பதிவு செய்த நாள்
27
ஜூன்
2013
12:06
சைவசித்தாந்த மெய்ப்பொருளியலை விளக்குகின்ற அடிப்படை நூல்கள் மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும். இவற்றுள் ஏழாவதாக வைத்து எண்ணப்படும் நூல், ஆசிரியர் உமாபதி சிவனார் அருளிச் செய்த சிவப்பிரகாசம் ஆகும்.
மெய்கண்டாரின் சிவஞான போதம் முதல் நூல். சிவஞான போதத்திற்கு மெய்கண்டாரின் மாணவராகிய அருள்நந்தி சிவனார் அருளிச் செய்த சிவஞான சித்தியார் வழிநூல். உமாபதி சிவம் அருளிச் செய்த சிவப்பிரகாசம் புடைநூல் அல்லது சார்பு நூல் என்று வழங்கப்பெறும்.
சிவஞான போதத்தின் முதல் உரை நூலாக அருள்நந்தி சிவம் எழுதிய சிவஞான சித்தியார் விளங்குகிறது. இது செய்யுள் நடையில் அமைந்தது. பரபக்கம், சுபக்கம் என்ற இருபெரும் பகுதிகளைக் கொண்டது. சிவஞான போதத்தின் செறிவான கருத்துக்கள் சிவஞான சித்தியாரில் விளக்கப்பட்டுள்ளனவே தவிரப் புதிய செய்திகள் சிவஞான சித்தியாரில் அதன் ஆசிரியரால் இணைக்கப்படவில்லை.
சிவப்பிரகாசம் புடைநூல் என்று வழங்கப்படுவதற்கேற்பச் சிவஞானபோதம், சிவஞான சித்தியார் ஆகிய நூல்களை அடியொற்றியும், இறைவன் திருவருளால் உமாபதிசிவனார்க்கு உணர்த்தப்பட்ட செய்திகளும், ஆகம நூல்களில் காணக்கிடைக்கின்ற செய்திகளும் கலந்து எழுதப்பட்ட நூலாகும், இதனை விளம்பிய நூல் அவை இரண்டும் விரும்பி நோக்கிக் கருத்தில் உறை திருவருளும் இறைவன் நூலும் கலந்து என்று இந்நூலின் பதினோராவது பாடலில் ஆசிரியர் உமாபதி சிவம் எடுத்துரைக்கிறார்.
சிவப்பிரகாசம், காப்புச் செய்யுள் தவிர மொத்தம் நூறு விருத்தப்பாக்களால் ஆயது. இது பொது அதிகாரம், உண்மை அதிகாரம் என்று இரண்டு பகுதிகளைக் கொண்டது. பொது அதிகாரத்தில் ஐம்பது பாடல்களும் உண்மை அதிகாரத்தில் ஐம்பது பாடல்களும் உள்ளன.
இந்நூலுக்குச் சிவப்பிரகாசம் என்ற பெயரை ஆசிரியர் உமாபதி சிவமே சூட்டினார் என்பது நூலின் வழியும் நூலின் பெயரும் கூறுமிடத்து ஆசில் சிவப்பிரகாசம் ஆகும் அன்றே என்று கூறுவதனாலும் நூலின் இறுதியில் இச் சிவப்பிரகாச நன்னூல் என்று அவரே குறிப்பிட்டுள்ளதிலிருந்தும் தெரிய வருகின்றது.
சிவப்பிரகாசம், பெரும்பாலும் மெய்கண்டாரின் சிவஞான போதத்தை அடியொற்றிச் செல்வது என்பது முதல் நூற்பா தொடங்கி பன்னிரண்டாம் நூற்பா வரை காணப்படும் செய்திகளை நிரல்பட அமைத்துள்ளமையிலிருந்து புலனாகின்றது. இவ்வாறு பழைய உரை ஆசிரியர்கள் அமைத்துக் காட்டுவர். ஆயினும் ஆங்காங்கே மூல நூலிலிருந்து அமைப்பு முறையும், செய்திகளும், சற்றே விரித்தும் சுருக்கியும், முறைமாற்றியும் தரப்பட்டுள்ளமையை உணரலாம். சான்றாகச் சிவஞான போதத்தின் மூலம் நூற்பா சிவப்பிரகாசத்தில் பதின்மூன்றாவது பாடலில் தொடங்குகிறது. அதற்கு முந்திய பாடல் அடையடக்கமாக அமைகிறது. ஆனால் எட்டாம் பாடல் தொடங்கிப் பத்தாம் பாடல் முடிய தீக்கை முறையை ஆசிரியர் விளக்குகிறார். வைப்பு முறையில் உள்ள மாற்றத்துக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. முதல் வழி நூல்களுக்கு முரணாகாமலும், அதே நேரம் சிறுசிறு மாறுபாடுகளோடும் சிவப்பிராகம் விளங்குகிறது. இது புடைநூலுக்கு விதிக்கப்பட்ட இலக்கணத்தோடு பொருந்துவதே.
இவரும் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபுவே றுடையது புடைநூ லாகும்
என்பது நன்னூல் நூற்பா இதில் இருவர் நூல் எனப்பட்டது முதல் நூலையும் வழி நூலையும் ஆகும்
காப்பு
ஒளியான திருமேனி உமிழ்தானம் மிகமேவு
கனியார வரும்ஆனை கழல்நாளும் மறவாமல்
அளிஆளும் மலர்தூவும் அடியார்கள் உளம்ஆன
வெளியாகும் வலிதாய வினைகூட நினையாவே
ஒளியே வடிவான திருமேனியில் மதநீர் பொழிகின்ற யானை முகத்தினை உடைய விநாயகப் பெருமானுடைய இரண்டு திருவடிகளையும் நாள் தவறாமல், மறவாமல் வண்டாடும் பூக்களினாலே வழிபடுகின்ற தொண்டர்களின் உள்ளத்து அறியாமையாகிய இருள் நீங்கித் திருவருளாகிய பேரொளி என்றும் நிலைத்திருக்கும். வலிமை மிக்க வினைகளும் அத்தகைய அடியார்களை வந்துபொருந்தா. எனவே இந்நூல் முற்றுப் பெறதற்கு மூத்தபிள்ளையாரது திருவடிகளை வழிபடுகிறேன்.
உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றையும் கடந்தது இறைவனுடைய தன்னியல்பு. இது உண்மை இயல்பு. சொரூப இலக்கணம் எனவும் கூறப்படும். அது பேரொளிப் பிழம்பாக விளங்கும். அப்பேரொளியே ஞானவடிவைக் குறிக்கும், விநாயகப்பெருமானுடைய திருமுகம் பெருமித மிக்க யானையின் முகம் ஆதலால் மதநீர் பொழியும் இயல்பு குறிக்கப்பட்டது. அவர் திருவடிகளை வண்டுகள் மொய்க்கும் மலர்களைத் தூவி வழிபடுகின்ற அடியார்களின் உள்ளம் அப்பெருமானின் அருளால் ஒளியாய் நிறையும். அதாவது அறியாமையாகிய இருள் அடியார்களின் உள்ளத்திலிருந்து நீங்கும். அத்தகைய அடியார்களுக்கும் வலிமை மிக்க வினைகள் வந்து பொருந்த மாட்டா.
விநாயகப் பெருமானின் இரண்டு திருவடிகளும் ஞானசத்தி, கிரியா சத்தி ஆகியவற்றைக் குறிக்கும். அவரது வலத் திருவடி மலத்தை நீக்கி மெய்யறிவைத் தரும் ஞானசத்தி ஆகும். இடத் திருவடி வினையின் வலிமையை நீக்கும் கிரியாசத்தியின் வடிவினது ஆகும்.
இந்நூல் சிவப்பிரகாசம் என்ற பெயரினை உடையது. அதற்கேற்ப ஒளி என்ற சொல்லுடவ் இக்காப்புச் செய்யுள் தொடங்குகிறது ஒரு நயம். இந்நூலின் பயன் மலநீக்கமும் சிவப்பேறும். சிவஞானம் ஒளி வடிவம் கொண்டதால் இருள் மலம் நீங்கும் என்பதும், திருவடிப்பேற்றால் கொடியவினை நீங்கும் என்பதும் இக்காப்புச் செய்யுளில் வலியுறுத்தப்பட்டன.
பாயிரம் - மங்கல வாழ்த்து
கூத்தப் பெருமான்
ஓங்கொளியாய் அருள்ஞான மூர்த்திஆகி
உலகம்எலாம் அளித்துஅருளும் உமையம்மை காணத்
தேங்கமழும் மலர்இதழி திங்கள் கங்கை
திகழ்அரவம் வளர்சடைமேல் சேர வைத்து
நீங்கல்அருள் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள்
நின்றுஇமையோர் துதிசெய்ய நிருத்தம் செய்யும்
பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின் மேலும்
புந்தியினும் உறவணங்கிப் போற்றல் செய்வாம்
பேரொளிப் பிழம்பாகித் திருவருளாகிய ஞானத்தையே தனது வடிவமாகக் கொண்டு எல்லா உலகங்களையும் அளித்து அருளும் உமையம்மை காணுமாறு, மணம் வீசுகின்ற கொன்றை மலரினையும், பிறை நிலவையும், கங்கையையும், திகழ்கின்ற பாம்பினையும் தன்னுடைய நீண்ட சடையின் மீது சேரவைத்து, நீங்குவதற்கு அரிய பிறவித் தொடர்ச்சியினின்றும் உயிர்கள் நீங்குவதற்காகத் திருச்சிற்றம்பலத்தின் உள்ளே நின்று, வானவர்கள் துதி செய்யத் திருநடனம் புரிந்தருளும் அம்பலவாணப் பெருமானது தாமரை மலர் போன்ற திருவடிகளை நம் தலைமீதும் அறிவினிலும் கொண்டு வணங்கிப் போற்றுவோம்.
உமாபதிசிவம், தாம் வழிபடுகடவுளாகிய தில்லைக் கூத்தப் பெருமானுக்கு வணக்கம் செலுத்துகிறார். இங்கு வழிபடுகடவுளே அவர் எழுதத் தொடங்கிய நூலுக்கு ஏற்புடைக் கடவுளாகவும் அமைகின்றமை கருதத்தக்கது. அம்பலவாணப் பெருமானுடைய திருவடிவம் அலகில் சோதி ஆதலால். ஓங்கு ஒளியாய் என்றும் திருவருள் ஞானமே வடிவானது ஆகையால் அருள் ஞானமூர்த்தி ஆகி என்றும் கூறினார்.
உயிர்கள் பிறப்பு இறப்புட்பட்டு அடைகின்ற துயரினை நீங்கவதற்காகவே இறைவன் திருநடனம் புரிகின்றான் என்பதனை நீங்கலரும் பவத் தொடர்ச்சி நீங்க மன்றுள் நிருத்தம் செய்யும் என்று கூறினார். இறைவனின் திருமடி மலர்களே உயிர்களை உய்விக்கும் ஆகையால் அவற்றைச் சிரத்தின்மீதும் சிந்தையிலும் பதித்து வணங்கிப் போற்றுவோம் என்கிறார். இறைவனின் திருநடனம் உயிர்களின் வீடு பேற்றின் பொருட்டே என்பதனையும் அவனது ஆடலை உமையம்மை கண்டு உயிர்களுக்கு மறித்துத் தந்தருளுவான் என்பதனையும் உணர்த்தினார்.
சிவகாமியம்மை
பரந்தபரா பரைஆதி பரனது இச்சை
பரஞானம் கிரியைபுரு போக ரூபம்
தரும்கருணை உருவாகி விசுத்தா சுத்தத்
தனுகரண புவன போகங்கள் தாங்க
விரிந்தஉபா தானங்கள் மேவி ஒன்றாய்
விமலமாய் ஐந்தொழிற்கும் வித்தாய் ஞாலத்து
அரந்தைகெட மணிமன்றுள் ஆடல் காணும்
அன்னைஅருள் பாதமலர் சென்னி வைப்பாம்.
எல்லாவிடத்தும் நீக்கமற நிறைந்து விளங்கும் மேலான பராசத்தி எனவும், திரோதானசத்தி எனவும், இறைவனது இச்சாசத்தி, உயரிய ஞானசத்தி, கிரியாசித்தி எனவும் ஐந்து வகைப்பட்ட நிலையில் நின்று உயிர்களை ஈடேற்றுவதற்காகக் கருணையே வடிவமாகித் தூயமாயை தூவாமாயை ஆகியவற்றின் காரியங்களான உடல், கருவி, உலகம், நுகர்ச்சிப்பொருள் என்னும் இவற்றுக்கு முதற்காரணமாக
விளங்கும் விந்து, மோகினி, மான் என்னும் மூன்றினோடும் கூடிப் பல்வேறுபட்ட பெயரும் தொழிலும் பெற்று விளங்கினும் தான் ஒன்றேயாயும், மலம் அற்றதாயும், சிவபெருமானின் ஐந்தொழிற்கும் வித்தாகியும், உலகத்து உயிர்களின் தீராத பிறவித்துயர் தீருமாறு அழகிய சிற்றம்பலத்துள் இறைவன் ஆடும் திருக்கூத்தைக் கண்டருளுகிறாள். அம்மை சிவகாமி. அந்த அன்னையின் அருட்பாத மலர்களைத் தலைமேல் கொண்டு வணங்குவோம்.
உலகமெங்கும் நிறைந்து பரந்த இறைவனின் பராசத்தி அவனோடு நீக்கமின்றி நிற்கும் இயல்பினை உடையது. இவ்வியல்பு வடமொழியில் தாதான்மிய சம்பந்தம் என்று சொல்லப்படும். இத்தாதான்மியம் ஒருமையின் இருமை ஆகும். அம்மையோடு அப்பனாகிச் செறிவு ஒழியாது நிற்பது இறைவனது இயல்பு.
ஆதிசத்தி எனப்படுவது மறைப்பாற்றலைக் குறித்து நின்றது எனவே இதனோடு முன் கூறப்பட்ட பராசத்தியையும் கூட்டி ஆதி பராசத்தி எனச் சிலர் வழங்குதல் பொருத்தமற்றது.
இறைவனுடைய விழைவு, அறிவு, ஆற்றல் என்பன மூன்றும் இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி என வழங்கப்பெறும் இவற்றோடு முன்னர்க் கூறப்பட்ட இரண்டனையும் கூட்டி இறைவனின் ஐவகைச் சத்திகள் என்பர்.
இறைவனின் சத்திகளை இடத்துக்கேற்ப மேலும் ஐவகைச் சத்திகளாகவும் எட்டுவகைச் சத்திகளாகவும் ஏழுவகைச் சத்திகளாகவும் வகைப்படுத்திக் கூறுவதும் உண்டு. இவை எல்லாம்இடம் நோக்கிக் கூறப்படுவனவே யன்றித் தம்முள் வேறுபட்டன அல்ல. சத்திதான் பலவோ என்னில் தான் ஒன்றே அநேகம் ஆக வைத்திடும் காரியத்தால் சிவஞானசத்தியார் சுபக்கம்81) எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்(சித்தியார் சுபக்கம்165) என்னும் சிவஞான சித்தியார் திருவாக்குகளும் இங்கு நினையத்தக்கன.
அறிவே வடிவாகத் தன்னியல்பில் நிற்பது சிவம். புறப்பொருளை நோக்கி நிற்குங்கால் அதுவே சத்தி எனப்படும். எனவே இரண்டுக்கும் வேற்றுமை இல்லை.
சிவஞானசித்தியார் பரபக்கத்தில் ஈசன் அருள் இச்சை என்று தொடங்கும் சத்தி வணக்கப்பாடலும் அன்னை அருட்பாத மலர் சென்னி வைப்பாம் என்றே நிறைவுறுவது நினையத்தக்கது.
தில்லைவாழ் அந்தணர்களில் ஒருவராகிய ஆசிரியர் உமாபதி சிவனார் முந்திய பாடலிலும் இப் பாடலிலும் தாம் வழிபடு தெய்வமாகிய அம்பலவாணப் பெருமானுக்கும் சிவகாமியம்மைக்கும் வணக்கம் செத்துகிறார்.
மூத்த பிள்ளையார்
நலம்தரல்நூல் இருந்தமிழின் செய்யுள்குற்றம்
நண்ணாமை இடையூறு நலியாமைகருதி
இலங்கும்இரு குழைஅருகு பொருதுவரிசிதறி
இணைவேல்கள் இகழ்ந்தகயல் கண்ணியொடும் இறைவன்
கலந்துஅருள வரும்ஆனை முகத்தான் மும்மைக்
கடம்அருவி எனநிலவு கணபதியின் அருளால்
அலந்துமது கரமுனிவர் பரவவளர் கமலம்
அனையதிரு அடியிணைகள் நினைதல் செய்வாம்
எழுதத் தொடங்கிய நூலுக்கு நலன்கள் எல்லாம் தந்தருள வேண்டியும், இந்நூலின் தமிழ்ச் செய்யுள்களுக்கு இலக்கணத்தால் விலக்கப்பட்ட குற்றங்கள் நேராதிருக்க வேண்டியும், இந்நூலுக்கு இடையூறு விளையாதிருக்க வேண்டியும், மகரக் குழைகளைச் சென்று தாக்குமாறு காதளவும் அகன்ற செவ்வரிகள் நிறைந்த வேல்களை வென்ற அங்கயற்கண்ணியம்மையோடும் சிவபெருமான் கூடிப் பெற்று அருளிய மும்மதமும் அருவி போல் பொழியும் யானைமுகத்தைக் கொண்ட விநாயகக்கடவுளது திருவருளால் பூத்த திருவடிகளை, முனிவர்கள் வண்டுகளாக மொய்க்கின்ற தாமரைத் தாள்களை நினைந்து போற்றுவோம்
திருவடித்தாமரைகளை அருளால் அலந்தவை என்று குறித்ததனால் அவற்றில் படிந்து தேன் உண்ணும் வண்டுகளை முனிவர்களாக உரைத்தார்.
முருகப்பெருமான்
வளம்நிலவு குலம்அமரர் அதிபதியாய் நீல
மயில்ஏறி வரும்ஈசன் அருள்ஞான மதலை
அளவில்பல கலைஅங்கம் ஆரணங்கள் உணர்ந்த
அகத்தியனுக்கு ஓத்துரைக்கும் அண்ணல்விறல் எண்ணாது
உளம்மருவு சூரன்உரம் எனதுஇடும்பை ஓங்கல்
ஒன்றுஇரண்டு கூறுபட ஒளிதிகழ்வேல் உகந்த
களபம்மலி குறமகள்தன் மணிமுலைகள் கலந்த
கந்தன்மலர் அடியிணைகள் சிந்தை செய்வாம்
வளமிக்க வானவர்களுக்கு ஒப்பற்ற தலைவரும். நீல மயிலைத் தமக்கு ஊர்தியாகக் கொண்டவரும், சிவபெருமான் அருளிய ஞானக் குழந்தையும், எல்லையற்ற பல கலைகளையும் ஆறு அங்கங்களையும் மறைகளையும் உணர்ந்த அகத்திய முனிவருக்கு வேதத்தின் தெளி பொருளை உபதேசிக்கும் ஞானாசிரியரும், தமது வீரத்தை எண்ணிப் பார்க்காத சூரபன்மனது மார்பையும், எமது பிறவித் துன்பத்தையும், கிரவுஞ்சம் என்னும் மலையையும் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு கூறாகுமாறு ஒளி மிக்க வேற்படையைக் கையில் தாங்கியவரும் சந்தனம் அணிந்த குறமகளாகிய வள்ளியம்மையாரைத் தழுவியவரும் ஆகிய கந்தப் பெருமானின் திருவடிமலர்கள் இரண்டினையும் வணங்கிப் போற்றுவோம்.
சூரபன்மனின் உரமும், எமது இடும்பையும் கிரவுஞ்சமென்ற மலையும் ஒவ்வொன்றும் இரண்டு கூறுபடுமாறு தம் திருக்கை வேலைச் செலுத்தியவர் என்று தனித் தனியாகக் கூட்டி பொருள் கொள்ள வேண்டும்.
சிவஞானசித்தியார் பரபக்கத்துள் முருகப்பெருமான் வணக்கம் கூறிய பாடலில் அகத்தியருக்கும் முருகப்பெருமான் உபதேசம் செய்தமையும் முனிவர்களின் முனிவனாகவும், தேவர்களின் தேவனாகவும். தவநிலையோரின் தெய்வமாகவும், சிவபெருமான் அருளிய திருமதலையாகவும் ஆசிரியர் அருள்நந்திசிவம் கூறியுள்ளதை இப்பாடல் நினைவுறுத்துகிறது.
சந்தானபரம்பரை
தேவர்பிரான் வளர்கயிலைக் காவல் பூண்ட
திருநந்தி அவர்கணத்தோர் செல்வர்பாரில்
பாவியசத் தியஞான தரிசனிகள் அடிசேர்
பரஞ்சோதி மாமுனிகள் பதியாம் வெண்ணெய்
மேவியசீர் மெய்கண்ட திறலார் மாறா
விரவுபுகழ் அருணந்தி விறலார் செல்வத்
தாவில்அருள் மறைஞான சம்பந்தர் இவர்இச்
சந்தானத்து எமையாளும் தன்மை யோரே
சீகண்ட பரமேசுரர் எழுந்தருளியுள்ள திருக்கயிலையைக் காக்கும் நந்தியெம்பெருமானும், அவரது திருக்கூட்டத்தில் ஒப்பற்றவராக விளங்கும் சன்றகுமார முனிவரும், உலகில் மெய்ப்பொருளை நிலை நிறுத்திய சத்தியஞான தரிசனிகளும், அவருடைய திருவடியைச் சேர்ந்த பரஞ்சோதி மாமுனியும், திருவெண்ணெய்நல்லூரை உவந்து ஊராகக் கொண்ட மெய்கண்டதேவர் என்னும் ஞானத்திறம் மிக்கவரும், குன்றாப் புகழ் கொண்ட அருள்நந்திதேவர் ஆகிய ஞானாசிரியரும், அருட்செல்வ மிக்க மறைஞான சம்பந்தரும் ஆகிய இவர்களின் வழிவழிவந்த ஞான பரம்பரை எம்மை ஆட்கொண்ட ஞானப்பெருமக்களாவர்
சந்தானகுரவர்கள் என்னும் வரிசையில் அகச்சந்தானத்து ஆசிரியர்கள் நால்வரும். புறச்சந்தானத்து உமாபதிசிவனார் உள்ளிட்ட நால்வரும் கூறப்படுதல் மரபு. அகச்சந்தானத்தில் நந்தியெம்பெருமாள், சனற்குமார முனிவர், சத்தியஞான தரிசனிகள், பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வர் குறிக்கப்பெறுவர். புறச்சந்தானத்தில் மெய்கண்ட தேவர் அருள்நந்திசிவம் மறைஞான சம்பந்தர், உமாபதிசிவம் ஆகிய நால்வரும் கூறப்பெறுவர். புறச்சந்தானத்தில் மெய்கண்ட தேவர் அருள்நந்திசிவம் மறைஞான சம்பந்தர், உமாபதிசிவம் ஆகிய நால்வரும் கூறப்பெறுவர்.
இதனை அடுத்த பாடலில் தமக்கு அருள் உபதேசம் புரிந்த ஞானாசிரியராகிய மறைஞானசம்பந்தரைத் தனித்து எடுத்துக் கூறிச் சிறப்பித்து வழிபடுகிறார்.
குரு வணக்கம்
பார்திகழ வளர்சாம வேதம் மல்கப்
பராசரமா முனிமரபு பயில ஞானச்
சார்புதர வந்துஅருளி எம்மை ஆண்ட
சைவசிகா மணிமருதைத் தலைவன் அந்தன்
கார்மருவு பொழில் புடைசூழ் மதில்மீதே மதியம்
கடவாமை நெடும்கொடியின் கரம்தகையும் கடந்தைச்
சீர்நிலவு மறைஞான சம்பந்தன் எந்தை
திருவளரும் மலரடிகள் சென்னி வைப்பாம்
உலகம் விளங்கவும், சாமவேத மரபு பெருகவும், பராசர முனிவரின் பரம்பரை வளரவும், உயிர்களுக்கு ஞானத்தைக் கொழு கொம்பாக வழங்கி அருளவும் வந்து எம்மை ஆண்டுகொண்ட சைவ முடிமணியும், மருதூரூக்குத் தலைவனும் அழகிய தண்ணிய மேகங்கள் தவழும் சோலையால் குழப்பட்ட மதில்களின் மேல் நீண்ட கொடிகளாகிய கைகள் நிலவைக் கடக்காமல் தடுக்கும் பெண்ணாகடம் என்னும் திருஊரிலே மறைஞானசம்பந்தர் என்னும் திருப்பெயர் தாங்கி எழுந்தருளி விளங்குகின்ற எமது ஞானத் தந்தையாரின் திருவளரும் தாமரை மலர் போன்ற அடிகளை எம் தலை மீது புனைவோம்.
தில்லைத் திருவீதியிலே உமாபதி சிவனார் பல்லக்கில் ஏறித் திருச் சின்னங்கள் முழங்கப் பகல் விளக்கெடுப்ப, உலாவரும் போது மறைஞானசம்பந்தர் பட்ட கட்டையிலே பகற் குருடு போகிறது என்று மொழிந்தார். பல்லக்கு, பட்ட மரத்தால் செய்யப்பட்டது. பகலிலும் விளக்கு ஏந்தி உலா வருவதால் பகற்குருடு என்றும் எள்ளி உரைத்தார். இச் சொற்கள் காதில் விழுந்த அளவிலே பல்லக்கைவிட்டு இறங்கி உமாபதி சிவனார். மறைஞானசம்பந்தரை ஞான ஆசிரியராக ஏற்றுக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்து அவரிடத்து உபதேசம் பெற்றார் என்பது வரலாறு. தமது நேரடி ஞானாசிரியர் என்பதனாலே மறைஞானசம்பந்தருக்குத் தனிப்பட ஒரு பாடலிலே உமாபதி சிவம் வணக்கம் கூறுகிறார். ஞானாசிரியருக்கு அவரது மாணவர் ஞானப் புதல்வர் ஆதலினாலே எந்தை என்று சிறப்பிக்கின்றார்.
சாம வேதம் இசையோடு ஓதப்படும் மறை. சாமவேதத்திற்கு ஆயிரம் சாகைகள் உண்டு என்பர். சாகை என்பது வேதத்தின் உட்பிரிவு. கிளை என்று பொருள்தரும். சாசை ஆயிரமுடையார் சாமமும் ஓதுவதுடையார் என்று திருஞானசம்பந்தர், திருவாழ்கொளிபுத்தூர்த் தேவாரத்தில் குறிப்பிடுகிறார். மறைஞானசம்பந்தர் சாமவேதம் ஓதும் மரபினைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடப்பட்டது.
மறைஞானசம்பந்தர் பராசரமுனிவருடைய குடியைச் சார்ந்தவர் என்ற சிறப்பும் இப்பாடலில் கூறப்பட்டது. பராசரமுனிவர் வியாசருடைய தந்தையார்.
மருதூரிலே பிறந்தமையால் மருதைத் தலைவன் என்றும் திருப்பெண்ணாகடத்திலே எழுந்தருளி இருந்ததால் கடந்தைச் சீர்நிலவு மறைஞான சம்பந்தன் என்றும் இரண்டு ஊர்களும் குறிப்பிடப்பட்டன.
நுதலிய பொருள்
புறச்சமயத் தவர்க்குஇருளாய் அகச்சமயத்து ஒளியாய்ப்
புகல்அளவைக்கு அளவாகிப் பொன்பணிபோல் அபேதப்
பிறப்புஇலதாய் இருள்வெளிபோல் பேதமும்சொற் பொருள்போல்
பேதாபேதமும் இன்றிப் பெருநூல் சொன்ன
அறத்திறனால் விளைவதாய் உடல்உயிர் கண் அருக்கன்
அறிவொளிபோல் பிறிவுஅரும் அத்துவிதம் ஆகும்
சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்தத் திறன்இங்குத் தெரிக்கல் உற்றாம்
புறப்புறம், புறம், அகப்புறம், என்று மூவகையாகப் பிரித்துக் கூறப்படும் புறச்சமயத்தவர்களுக்கு இருளாகவும், அகச் சமயத்தார்க்கு ஒளியாகவும், தருக்க நூல் முதலியன கூறுகின்ற அளவைகளில் சிறந்த அளவையாகவும், பொன்னும் அணிகலனும் போல அபேத நிலையும், இருளும் ஒளியும் போல பேத நிலையும், சொல்லும் பொருளும் போல பேதா பேத நிலையும் இல்லாமல், சைவ ஆகமங்களுள் கூறப்பட்ட அறத்தின் திறத்தினால் விளைவதாயும், உடலும் உயிரும், கண்ணும் ஞாயிறும், அறிவும் ஒளியும் போலப் பிரிக்க முடியாத அத்துவிதம் என்னும் சிறப்பினை உடையதாகவும் வேதாந்தத்தைத் தெளிவுறுத்திக் கூறும் சைவசித்தாந்தத்தின் சிறப்பினை இந்நூலில் தெளிவாகக் கூறலுற்றோம்.
சமயங்கள் எல்லாம் புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என நான்குவகையாக மாதவச் சிவஞான மாமுனிவரால் சிவஞானமாபாடியத்துள் பிரித்துக் கூறப்பட்டன. இந்தப் பாடலில் புறம், அகம் என இரண்டாகக் கூறப்பட்டன. எனினும் அவற்றுள் இந்த நான்கும் அடங்கும்.
புறப்புறச் சமயங்கள் என்பன வேதங்களையும் சைவ ஆகமங்களையும் உடன்படாதவை. புறச்சமயங்கள் என்பன வேதங்களை ஏற்றுக் கொண்டு சைவ ஆகமங்களை ஏற்றுக்கொள்ளாதன. அகப்புற சமயங்கள் சிவபெருமானைப் பரம்பொருளாக ஏற்றுக் கொண்டும் சைவ ஆகமங்களை ஏற்றுக்கொள்ளாமல் தமக்கெனத் தனித்தனி ஆகமங்களை ஏற்றுக் கொள்ளுவன. அகச்சமயங்கள் என்பன வேதங்களையும் ஆகமங்களையும் ஏற்றுக் கொண்டும் சிவபெருமானைப் பரம்பொருளாக ஏற்றுக் கொண்டும் பொருள் உண்மை. முத்தி நிலை போன்ற அடிப்படைக் கருத்துக்களில் சித்தாந்த சைவத்தினின்றும் மாறுபட்டு நிற்பன.
சித்தாந்தசைவம், இந்நால்வகைச் சமயங்களில் இருந்தும் வேறுபட்டு அவற்றினும் சிறந்ததாய் உய்யும் நெறியை ஐயம் திரிபு அற எடுத்துரைப்பதாய் உள்ளது.
புறப்புறச்சமயங்கள் ஆறாகக் கூறப்படும். அவை உலகாயதம், பவுத்த மதத்தின் நான்கு பிரிவகளான மாத்தியமிகம், யோகாசாரம், சவுத்திராந்திகம், வைபாடிகம், ஆருகதம் எனப்படும் சமணம் ஆகியவை ஆகும்.
அகப்புறச்சமயங்கள் பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என்ற ஆறும் ஆகும்.
அகச்சமயங்கள் என்று குறிக்கப்படுவன பாடாணதசைவம் (பேதவாதம்) சிவசமவாதம், சிவசங்கிராந்தவாசம், ஈசுவர அவிசாரவாதம், நிமித்தகாரண பரிணாமவாதம் எனப்படும் சிவாத்துவிதசைனம், சுத்தசைவம் என்று ஆறு வகைப்படும்.
இந்த நான்குவகைப் பாகுபாடுகளில், முதலில் கூறப்பட்டுள்ள மூன்றும் முக்கூற்றுப் புறச்சமயங்கள் எனக் கூறப்படும். மூன்றுவகையாகப் பிரித்துக் காணப்பட புறச்சமயங்கள் இவை. ஆதலால் இப்பெயர் பெற்றன. இம்மூன்று வகைகளிலும் உள்ள அனைவரையும் புறச் சமயத்தவர் என்று இப்பாடலில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். அடிப்படை நூல்களையும் பொருள் உண்மைகளையும் சைவசித்தாந்தத்தில் கூறப்பட்ட வகையில் ஏற்றுக்கொள்ளாத இவர்களுக்குச் சைவசித்தாந்தத்தின் சிறப்பு விளங்காது ஆகையால் புறச்சமயத்தவர்க்கு இருளாய் என்று கூறினார் உமாபதிசிவம்.
அகச்சமயம் என்று குறிப்பிடப்பட்ட வகையில் அடங்குகின்ற ஆறு சமயங்களைச் சேர்ந்தவர்கள் சைவசித்தாந்தத்தைப் போலவே
ஏகன் இவை ஆறு ஆதிஇல் (திருவருட்பயன் 52)
என்பதற்கு ஏற்பப் பொருள் உண்மை கொண்டவர் ஆகையால் அவர்களுக்குச் சித்தாந்த சைவத்தின் உண்மைகளைத் தக்க ஆசிரியர் மூலம் அறிவுறுத்தினால் அவர்கள் இவ்வுண்மைகளைத் தெரிந்துகொள்வார்கள் என்பதனால் அகச்சமயத்து ஒளியாய் என்று குறிப்பிட்டார்.
இந்திய தத்துவ ஞானங்களுள் அளவைக் கருத்துக்கள் பல்வேறு வகையாகக் கொள்ளப்படும். இவற்றின் விரிவு சிவஞான சித்தியார் சுபக்கத்தில் அளவை இலக்கணம் என்ற தலைப்பில் பதினான்கு பாடல்களால் கூறப்பட்டுள்ளது. அவை சைவசித்தாந்தம் ஏற்றுக்கொள்ளும் அளவைகளை விளக்கும். சிவஞானம் உணர்த்த உணர்வதாகிய உயிரின் அறிவாற்றல் (ஆன்ம சிற்சத்தி) ஒன்றே, பொறி முதலியவற்றை உள்ளவாறு உணரும் அளவையாகும் என்பதனைச் சைவசித்தாந்தம் வலியுறுத்துகிறது. தருக்கநூல் முதலிய பிறசமய நூல்கள் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே அவர்கள் புகழ்கின்ற அளவைகளுக்கு எல்லாம் அளவையாகிச் சிறப்புற்று விளங்குவது சைவசித்தாந்தமே என்று வலியுறுத்த புகல் அளவைக்கு அளவாகி என்று கூறினார்.
அத்துவிதம் என்ற சொல் இறைவனுக்கும், உயிர்களுக்கும் உள்ள தொடர்பை விளக்குவது. இச்சொல்லுக்குப் பொருள் கூறவந்த பல்வேறு சமயத் தலைவர்கள் வெவ்வேறு வகையிலே பொருள் கூறினர். பொன்னும் பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களும் வேறுவேறு பெயர்களைப் பெற்றிருந்தாலும் அவை யாவும் பொன்னே. ஆதலால் அவற்றுக் கிடையே வேற்றுமை இல்லை என்று கொண்டவர்கள் ஏகான்மவாதிகள் அவர்கள் கொண்ட பொருள் அபேதம் எனப்படும்.
வெளி என்ற சொல் ஒளி என்ற பொருளைத் தரும். இறைவனும் உயிர்களும் இருளும் வெளியும் போல் முற்றிலும் வேற்றுமைப்பட்டு நிற்பன என்ற கருத்தைக் கொண்டவர்களுக்கு பேதவாதிகள் என்று பெயர். இக்கருத்தும் சைவசித்தாந்தத்துக்கு உடன்பாடு அன்று.
சொல்லும் அதன் பொருளும் போல ஒருவகையால் வேற்றுமைப் பட்டும் மற்றொரு வகையால் வேற்றுமைப் படாமலும் நிற்பதுதான் அத்துவிதம் என்று மற்றும் சிலர் கூறும் கருத்து பேதாபேதம்(பேதம்+அபேதம்) என்று கூறப்படும் இக்கருத்தும் சைவசித்தாந்தத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இவை மூன்றையும் விலக்குவதற்காக பொற்பணி போல் அபதேப் பிறப்பிலதாய் என்றும் இருள்வெளிபோல் பேதமும் இன்றி என்றும் சொற்பொருள் போல் பேதாபேதமும் இன்றி என்றும் இப்பாடலில் ஆசிரியர் ஒவ்வொன்றையும் தனித் தனியே கூறி மறுத்துள்ளார்.
சைவசித்தாந்தத் தேனமுது அருந்தினர் சிலரே என்று குமர குருபர முனிவர் கூறுகிறார். சைவசித்தாந்தக் கொள்கையை அடைவது எளிதன்று என்பதைக் குறிக்கப் பெருநூல் சொன்ன அறத்திறனால் விளைவதாய் என்று சிறப்பித்துக் கூறினார். இங்கு பெருநூல் என்ற சொல்லால் வேதங்கள், சைவ ஆகமங்கள் திருமுறைகள் முதலியன குறிக்கப்பட்டன. அறத்திறனால் விளைவது சைவசித்தாந்தம் என்று ஆசிரியர் குறிப்பிடுவதால் அறத்தின் திறன் இல்லாதபோது சைவ சித்தாந்தம் எட்டப்படுவதில்லை என்பதையும் குறிப்பால் உணர்த்தினார்.
சைவ சித்தாந்தம், அத்துவிதம் என்னும் சொல்லுக்கு பொருள் கூறும்போது, இறைவன் கலப்பினால் ஆன்மாக்களே ஆகவும், பொருள் தன்மையால் அவ்ஆன்மாக்களில் நின்றும் வேறாகவும், உயிருக்கு உயிராதல் தன்மையால் அவ்ஆன்மாக்களின் உடனாகவும் நிற்பான் என்று கொள்ளுகிறது. இம் மூன்றுக்கும் மூன்று உவமைகள் கூறுகிறார் உமாபதி சிவம். உடலும் உயிரும் போல, கண்ணும் சூரியனும் போல, அறிவும் ஒளியும் போல என்பன அந்த உவமைகள். ஒவ்வொரு வகைக் கலப்பே கூறும் அபேதம், பேதம், பேதாபேதம் என்ற மூன்று கொள்கைக்கும் வேறாக மூவகைக் கலப்பையும் கூறும் சைவ சித்தாந்தத்தின் அத்துவிதக் கொள்கை சிறப்புடையது என எடுத்துச் சொல்வதற்காகப் பிறிவரும் அத்துவிதமாகும் சிறப்பினதாய் என்று கூறுகிறார்.
வேதாந்தங்களிலே பல்வேறுவகையாகப் பொருள் கொள்ளப்பட்டு மயக்கத்திற்குக் காரணமாய் இருக்கின்ற கொள்கையைச் சைவ சித்தாந்தம் மலைவு நீக்கித் தெளிவுபடுத்துவதனால் அதனை இந்நூலுள் எடுத்துக் கூறுகிறோம் என்னும் கருத்தில் வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கல் உற்றாம் என்று தமது, குறிக்கோளை இப்பாடல் மூலம் ஆசிரியர் விளங்க உரைக்கிறார்.
இந்தப் பாடலுக்கு மிகச் சிறந்த விளக்கம் ஒன்றினை மாதவச் சிவஞான முனிவர் தமது சிவஞான மாபாடியத்தில் இரண்டாம் சூத்திரம், முதல் அதிகரணத்தின் இறுதியில் தந்துள்ளார்.
தீக்கை வகைகள்
மூவகைஆர் உயிர்வர்க்கம் மலத்தார் கன்ம
மூலமலத்தார் மூன்றும் உடையார் அன்றே
தீவகமாம் எனஉருவாய் வந்து நாதன்
திருநோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால்
பாவனையால் மிகுநூலால் யோகப் பண்பால்
பரவிவரும் அவுத்திரியால் பாச நாசம்
மேவஅருள் உதவும் அவுத்திரி இரண்டு திறனாம்
வியன்கிரியை ஞானம்என விளம்பும் ஆறே
உயிர்கள் விஞ்ஞான கலர், பிரளயா கலர். சகலர் என்று மூன்று வகைப்படுவர். ஆணவ மலம் ஒன்றால் மட்டும் பிணிக்கப்பட்டவர் விஞ்ஞானகலர். ஆணவம் கன்மம் என்ற இரண்டு மலங்களால் பிணக்கப்பட்டவர் பிரளயகலர். ஆணவம் மாயை கன்மம் ஆகிய மூன்று மலங்களாலும் கட்டுண்டவர் சகலர். இம் மூன்று வகைப்பட்டவர்களையும் இறைவன் மூவேறு வகைகளிலே ஆட்கொள்ளுவான். பக்குவம் பெற்ற சகலர்க்கு அருள்புரியும் போது மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல குரு வடிவம் தாங்கி எழுந்தருளி அம்மலங்கள் மூன்றனையும் நாசம் செய்து தன் திருவடியிலே கூட்டுவான். இவ்வாறு அருள் பெறுவதற்குத் தீக்கை இன்றியமையாததாகும். தீக்கை பலவகைப்படும். திருநோக்கால் செய்யப்படுவது சட்சுதீக்கை. திருக்கையால் தொட்டுச் செய்யப்படுவது பரிசதீக்கை. திருவாக்கால் உபதேசிப்பது வாசகதீக்கை. பாவனையால் உணர்த்தப்படுவது பாவனதீக்கை. அருள் நூலால் வழங்கப்படுவது ஆகமதீக்கை. உயிர்களின் அறிவிலே கலந்துநின்று வழங்கப்படுவது யோக தீக்கை. இவை தவிரப் பல்வேறு வகைப்பட்ட அவுத்திரி முதலிய தீக்கைகளும் உள்ளன. அவுத்திரி தீக்கை என்பது செந்தழல் வளர்த்துச் செய்யப்படுவதாகும். இது அகத்தால் இயற்றப்படும்போது ஞானவதி எனப்படும். புறத்தே ஓமத் தழலால் செய்யும் போது கிரியாவதி என்று கூறப்படும்.
தீஷா என்ற வடசொல்லுக்கு மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல் என்று பொருள் கூறுவர். தீவகம் என்ற சொல் பார்வை விலங்கு என்று பொருள்படும். காட்டு விலங்குகளைப் பிடிப்பதற்கு முயலுகின்றவர்கள் முன்பே பழக்கப்பட்ட மற்றொரு விலங்கினை ஓரிடத்தில் கட்டி வைத்து அதனைக்கொண்டு, காட்டு விலங்கைப் பிடிக்கின்ற வழக்கத்தை இச்சொல்லால் நினைவுறுத்தினார். இப்பாடலில் இறைவன் சகலர்க்கு அருள்பாலிக்கும் முறையே விதந்து கூறப்பட்டது.
சைவ சித்தாந்தத் திறன் இங்குத் தெரிக்கலுற்றாம் என்று முந்தைய பாட்டில் கூறிய ஆசிரியர் அதனைத் தெரிந்து கொள்ளுகின்ற உரிமை உடைய உயிர்களையும், அவற்றின் வகைகளையும், அவற்றுள் சகலர்க்குப் பாச நீக்கம் தரும் தீக்கை வகைகளையும் குறிப்பிடுகிறார்.
அவுத்திரி என்பது தீ வளர்த்து அதனுள் நெய் முதலியவற்றைப் பெய்து செய்கின்ற தீக்கையாகும். இது இரண்டு வகைப்படும். கிரியாவதி ஞானவதி என்பன அவை. கிரியாவதி என்பது புறத்தே விதிப்படி குண்ட மண்டலங்களை அமைத்துக்கொண்டு கிரியைநெறி வழுவாமல் செய்யப்படுவது. ஞானவதி என்பது அகத்தே குண்ட மண்டலங்களைக் கற்பித்துக்கொண்டு நெறிவழுவாமல் இயற்றப்படுவது.
விரும்பியமந் திராதிகாரம் அர்ச்சனா திகாரம்
மேவும் யோகாதிகாரம் எனச்சமய விசேடம்
வரும்பொருவில் நிருவாண மந்திரங்கள் பதங்கள்
வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள்
இரங்கு அடைவில் தொகைபதியனொன்று எண்பத்தொன்று ஐம்பத்
இருநூற்றோடு இருபத்துநால் ஆறாறு ஐந்தில் (தொன்று)
பரந்தநெறி அறுவகையும் ஒருவிநினைவு அரிதாம்
பரபதத்துள் உயிர்விரவப் பயிற்றும் அன்றே
சமயதீக்கை, விசேடதீக்கை ஆகிய இரண்டும் வீடுபேறு எய்த விரும்பியவர்களுக்கு மந்திரங்களை ஓதும் உரிமையினையும் இறைவனை அருச்சனை புரிவதற்கு உரிய உரிமையையும், யோகப் பறிச்சிக்கான உரிமையையும் தருவன. நிருவாணதீக்கை என்பது உயிர் நினைத்தற்கரிய பரபதத்துள் விரவுமாறு பயிற்றுவிக்கும். ஆறு அத்துவாக்களையும் நீங்கி உயிர் பரபதத்தை அடையும். மந்திரங்கள் பதினொன்று. பதங்கள் எண்பத்தொன்று. எழுத்துக்கள் ஐம்பத்தொன்று புவனங்கள் இருநூற்று இருபத்து நான்கு. தத்துவங்கள் முப்பத்தாறு. கலைகள் ஐந்து. ஆகிய இவை ஆறும் அத்துவாக்களாகும்.
தீக்கைகள் நான்காகக் கூறப்படும். அவை சமயம், விசேடம், நிருவாணம், ஆசாரிய அபிடேகம் என்பனவாகும். இவற்றுள் முதல் மூன்று வகைகளைப் பற்றி இப்பாடலில் ஆசிரியர் கூறுகிறார். சமயதீக்கை பெற்றவர்கள் சரியை நெறியில் நிற்றலுக்கு உரிமை உடையவர்கள் ஆவார்கள். விசேடதீக்கை பெற்றவர்கள் கிரியை நெறியிலும் யோக நெறியிலும் நிற்பதற்கு உரிமை உடையவர்கள் ஆவார்கள். இவற்றினும் மேலாய நிருவாண தீக்கை பெற்றவர்களே ஞானநெறியில் நின்று வீடுபேறு அடைவதற்கு உரியவர்கள் ஆவார்கள்.
உயிர் ஆறு அத்துவாக்களையும் விட்டு நீங்கியே திருவருளைப் பொருந்தி பரபதத்தை அடைய இயலும். அத்துவாக்கள் என்ற சொல்லுக்கு வழிகள் என்பது பொருள். இவை உயிரை உலகோடு இணைவிப்பன. உலகு, சொல், உலகு என்றும், பொருள் உலகு என்றும் இரு வகையாகக் கூறப்படும். இவற்றை முறையே சத்தப் பிரபஞ்சம், அருத்தப் பிரபஞ்சம் என்று வடமொழியில் வழங்குவர். மந்திரம் பதம் எழுத்துக்கள் என்ற மூன்றும் சொல் உலகைக் குறித்தன. புவனம், தத்துவம், கலை என்ற மூன்றும் பொருள் உலகைக் குறித்தன.
தீக்கைகள் பற்றிய விரிவான விளக்கம் சிவஞான மாபாடியத்தில் சிறப்புப்பாயிரத்தில் மாதச்சிவஞான முனிவரால் தரப்பட்டுள்ளது. சிவஞான சித்தியாரிலும் எட்டாம் சூத்திரத்தில் முதல் அதிகரணத்தில் அருள்நந்தி சிவம் தீக்கைகளைப் பற்றிய விரிவான செய்திகளைத் தருகிறார்.
கிரியைஎன மருவும்அவை யாவும் ஞானம்
கிடைத்தற்கு நிமித்தம்எனக் கிளக்கும் உண்மைச்
சரியைகிரியா யோகத் தன்மை யோர்க்குச்
சாலோக சாமீப சாரூபங்கள்
மருவியிடும் உயர்ஞானம் இரண்டாம் மாறா
மலம்அகல அகலாத மன்னு போதத்
திருவருள்ஒன்று ஒன்றுஅதனைத் தெளிய வோதும்
சிவாகமம்என்று உலகறியச் செப்பும் நூலே
கிரியை எனச் சொல்லப்படும் யாவும் ஞானம் பெறுவதற்கு வழி என்று ஆகமங்கள் கூறுகின்றன. உண்மைச்சரியை, உண்மைக்கிரியை, உண்மையோகம் என்ற மூன்று நெறிகளிலும் நின்வர்க்கு முறையே சாலோகம், சாமீபம், சாரூபம் என்ற மூன்றும் பேறுகளாகக் கிட்டும். உண்மைஞானம் எனப்படுகின்ற நான்காவதுநிலை இரண்டு வகைப்படும். அவை பரஞானம், அபரஞானம் என்பனவாம். பரஞானம் என்பது உயிர்களைப் பற்றியுள்ள மலங்களை அகற்றித் தான் நிலைபெற்று நிற்கும். இவ்வாறு நிற்கும் திருப்பெருகு சிவஞானம் திருவருள் எனப்படும். அத்திருவருளினைத் தெளிவுற ஓதுகின்ற சிவாகமம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் ஆகிய அபரஞானம் என்று வழங்கப்படும்.
சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நான்கு நெறிகளும் உபாயச் சரியை, உபாயக்கிரியை, உபாயயோகம், உபாயஞானம் என்றும், உண்மைச்சரியை, உண்மைக்கிரியை, உண்மையோகம், உண்மைஞானம் என்றும் வகைப்படுத்தப்படும். இவற்றுள் பிற் கூறப்பட்ட நான்கும் முதலில் கூறப்பட்ட நான்கினையும் விட உயர்ந்தன. இவற்றைப் பற்றிய விளக்கங்களையும் இவற்றால் விளையும் பயன்களையும் மாதவச் சிவஞான முனிவர் சிவஞானமாபாடியத்தில் எட்டாம் சூத்திரத்துக்கு வரைந்தருளிய பேருரையில் காணலாம். அதன் முதல் அதிகரணத்தின் ஏதுவில் மேற்சரியை கிரியாயோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடாவாகலான் என்ற பகுதிக்கு உரை எழுதும் போது சிவஞான முனிவர் மேலாகிய உண்மைச் சரியை கிரியா யோகங்களை என்று உரைப்பினும் அமையும் என்று எழுதினார்.
கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர முனிவரும்
விரத முதலாய பலமெய்த் தவத்தி னுண்மைச்
சரியை கிரியா யோகஞ் சார்வித்து அருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து
என்று குறிப்பிடுகிறார். இங்கு ஆலோகம் என்பது தெளிந்த அறிவு என்றும், அகற்றுவித்து என்பது விரிவடையச் செய்து என்றும் பொருள் தரும். குமரகுருபரரும் உண்மைச் சரியை கிரியா யோகம் என்ற சொல்லாட்சியையே பயன்படுத்துவதும் நுணுகி உணரத்தக்கது.
தெரித்தகுரு முதல்வர்உயர் சிவஞான போதம்
செப்பினர்பின்பு அவர்புதல்வர் சிவஞான சித்தி
விரித்தனர்மற்று அவர்கள்திரு அடிகள் போற்றி
விளம்பியநூல் அவைஇரண்டும் விரும்பிநோக்கிக்
கருத்தில்உறை திருவருளும் இறைவன் நூலும்
கலந்துபொது உண்மைஎனக் கருதி யானும்
அருத்திமிக உரைப்பன்வளர் விருத்தம் நூறும்
ஆசில்சிவப் பிரகாசம் ஆகும் அன்றே.
குருமுதல்வராக விளங்கும் மெய்கண்ட தேவநாயனார் சிவஞான போதம் என்னும் பெயர் தாங்கிய ஒப்பற்ற நூலினை அருளிச் செய்தார். அவருடைய மாணவராகிய அருள்நந்தி சிவனார் சிவஞான சித்தியார் என்ற நூலில் சிவஞான போதத்தின் பொருளை விரித்துரைத்தார். ஆசிரியர்களாகிய இவர்கள் இருவரின் திருவடிகளையும் வணங்கி அவர்கள் அருளிய நூல்களை ஆர்வத்தோடு கற்று என் கருத்தில் உறைகின்ற திருவருளையும், இறைவனால் அருளிச் செய்யப்பட்ட சைவ ஆகமங்களையும் கலந்து, பொது உண்மை என இரு அதிகாரங்களாக வகுத்துக் கொண்டு, என்னுடைய ஆர்வத்தின் காரணமாக நூறு விருத்தப்பாக்களைக் கொண்ட சிவப்பிரகாசம் என்னும் பெயர் தாங்கிய இந்நூலினை எழுதலுற்றேன்.
இப்பாடலில் தமது நூல் வந்த வழியினை ஆசிரியர் உமாபதிசிவம் தெரிவிக்கிறார். குரு முதல்வர் என்ற பெயருக்கு உரிமை உடையவராகிய மெய்கண்டதேவ நாயனார் சிவஞானபோதம் என்னும் முதல் நூலைச் செய்தருளினார் என்றும், பின்பு அவருடைய ஞானப்புதல்வர் அருள்நந்தி விரித்துச் சிவஞானசித்தியார் இயற்றியருளினார் என்றும் கூறுகிறார். மேலே கூறப்பட்ட இரண்டு நூல்களையும் ஆர்வத்துடன் பயின்று தமது கருத்தில் உறைகின்ற திருவருளையும் இறைவன் நூலாகிய ஆகமத்தையும் கலந்து தாம் சிவப்பிரகாசம் எழுதியதாகவும் கூறுகிறார். பொது, உண்மை என்ற பிரிவுகள் முதல் இரண்டு நூல்களிலும் தெளிவாகப் புலப்படவில்லை. எனினும் தமது நூலில் அவற்றைத் தெளிவுற விளக்கிக் கூறுவதாகவும் குறிப்பிடுகிறார்.
முதல்நூல், வழிநூல் என்பவற்றைப் பின்பற்றியே இந்த நூல் அமைந்தாலும் அவற்றைப் போலப் பன்னிரண்டு நூற்பாக்கள் கொண்ட அமைப்பு சிவப்பிரகாசத்தில் காணப்படவில்லை. கருத்தால் ஒற்றுமைப்பட்டிருந்தாலும் பகுப்புமுறையில் இந்நூல் சற்றே வேறுபட்டிருக்கிறது. ஆயினும் முந்தைய இரு நூல்களுக்கும் இது சார்புநூலே என்பதை உமாபதிசிவனார் தெளிவுபடுத்துகிறார்.
அவையடக்கம்
தொன்மையவாம் எனும்எவையும் நன்றுஆகா இன்று
தோன்றியநூல் எனும்எவையும் தீதுஆகா துணிந்த
நன்மையினார் நலங்கொள்மணி பொதியும்அதன் களங்கம்
நவைஆகாது எனஉண்மை நயந்திடுவர் நடுவாம்
தன்மையினார் பழமைஅழகு ஆராய்ந்து தரிப்பர்
தவறுநலம் பொருளின்கண் சார்வுஆராய்ந்து அறிதல்
இன்மையினார் பலர்புகழில் ஏத்துவார் ஏதிலர்உற்று
இகழ்ந்தனரேல் இகழ்ந்திடுவர் தமக்குஎன ஒன்றுஇலரே.
பழமையான நூல்கள் யாவையும் நல்லவையாகா. இப்போது தான் தோன்றிய நூல்கள் என்பதனால் அவற்றைத் தீது என்று ஒதுக்குதலும் கூடாது. ஒரு மாணிக்க மணி அணிகலனில் பொதியப்பட்டிருக்கும் பொழுது நல்லவர்கள் அம்மணியின் சிறப்பினை நோக்கிக் கட்டுமானத்தில் குறையிருந்தாலும்கூட அதனால் ஏதும் குற்றமில்லை என்பதை உணர்ந்து அந்த அணிகலனை விரும்புவர். இடைப்பட்ட தன்மை உடையவர்கள் அணிகலனின் பழமையையும் அதன் அழகினையும் கருதி அதனை ஆராய்ந்து அணிந்து கொள்ளுவர். கடைப்பட்டவர்கள் மணியின் சிறப்போ குற்றமோ அல்லது அதனில் பொருந்தி இருக்கும் அணிகலனின் அழகோ, அழகின்மையோ ஆராய்ந்து அறிதற்குத் தகுதியற்றவர்கள். ஆகையினால் பலரும் அதனைப்புகழ்ந்தால் தாமும் அதனைப் புகழ்வர். அல்லது பலரும் அதனை இகழ்ந்தால் தாமும் அதனை இகழ்வர். இத்தகையவர்கள் தமக்கென ஓர் அறிவுடையவர் அல்லர்.
பழமையான நூல்கள் யாவும் உயர்ந்தன என்ற கொள்கை தவறு. அவற்றுள் சில ஒதுக்கத் தக்கனவாகவும் இருக்கலாம். புதிதாகத் தோன்றிய நூல்கள் என்பதனாலேயே அவை யாவும் குறைவுடையன என்ற பொருளில் ஒதுக்கத்தக்கன வல்ல. இக்கருத்தைக் கூறுவதன் மூலம் பழமையான நூல்கள் பல இருக்கப் புதிதாக ஒருநூல் எழுதுவானேன் என்று கேட்போர்க்கும், புதியநூல் என்றால் அதனை முற்றிலும் ஒதுக்கிவிட வேண்டும் என்ற கருத்துடையோர்க்கும் பதில் சொல்லுகிறார் ஆசிரியர்.
இரத்தினக்கற்கள் அவற்றின் குற்றம் குறைவற்ற தன்மையை வைத்தே மதிப்பிடப் பெறுதல் வேண்டும். அவற்றை இழைத்துச் செய்த நகைகள் பழமையானதாக இருக்கலாம். அல்லது புதுமையானதாக இருக்கலாம். உயர்ந்தோர்கள் மாணிக்கத்தின் குற்றமற்ற தன்மை கருதியே அதனை விரும்பி அணிவர். இடைப்பட்டவர்கள் மாணிக்கத்தின் தன்மையையும் அதனைப் பதித்துள்ள நகையையும் அவற்றின் பழமையையும் ஆராய்ந்து தரித்துக் கொள்வர். கடைப்பட்டவர்கள் மணியையும் அணிகலனையும் பற்றித் தெளிந்த அறிவில்லாதவர்கள் ஆகையினால் பலர் கூடிப் புகழ்ந்தால் தாமும் புகழ்வர். பலர்கூடி இகழ்ந்தால் தாமும் இகழ்வர். ஏனெனில் இவர்கள் தமக்கென ஓர் அறிவிலர்.