன் பக்கத்தில் நியாயம் வலுவாக இருக்கிறது. அதனால் உன் மகன் தான் அரசன். அவனை ராஜகோலத்தில் பார்க்க எனக்கு ஆசையடி! ஆனால், பெற்றவளான நீ அவனை ஏன் ராமனின் அடிமை போல் வாழ வைக்க எண்ணுகிறாய்? என்றாள். ஒரு வழியாக கைகேயி சம்மதித்தே விட்டாள். கொடும் திட்டம் அயோத்தி மண்ணில் வேரூன்றப்பட்டு விட்டது. ராமாயணம் படிப்பவர்கள் மேலோட்டமாக கதை படிப்பது போல படிக்கக்கூடாது. வாக்களித்தல் என்பது மிகமிக யோசனை செய்து செய்யப்பட வேண்டிய விஷயம். இதை எந்தச் சூழ்நிலையிலும் மனிதன் செய்யவே கூடாது. செய்தால் காப்பாற்ற வேண்டியது வரும். வாக்கு காப்பாற்றப்பட்டால், வாழ்க்கை முடிந்து விடும். தசரத சக்கரவர்த்தி ராமாயணத்தின் ஆரம்பத்திலேயே இறந்து போகிறார் என்றால், அவர் கொடுத்த வாக்கு தான் காரணம். இதை உணர்ந்து, வாக்கு கொடுப்பதையே தவிர்க்க முயல வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்குமென அறியாத மனிதன், வாக்கு கொடுப்பதில் அர்த்தமே இல்லை.
இத்தனைக்கும் தசரதர் சாமான்யப்பட்ட மனிதரல்ல! பத்து தேர்களை ஒரே நேரத்தில் இயக்கும் வல்லமை படைத்தவர் அவர். அதனால் தான் தச(ம்)ரதர் ஆனார். தசம் என்றால் பத்து என பொருள். தன் நாட்டில் ஒருமுறை சனியின் சஞ்சாரத்தால் பஞ்சம் வந்த போது மக்களைக் காக்க சனீஸ்வரன் இருக்குமிடத்திற்கே போர் புரியச் சென்றதாக புராணக்கதை ஒன்று சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட வீரன், எதையும் ஆராய்ந்து செய்யும் அறிஞன் மூன்று இடங்களில் மட்டும் தவறு செய்தார். வாழ்க்கையே அழிந்து போனது. ஒன்று கைகேயின் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி, மற்றொன்றுகைகேயிக்கே செய்து கொடுத்த சத்தியம், இன்னொன்று வேட்டைக்கு சென்ற இடத்தில் அவசரப்பட்டு மிருகத்திற்கு பதிலாக ஒரு பார்வையற்ற சிறுவனின் உயிரைப் பறித்து ஏழை பெற்றோரை பரிதவிக்கச் செய்து அவர்களின் சாபத்தை பெற்றுக்கொண்டது. மனிதன் எத்தனை பெரிய திறமைசாலி யாயினும், ஒரே ஒரு தவறு செய்தால் போதும். முடிந்து போகும் அவனது சரித்திரம். ஆனால், மானிட வாழ்வில் இதை தவிர்க்க இயலாது. சக்கரவர்த்தி தசரதர் ஒருமுறை தேவலோகத்திற்கே போருக்கு போனார். தேவர்களை அசுரர்கள் துன்பப்படுத்தினர். சம்பாசுரன் என்பவன் செய்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவனைக் கொல்வதற்காக தசரதரின் உதவியையும் தேவர்கள் கேட்டனர். தசரதரும் விண்ணுலகம் சென்றார். மிகக்கடுமையான போர் நடந்து கொண்டிருந்தது. தசதரரை நோக்கி அசுரர்கள் எய்த ஒரு அம்பின் விஷத்தன்மையால் அவர் நினைவிழந்தார். அப்போது அங்கே ஒரு பெண் வந்தாள். தேர்க்கயிறைப் பிடித்தாள். வேகமாக அங்கிருந்து ஓட்டிச் சென்று எதிரிகளிடமிருந்து அவரது உயிரைக் காப்பாற்றினாள். யார் அவள்?.