பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
10:06
நாமக்கல்: பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் மற்றும் நாமகிரித் தாயார் சன்னதியில், மழை வேண்டி கலசங்கள் வைத்து வருண ஜபம் நடத்தப்பட்டது. பருவ மழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. பாசன வசதி அளித்து வரும் காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்டவை வறண்டு, வானம் பார்த்த பூமியாகி வருகிறது. விளை நிலங்கள் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், மழை வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில், வருண யாகம் அல்லது வருண ஜபம் நடத்தும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் மற்றும் நாமகிரித்தாயார் சன்னதியில், கலசங்கள் வைத்து வருண ஜபம் நடந்தது. காலை, 10 மணி நடந்த வருண ஜபத்தின் போது, மழை வேண்டி வேத மந்திரங்களை கோவில் அர்ச்சகர்கள் முழங்கி பூஜை நடத்தினர். பின், வருண ஜபத்தில் வைக்கப்பட்ட கலச தீர்த்ததைக் கொண்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.