Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவப்பிரகாசம் பகுதி -1 சிவப்பிரகாசம் பகுதி -3
முதல் பக்கம் » சிவப்பிரகாசம்
சிவப்பிரகாசம் பகுதி -2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
12:06

பொது அதிகாரம்- பதி இலக்கணம்

பலகலை ஆகமம்வேகம் யாவையினும் கருத்துப்
பதிபசுபாசம் தெரித்தல் பதிபரமே அதுதான்
நிலவும்அரு உருஇன்றிக் குணம்குறிகள் இன்றி
நின்மலமாய் ஏகமாய் நித்தம் ஆகி
அலகில்உயிர்க்கு உணர்வாகி அசலம் ஆகி
அகண்டிதமாய் ஆனந்த உருவாய் அன்றிச்
செலவு அரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்
திகழ்வதுதற் சிவம்என்பர் தெளிந்து ளோரே.

பலகலைகள் ஆகமங்கள் வேதங்கள் ஆகிய எல்லாவற்றிற்கும் குறிக்கோள் இறைவன், உயிர்கள், தளைகள் என்ற மூன்று பொருள்களின் இயல்புகளை எடுத்துரைத்தலே ஆகும். இம்மூன்றனுள் இறைவன்(பதி) பரம்பொருள் ஆவான். இப்பரம்பொருள் அருவம், உருவம், அருஉருவம் ஆகிய எதுவுமில்லாதது. குணமும் குறியும் இல்லாதது. இயல்பாகவே கட்டுக்கள் இல்லாத நின்மலமானது. ஒப்பு உவமை இல்லாத தனிப்பொருள். தோற்றமும் அழிவும் அற்ற நிலையான பொருள். எல்லா உயிர்களுக்கும் உணர்வாக விளங்குவது. அசைவற்றது. பகுப்பும் பகுதிகளும் அற்றது. இன்பமே வடிவமாக விளங்குவது சென்றடைய அரியது. எனினும் அருளே வழியாகக் கொண்டு ஒழுகும் உயிர்களுக்குச் செல்கதியாய் நிற்பது. அணுவுக்கு அணுவாகியும் பெரிய தற்கெல்லாம் பெரியதாகியும் விளங்குவது. ஞானத்தால் தெளிந்த அறிவுடையவர்கள் அதனைச் சிவம் என்று குறிப்பர்.

சைவ சித்தாந்தம் உலகத்துப் பொருள்களையெல்லாம் மூன்று பிரிவுகளுள் அடக்கும். ஒன்று ஒப்பற்ற ஒரே இறைவன். இரண்டாவது பல்வேறு தரப்பட்ட எண்ணற்ற உயிர்கள். மூன்று இவ்வுயிர்கள் வீடுபேறு அடைவதற்குத் தடையாக நிற்கும் தளைகள். எனவே எல்லாக் கலைகளும் ஆகமங்களும் வேதங்களும் இந்த மூன்று பிரிவான பொருள்களைப் பற்றியே பேசும். மற்றைய நூல்கள் எல்லாம் மூன்றில் ஒன்றையோ இரண்டையோ அல்லது மூன்றையும் பற்றியுமோ பேசலாம். உலகியல் நூல்கள் எல்லாம் இம்முப்பொருள்களுள் ஒன்றாகிய தளையினைப் பற்றியே கூறுவன. சில நூல்கள் உலகையும் உயிரையும் பற்றி மட்டுமே எடுத்துரைப்பதால் அவை இரண்டைப் பற்றிப் பேசுவன. வேதங்களும் ஆகமங்களும் அருள் நூல்களும் ஞான நூல்கள் ஆகையினால் அவை முப்பொருள்களையும் பேசுவனவாகும். எனவே அவையே நூல்களுக்குள் சிறந்த நூல்களாக விளங்குகின்றன.

பதியெனப்படுவது பரம்பொருள். இறைவன், கடவுள் என்று இவ்வாறு பல்வேறு பெயர்களால் அழைக்கப் பெறினும் பதிப் பொருள் ஒன்றேதான். ஒன்று என்றது ஒன்றே காண் ஒன்றே பதி என்று சிவஞானபோதம் இரண்டாம் நூற்பாவில் முதல் அதிகரணத்தில் வரும் எடுத்துக்காட்டு வெண்பா இதனை வலியுறுத்தும்.

பதி தோற்றமும் ஈறும் இன்றி என்றென்றும் நிலைத்து நிற்பதாகும்.

பதிப்பொருள் அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்று தன்மையும் இல்லாதது. ஆயினும் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு அருவாகியும் உருவாகியும் அருவுருவாகியும் தான் நினைந்த வண்ணம் தோற்றம் கொள்ளும் வல்லமை உடையவன் இறைவன், இந்தக்கருத்தைச் சிவஞானசித்தியாரின் முதல்நூற்பாவின் இரண்டாவது அதிகரணத்தில்.

குறித்தது ஒன்று ஆகமாட்டாக் குறைவிலன் ஆத லானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யானும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளினாலே

என்று வலியுறுத்துகிறார், உயிர்களின் பொருட்டு அருவமாயும் உருவமாயும் அருவுருவமாயும் தனது பேரருளாலே திருமேனி கொண்டு தோன்றுங் காலத்து இறைவன் குணமும் குறியுமின்றியே நிற்பன். இங்கு குணம் என்றது மாயையின் காரியங்களாய் உயிர்களை மருவும் தாமத இராசத சாத்துவிக குணங்களையே ஆகும். ஏனெனில் எவ்வகைக் குணங்களும் அற்ற ஒரு பொருள் இருத்தல் இயலாது. அவ்வாறு இருப்பின் அப்பொருள் பயன் படாது. எனவே நிர்க்குணம் என்பது முக்குணங்களின் நீங்கிய நிலையேயன்றிப் பிறிதன்று. குறிகளும் அடையாளமும் இறைவனுக்கு உபசாரமேயன்றி அவனது உண்மைப் பேரியல்புகள் ஆக மாட்டா.

இயல்பாகவே பாசங்களின் நீங்கி விளங்குகின்றவன் இறைவன். எனவே அவனை நின்மலன் என்றார். அவன் நின்மலனாய் நிற்பதனாலே தான் மலங்களில் கட்டுண்டு அல்லலுறும் உயிர்களை அவன் விடுவிக்கிறான்.

தனக்கு ஒப்பும் உயர்வும் இல்லாத பெருமையுடையவனே பரம்பொருள் என்று வழிபடற்கு உரியவன் ஆதலால் ஏகமாய் என்று கூறினார். சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் வேறில்லை என்பது அருளாளர் திருவாக்கு. தோற்றம், இருப்பு ஒடுக்கம் என்ற மூன்று நிலைகளும் தனக்கு எய்தலின்றித் தான் மாற்றமில்லாது நின்றே இப்பேருலகத்தைத் தோற்றியும் காத்தும் ஒடுக்கியும் வருகின்ற வல்லமை உடையவன் இறைவன். ஆதலால் நித்தமாகி என்றார்.

உயிர்களெல்லாம் அறிவுடைப் பொருள்களே ஆயினும் அவை உணர்த்தினாலன்றி உணர மாட்டா. இறைவனோ முற்றுணர்வுடையவன். அவன் உயிர்க்கு உயிராக நின்று காணும் உபகாரமும், காட்டும் உபகாரமும் புரிந்து வருபவன் ஆதலால் அலகில் உயிர்க்கு உணர்வாகி என்றார். எண்ணற்ற அண்டங்களைப் படைத்து அழித்து ஒடுக்கினும் இறைவன் அசைவுற்றும் விகாரப்பட்டும் நிற்பவன் அல்லன் என்பதை உணர்த்த அசலமாகி என்றார்.(சலம்-அசைவு, அசலம்-அசைவற்ற தன்மை)

எல்லைக்குட்படுவது, பகுக்கப்படுவது கண்டிதம் என்று கூறப்படும். எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் கால வரையறைக்கும் இடவரையறைக்கும் உட்படாதவன் என்பதனை அகண்டிதமாய் என்ற சொல்லால் குறித்தார்.

சென்றடையாத திருவுடையானை என்று திருஞானசம்பந்தப் பெருமானும் அவனருளாலே அவன்õதாள் வணங்கி என்று மணிவாசகப் பெருந்தகையும் கூறுவதற்கேற்ப, இறைவனின் திருவடிஞானமே உயிர்களை இறைவனிடத்து இட்டுச்செல்லும் என்பதனை வலியுறுத்துதற்கு ஆனந்த உருவாயன்றிச் செலஅரிதாய் என்று கூறினார். சென்றடைய வேண்டிய உயர்கதியாகி உயிர்க்கு உறுதி பயப்பது இறைவன் திருவடியே என்று உணர்த்துவதற்குச் செல்கதியாய் என்றார்.


இறைவன் அணுவுக்கும் அணுவாயும் அப்பாலுக்கு அப்பாலாயும் விளங்குபவன். திருநாவுக்கரசு நாயனார் திருத்தாண்டகத்து அணுவை, யார்க்கும் தெரியாத தத்துவனை..... பெரியானை என்று உரைத்தபடி சிறிதுமாய்ப் பெரிதுமாய்த் திகழ்பவன் என்பதை உணர்த்தச் சிறிதாகிப் பெரியதாய்த் திகழ்வது என்றும் கூறினார். இவ்வாறு மேலே கூறப்பட்ட ஒப்பற்ற இலக்கணங்கள் யாவும் கொண்ட செம்பொருள் எதுவே அதுவே சிவம் என்ற பெயரால் அழைக்கப்படும் மெய்ப்பொருள். அதனை ஞானத்தால் தெளிந்தோரே அறிதல்கூடும் என்பதைப் புலப்படுத்த தற்சிவம் என்பார் தெளிந்துளோரே என்று உரைத்தார்.

இந்த ஒரே பாடலில் பரம்பொருளுக்குரிய இலக்கணங்கள் யாவும் தொகுத்துக் கூறீப்பட்டுள்ளன. பின்வரும் ஐந்து பாடல்களில் இதில் கூறப்பட்ட யாவும் வகுத்துரைக்கப்படுகின்றன.

நீடுபரா சத்திநிகழ் இச்சா ஞானம்
நிறைகிரியை தரஅதனை நிமலன் மேவி
நாடுஅரிய கருணைதிரு உருவம் ஆகி
நவின்றுபல கலைநாத விந்து ஆதி
கூடும்ஒளி வளர்குடிலை மாயை மேவிக்
கொடுவினைகொள் தனுகரணம் புவனம் போகம்
பீடுபெற நிறுவிஅவை ஒடுக்கும் மேனி
பிறங்கிய நிட்கள சகளப்பெற்றி ஆமே

நிலைபெற்ற பராசத்தி விழைவாற்றல், அறிவாற்றல், நிறைந்த செயலாற்றல் என்பனவற்றை வழங்க நின்மலனாகிய சிவபெருமான் அவற்றை மேவித் தன் பெருங் கருணையினாலே தனது அருளே திருவுருவாகக் கொண்டு நாதம் விந்து முதலிய தத்துவங்களோடு பொருந்தி சுத்தமாயையினோடு கூடி மறைகள் ஆகமங்கள் ஆகியவற்றை அருள்கிறான். தூவாமாயை பிரகிருதிமாயை ஆகியவற்றோடு பொருந்தி உயிர்களுக்கு அவர்களின் கொடிய வினைக்கு ஈடாக உடல், கருவிகள், உலகு, நுகர்ச்சிப் பொருள்கள் ஆகியவற்றைத் தந்தும் நிலைநிறுத்தியும் பின்னர் ஒடுக்கியும் அருள் பாலிக்கவல்ல அருவம் உருவம் அருவுருவம் என்ற மூன்று திருமேனிகளையும் மேற்கொள்ளுகிறான்.

இறைவனுடைய இயல்புகளை முந்தியபாட்டில் தொகுத்துத் தந்த ஆசிரியர் இப்பாடலில் வகுத்து உரைக்கிறார். அறிவரிய தன்மையுடைய இறைவன் தன்னுடைய பெருங் கருணையினால் உயிர்களுக்கு அருள்பாலிப்பதன்  பொருட்டு மூவகைத் திருமேனிகளையும் மேற்கொள்ளுகிறான். உருவத் திருமேனி சகளம் எனப்பெறும். அருவத் திருமேனி நிட்களம் எனப்பெறும் அருவுருவத் திருமேனி சகளநிட்களம் எனக் கூறப்படும். குடிலை என்பது சுத்தமாயையின் பெயர். மாயை என்று இப்பாடலில் கூறப்படுவது தூவாமாயையாகிய அசுத்தமாயையைக் குறித்தது.

தோற்றுவிக்கும் திருமேனி உருவம் என்றும், ஒடுக்குகின்ற திருமேனி அருவம் என்றும் கூறுவர். பதிப்பொருளாக நிற்கும் காலத்து மூவகைப்பட்ட திருமேனியும் இல்லாமல் விளங்குகின்ற வாக்கும் மனமும் கடந்த வான்கருணையாளன் உயிர்களிடத்துக் கொண்ட பேரருளாலே ஐந்தொழில் செய்யத் திருவுளம் பற்றிய போதே திருமேனி கொள்ளுகிறான். அத்திருமேனி நம்மனோரைப் போலத் தோன்றும் கருமேனியன்று. இதனை அருள்நந்திசிவம், சிவஞானசித்தியாரில்

உருமேனி தரித்துக் கொண்டது என்றலும் உருவுஇறந்த
அருமேனி அதுவும் கண்டோம் அருவுரு ஆன போது
திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நம்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவ காணே
என்று கூறுகிறார்.

அடுத்த பாடலில் இப்பாடலின் கருத்துத் தொடர்வது மட்டுமன்றி மேலும் விரிவாகவும் விளக்கப்பெறுகிறது.

ஈங்குஇது என்றது கடந்த இயல்பி னாலும்
ஈறுமுதல் நடுஒன்றும் இலாமை யாலும்
ஓங்கிவளர் ஞானமயன் ஆத லானும்
உண்மைபிறர்க்கு அறிவரிய ஒருமை யாலும்
தாங்குஅரிய வெறுப்பினோடு விருப்பும் எல்லாம்
சார்வுஅரிய தனிமுதல்வன் ஆதலாலும்
நீங்கல்அரும் உயிர்க்கு உயிராய் நிற்ற லாலும்
நிறுத்திடுவன் நினைந்தஉரு நிமலன் தானே.

சிவபெருமான் இங்கு என்று சுட்டுவதையும் இவன் என்று காட்டுவதையும் கடந்த இயல்புடையவன் ஆகையாலும், தொடக்கம் நடுஇறுதி ஆகிய ஒன்றும் இல்லாதவன் ஆதலாலும், ஒப்பற்ற ஞானச்சுடர் மயமாய் நிற்பவன் ஆதலாலும், அவனது உண்மைத் தன்மையை அவன் அருளால் அன்றிப் பிறரால் அறிய முடியாத தன்மையன் ஆதலாலும், வெறுப்பும் விருப்பும் இல்லாத தனிப்பரம்பொருள் ஆதலாலும் உயிர்க்கு உயிராய் நீங்காது நிற்பவன் ஆதலாலும் தான் நினைத்த உருவை மேற்கொண்டு நின்மலனாக விளங்குகிறான்.

சிவபெருமான் இங்கு என்று சுட்டுவதையும் இவன் என்று காட்டுவதையும் கடந்த இயல்புடையவன் ஆகையாலும், தொடக்கம் நடுஇறுதி ஆகிய ஒன்றும்இல்லாதவன் ஆதலாலும், ஒப்பற்ற ஞானச்சுடர் மயமாய் நிற்பவன் ஆதலாலும், அவனது உண்மைத் தன்மையை அவன் அருளால் அன்றிப் பிறரால் அறிய முடியாத தன்மையன் ஆதலாலும், வெறுப்பும் விருப்பும் இல்லாத தனிப்பரம்பொருள் ஆதலாலும் உயிர்க்கு உயிராய் நீங்காது நிற்பவன் ஆதலாலும் தான் நினைத்த உருவை மேற்கொண்டு நின்மலனாக விளங்குகிறான்.

இங்கே கூறப்பட்ட ஆறு இயல்புகளும் முற்றறிவுடமை, வரம்பில் இன்பமுடைமை, இயற்கை உணர்வினன் ஆதல், தன்வயத்தனாதல், குறைவிலா நிறைவுடைமை, வரம்பிலா ஆற்றலுடைமை என்ற இறைவனின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன.

ஈங்கு என்பது இடப்பொருளையும், இது என்பது சுட்டிக்காட்டும் எல்லையையும் குறிப்பவையாகும். இறைவன் இட எல்லையைக் கடந்தவன். சுட்டிறந்து நிற்பவன். எனவே அவனுடைய வியாபக நிலையை இப்பகுதி உணர்த்திற்கு.

ஆக்கம் அளவு இறுதியில்லாய் எனவும் முந்திய முதல் நடுஇறுதியும் ஆனாய் எனவும் மாணிக்கவாசகப் பெருமான் கூறுவனவற்றை ஆழ்ந்து உணர்தல் இங்குப் பொருந்தும். இறைவன் கால எல்லை கடந்து நிற்பவன் என்பது இப்பகுதியினால் உணர்த்தப்பட்டது.

ஓங்கிவளர் ஞானமயன் என்ற சொற்கள் இறைவன் அறிவே உருவாக நிற்றலை உணர்த்தின. பதி பசு பாசம் என்னும் மூன்றனுள், பாசம் அறிவற்ற பொருள். பதியும் பசுவும் சித்துப் பொருள்களே என்றாலும் பசுவின் அறிவு பாசத்தால் மறைக்கப்பட்டுச் சிற்றறிவாக விளங்குவது. உணர்த்தினாலன்றிப் பசுவுக்கு அறிவு விளங்குவதில்லை. எனவே பசுவின் அறிவு அறிந்தும், மறந்தும், பிறழ உணர்ந்தும் சிறுமைக்கு உட்படுகின்றது.

பதியின் அறிவோ இயல்பாகவே யாவற்றையும் சுட்டிறந்து நின்று அறிவதாகும். எனவே இறைவனை ஞானமயன் என்றதோடு அமையாது வளர் ஞானமயன், ஓங்கிய ஞானமயன் என்ற அடைகளையும் சேர்த்துக் கூறினார்.

இறைவன் ஒருவனே. அவன் சிவபெருமானே. அவனுடைய உண்மை நிலை எனப்படும் சொரூப இலக்கணம் பிறர் யாராலும் அறியப்படாத தன்மையை உடையது. ஓங்கு தழற் பிழம்பாய் சிவபெருமான் விளங்கியதும், அந்த ஒளிப் பிழம்பின் அடியையும் முடியையும் காண்பதற்குத் திருமாலும் நான்முகனும் பன்றி வடிவாய் அகழ்ந்தும் அன்ன வடிவாய்ப் பறந்தும் இருவராலும் காண இயலாத பெருமையும் கூறும் வரலாறு அவன் ஓங்கி வளர் ஞான மயன் என்பதை உணர்த்துவது. இதனையே மாணிக்கவாசகர் திருச்சதகத்து தன்மை பிறரால் அறியாத தலைவா என்று குறிப்பிடுகிறார். அறியாத என்பது அறியப்படாத என்ற பொருளைத் தந்தது.

தான் பிறரால் அறியப்படாமலும், அதே வேளையில் தான் யாவற்றையும் முழுக்க அறிந்தும் நிற்கின்ற இயல்புடைய சிவபெருமான். தலைவன் ஆகின்றான். அவ்வியல்பு இல்லாத பிறர் யாவரும் அவனுக்கு ஆட்பட்டவர்கள் ஆகிறார்கள். எனவே இறைவனின் உண்மை பிறர்க்கு அறிவரிய ஒருமை உடைய பெருமையை இங்கக் குறிப்பிட்டார்.

இறைவனை வேண்டுதல் வேண்டாமை இலான் என்று திருவள்ளுவர் குறிப்பிட்டார். ஆசிரியர் உமாபதிசிவம் தாங்கரிய வெறுப்பினோடு விருப்பும் எல்லாம் சார்வரிய தனிமுதல்வன் என்றார். உயிர்களிடத்து ஒப்பற்ற பெருங்கருணை உடையவனாகிய சிவபெருமான் ஒன்றில் விருப்பும் மற்றொன்றில் வெறுப்பும் கொள்வது இலன். ஆகவே நடுநிலைமை உடையவன்.

தாங்கரிய விருப்பு, தாங்கரிய வெறுப்பு என்று இரண்டத்தும் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். வெறுப்பு மட்டிலுமே தாங்குதற்கு அரியது என்பது உலகில் யாவரும் அறிந்தது. ஆனால் விருப்பும் அளவு கடந்து செல்லுமிடத்துத் தாங்கற்கு அரியதே என்பதை உமாபதிசிவம் நுட்பமாக எடுத்துக் கூறிகிறார். விருப்பும் வெறுப்பும் சார்தற்கு அரியவன் இறைவன். அவனுக்கு ஒப்பும் உவமையும் இல்லையாதலால் அவன் தனிமுதல்வன் எனப்பட்டான். எங்கும் எவையும் எரியுறு நீர்போல் ஏகம் தங்கும் அவன் தானே தனி என்பது திருவருட்பயனில் ஆசிரியர் உமாபதிசிவம் கூறும் உண்மை.

உயிருக்குத் தோற்றமும் இறுதியும் இல்லை என்பது சைவ சித்தாந்தம் உணர்த்தும் உண்மை. ஆயினும் அவ்வுயிர் உடம்பொடு கூடி உலகத்தில் உலவுகின்ற போது ஓர் உடலை விட்டு நீங்கி வினையின் பயனுக்கு ஏற்ப மற்றோர் உடலைச் சேரும் இயல்பு உடையது. ஓர் உடலில் உயிர் நிலையாகத் தங்க இயலாமல் மாறி மாறிப் புகுந்து புறப்படுவதைத் திருவள்ளுவர் புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு (குறள் 340) என்று கூறுகிறார். எனவே உயிர் நீங்கிச் சேரும் இயல்புடையது.

உயிர்க்கு உயிராய் நிற்கின்ற இறைவன் ஒரு போதும் உயிரை விட்டு நீங்காதவன். ஆகையால் நீங்கலரும் உயிர்க்கு உயிராய் நிற்றலானும் என்று கூறினார். நீங்கலரும் என்ற சொல் நீக்கமில்லாத என்ற பொருளைத் தந்தது. அது உயிருக்கு உரியது ஆகாமல் இறைவனுக்கு உரிய சிறப்பு.

இதுவரையில் ஆறு கரணங்களைக் கூறிய ஆசிரியர் உமாபதிசிவம், இத்தகைய பெருமையும் சிறப்பும் உடைய இறைவன் தான் நினைந்தவாறு நினைந்த உருவினைத் தன் பேரருளால் நிலைநிறுத்திக் கொள்ளுவான். ஏனெனில் அவன் நின்மலன் என்று எடுத்துக் கூறி இப்பாடலை நிறைவு செய்கிறார்.

இதற்கு முந்திய பாடலில் பிறங்கிய நிட்கள சகளப் பெற்றி யாமே என்று சருக்கமாகக் கூறப்பட்டது இப்பாடலில் விரித்துச் சொல்லப்பட்டது.

உலகம் எலாம் ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று
உளதாகி நின்று அளவில் ஒடுங்கும் பின்னும்
மலம் அதனால் உளதாகும் உருவம் மாறி
வருவது போவது செல்வது ஆதலாலும்
அலைவில் அசேதனம் மாயை ஆதலாலும்
அணுக்கள் உரு அடையும் அறிவு இலாமையாலும்
நிலவு தொழில் மருவி உருநிற்ற லாலும்
நின்று எவையும் அளித்திடுவன் நிமலன் தானே.

இவ்வுலகம் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்படுவதாகி அதனதனுக்குரிய கால எல்லையில் தோன்றிச் சிலகாலம் நின்று அதன் பின்னர் ஒடுங்கும் ஒடுங்கிய உலகம் ஆணவ மலம் பக்குவப்படுவதற்காக இறைவனால் மீண்டும் தோற்றுவிக்கப்படும். மாறி மாறித் தோன்றுவதும் நிற்பதும் ஒடுங்குவதும் ஆகிய இந்த மூன்று தொழில்களையும் செய்வதற்கு எல்லையற்ற ஆற்றலுடைய ஒருவன் வேண்டும். அவனே சிவபரம்பொருள். மாயை அசைவற்றதும் அறிவற்றதும் ஆகையினால் அதுவாகவே தோன்றுதலும் நிற்றலும் ஒடுங்குதலும் செய்ய வல்லது அன்று. உயிர்கள் அறிவுடைப் பொருட்கள் எனினும் அவற்றின் அறிவு சிற்றறிவாகவும் உணர்த்த உணரும் இயல்பு உடையதாகவும் இருத்தலால் தாமாகவே உருவெடுத்துக் கொள்ளும் ஆற்றல் அவற்றுக்கு இல்லை. வினை மனம் மொழி மெய்களைப் பற்றியே நிற்கும். ஆதலின் அதனாலும் உருவத்தைத் தோற்றுவிக்க இயலாது. எனவே முற்றறிவும் முழு முதன்மையும் உடைய இறைவனே உயிர்கள் செய்த இருவினைக்கு ஏற்ப அவற்றிற்கு உடல், கருவி, உலகு, நுகர்ச்சிப் பொருள் என்பனவற்றைத் தோற்றுவித்து அருளுவான்.

முதல் நூலாகிய சிவஞான போதம் இவ்வுலகத்தை இறைவனே தோற்றுவித்து நிலை நிறுத்திப் பின் ஒடுக்குகிறான் என்பதை முதல் நூற்பாவில் அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் தோற்றிய என்று அருளிச் செய்கிறது. இதனை வழி மொழித்து சிவஞானசித்தியாரில் ஆசிரியர் அருள்நந்திசிவம் ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று உரைத்திடும் உலகம் எல்லாம், வருமுறை வந்து நின்று போவதும் ஆதலாலே தருபவன் ஒருவன் வேண்டும் என்று அருளியுள்ளார்.

இவற்றை விளக்கி ஆசிரியர் உமாபதிசிவம் உலகம் எலாம் ஒருவனோடு ஒருத்தி ஒன்று என்று உளதாகி நின்று அளவில் ஒடுங்கும் என்று எடுத்துரைக்கிறார். அளவில் உளதாகி அளவில் நின்று, அளவில் ஒடுங்கும் என்று மூன்று இடங்களிலும் கூட்டிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

இவ்வாறு ஒடுக்கப்பட்ட உலகம் ஒடுங்கியவாறே ஒழியாமல் மீளவும் தோற்றுவிக்கப்படும் என்ற கருத்தினை மலத்துளதாம் என்று முதல் நூலின் முதல் நூற்பாவில் ஆசிரியர் மெய்கண்டதேவ நாயனார் அருளிச்செய்கிறார். இப்பகுதிக்கு உரை வகுத்த சிவஞான மாமுனிவர் தமது சிவஞான போதச் சிற்றுரையில் உள்ளதாகிய உலகம் கருமமலம் பரிபாகம் ஆதற்பொருட்டு ஒடுங்கி, ஆணவமலம் பரிபாகம் ஆதற் பொருட்டு மீளவும் உண்டாம் என்று கூறுகிறார். ஒடுக்கத்தையும் உளதாதலையும் இவ்வாறு இரண்டு மலங்களின் பரிபாகத்திற்காக எனக் கூறவே மூன்றாவதாகிய மாயாமல பரிபாகத்திற்காக உலகம் சிலகாலம் நிலை நிறுத்தப் பெறுகிறது என்பதை உய்த்து உணரலாம். இக்கருத்து, சிவஞானசித்தியாரில் உயிரவை ஒடுங்கிப் பின்னும் உதிப்பது என் அரன்பால் என்னில் செயிருறு மலத்தினாகும் என்று உரைக்கப்பட்டது.

தோற்றம் இருப்பு ஒடுக்கம் ஆகிய மூன்றிற்கும் இறைவன் ஒருவனே அதிகாரி என்பதனையும், அவனைத் தவிர உள்பொருள்கள் என சைவசித்தாந்தத்தில் கொள்ளப்பட்ட உயிர்கள், ஆணவம், வினைமாயை இவற்றிற்கு முத்தொழில் ஆற்றும் வல்லமை இல்லை என்பதையும் இப்பாடலின் பிற் பகுதியில் ஆசிரியர் காரணம் காட்டி நிறுவுகிறார்.

மாயையே தன்னிலிருந்து தன் காரியங்களாகிய உடல், கருவி, உலகு, நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றைத் தோற்றுவித்துக் கொள்ளும் என்று கொண்டால் என்ன என்று கேள்விக்கு, மாயை அசைவற்றது அறிவும் அற்றது. எனவே தானே உருவங்களைப் படைத்துக்கொள்ளும் ஆற்றலற்றது என்று காரணம் காட்டி இவற்றைச் செய்யும் வல்லமை உடைய இறைவன் ஒருவன் வேண்டும் என்பதை நிலைநாட்டுகிறார். அலைவில் அசேதனம் மாயை ஆதலானும் என்பது இந்தப் பகுதி. சேதனம்-அறிவுடையது. அசேதனம்-அறிவற்றது. அலைவில்-சலனமற்றது. இக்கருத்து இனிவரும் இருபத்து மூன்றாவது பாடலில் மேலும் விளக்கப்படுகிறது.

மாயைதான் அசித்துப் பொருள் எனவே தானாக ஒரு உருவத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் அதற்கு இல்லை என்பது பொருந்தும் ஆனால் உயிர் என்பது சித்துப் பொருள் தானே? ஆகையினால் அது தனக்கே ஓர் உருவத்தைப் படைத்துக் கொள்ள இயலாதா? என்ற கேள்விகளுக்கு ஆசிரியர் அணுக்கள் உரு அடையும் அறிவு இயலாமையாலும் என்ற சொற்களில் விடையளிக்கிறார். அணுக்கள் என்று இங்கே சொல்லப்படுவது தன்மைப்பட்டு நிற்கும் உயிர்களை முற்றறிவு இல்லாமையால் முழு ஆற்றலும் இல்லாமல் போகிறது. எனவே உயிர்களே தாம் நினைந்த வடிவை எடுத்துக்கொள்ளும் என்று கூற இயலாது.

வினையே உருவத்தைத்தரும் என்று கொண்டால் என்ன? என்ற கேள்விக்கு வடிவமில்லாத ஒன்று வினை செய்ய இயலாது. எனவே வனைக்கு முந்தியது வடிவம் என்று ஆசிரியர் குறிக்கிறார். அப்படியானால் முந்திய பிறவிகளிலே ஈட்டிய வினைகள் உருவத்தை எடுத்துக் கொள்ளும் என்று கொள்ள முடியாதா என்ற கேள்விக்கு அத்தகைய வினைகள் புத்தியைப் பற்றிக்கொண்டு நிற்குமே தவிர வடிவினை ஆக்கிக் கொள்ளும் ஆற்றல் வினைக்கு இல்லை என்பதை நிலவு தொழில் மருவியுரு நிற்றலானும் என்ற சொற்களால் குறித்தார்.

மேலே கூறப்பட்ட காரணங்களால் உலகினைப் படைக்கும் ஆற்றல் மாயைக்கும் இல்லை. உயிர்களுக்கும் இல்லை. இருவினைகளுக்கும் இல்லை. மலத்திற்கும் இல்லை என்று ஒவ்வொன்றாகக் கழித்த பிறகு உலகத்தைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இறைவன் ஒருவனுக்கே உண்டு என்பதை நின்று எவையும் அளித்திடுவன் நிமலன் தானே என்ற சொற்களால் வலியுறுத்தினார்.

திருவருட்பயனில் அறியும் நெறி என்ற அதிகாரத்தின் கீழ் ஏகன் அநேகன் இருள் கருமம் மாயை யிரண்டு ஆக இவை ஆறு ஆதி இல் என்று இவ்வாசிரியர் குறித்த பொருள்களில் ஏகன் எனப்பட்ட இறைவன் ஒருவனைத் தவிர மற்றைப் பொருள்கள் ஐந்தனுக்கும் உலகைத் தோற்றுவிக்கும் ஆற்றல் இல்லை என்பதை இப்பாடலில் ஆசிரியர் காரணம் காட்டி நிறுவுகிறார்.

இப்பாடலில் இரண்டாம் அடியில் வருவது போவது செல்வது ஆதலானும் என்று வருகின்ற பகுதி பிழைபட்ட பாடமாக இருத்தல் கூடும் எனவும், சரியான பாடம் வருவது பேர்வது செல்வது ஆதலானும் என்றும் அறிஞர்கள் கூறுவர்.

கந்தமலர் அயன் படைக்கும் உலகம் எல்லாம்
கண்ணன் அளித்திடும் அவைஎம் கடவுள் தானே
அந்தம்உற அழித்திடுவன் ஆத லாலே
அயன் அரியும் அவனது உயர் அதிகா ரத்து
வந்தமுறை தன்தொழிலே மன்னுவிப்பன் எல்லாம்
வருவிப்பன் விகாரங்கள் மருவான் வானில்
முந்துஇரவி எதிர் முளரி அலர்வுறும் ஒன்று அலர்வான்
முகையாம் ஒன்று ஒன்று உலரும் முறையின் ஆமே

மணமிக்க தாமரை மலரில் அமர்ந்து இருக்கும் பிரமன் உலகத்தைப் படைப்பான். அவன் படைத்த உலகத்தைத் திருமால் காப்பான். எம் கடவுளாகிய சிவபெருமான் அவ் உலகங்களையெல்லாம் துடைத்து ஒடுக்குவான். முற்றிலும் ஒடுக்குகிறவனே மீளவும் தோற்றுவிப்பான். ஆதலால் பிரமனும் திருமாலும் சிவபெருமானது உயர்ந்த அதிகாரத்துக்கு உட்பட்டு நின்றே தத்தம் தொழில்களை இயற்றுவார்கள். ஆதலால் அவ்விருவரும் சிவபெருமானின் ஏவலை மேற்கொண்டு ஒழுகுபவரே ஆவர். படைத்தும் காத்தும் ஒடுக்கியும் வருவதால் சிவபெருமான் விகாரி ஆவாரோ என்று ஐயுற வேண்டாம். வானத்தில் ஊர்கின்ற கதிரவன் முன்னிலையில் ஒரு தாமரை மொட்டு அரும்பாகும். தாமரை அரும்பு போது ஆகும். தாமரைப் போது பூவாக மலரும். நேற்றுப் பூத்த தாமரை மலர் உலர்ந்து வாடும். இவ்வாறு பல்வேறு மாற்றங்களுக்குத் தாமரை மலர்கள் ஆட்பட்டாலும் இம்மாற்றங்களால் கதிரவன் விகாரப்படுவதில்லை. அவ்வாறே சிவபெருமானும் எல்லா உலகங்களையும் படைத்து அளித்துத் துடைப்பினும் தான் மாறுதலின்றியே விளங்குவான்.

தோற்றுவித்தல் காத்தல் ஒடுக்குதல் ஆகிய மூன்று தொழிலுக்கும் அதிதெய்வங்களாக முறையே அயன் திருமால், உருத்திரன் ஆகிய மூவரையும் சொல்லுவது மரபு. ஆனால் முற்றழிப்புக் காலம் என்று கூறப்படும் சர்வ சங்கார காலத்தில் யாவற்றையும் ஒடுக்கித் தான் மட்டுமே நிலைபேறு உடைய தலைவனாக நிற்பவன் சிவபெருமானே. அவ்வாறு சங்கார காரணனாக இருப்பவன் எவனோ அவனே மீண்டும் உலகங்களனைத்தையும் தோற்றுவிக்கும் ஆற்றலுடையவன். அவ்வாறு தோற்றுவித்த பிறகே உலகைக் காத்து அளிக்கும் தொழிலுக்குத் தேவை ஏற்படுகிறது, எனவே முற்றும் ஒடுக்கிய சிவபெருமான் தோற்றுவிக்கும் தொழிலுக்காக அயனையும், காக்கும் தொழிலுக்காகத் திருமாலையும் தனது எல்லையற்ற, அருள் மிகுந்த ஆற்றலினால், அவர்களுக்கு அந்தந்த அதிகாரங்களைக் கொடுத்து முறைமை செய்கிறான். அயனுக்கும் அரிக்கும் உரிய வல்லமையும் தொழிலும் அவர்களிலும் மேம்பட்ட சிவபெருமானால் அவர்களுக்கு வழங்கப்பட்ட கொடை, அதனால் தான் அயனையும் அரியையும் இப்பாடலில் பெயரால் குறித்த ஆசிரியர் சிவபெருமானைக் கடவுள் என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். கடவுள் என்பது அயன் அரி உள்ளிட்ட அனைவரையும் அனைத்தையும் கடந்து நிற்பவன் என்னும் பொருட்டு.

கண்ணன் என்பது திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகிய கிருட்டிணனையே பொதுவாகக் குறிக்கும். எனினும் திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரை மலர் கொண்டு வழிபடும்போது அவற்றுள் ஒரு மலர் குறையக் கண்டு தன் கண்ணையே இடந்து அர்ச்சித்த வரலாற்றை நினைப்பிக்க இப்பாடலில் திருமாலைக் குறிக்கக் கண்ணன் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது.

தொழில் இயற்றும் காலத்து இயற்றுவோன் விகாரப்படுதல் உலகியல்பு. ஐந்தொழிலையும் மேவித் தனிநடத்தும் சிவபெருமானுக்கு விகாரம் நிகழ்வதில்லை. ஏனெனில் உலகத்துப் பிறரைப் போல எதனையும் முயன்று செய்யாமல் இறைவன் தன் திருவருட் குறிப்பின் வழியே யாவற்றையும் நிகழ்விக்கிறான். இதனைச் சங்கற்ப மாத்திரையால் செய்கிறான் என்று அருள் நூல்கள் கூறும். இதனால் இறைவன் நிர்விகாரி எனப்படுவன். இதற்கு உவமையாகக் கதிரவன் முன்னிலையில் தாமரை மலர்கள் மலர்வதையும், கூம்புவதையும் ஆனால் கதிரவன் மாறுபாடற்றுத் திகழ்வதையும் ஆசிரியர் குறிப்பிட்டார். இந்த உவமை முதல் நூல் ஆசிரியராலும் வழி நூல் ஆசிரியராலும் காட்டப்பட்டுள்ளமை இங்கு நினையத் தக்கது.

ஏற்றஇவை அரன் அருளின் திருவிளையாட்டு ஆக
இயம்புவர்கள் அணுக்கள் இடர்க் கடல் நின்றும் எடுத்தே
ஊற்றம்மிக அருள்புரிதல் ஏது ஆக
உரைசெய்வர் ஒடுக்கம் இளைப்பு ஒழித்தல் மற்றைத்
தோற்றம்மல பாகம்வரக் காத்தல் போகம்
துய்ப்பித்தல் திரோதாயி நிறுத்தல் ஆகும்
போற்றல்அரும் அருள் அருளே அன்றி மற்றுப்
புன்றவையும் அருள் ஒழியப் புகல் ஓணாதே

உயர்வாகிய இவ்வைந் தொழில்களும் சிவபெருமானுடைய திருவிளையாட்டு என்று பெரியோரால் கூறப்பெறும், உயிர்களைத் துன்பக் கடலிலிருந்தும் திருவருளால் எடுத்து இன்பக்கரை சேர்த்தலே இத்திருவிளையாட்டின் நோக்கமாகும். ஒடுக்கம் என்ற தொழில் உயிர்களை இளைப்பாற்றுவதற்காகவும், தோற்றுவித்தல் ஆணவமலம் பக்குவப்படுவதற்காகவும் காத்தல் கன்மமலம் கழியுமாறு அதன் பயன்களை நுகர்விப்பதற்காகவும், மறைத்தல் உயிர்களுக்கு இருவினையொப்பு எற்படுமாறு செய்விப்பதற்காகவும், அருளல் உயிர்களைக் கட்டினின்றும் விடுவித்து வீடுபேறு அடையச் செய்வதற்காகவும் இறைவனால் இயற்றப்படுவனவாகும். இவ்வைந்தொழில்களும் இறைவனின் அருள் தொழில்களே ஆகும்.

இப்பாடலில் கூறப்பட்ட கருத்துக்களை வழிநூல் ஆசிரியராகிய அருள்நந்திசிவம் சிவஞானசித்தியார் சுபக்கத்தில் இரண்டு பாடல்களால் குறிப்பிடுகிறார் அவை;

சொன்ன இத்தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னில்
முன்னவன் விளையாட்டு என்று மொழிதலும் ஆம் உயிர்க்கு
மன்னிய புத்தி முத்தி வழங்கவும் அருளால் முன்னே
துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதும் சொல்ல லாமே

அழிப்புஇளைப்பு ஆற்றல் ஆக்கம் அவ்வவர் கன்மம் எல்லாம்
கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம ஒப்பில்
தெழித்திடல் மலங்கள் எல்லாம் மறைப்பு அருள் செய்தி தானும்
பழிப்புஒழி பந்தம் வீடு பார்த்தபடி அருளே எல்லாம்

இறைவன் புரியும் ஐந்தொழிலும் அவனுடைய பேரருளின் வெளிப்பாடு. இவ்வைந்தொழில்களும் உயிர்களின் பொருட்டே இறைவனால் இயற்றப்படுகின்றன என்ற கருத்துக்களை இப்பாடலில் ஆசிரியர் தெளிவுறுத்தினார்.

இனி இத்தொழில்கள் எல்லாம் இறைவனின் திருவிளையாடல் என்று கூறப்படும். விளையாட்டு என்ற சொல்லுக்கு விளக்கம் தருகின்ற மாதவச் சிவஞான முனிவர் தமது சிவஞான மாபாடியத்தில் இரண்டாம் நூற்பாவின் முதல் அதிகரணத்தில் சிவப்பிரகாசத்தின் இப்பாடலையே மேற்கோள்காட்டி ஐங்கலப் பாரம் பொறுத்தல் சாத்தனுக்கு விளையாட்டொன்று போல அத்துணை எளிதிற் செய்யும் ஆற்றலுடைமை பற்றியே பிறிதில்லையாகலின் அஃதறியாது விளையாட்டென்றதே பற்றி வீண் தொழில் என்றல் சிறிதும் ஏலாமையறிக என்று விளக்கியருளுகிறார்.

இதுவரையுள்ள ஆறுபாடல்களிலும் பதியிலக்கணம் கூறப்பட்டது. இதனையடுத்த பாடல் பசு இலக்கணம் கூறுவதாகும்.

எண்அரிதாய் நித்தமாய் இருள்மலத்தில் அழுந்தி
இருவினையின் தன்மைகளுக்கு ஈடான யாக்கை
அண்ணல்அருளால் நண்ணி அவைஅவராய் அதனால்
அலகில்நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபாவம் புரிந்து போக்குவரவு உடைத்தாய்ப்
புணரும்இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவும் ஒளியதனால் இருள் அகற்றிப் பாதம்
உற்றிடும்நற் பசுவருக்கம் எனஉரைப்போர் உணர்ந்தோர்.

பசு வருக்கம் என்று கூறப்படும் உயிர்களின் தொகுதி எண்ணிலடங்காதது. அவ்வுயிர்கள் தோற்றம் இல்லாதவை. ஆதலால் அழிவும் இல்லாதவை. உயிர் தோற்றமில் காலம் தொட்டே ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டிருப்பது. ஆணவ மலம் பரிபாகம் அடைதல் பொருட்டு, இருவினைகளின் தன்மைக்கு ஏற்பச் சிவபெருமான் அருளாலே உடம்புகளைப்பெற்று அது அவன் அவள் என்று சுட்டப்படும் தொகுதிகளாகித் தத்தம் வினைக்கு ஈடான இன்பத் துன்பங்களை எய்தியும், நல்வினை தீவினைகளைச் செய்தும் இறந்தும், பிறந்தும், வருகின்ற இயல்பினை உடையது. இருள்மலமாகிய ஆணவமலம் பக்குவப்பட்ட பொழுது திருவருள் பதிதலால் உயிர்க்கு உயிராய் விளங்கும் சிவப் பேரொளியினால் இருள்மலம் நீங்கப் பெற்று இறைவன் திருவடியை அடைந்து மாறாத பேரின்பத்தைத் துய்க்கும் தகுதியைப் பெறுகின்றன என்று அருளாளர்கள் உரைப்பர்.

இந்த ஒரே பாடலில் சைவசித்தாந்தத்தில் கூறப்படுகிற உயிர் இயல்பு முற்றிலுமாக விளக்கப்பட்டது.

உயிர்கள் மூன்று நிலைகளுக்கு உட்படும். அவை முறையே இருள்நிலை, மருள்நிலை, அருள்நிலை எனப்படும். இவற்றை முறையே கேவலம், சகலம், சுத்தம் என்பர். இவை காரண அவத்தை என்று கூறப்படும். இம் மூன்று நிலைகளையும் இப் பாடலில் ஆசிரியர் நுட்பமாகக் குறித்துச் சொல்லுகிறார். எண்ணரிதாய் நித்தமாய் இருள் மலத்தில் அழுந்தி என்பது வரை இருள் நிலையாகிய கேவல நிலை உணர்த்தப்பட்டது. இருவினையின் தன்மைகளுக்கு ஈடான யாக்கை அண்ணல் அருளால் நண்ணி அவை அவராய் அதனால் அலகில் நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால் புண்ணிய பாவம் புரிந்து, போக்குவரவு உடைத்தாய், புணரும் இருள் மலபாகம் பொருந்தியக்கால் என்பது வரை மருள் நிலை என்ற சகலநிலை உணர்த்தப்பட்டது. அருளால் உள்நிலவும் ஒளியதனால் இருள் அகற்றிப் பாதம் உற்றிடும் என்ற பகுதியால் அருள்நிலை என்ற சுத்தநிலை உணர்த்தப்பட்டது.

அலகில்நிகழ் போகங்கள் என்ற பகுதி உயிர்களுக்கு விளைகின்ற இன்பத் துன்பங்கள் காலம் நியதி என்ற வரம்புகளுக்கு உட்பட்டே நிகழும் என்பதனை விளக்கிற்று.

ஏகமாய்த் தம்கால எல்லைகளில் மீளும்
எண்அரிய சத்தியதாய் இருள்ஒளிர இருண்ட
மோகமாய்ச் செம்பில்உறு களிம்புஏய்ந்து நித்த
மூலமலமாய் அறிவு முழுதினையும் மறைக்கும்
பாகமாம் வகைநின்று திரோதாயி சத்தி
பண்ணுதலால் மலம்எனவும் பகர்வர்அது பரிந்து
நாகம்மா நதிமதியம் பொதிசடையான் அடிகள்
நணுகும்வகை கருணைமிக நயக்கும் தானே

மூலமலமாகிய ஆணவமலம் ஒன்றேதான் ஆயினும், பக்குவம் அடைந்த காலத்து உயிரைவிட்டு நீங்கும் தன்மை உடையதாய் எண்ணுவதற்கு அரிய ஆற்றலை உடையதாய் நிற்கும். செறிந்த இருள்கூட இதனோடு ஒப்பிடும்போது ஒளி என்று கருதுமாறு இருண்டது ஆணவமலம். மயக்கத்தை விளைவிப்பது. செம்பினில் களிம்பு போன்று எப்போதும் உடனிருப்பது. எல்லாப் பெருங்கேட்டிற்கும் காரணம் ஆதலால் மூலமலம் என்ற பெயரைப்பெற்று. உயிர்களின் அறிவு முழுவதினையும் மறைத்து நிற்பது. மறைப்பாற்றல் என்ற திரோதான சத்தி ஆணவமலம் பக்குவப்படும் வரையில் அதற்குத் துணையாய் நின்று, பக்குவப்பட்ட பிறகு அரவும் கங்கையும் பிறையும் அணிந்த சடையினையுடைய சிவபெருமானின் திருவடிகளை அவ்வுயிர்கள் அடையும் வண்ணம் செய்தலால் அதனையும் மலம் என்று கூறுவர்.

ஆணவமலம் பல உயிர்களையும் பற்றி நிற்பினும் அது ஒன்றே தான். பல என்று கொள்ளப்படாது. பலவுமாய்ச் சடமுமாய் இருக்கும் பொருள்கள் எல்லாம் தோன்றி நின்று அழியும் இயல்பினை உடையன. இதனை விளக்க வந்த மாதவச் சிவஞான முனிவர் சிவஞான மாபாடியத்தில் முதல் நூற்பாவின் முதல் அதிகரணத்தில் ஆணவமலம் சடமாயினும் பல அன்று, ஆன்மாக்கள் பலவாயினும் சடமல்ல, ஆதலால் அவற்றின்கண் செல்லாமை அறிக என்று கூறுகிறார்.

ஒன்றாகிய ஆணவமலம் எண்ணிறந்த உயிர்களை வெவ்வேறுபட்ட வலிமையோடு பற்றிநிற்பது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது. ஆணவ மலம் ஒன்றே ஆயினும் எண்ணுவதற்கரிய சத்திகளை உடையது என்பது அதற்குரிய விடை. அது மட்டுமல்லாமல், ஒவ்வோர் உயிரையும் பற்றியுள்ள ஆணவமலம் அந்தந்த உயிரின் பக்குவத்திற்கு ஏற்ப அதனதனுக்கு ஏற்ற கால எல்லைகளில் உயிரைப் பற்றுவதை விட்டு நீங்குகிறது. இக் கருத்துக்களை விளக்கவே தம் கால எல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாய் என்று உரைத்தார்.

ஆணவமலம் உயிர்களின் அறிவை மறைத்தலால் இருள்மலம் எனப்படும். உலகத்துப் புற இருள் கூட ஆணவமாகிய அக இருளை நோக்கும்போது ஒளியெனத் தோன்றும் அளவுக்கு இது கொடிய இருளாகும். திருவருட்பயனில் ஆசிரியர் உமாபதிசிவம் இருள்மலத்தின் கொடுமையை விளக்கும்போது.

ஒருபொருளும் காட்டாது இருள் உருவம் காட்டும்
இருபொருளும் காட்டாது இது

என்று கூறுகிறார். புற இருள் தான் இருப்பதையாவது காட்டிப் பிற பொருள்களை மட்டிலுமே மறைக்கும். அக இருளாகிய ஆணவம் அறிவை முற்றிலும் மறைத்தலால் பிறபொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர முடியாமல் மறைத்தும். அதற்குக் காரணமாகிய தன்னையும் மறைத்து நிற்கும். இதனை இருள் ஒளிர இருண்ட என்று கூறினார்.

ஆணவமலம் காரிய வேறுபட்டால் எட்டுவகைப்படும் என்பது ஆசிரியர் அருள்நந்திசிவம் கூறும் கருத்தாகும். அதிலிருந்து சிறிது வேறுபட்டு ஆணவமலம் காரிய வேறுபாட்டால் ஏழுவகைப்படும் என்பது சிவஞான மாபாடியத்தில் சிவஞான முனிவர் கூறும் கருத்தாகும். எனினும் ஆசிரியர் இருவரும் ஆணவ மலத்தின் முதல் காரியம் மோகம் என்றே கொள்ளுகிறார்கள்.

மாதவச் சிவஞான முனிவர் மோகம் என்ற சொல்லை விளக்கும் போது சிவஞானமாபாடியத்தில் இரண்டாம் சூத்திரத்தின் இரண்டாம் அதிகரணத்தில் இவற்றுள் மோகம், மதம் முதலிய அறுவகைக் காரியங்கட்கும் ஏதுவாய்க் கட்டு நீங்குங்காறும் ஆன்மாகக்ளோடு சகசமாயுள்ளது. மோகம் இல்வழி ஏனை மதம் முதலியன நிகழாமையின், அது முதன்மைத்தாதல் அறிக. அம்மோகமாவது, கொள்ளற்பாலது இது நீக்கற்பாலது இது வென நூன்முகத்தான் உணர்த்தும், அரிவையர் முதலிய விடயங்களின் மயங்குதற் கேதுவாயது என்று உரைக்கிறார். இதனால் மோகம் அறும் காலமே ஆணவமலம் உயிரை விட்டு நீங்கும் காலம் என்பது தெளிவாகிறது.

செம்பில் களிம்பு என்ற உவமை செம்பு உள்ள காலத்திலேயே அதன் களிம்பும் உளதாயிருக்கும் என்பதையும் இரசகுளிகையால் செம்பு பொன்னாக மாறிடின் இக்களிம்பு ஒழிந்து பொன்னாவதைப் போல் சகச மலமாக விளங்கும் ஆணவம் சிவசத்தியால் தீர்ந்து உயிரும் ஆணவ மலக் குற்றத்திலிருந்தும் விடுபடும் என்பதை விளக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது.

தோற்றமில் காலம் தொட்டு உயிரோடு இருந்து இருவினை யொப்பும் மல பரிபாகமும் சத்திநிபாதமும் நிகழ்ந்தவழி ஆணவ மலம் வலி மடங்கிக் கிடக்கும் ஆதலின் நித்தம் என்றார்.

ஆணவ மலம் சகச மலம் எனப்படும். அதாவது உடன் தோன்றியது எனப்படும். மாயா மலம் கன்ம மலம் இரண்டும் ஆகந்துக மலங்கள் எனப்படும். அதாவது பின் வந்து சேர்ந்தவை என்பதாம். எல்லாப் பெருங்கேட்டிற்கும் காரணமாகிய ஆணவ மலத்தைப் படிப்படியே பக்குவப்படுத்தற்காகக் கூட்டப் பெற்றவை மாயையும் கன்மமும். இதனால் ஆணவமலம் மூலமலம் எனப்பட்டது. உயிரின் அறிவு முழுவதனையும் இம்மூலமலம் மறைத்து நிற்கும்.

இம்மூலமலம் பக்குவப்படுவது குறித்து உயிருக்குத் துணையாய் நிற்கும் இறைவனது ஆற்றல் திரோதான சத்தி எனப்படும். ஆணவ மலம் தோற்றமில் காலந் தொட்டு உயிரின் அறிவினை முழுவதும் மறைத்துக் கொண்டு நிற்கும் ஆயினும் தத்தம் கால எல்லைகளில் நீங்கும் என உரைத்த ஆசிரியர் அவ்வாறு நீங்குவதற்குத் துணையாகிய திரோதானம் பற்றியும் இப்பாடலிலேயே விளக்குகிறார்.

திரோதான சத்தி என்பது மறைப்பாற்றல் என்று பொருள்படும். இம்மறைப்பாற்றல் என்னும் கொள்கை சைவ சித்தாந்தத்துக்கே உரிய சிறப்பான கொள்கைளில் ஒன்று. ஆணவமலம் பக்குவப்படுதல் பொருட்டு, கன்மமலத்தின் பயன்களை உயிர்கட்கு இறைவன் ஊட்டும் போது இத் திரோதான சத்தி மறைப்பாற்றலாக நின்று உயிரைப் படி முறையிலே இட்டுச் செல்லும், இருவினையொப்பும் மல பரிபாகமும் சத்திநிபாதமும் விளையும் காலத்து இத்திரோதான சத்தியே இறைவனின் அருட்சத்தியாக மாறி, உயிர் சிவானந்தப் பேறு பெறுவதற்குத் துணையாக நிற்கும்.

திரோதான சத்தியை திரோதான மலம் என்று சொல்வது சிவஞானசித்தியாரின் சுபக்கத்தில் கன்ம ஒப்பில் தெழித்திடல் மலங்கள் எல்லாம் மறைப்பு என்று கூறப்படுபவன் அடிப்படையிலாகும். ஒப்பற்ற பரம்பொருளின் பேராற்றல் கட்டுற்ற சிற்றுயிரில் தங்கி நின்று அதற்குப் பக்குவத்தை விளைவித்து அதன் பின்னர் வீடு பேற்றிற்கும் துணையாகிறது என்பது கருத்தத்தக்கது. இதனை மனத்துட் கொண்டே சிவஞான மாபாடியம் எட்டாம் நூற்பாவின் முதல் அதிகரணத்தில், இனி, தவம் இவ்வாறு சரியை முதல் நால்வகைப்பட்டு நிகழ்தற்கு ஏற்பப் பக்குவம் ஆதற்பொருட்டு மலத்திற்கு அனுகூலமாய் நின்று நடாத்திய திரோதான சத்தி மலம் பரிபாகம் அனுகூலமாய் நின்று நடாத்திய திரோதான சத்தி மலம் பரிபாகம் எய்திய வழி அக் கருணை மறமாகிய செய்கை மாறி கருணை எனப்படும்முன்னைப் பராசத்தி ரூபமேயாய்.... என்று மாதவச் சிவஞான முனிவரால் விளக்கப் பட்டமை இங்கு நினையத் தக்கது.

உயிருக்குக் கேடு சூழும் ஆணவமலத்தின் இயல்பு கூறிய ஆசிரியர் உயிரை ஆணவத்திலிருந்து விடுவிக்கும் இறைவனது பேராற்றலையும் நினைவுறுத்தும் பொருட்டு திரோதாயி பற்றியும் இப்பாடலிலேயே உடன் வைத்துக் கூறினார்.

உன்னல்அரும் பரசிவன்தன் அருளாலே நாதம்
உதிக்கும்மிகும் குடிலைதனில் விந்துவரும் நாதம்
தன்னில்அதன் ஒளிவளரும் சதாசிவராம் அவரில்
தயங்கவரும் ஈசர்வித்தை தனை அளிப்பர் அதனால்
மன்னுவர்இவ் வகைஐவர் வாய்மையினால் முன்னே
வந்திடும்என்று உரைசெய்த விந்துவழா வகையே
முன்உதவும் சூக்குமாதி ஒருநான்கும் என்று
மொழிந்திடுவர் அருள்கலைகள் முதிர்ந்து ளோரே.

நினைவுக்கு எட்டாத சிவபெருமானது திருவருள் சத்தியினாலே சுத்தமாயையிலிருந்து நாதம் எனும் தத்துவம் தோன்றும் நாதத்திலிருந்து விந்து என்ற தத்துவம் தோன்றும். அவ்விந்துவிலிருந்து ஒளிமிகும் சதாசிவ தத்துவம் தோன்றும். சதாசிவத்திலிருந்து ஈசுரம் தோன்றும். அதனின்று சுத்த வித்தை தோன்றும. முறையே இவ்வைந்து தத்துவங்களுக்கும் அதிதெய்வங்களாக சிவம், சத்தி, சதாசிவர், மகேசுரர், உருத்திரர் என்னும் ஐவரும் நிலைபெறுவர். முன்னர்த் தோன்றும் என்று உரைக்கப்பட்ட விந்துவினின்று சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி ஆகிய நால்வகை வாக்குகளும் உதிக்கும் என்று அரிய சிவாகமங்களைக் கற்றுணர்ந்த பெரியோர் சொல்லுவர்.

சுத்த மாயா காரியங்களைப் பற்றி எடுத்துக் கூற வந்து ஆசிரியர் நாதம் விந்து சதாசிவம் மகேசுரம் சுத்த வித்தை ஆகிய ஐந்து சிவ தத்துவங்களைத் தோன்றும் முறைமையிலே மொழிந்தார். அதனோடு அவற்றுக்குத் தலைமை பூண்டு ஒழுகும் தலைவர்களையும் குறிப்பிட்டார்.

இவ்வைந்தும் அறிவும் செயலும் (ஞானசத்தி, கிரியாசத்தி) பொருந்தி நிற்பதால் அவற்றின் விழுக்காட்டிற்கு ஏற்ப வேறுபடுத்திக் கூறப்படும். முழு ஞானமே வடிவாக நிற்பது சிவ தத்துவம் எனவும், ஆற்றலே வடிவாக நிற்பது சத்தி தத்துவம் எனவும், இவ்விரண்டும் சமமாக நிற்பது சதாசிவ தத்துவம் எனவும், செயல் மிகுந்தும் அறிவு குறைந்தும் நிற்பது ஈசுவர தத்துவம் எனவும், அறிவு மிகுந்து செயல் குறைந்து நிற்பது சுத்தவிதத்தை என்னும் தத்துவம் எனவும் கூறப்படும்.

உருவாதி சதுர்விதமாய் ஒன்றுஒன்று ஒவ்வா
உண்மையதாய் நித்தமாய் ஒன்றாய் என்றும்
அருவாகிக் கன்மம்ஆர் அணுக்கள் யார்க்கும்
ஆவாரமாய் அசித்தாய் அசலம் ஆகி
விரிவாய தன்செயலின் வியாபியாய் எல்லாம்
விரிந்தவகை புரிந்துஅடைவில் மேவிஅவை ஒடுங்க
வருகாலம் உயிர்கள் எல்லாம் மருவுஇடமாய் மலமாய்
மன்னியிடும் அரன்அருளால் மாயை தானே.

அசுத்தமாயை ஆகிய தூவாமாயை உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் என்று நான்கு வகையாகி அந்நான்கும் ஒன்றைப் போல் மற்றொன்று ஒத்திராத தன்மையாகி அழியாததாகி ஆனால் அடிப்படையில் ஒன்றாய் அவ்வடிப்படை அருவம் ஆகவும் உயிர்களுக்கு வினைப்பயன்கள் விட்டு நீங்குமளவும் அவற்றின் அறிவை மறைப்பதால் அறிவற்ற தாய் அசைவு அற்றதாய் வித்தியா தத்துவங்கள் ஏழும் ஆன்ம தத்துவங்கள் இருபத்துநான்கும் ஆக முப்பத் தொரு தத்துவங்களிலும் பரவி நிற்பதால் அவை எல்லாம் தோன்றவும் ஒடுங்கவும் இடமாகி உயிர்களை மயக்குவதும் செய்வதால் மலம் ஆகிச் சிவன் அருளால் நிலைபெற்றிருக்கும்.

உயிர் நிலைபெறுவதற்குரிய உருவம் ஆதலின் உடலை என்ற சொல்லால் குறித்தார். ஏனெனில், மெய்யின் வழியது உயிர் தோன்றும் நிலையே தனு கரணம், புவனம், போகம் என்பன ஆகிய நான்கும் ஒன்றைப் போல் ஒன்று இல்லாமலும் அவற்றுள் ஒன்றின் இயல்பு மற்றொன்றுக்கு இல்லாமையாலும் உயிர்வகை தோறும் பல்வேறு மாற்றங்கள் உடையதாலும் உருவாதி சதுர் விதமாய் ஒன்று ஒன்று ஒவ்வா உண்மையதாய் என்று உரைத்தார்.

இத்துணை வேறுபாடுகள் இருப்பினும் அவற்றையெல்லாம் காரியப்படுத்தி அடிப்படையிலே மாறாதிருக்கின்ற தன்மை உடையதால் நித்தமாய் ஒன்றாய் என்று கூறினார். காரண நிலையிலே அருவமாக இருப்பதால் என்றும் அருவாகி என்றார்.

கன்மமலம் பக்குவப்படாத உயிர்களுக்கு அவற்றின் அறிவை மறைத்து நிற்பது அசுத்த மாயை ஆதலால் கன்மம் ஆர் அணுக்கள் யார்க்கும் ஆவாரமாய் என்றார். ஆவாரம் மறைத்து நிற்றல். அறிவுடைப் பொருள் ஆகாது சடம் ஆதலால் தனக்கென ஒரு செயல் அற்றது ஆதலால் அசைவு அற்றது என்பார் அசித்தாய் அசலம் ஆகி என்றும் கூறினார்.

உடல்களும் கருவிகளும் உலகுகளும் நுகர்ச்சிப் பொருள்களும் என்ற இவை எல்லாம் எண்ணிறந்த வேறுபாடு உடையவை. எனவே விரிந்த இவை யாவும் நிறைந்திருப்பது அசுத்த மாயை ஆதலின் விரிவாய தன் செயலில் வியாபியாய் என்றார். இவை எல்லாம் முறையே தோன்றி முறையே ஒடுங்கும் போது அவை மருவும் இடமாய் இருப்பது அசுத்தமாயை எனக் குறிப்பதற்கு விரிந்தவகை புரிந்து அடைவில் மேவி அவை ஒடுங்க வருகாலம் உயிர்கள் எல்லாம் மருவு இடமாய் என்றார்.

மாயை என்பது சைவசித்தாந்தக் கொள்கையின் படி உள் பொருளாய், நித்தமாய், மல இருளில் தடுமாறும் உயிர்களுக்குக் கை விளக்குப் போல அறிவை விளக்குவதாய் உள்ளது. ஏகான்ம வாதக் கொள்கை, மாயையை உள் பொருள் எனக் கொள்ளாமல் அநிர் வசனீயம் என்று கூறும். அதோடு அமையாது மாயையை உயிரின் அறிவை விளக்குவதாகக் கொள்ளாமல் மயக்குவதாக மட்டிலுமே கொள்ளும். திருஞானசம்பந்தப் பெருமான் திருவாக்கின்படி மாயை ஒண்தளை ஆகும். அதாவது தளையே ஆயினும் ஒளி தரும் தளை. சிவஞானசித்தியார் மாயையின் இயல்பை.

நித்தமாய் அருவாய் ஏகநிலைதாய் உலகத்திற்கு ஓர்
வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமலனுக்கு ஓர்
சத்தியாய்ப் புவன போகம் தனு கரணமும் உயிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யும் அன்றே

என்று கூறுவது இங்கு நினையத் தக்கது.

கன்மமார் அணுக்கள் என்ற பகுதியில் கன்மாந்தம் அணுக்கள் என்ற பாடமும் கொள்ளப்படுகிறது. ஆயினும் சிவஞான மாபாடியத்தில் சுத்த மாயை பற்றிக் கூறுமிடத்தில் மாதவச் சிவஞான முனிவர் கன்மமார் அணுக்கள் என்றே பாடம் கொண்டார்.

என்னைஇது எனில்உலகுக்கு உபாதானம் இல்லை
இறைவன்அலது எனில் அசித்துச் சித்தினிடத்து உதியா
மன்னிஉளதேல் முதல்வன் என்கொல் என்னில்
மாயைதான் அசித்து உருவாய்மருவ மாட்டாது
அன்னவனும் இதுவொழிய ஆக்க மாட்டான்
அசத்தனாம் எனில் அதுவும் அவன்போல் நித்தம்
முன்னவன்அவ் அசித்தை விரித்து எவையும் ஆக்கும்
முதன்மைஅது கொடுத்ததுஎன மொழிந்திடாரே

இம்மாயை எதற்காக உண்டு என்று கொள்ளப்பட வேண்டும் எனில் உலகிற்கு முதற் காரணமாக அமைவது மாயையே. ஆதலின் மாயை உள்பொருளே. சிலர் இறைவனே உலகுக்கு முதல் காரணம் என்று கொள்ளுகிறார்களே என்று கேட்பின், இறைவன் சித்துப்பொருள். அதாவது அறிவுடைப் பொருள். அறிவுடைப் பொருளிலிருந்து அறிவற்ற பொருள்கள் தோன்றுவதில்லை. உலகம் அசித்துப் பொருள். அது இறைவனாகிய சித்தினிடத்தினிருந்து தோன்றும் என்றல் பொருந்தாது. அவ்வாறு எனில் மாயையே முதற் காரணமாக இருக்கும் பொழுது இறைவன் எதற்காக எனக் கேட்பின், மாயை அறிவற்ற பொருள் ஆதலின் அது எண்ணற்ற வகைப்பட்ட உடல், கருவி, உலகு, நுகர்ச்சிப் பொருள் முதலியனவாகத் தன்னைத் தானே படைத்துக் கொள்ளும் ஆற்றல் அற்றது. இறைவனும் இம்மாயையை முதற் காரணமாகக் கொண்டு அல்லாமல் அவற்றைப் படைக்க மாட்டான். அவ்வாறு கொண்டால் மாயையின் படைக்கும் ஆற்றல் அற்றவன் இறைவன் என்று ஆகிவிடாதோ? எனக் கேட்பின், மாயையும் இறைவனைப் போலவே என்றும் உள் பொருள். எனவே இறைவன் புதிதாக ஒரு பொருளை முதற் காரணமாகத் தேடிக் கொள்ள வேண்டாம். இறைவனே அசித்தாகிய மாயையைக் கொண்டு எல்லாவற்றையும் ஆக்குவான். அவனது ஆக்கும் ஆற்றலை மாயை அவனுக்குக் தந்தது என்று உண்மை உணர்ந்தோர் கூற மாட்டார்கள்.

ஒரு பொருளைத் தோற்றுவிப்பதற்கு மூன்று காரணங்கள் தேவை என்பர். அவை முதற் காரணம் துணைக் காரணம் நிமித்த காரணம் எனப்படும். களி மண்ணைக் கொண்டு சக்கரம், தண்டு முதலியவற்றைப் பயன்படுத்தி ஒருவன் பானையை வனைகிறான். இவற்றுள் மண் முதற் காரணம் எனப்படும். அவன் பயன்படுத்தும் கருவிகளான சக்கரம், தண்டு போன்றவை துணைக் காரணம் எனப்படும். வனைகின்றவன் நிமித்த காரணன் எனப்படுவான். முதற் காரணத்தை உபாதான். காரணம் என்று வட மொழியில் வழங்குவர் துணைக் காரணத்தை சககாரி என வழங்குவர். இவற்றை ஆங்கிலத்தில் முறையே மெட்டிரியல் காஸ் என்றும் இன்ஸ்டுமென்டல் காஸ் என்றும் எபிசியன்ட் காஸ் எனவும் கூறுவர்.

இந்தப் பாடலில் இறைவனும் உள் பொருள் மாயையும் உள் பொருள் என்று கொள்ளாமல் இரண்டில் ஒன்றே உள் பொருளாகவும்
உலகத்தைத் தோற்றுவிக்கும் ஆற்றல் உடையதாகவும் கொண்டால் என்ன என்று கேள்விக்கு விடையளிக்கிறார் ஆசிரியர். வினாக்களையும் அவரே எழுப்பிக் கொண்டு விடைகளையும் அவரே தருகிறார்.

முந்திய பாடலில் அரனருளால் மாயை மன்னியிடும் என்று குறிப்பிட்டதனால் இரண்டின் இன்றியமையாமையும் இப்பாடலில் விளக்குகிறார். இறைவனே உலகுக்கு முதற் காரணம் என்று கொண்டால் அறிவுடைப் பொருளில் அறிவற்ற பொருள் தோன்றும் என்னும் குற்றம் விளையும். இறைவன் என ஒருவன் வேண்டா. மாயையே பல்வேறு வகைப்பட்ட உலகாகவும் பொருள்களாகவும் தன்னை ஆக்கிக் கொள்ளும் என்றால், அறிவற்ற பொருள் தானே தன்னை உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் உடையது என்ற குற்றம் விளையும். அறிவற்ற உலகத்திற்கு அறிவற்ற மூலப் பொருளாக விளங்குவது மாயை, அது தானே தன்னைத் தோற்றுவித்துக் கொள்ளாது. ஆதலால் சித்துப் பொருள் ஆகிய முதல்வன் அம் மாயையிலிருந்து உலகத்தையும் மற்றைப் பொருள்களையும் தோற்றுவிக்கிறான். எனவே இரண்டும் வேண்டும்.

சிவஞான மாபாடியத்தில் இரண்டாம் சூத்திரத்தின் தோற்றுவாயிலும் அதன் பின்னர் இரண்டாம் சூத்திரத்தின் இரண்டாம் அதிகரணத்திலும் மாதவச் சிவஞான முனிவர் மாயை உண்டு என்பதையும் மாயை உலகுக்கு முதற் காரணம் என்பதையும் விரித்து விளக்குகிறார். இப்பாடலில் வருகிற கருத்து, உலகிற்கு முதற் காரணம் பிரமனே என்னும் கொள்கையாளரை மறுப்பதற்கு எழுந்தது என்பதையும் மாதவச் சிவஞான முனிவர் மாபாடியத்தில் தெளிவுறுத்துகிறார். இதனானே ஏனையோர் போல முதல்வனுந் தன் செய்திக்கு முதற் காரணம் வேண்டுமாயின் அஃது ஏனை முதற் காரணங்கள் போல ஒரோ வழிக் கிடையாதொழியும் ஒழியவே அவ்வழி முதல்வன் உலகத்தை ஆக்க மாட்டானாய் அசத்தானாவான் செல்லும் எனப் பிரம முதற் காரண வாதிகள் கூறும் ஆசங்ககையை நீக்கியவாறுமாயிற்று. இவையனைத்தும் விளக்கிய அன்னவனுமிதுவொழிய வாக்க மாட்டானசத்தானா மெனினதுவு மவன் போனித்த முன்னவனவ்வசித்தை விரித்தெவையு மாக்கு முதன்மையது கொடுத்ததென மொழிந்திடாரே என்றார் புடை நூல் ஆசிரியரும் என்பது சிவஞான முனிவரின் பேருரைப் பகுதி.

படைத்ததுஒரு படிஇன்றிப் பறவைபசு நரராய்ப்
பண்ணியதுஎன் முன்னைவினைப் பான்மை என்பர்
அடுத்தவினை உளதாயின் இறைஏன் என்னில்
அசேதனம் மற்று அவைஆவிக்கு அமைத்தது ஆகும்
எடுத்தவினை உருஉறுவது உயிரேல் தானே
இருவினைக்குத் தக்கஉடல் எய்தும் என்னில்
சடத்திரளும் அகர்த்தவாய் அறிவு ஒன்று இல்லாத்
தன்மையனும் கூடஒரு சங்கை இன்றே

உலகத்துப் பொருள்களை இறைவனே தோற்றுவித்தான் என்று முந்திய பாடலில் குறிப்பிட்டது பொருத்தமுடையதானால், வேண்டுதல் வேண்டாமை இலாதவனாகிய இறைவன் அவற்றை ஒரு தன்மைத்தாய்ப் படைக்காதது ஏன்? பறவை பசு மானிடர் என்று பல தன்மைகளை உடையனவாய் ஏன் படைக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு ஆன்மாக்கள் முற்பிறவியில் செய்த வினைகளின் பயன்களுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் வேறுபாடுகள் உளவாயின என்பன பெரியோர். சங்கிலித் தொடர்போல் வரும் வினைக்கேற்ற பிறவி என்றால் இறைவன் ஒருவன் எதற்காக என்ற கேள்வி எழும். எனினும் வினைக்கேற்ற பிறவிகளும் அறிவற்றவை அதாவது அசேதனம். அவை வந்து உயிர்களைத் தாமே பொருந்துவதில்லை. அவற்றைப் பொருத்தியவன் இறைவனே. பழவினைக்கு ஈடான பிறவியை உயிரே விளைவித்துக் கொள்ளும் என்று கொண்டால் என்ன என்ற கேட்பின், வினையும் வினைக்கேற்ற பிறவியும் அறிவற்றவை. உயிர் அறிவுடைய பொருள் ஆயினும் தானாகச் செயல்படும் ஆற்றல் அற்றது. எனவே அகர்த்தா எனப்படும். செயலாற்றல் அற்ற சடமும் தனக்கென சுதந்திர ஞானமில்லாத உயிரும் கூடுமோ என்று ஐயப்பட இடமேயில்லை. கூடவே முடியாது என்பதுதான் உண்மை.

முந்திய பாட்டில் மாயையும் இறைவனும் என இரண்டு பொருள்களைக் கொள்வானேன் என்ற வினைவினை எழுப்பி விடையிறுத்த ஆசிரியர் இந்தப் பாடலில் வினையும் இறைவனும் என இரண்டு பொருள்கள் வேண்டுமோ என்ற கேள்வியை எழுப்பி அதற்கும் விடை தருகிறார்.

வினைக்கேற்ற பிறவிகளை இறைவன் தருவதால் புல்லும் பூடும் செடியும் விலங்கும் பறவையும் மனிதனும் எனப் பிறவி வேற்றுமைகள் உண்டாயின. மனிதப் பிறவியுள்ளும் கூர்த்த அறிவும் மந்த அறிவும் செல்வமும் வறுமையும் வலிமையும் நொய்ம்மையும் ஆகிய வேறுபாடுகள் உண்டாயின.

வினையும் இறைவனும் ஆகிய இரண்டும் உண்டு என்று கொண்டால் முதன்மை வினைக்கா அன்றி இறைவனுக்கா என்ற கேள்வி எழும். இக் கேள்விக்கான விடையைச் சிவஞான மாபாடியத்தில் இரண்டாம் நூற்பாவில் இரண்டாம் அதிகரணத்தில் மாதவச் சிவஞான முனிவர் விரிவாக எடுத்துக் கூறுகிறார். வினை என்பது இறைவனது ஆணை என்பதைத் தெளிவுறுத்துகிறார்.

அல்லல்மிக உயிர்க்குஇவைதான் அத்தது ஈசன்
அருவினைகள் அருந்துதற்கோ வினையோ அன்றிச்
சொல்லிவரும் மாயையோ அணுவை முந்தச்
சூழ்ந்ததுஎனும் உரைமுதல்ஓர் தொடக்கு இலார்பால்
ஒல்லைவரும் எனில்உளதாம் உயிர் உண்டாவே
உளதுமலம் மலம்உளதாய் ஒழிந்த எல்லாம்
நெல்லின்முளை தவிடுஉமிபோல் அனாதி யாக
நிறுத்திடுவர் இதுசைவம் நிகழ்த்தும் ஆறே

அவ்வாறாயின் இவ்வுடல்களை உயிர்களோடு இறைவன் பொருத்தியது நீக்குதற்குரிய துன்பத்தைத் தருகின்ற இருவினைப் பயன்களை நுகர்வதற்காக என்று ஆகிறது. காலத்தால் உயிரை முற்பட்டுப் பற்றிக் கொண்டது வினையோ அல்லது வினைகளுக்கு இடமாகச் சொல்லப்படும் மாயையோ என்ற ஒரு கேள்வி எழுகிறது. அக்கேள்விக்கு விடையாவது மாயையும் கன்மமும் கட்டற்ற உயிரைப் பற்றிக்கொள்ளவில்லை. தோற்றமில காலம் தொட்டே உயிர் மூல மலம் எனப்படும் ஆணவமலத்தால் கட்டுண்டு கிடக்கிறது. இம்மூலமலம் உள்ளதனாலேயே மற்றைய மலங்களும் நெல்லிலே உண்டான முளையும் தவிடும் உமியும் நெல்லுள்ள போதே தோன்றினாற் போல அநாதியாக உள்ளன. இது சிவாகமங்கள் உணர்த்தியருளுகிற முறைமையாகும்.

ஒரு நுட்பமான கேள்வி இங்கே எழுப்பி விடையிறுக்கப்படுகிறது. உயிர்களுக்கு உடலைத் தந்தது மாயை. அவ்வுடல்கள் பல்வேறு வகைப்பட்டிருப்பதற்குக் காரணம் அவ்வுயிர்களின் முன்னை வினைப் பயன்கள். அப்படியானால் உடல் முந்தி வந்ததா? அல்லது வினை முந்தி வந்ததா? காலத்தால் முற்பட்டது வினை என்றால் உடல் இல்லாமல் உயிரால் வினை இயற்ற முடியாது. காலத்தால் முந்தி வந்தது உடல் என்றால் அந்த உடலைப் பெற அந்த உயிர் என்ன வினை செய்தது? இக்கேள்வி வரம்பற்று ஓடுவது போல, விடைதர இயலாதது போல் தோன்றுகிறது என்பது உண்மை. ஆசிரியர் சைவ ஆகமங்களின் அடிப்படையில் இதற்கு விடை தருகிறார்.

வினை தோன்றியதால் உடம்போ அல்லது உடல் ஈட்டிய வினையோ எது காலத்தால் முற்பட்டது என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனெனில் குற்றமற்ற உயிரை மலங்கள் எனப்படும் மாயையும் கன்மமும் பற்ற வில்லை. அநாதியே உயிர்க்குற்றமாகிய ஆணவமலத்தால் பிணிக்கப்பட்டிருக்கிறது உயிர், ஆணவமே மற்றைத் தொடக்குகளுக்கும் காரணமாகிறது அதாவது உயிருள்ள பொழுதே ஆணவ மலமும் உள்ளது. அதன் விளைவே மாயை கன்மம் ஆகியன உயிரைப்பற்றுவதற்கு இடம் தருகிறது.

இதனை விளக்குவதற்கு நெல்மணியை உவமை காட்டுகிறார் ஆசிரியர். நெல்மணியில் முக்கியமான பகுதி அரிசி, அது தவிர உமியும் தவிடு முளையும் நெல்லுண்டான போதே உண்டு. இவ்வாறே உயிரும் மும்மலங்களும் தோற்றமில் காலந் தொட்ட உடனாயின.

இந்த உவமை முதல் நூலாகிய சிவஞான போதத்தில் இரண்டாம் நூற்பாவின் இரண்டாம் அதிகரணத்தில் மெய்கண்ட தேவநாயனார் அருளிய எடுத்துக்காட்டு வெண்பாவில்

நெல்லிற்கு உமியும் நிகழ்செம்பி னில்களிம்பும்
சொல்லில் புதிதன்று தொன்மையே

என்ற பகுதியில் பயன்படுத்தப்பட்டது.

இதனை வழி நூலாசிரியராகிய அருள்நந்தி சிவம் சிவஞான சித்தியார் சுபக்கத்தில் மும்மலம் நெல்லினுக்கு முளையோடு தவிடு உமிப்போல் மம்மர் செய்து அணுவின் உண்மை வடிவினை மறைத்து நின்று என்று வழிமொழிந்துரைக்கின்றார்.

இப்பாடலில் முதல் அடியில் அருந்துதற்கோ என்பது வினைப் பொருளில் வராமல் அருந்துதற்கே என்று கொள்ளுமாறு ஆசிரியரால் அமைக்கப்பட்டுள்ளது. முந்தைய பாட்டில் கூறப்பட்ட கருத்துக்களை உடன்பட்டு மொழிந்தது அது.

அருத்திமிகும் கலைகாலம் நியதியுடன் வித்தை
அராகம் இவை அனந்தரால் மாயைதனில் ஆகும்
உருத்திரரால் கலை அதனில் பிரகிருதி குணங்கள்
உளவாகும் ஆங்காரம் புந்திதனில் உதிக்கும்
தெரிந்தஇது திரிவிதமாம் தைசத வைகாரி
திகழ்தரு பூதாதிஎனத் திருத்திய சாத்துவிதம்
விரித்தகுணம் மனம்புத்தி இந்திரியம் என்று
விளம்பிய சோத்திராதி முதல் விளங்கியிடும் விரிந்தே

விருப்பமிகும் கலை காலம் நியதி வித்தை அராகம் ஆகிய ஐந்தும் அநந்த தேவர் அருளினால் தூவா மாயை (அசுத்த மாயை)யில் தோன்றும், அதனின்றும் குண தத்துவம் தோன்றும். புத்தியிலிருந்து அகங்காரம் உதிக்கும். அகங்காரம் மூன்று வகைப்படும். அவை முறையே தைசதம் வைகாரி பூதாதி என்று கூறப்படும். இம்மூன்று வகைப்பட்ட அகங்காரங்களில் தைசதம் என்று சொல்லப்படும் சாத்துவிக அகங்காரத்தினின்றும் மனமும் செவி முதலிய அறிவுப் பொறிகள் ஐந்தும் தோன்றி விளங்கும்.

அநந்த தேவர் அருளால் அதோமாயை எனப்பட்ட அசுத்த மாயையிலிருந்தும் கலை காலம் நியதியுடன் வித்தை அராகம் ஆகியவையும் தோன்றும். சிவஞான சித்தியார் சுபக்கத்தில் இரண்டாம் சூத்திரத்தில் மூன்றாம் அதிகரணத்தில், மாயையில் காலமொடு நியதி பின் கலாதி தோன்றும் என ஆசிரியர் அருள்நந்தி தேவர் கூறுகிறார். ஆனால் இப்பாடலிலோ கலை முதலாகத் தோற்ற முறைமை கூறுகிறார். மேல் எழுந்தவாரியாகப் பார்க்கும் போது இது முரண்பாடு உடையது போல் தோன்றும். சித்தியாரில் உலகத் தோற்ற ஒடுக்கங்கள் கூறப்பட்டன. எனவே கால தத்துவம் தோன்றிய பிறகே மற்றைத் தத்துவங்கள் தோன்றும் எனப்பட்டது. இந்நூல் சார்பு நூல் ஆகையினாலும் இந்நூல் ஆசிரியர் உயிர்களுக்கு உணர்த்தும் முறையிலே தம் நூலை அமைத்துக் கொண்டதனால் கலை என்பதன் முதலிலே வைத்துக் கூறினார்.

காலம் முதலாகச் சொல்லுவது தோற்ற முறைமை. கலை முதலாகச் சொல்லுவது தொழிற்பாட்டு முறைமை. இங்கே கலை எனச் சொல்லப்பட்டது இன்றைக்கு அச்சொல் வழங்கப்படும் பொருளில் அன்று என்பதை நினைவிலே கொள்ள வேண்டும். இங்குக் கூறப்படும் கலை. கலித்தல் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்து சற்றே நீங்குதல் என்ற பொருளைத் தரும்.

மாயையிலிருந்து காலம் நியதி கலை என்ற மூன்றும் தனித்தனியே தோன்றும் கலையினின்று வித்தையும் வித்தையிலிருந்து அராகமும் தோன்றும். இவ்வைந்தும் உயிருக்குச் சட்டை போல் விளங்குதலின் இவற்றைப் பஞ்ச கஞ்சுகம் என்பர். இவற்றோடும் கூடிய போதே உயிர் துய்ப்பதற்குரிய இயல்பினைப் பெற்று புருடன் என்ற பெயரைப் பெறும். இதனைப் போற்றிப் பஃறொடையில் மூல அரும் கட்டில் உயிர் மூடமாய் உள் கிடப்பக் காலம் நியதி அது காட்டி மேலோங்கும் முந்திவியன் கட்டில் உயிர் சேர்த்துக் கலை வித்தை அந்த அராகம் அவை முன்பு என்று குறிக்கப்பட்டது. சஞ்சுகம் என்பது சட்டை அல்லது போர்வை என்ற பொருளைத் தரும்.

கலையிலிருந்தே மூலப் பகுதியும் தோன்றும். அம் மூலப் பகுதி சாத்துவிகம் இராசதம் தாமதம் ஆகிய முக்குண வடிவங்களைத் தோற்றுவிக்கும். இம் முக்குணங்களும் ஏற்றத் தாழ்வு இன்றித் தம்முள் ஒத்து நிற்கும் இடம் சித்தம் எனவும், ஏற்றத் தாழ்வு உற்ற இடம் புத்தி எனவும் கூறப்படும்.

புத்தியிலிருந்து ஆங்காரம் என்ற தத்துவம் தோன்றும். இது மூன்று வகைப்படும். அவை முறையே தைசதம் வைகாரி பூதாதி என்று கூறப்படும். தைசதம் எனப்பட்டது ஒளி அல்லது அறிவு என்று பொருள்படும். வைகாரிகம் எனப்படுவது தொழில் அல்லது செயல் என்று பொருள்படும். பூதாதி என்பது உருவம் எனப் பொருள்படும்.

இப் பாடலின் இரண்டாவது அடியில் வரும் புந்தி தனில் என்பதைப் புத்தி தனில் என்று பாடங் கொள்வாரும் உளர்.

இவற்றுள் ஒளியாகிய தைசத அகங்காரமும் சாத்துவிக குணமும் மனத்தினையும் அறிவுப் பொறிகள் எனப்பட்ட செவி, மெய், கண், நா, மூக்கு என்ற ஐந்தினையும் விரித்து அளிக்கும். இவை அறிவாகிய ஒளி வடிவாய் இருத்தலால் அறிவுக்கருவிகள் அல்லது ஞானேந்திரியங்கள் எனப்பட்டு ஒலி, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்ற ஐந்தினையும் அறிவதற்குத் துணையாய் உள்ளன. இவ்வைந்தும் வடமொழியில் சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தம் என வழங்கப்படும்.

மன்னியகன் மேந்திரியம் ஆன இராசதம் சேர்
வாக்குஆதி வைகாரி மருவிவரும் சத்தம்
தன்னைமுதல் ஆகிய தாமதம் மிகுமாத்திரை பின்
தரும்இதனில் வான்அநிலம் அனல்புனல் மண்சத்தம்
முன்னதனில்வெளி ஆதி ஒன்று ஒன்று ஆகும்
முறையில்உறும் இருமைஅயன் முடிவாம் முன்னே
உன்னுசதா சிவர்ஆதி அதிபதிகள் ஒடுக்கம்
உதித்தஅடைவு எனஉரைப்பர் உணர்ந்துளோரே

நிலைபெற்ற செயற் பொறிகள்(கன்மேந்திரியங்கள்) வைகாரி அகங்காரத்தில் இராசத குணம் மிகுந்த வாக்கு முதலிய ஐந்தாக அவ்வவ்வற்றுக்குரிய விடயங்களோடு பொருந்தித் தோன்றும். இறுதியிலே கூறப்பட்ட பூதாதி  அகங்காரம் தாமத குணம் மிக்கதாய் சப்தத்தை முதலாகக் கொண்ட தன்மாத்திரைகள் எனப்படும் ஐந்தையும் தரும். தன்மாத்திரைகளிலிருந்து அவ்வரிசையிலே வானம் அநிலம் அனல் புனல் மண் எனும் ஐம்பூதங்களும் தோன்றும், இவ்வைம் பூதங்களும் வான் முதலாக ஒன்றிலே ஒன்றாகத் தோன்றும். இவ் ஒவ்வொன்றுக்கும் சதாசிவர் முதலாக அயன் ஈறாக ஐவர் அதிபதிகளாகப் பொருந்துவார்கள். இவ்வாறு கூறப்படுகின்ற தோற்ற முறைமையிலே ஒடுக்கமும் அமைந்திருக்கும் என்று அறிஞர் பெருமக்கள் கூறுவார்கள்.

முற்பாடலிலே தைசத அகங்காரம் என்னும் ஒளிமிகுந்த பகுதியில் தோன்றிய அறிவுப் பொறிகளைப் பற்றி ஆசிரியர் கூறினார். இப்பாடலில் தொழிலும் உருவும் பொருந்திய வைகாரி அகங்காரத்தையும் பூதாதி அகங்காரத்தையும் இடமாகக் கொண்டு தோன்றுவனவாகிய செயற்பொறிகள்(கன்மேந்திரியங்கள்) ஐந்தும் தன்மாத்திரைகள் ஐந்தும் தோன்றும் முறைமையைக் கூறுகிறார். ஐம்பூதங்களுக்கும் அதிபதிகளாய் உள்ள அதிதெய்வங்களையும் சொல்லுகிறார். ஐம்பூதங்களும் ஒன்றில் ஒன்று தோன்றி, தோன்றிய முறைமையிலே ஒடுங்கும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.

வைகாரி அகங்காரம் தொழில் ஆகையாலும் கன்மேந்திரியங்கள் தொழில் ஆற்றுபவை ஆகையாலும் வாய், கை, கால், எருவாய், கருவாய் ஆகிய ஐந்து தொழிற் கருவிகளும் அதினின்று தோன்றும். இவை முறையே வாக்கு, பாணி, பாதம், பாயுரு, உபத்தம் என்று வடமொழியில் கூறப்படும். வாயின் தொழில் பேச்சு. கையின் தொழில் ஏற்றலும் இடுதலும், காலின் தொழில் போக்கும் வரவும், எருவாயின் தொழில் கழிவுகளை வெளியேற்றல். கருவாயின் தொழில் இன்பம் நுகர்வது. இத் தொழில்கள் வடமொழியில் வசனம், தானம், கமனம், விசர்க்கம், ஆனந்தம் என வழங்கும். இப்பொறிகள் யாவும் இராசத குணத்தில் உதிப்பனவாகும்.

இதனை அடுத்து பூதாதி அகங்காரமாகிய தாமத குணம் பொருந்திய உருத்தோன்றி வெளிப்படுகின்ற தன்மாத்திரைகள் ஐந்தையும் பூதங்கள் ஐந்தையும் அவற்றின் அதி தெய்வங்களையும் கூறுகிறார். சப்தம் பரிசம் ரூபம் ரசம் கந்தம் என்பன தன்மாத்திரைகளுக்கு வட மொழியில் வழங்கும் பெயர்கள். இவை ஓசை ஊறு உருவம் சுவை நாற்றம் என்பனவாம். இவற்றிலிருந்து வான் வளி அனல் புனல் மண் ஆகிய ஐம் பூதங்களும் தோன்றும். ஆகாயம் வாயு தேயுஅப்பு பிருதிவி என்பன இவற்றின் வடமொழிப்பெயர்கள். இப்பாடலில் காற்று அநிலம் என்ற சொல்லால் குறிக்கப்பட்டது.

தன்மாத்திரைகள் என்பவை மிக மிக நுட்பமாக நின்று. நுண்ணியதாகிய ஐம்பெரும் பூதங்களைத் தோற்றுவிக்கும். இப்பூதங்கள் யாவும் பருமையாய் நாம் காணும் நிலம் நீர் தீ ஆகிய பொருள்களைக் குறியாமல் அவற்றின் தோற்றத்துக்கு அடிப்படையாய் நுண்ணிதாய் விளங்குவன என்பதை நினைவில் கொள்ளுதல் தகும்.

நுட்பத்திலிருந்து பருமை நோக்கிக் கூறப்புகுவதனால் வான் ஓசைக்கு மட்டிலும் இடங்கொடுத்து நிற்கும். காற்று ஓசையுடன் ஊறும் உடையதாகும். தீ ஓசை ஊறு உருவம் கொண்டதாகும். புனல், ஓசை ஊறு உருவம் சுவை ஆகிய நான்கும் உடையது. நிலம், ஓசை ஊறு உருவம் சுவை நாற்றம் என்ற ஐந்தையும் கொண்டதாகும். இந்த உண்மை பருமையிலிருந்து நுட்பம் கூறும் முறைமையில் பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி எனத் தொடங்கித் திருவாசகத்தில் போற்றித் திருஅகவலில் 137 முதல் 141-ம் அடிகள் வரை கூறப்பட்டுள்ளமை காணலாம்.

உன்னு சதாசிவராதி அதிபதிகள் என்ற பாடலின் பகுதி, ஐம்பூதங்களுக்கும் உரி அதிதெய்வங்கள் இவர் என உணர்த்துவது. விண்ணுக்குச் சதாசிவரும் காற்றுக்கு மகேசுரரும் தீக்கு உருத்திரரும் நீருக்குத் திருமாலும் நிலத்துக்கு அயனும் தெய்வங்கள் ஆவர்.

இப்பாடலில் பதினைந்து தத்துவங்கள் குறிக்கப்பட்டன. இதற்கு முந்திய பாடலில் இவற்றுக்கு முற்பட்ட பதினைந்து தத்துவங்கள் கூறப்பட்டன. தூவா மாயையில் தோன்றிய தத்துவங்கள் முப்பத்தொன்றில் முப்பது குறிக்கப்பட்ட பின்னர் எஞ்சுவது புருட தத்துவம் ஒன்றே. அது இங்குக் கூறப்படாமல் சிவப்பிரகாசம் நாற்பத்து ஒன்றாவது பாடலில். ஐவகையால் உறு பயன்கள் நுகர வரும் காலம், அது புருட தத்துவம் என்று அறைந்திடுவர் அறிந்தோர் என்று கூறப்படும்.

நண்ணியிடும்உரு அதனுக்கு ஏது ஆகி
நானா போகங்களாய் நாசோற் பத்தி
பண்ணிவரும் ஆதலால் அனாதி ஆகிப்
பலவாகி அணுக்கள் தொறும் படர்வது ஆகி
எண்ணிவரும் மனம்வாச கன்மத்தால் இயற்றும்
இயல்பினதாய் மதிகதமாய் இருபயனாம் பாவ
புண்ணியமாய்ப் புலர்காலை மாயை மேவிப்
பொருந்தும் இது கன்மமலம் புகலும் ஆறே.

உயிர்கள் பெற்றிடும் உடம்புகளுக்குக் காரணமாகிப் பல்வேறு பட்ட நுகர்ச்சிகளால் அழிவில் தோன்றும் தோற்றத்தால் சங்கிலித் தொடர் ஆகி. பலவாகி நுண்ணிதாய் உயிர்கள் தோறும் செல்வதாய் மனம் மொழி மெய்களால் இயற்றப்படும் இயல்பினதாய் புத்தியைப் பற்றி இருப்பதாய்ப் பயன் தரும் காலத்து பாவம் புண்ணியம் என்ற பெயரைப் பெற்று, ஒடுக்கம் நிகழும் போது மாயையில் பொருந்துவதாகிக் கன்ம மலம் விளங்கும். இது ஆகமங்களில் கூறப்பட்ட முறைமையாம்.

உயிர்கள் வினைக்கு ஈடாகப் பல வகைப்பட்ட உடல்களைப் பெறுகின்றன என்பது மேல் இருபத்து இரண்டாம் பாடலிலும் இருபத்து நான்காம் பாடலிலும் கூறப்பட்டது. அவ்வாறு உயிர்களின் நுகர்ச்சிகளும் பல்வேறு வகைப்பட்டனவாகவே இருக்கும். இவையும் வினையின் பயனே.

வினை தொன்று தொட்டு வருவதனால் தோற்றமற்றது (அனாதி) எனப்படும். நாசத்தின் உற்பத்தியாவது வினை அதனால் நாசோற்பத்தி என்ற சொல்லால் குறித்தார். வித்து அழிந்து முளையும், முளை முதிர்ந்து செடியாகி வித்தும் தோன்றுவது ஒன்றின் அழிவில் மீண்டும் அதன் தோற்றம் உளதாவதற்கு எடுத்துக் காட்டாகும். இதனைப் பிரவாக அநாதி என்றும் கூறுவர். பொங்கி வரும் பெரு வெள்ளத்தில் ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு விநாடியும் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். ஒரு துளி நகர்ந்தவுடனே அதன் இடத்தை மற்றொன்று நிரப்புவதால் வெள்ளத்தின் தொடர்ச்சி அறுபடாமல் பாயும். காண்பவர்களின் கண்ணுக்குப் பாய்கின்ற வெள்ளத்தில் நீர்த்துளிகளின் இடப்பெயர்ச்சி தென்படுவதில்லை. அனால் விநாடி தோறும் ஒன்று பெயர்வதும் மற்றொன்று அதனிடத்தை நிரப்புவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

வினையும் இவ்வாறான தொடர்ச்சியை உடையதே. முந்தை வினைப் பயனை இன்பத் துன்ப வடிவில் உயிர்கள் நுகரும் போது அந்த வினைகள் அழிகின்றன. ஆனால் உயிர்கள் விருப்பு வெறுப்பு உடையனவாகையால் முன் வினையை நுகர்ந்து கழிக்கும் காலத்திலேயே தமது விருப்பு வெறுப்பின் அடிப்படையிலேயே மீண்டும் வினைகளை ஈட்டிக் கொள்கின்றன. இதுவே நாற்சோற்பத்தி அல்லது பிரவாக அனாதி எனப்படும்.

வினை மூன்றாகக் கூறப்படும்.பழ வினை, ஏன்ற வினை, ஏறு வினை என்பன அல்ல. சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் என்று இவற்றைக் குறிப்பர். பலபிறவிகளில் ஈட்டிக் கொள்ளப்பட்ட வினைகளின் தொகுப்பு சஞ்சிதம். இந்தப் பிறவியில் நுகருமாறு இறைவனால் கூட்டப்படுவது பிராரத்தம். இதனை நுகரும் காலத்தே உயிர்கள் தம் விருப்பு வெறுப்பால் ஈட்டும் வினை ஆகாமியம்.

இவ் வினைத் தொடர் நினைவில் படர்ந்து மனம் மொழி மெய்களால் இயற்றப்படுவன. மனம் வாசகம் காயம் என்ற மூன்று சொற்களும் செய்யுள் ஆதலால் மன, வாச, காயம் என நின்றன. வினை புத்தியைப் பற்றியே நிற்கும். பயன் தரும் காலத்தில் நல்வினை புண்ணியம் எனப்படும். தீவினை பாவம் எனப்படும். இவற்றின் விளைவுகள் இன்பத் துன்பங்கள்.

இவ்விரு வினைகளும் ஒடுக்க காலத்தில் மாயையைப் பற்றுக் கோடாகக் கொண்டு நின்று அடுத்த பிறவியில் பக்குவப்பட்ட வினைகள் அனுபவத்திற்கு வரும் என்பது புலர்காலை மாயை மேவிப் பொருந்தும் என்ற பகுதியால் உணர்த்தப்பட்டது. இங்கு புலர் காலை என்பது ஒடுங்கும் காலத்தைக் குறித்தது. புலர்தல்-உலர்ந்து போதல்.

கன்மநெறி திரிவிதம்நற் சாதிஆயுப் போகக்
கடன்அதுஎன வரும்மூன்றும் உயிர் ஒன்றில் கலத்தல்
தொன்மையது ஊழ்அல்லது உணவுஆகா தானும்
தொடங்குஅடைவில் அடையாதே தோன்றும் மாறித்
தன்மைதரு தெய்விகம் முற்பௌதிகம் ஆன்மிகமாம்
தகையில்உறும் அசேதன சேதனத்தாலும் சாரும்
நன்மையொடு தீமைதரு சேதனனுக்கு இவண் ஊண்
நாடில்அதன் ஊழ்வினையாய் நணுகும் தானே.

வினைக்கு ஈடாக இனம் வாழ்நாள் துய்த்தல் ஆகிய மூன்றும் ஓர் உயிருக்குத் தொன்று தொட்டுப் பொருந்தி வரும். அவ்வினை பக்குவம் அடைந்த காலத்தே உயிர்களுக்குப் பயன் தரும். உயிர்களால் நுகரப்படும். அப்போது அது ஊழ் என்ற பெயரைப் பெறும். வினை யீட்டப் பட்ட கால அடைவிலே உயிர், வினைப் பயன்களை நுகர்வதில்லை. வினையின் வன்மை மென்மைகளுக்கு ஈடாகவும், பக்குவப்பட்ட முறைமையிலும் உயிர்கள் அவற்றின் பயன்களை நுகருமாறு இறைவன் கூட்டுவான். வினைகள் உயிரை வந்து சாரும் போது மூன்று வழிகளிலே வந்தடையும். அவற்றை ஆதி தெய்விகம் ஆதி ஆன்மிகம் ஆதி பவுதிகம் என்று கூறுவர். அறிவற்ற பொருள்களாலும் அறிவுடைப் பொருள்களாலும் வினைப்பயன் வினைசெய்த உயிரைச் சாரும். ஓர் ஆன்மாவின் இப்பிறவியில் அவ்வுயி நல்லனவும் தீயனவும் நுகர்வதனை ஆய்ந்து பார்த்தால் அவை அவ்வுயிரின் முன்னை வினைப் பயனைப் பொறுத்தே அமைகின்றன என்பது பலனாகும்.

இனம், வாழ்நாள், துய்த்தல் ஆகிய மூன்றும் முறையே சாதி ஆயுள் போகம் என வடமொழியில் வழங்கும். சாதி என்பது பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படும் சாதிப் பிரிவினைகள் என்று கொள்ளுதல் வேண்டா, நற்சார்பில் வந்து உதித்தலே சாதி என்ற சொல்லால் குறிக்கப்பட்டதாகக் கொள்ளுதல் தகும்.

மனத்துளது போலக் காட்டி, ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. (குறள் 454)

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும் (குறள் 457)

என்ற திருவள்ளுவ நாயனார் திருவாக்குகளை இங்கு நினைவு கூர்க. சிவ ஞான போதம் பன்னிரண்டாம் சூத்திரத்திலும் அடியாரோடு இணங்குக. அல்லாரோடு இணங்குவதை விடுக என்றதும் இக்கருத்துப் பற்றியே.

வாழ்நாள் என்பதுவும் பிறவியிலேயே வரையறுக்கப்பட்டது என்பது பெரியோர் கொள்கை. பிறந்தவுடனேயே உறுதியாகக் கூறத் தகுவது இவ்வுயிர் என்றோ ஒரு நாள் இறக்கும் என்ற ஒன்றுதான். இக் கருத்து சிவஞான சித்தியாரில் சுபக்கத்தில்

கருவினுள் அழிவதாயும் கழிந்திடாது அழிவதாயும்
பரிணமித்து அழிவதாயும் பாலனாய் அழிவதாயும்
தருணனாய் அழிவதாயும் தான் நரைத்து அழிவதாயும்
உருவமே அழிவே ஆனால் உள்ளபோதே பார் உய்ய

என்ற திருப்பாட்டால் விளக்கப்பட்டது.

இவ்வாறே துய்த்தல் என்பதும் வினைப்பயனுக்கு ஏற்ப இறைவன் கூட்டினாலன்றி ஓர் உயிருக்கு வாய்க்குமாறு இல்லை. பொன்னும், மெய்பபொருளும் தருவானை போகமும் திருவும் புணர்ப்பானை என்ற சுந்தர மூர்த்தி நாயனார் திருவாக்கு தருவதும் இறைவன். புணர்ப்பதும் இறைவனே என்ற கருத்தை வலியுறுத்தும் திருவள்ளுவ நாயனாரும்.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (குறள் 377)
என்றுரைத்தது இதனை வலியுறுத்தும்

ஊழ்த்தல் என்ற சொல்லுக்கு மலர்தல் என்பது பொருள். இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர் என்ற வள்ளுவர் வாக்கு இதனை விளக்கும். பக்குவப்பட்டு உயிரின் அனுபவத்திற்கு வரும் வினைப்பயன் ஊழ் என்ற கூறப்படும். பரிமேலழகர் திருக்குறளில் ஊழ் என்ற அதிகாரத்துக்குத் தோற்றுவாய் செய்யும் போது, ஊழ், பால், முறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஒரு பொருட் கிளவி என்று எழுதுகிறார். முன்னும் பின்னுமாகச் செய்த வினைகளில் எது பக்குவப்பட்டதோ அதன் பயனை நுகருமாறு இறைவன் ஊட்டுகிறான். இக் கருத்து ஊழ் அல்லது உணவு ஆகாது என்ற சொற்றொடரால் விளக்கப்பட்டது. ஈட்டப்பட்ட கால வரம்பில் முன் பின்னாகவும் வன்மை மென்மைகளுக்கு ஏற்பவும் வினையின் பயன்கள் உயிரை வந்து சார்கின்றன.

ஆதி தெய்விகம் எனப்படும் வினைவாயில். கருவினுள் பட்ட போதும் பிறப்பிலும் இறப்பின் போதும் நேர்கின்ற துயரங்கள். ஆதி ஆன்மிகம் என்பது பிற உயிர்களாலும் விலங்குகளாலும் பறவைகளாலும் தன்னாலும் வருகின்ற துயரங்கள். இது இரண்டு வகைப்பட்டு மனத்தால் படும் துயரம் எனவும், உடலால் படும் துயரம் எனவும் நிகழும். மனத்தால் படும் துயரங்கள் அழுக்காறு, அவா, வெகுளி, கவலை முதலியன. உடலால் நேரும் துயரங்கள் பிணி, காயங்களால் வருவன. ஆதி பவுதிகம் எனப்படும்.ஐம்பூதங்களிலிருந்து தோன்றி விளைகின்ற துன்பங்கள். மழை, காற்று, நிலநடுக்கம், எரிமலை, என்பவை அவை. துன்பத்திற்குக் கூறியவாறே இன்பத்திற்கும் இவ்வினைப் பயன்கள் இவ்வழிகளால் வந்து பொருந்துவதை உய்த்துணர முடியும்.

வாகீச முனிவர் இயற்றிய ஞானாமிர்தம் என்னும் நூலில் 26-வது அகவலிலும் சிவஞான மாபாடியம் முதலிய பெருநூல்களிலும் இவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

மேலைக்கு வருவினை ஏது என்னில் அங்கண்
விருப்புவெறுப்பு எனஅறி அவ்விளைவும் எல்லாம்
மூலத்த வினைப்பயில்வாம் என்னில் நாம்மேல்
முற்றி அதன்பயன் உனக்கு முளைக்கும் என்பர்
ஞாலத்து வினைகள் இருதிறன் ஆகும் புந்தி
நண்ணாத வினைநணுகும் வினைஎன ஒன்று இரண்டாம்
ஏலத்தான் இதம்அகிதமாம் இதனால் வழுவாது
எய்தியிடும் புண்ணிய பாவங்கள் என்றே.

முற்பிறப்பில் செய்த வினைகளை இப்பிறப்பில் நுகர்ந்து கழிக்கிறோம் எனின் இனிமேலும் பிறப்பு வருவதற்குக் காரணமாக இருப்பது எது என்று கேட்பின், இப்பிறப்பில் வினையின் பயனை நுகரும் உயிர்கள் நான் என்னும் அகங்காரத்தோடு நுகர்கின்றன. அப்போது விருப்பும் வெறுப்பும் விளைகின்றன. இவற்றிலிருந்து ஏறுவினை என்றும் ஆகாமியம் தோன்றி அடுத்த பிறப்பிற்குக் காரணமாகின்றது. விருப்பும் வெறுப்பும் தோன்றுவதே முன்னைவினைப்பயன் ஆகாதோ எனக் கேட்பின் யான் என்னும் உணர்வே யான் செய்தேன் பிறர் செய்தார் என்ற எண்ணங்களைத் தோற்றுவித்து. அடுத்த பிறப்பிற்கு முளை ஆகின்றன. இவ்வாறு பிறர்க்கு நலமும் தீங்கும் விளைவிக்கும் வினையும் இரண்டு வகைப்படும். அறிந்து செய்யும் வினை (புத்திபூர்வம்) அறியாது செய்யும் வினை (அபுத்திபூர்வம்) என்பன அவை. அவற்றின் பயன் தப்பாது விளையும்.

வினைப்பயன்களை நுகரும்போது விருப்பு வெறுப்புக்கள் தோன்றுகின்றன. அவை முயற்சியால் வருகின்றன. இன்பம் வரும்போதும் துன்பம் நேரும்போதும் இவை என் வினைப்பயனால் நேர்ந்தன எனக் கருதாது, நான் செய்தேன் என்றும் பிறர் செய்தார் என்றும் கருதுவது உலகியல். இதனால் மேலும் வினை விளைவதால் யான் செய்தேன் பிறர் செய்தார் என்னும் இக்கோணை ஞான எரியால் வெதுப்பி என்று கூறுவார் சிவஞான சித்தியார் ஆசிரியராகிய அருள்நந்திசிவம் அவரே பிற்செயாது அனுபவிப்பது இன்று என்று வேறு ஓரிடத்தும் உணர்த்துகிறார்.

வினைகள் இரு திறப்பட்டு, அறிந்து செய்வினைகள் எனவும், அறியாது செய்த வினைகள் எனவும் நிற்கும், இவற்றால் பிறர்க்கு நலம் தீங்குகள் விளைவிக்கிறோம். அவற்றின் விளைவு புண்ணிய பாவங்கள் எனப்பட்டு வழுவாது இறைவனால் ஊட்டப்படும்.

உற்றதொழில் நினைவுஉரையின் இருவினையும் உளவாம்
ஒன்று ஒன்றால் அழியாது ஊண் ஒழியாது உன்னில்
மற்று அவற்றில் ஒருவினைக்குஓர் வினையால்வீடு
வைதிக சைவம் பகரும் மரபில் ஆற்றப்
பற்றியதுகழியும்இது விலையால் ஏற்கும்
பான்மையுமாம் பண்ணாது பலிக்கும் முன்னம்
சொற்றரு நூல்வழியில் வரில் மிகுதி சோரும்
சோராது அங்குஅது மேலைத் தொடர்ச்சி ஆமே

மேற் கூறப்பட்ட வினைகள் இரண்டும் மனமொழி மெய்களால் முறையே நினைவாலும் சொல்லாலும் தொழிலாலும் விளைவனவாகும். ஒரு வினையால் மற்றொரு வினை அழியாது. கூர்ந்து நோக்கினால் வினைப் பயனின் நுகர்ச்சியே வினைத் தொடக்கை நீக்கும். ஆயினும் வைதிக சைவ மரபில் கழுவாய் செய்யப் பாவம் நீங்கும் எனப்படுகிறதே என்னில் புண்ணியத்தால் பாவத்தை ஒழிப்பது விலை கொடுத்து நற்பயனை வாங்க முயல்வதற்கு ஒப்பாகும். ஆகம விதிப்படி கழுவாய் செய்தாலும் வினையின் கொடுமை நீங்குமே ஒழிய வினையின் பயன் வேரறக் கழியும் என்பது உண்மை யன்று. அதன் வழி எஞ்சி நின்ற வினைப்பயன் அடுத்த பிறவிக்கும் தொடர்புடையதாகும்.

சிவப்பிரகாசத்தில் வரும் நெருடான பாடல்களுள் இது ஒன்று. இதற்கு உரை வகுத்த பெரியோர்கள் தங்களுக்குள் சிற்சில இடங்களுள் மாறுபாடு கொள்ளுகிறார்கள். வைதீக சைவ நூல்களுள் விதிக்கப்பட்ட கழுவாயைத் தாமே செய்தாலோ அல்லது பொருள் கொடுத்து மற்றொருவரைக் கொண்டு செய்வித்தாலோ கொடும் தீவினைகள் நீங்கும் என்றும் கூறிவிட்டு அதன் பிறகு முன்னே சொல்லப்பட்ட வேதாகமங்களின் முறைமையிலே ஒருவன் தான் செய்த தோஷத்துக்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்தாலும் அந்தத் தோஷத்தின் கவுரவங் கெட்டுத் தோஷமாத்திர நிற்கும். அதேதென்னில் ஒருவன் பிரமஹத்திகோவதை முதலாயுள்ள தோஷங்கள் செய்து அதற்குத் தக்க பிராயச்சித்தஞ் செய்தாலும் நாக வேதனைக்குள்ள கவுரவம் கெட்டுக் கொலைத் தோஷ மாத்திரம் நிற்குமென அறிக என்பது மதுரைச் சிவப்பிரகாசர் வகுத்த உரை.

சிதம்பரநாத முனிவர் உரையில் ஒரு வினையால் ஒரு வினைக்கு விடுதலையும் வேதாகமங்கள் சொல்லும் ஒழிதல் எப்படி எனில் அவை சொன்ன முறையிலே செய்தால் கூடின பாவகன்மம் நீங்கும். இங்ஙனம் புண்ணியத்தால் பாவம் ஒழிகை விலைக்குக் கொள்ளும் முறைமை உடையதுமாம். இப்படிச் சாந்தி பண்ணாது இருப்பினும் அபுத்தி பூர்வமாகப் பாவம் ஒழிகைக்கு ஏற்ற புண்ணியம் சித்திக்கும் என்று பொருள் காண்கிறார்.

யாழ்ப்பாணம் திரு. மு. திருவிளங்கனார் பாடலில் வரும் சொற்களை இயைத்து வீடு ஆற்றக் கழியும் என்று பொருள் காண்கிறார். இதன் மூலம் மரபினால் விடுதலையை ஆற்ற வினை கழியும் என்றே பொருள் கூறுகிறார்.

சிந்தனை உரையின் ஆசிரியர் சொற்றரு நூல் வழியில் வரின் என்பதற்குச் சரியை கிரியை யோக நெறிகளை முறையே பின்பற்றி ஒழுகிய பிறகு முதல்வன் ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளுவான் என்று உரை காண்கிறார்.

ஓர் பாவத்திற்கு எத்தனைப் புண்ணியம் பரிகாரமாக வேண்டப்படுமோ அத்துணையும் அவ்வாறே ஆகுக எனப் பின் சங்கற்பிக்கினும் அது பரிகாரமாகிப் பாவம் ஒழிதலும், எத்துணைப் பாவம் இருக்கினும் அதனால் எட்டுணைப் புண்ணியமேனும் கெடுதலும் ஆவது அன்மையின் புண்ணியப்பயனோடு பாவப் பயனும் அனுபவித்தே தீரும். என்று திருவுருமாமலைச் சாரலில் வாழும் ஓர் அடிகள் தாம் இயற்றிய உரை நூலில் குறிப்பிடுகிறார்.

இவ்வுரைகள் யாவும் தம்முள் வெவ்வேறு இடங்களில் மாறுபட்டு நிற்கின்றன என்பது தெளிவு. ஒரு தீவினைப் பயன் மற்றொரு நல்வினைப் பயனால் கழியும் என்பது பொருந்தாமையை இருவினையொப்பு என்ற சொல்லுக்கு விளக்கம் கூறுமிடத்து மாதவச் சிவஞான முனிவர் சிவஞான மாபாடியத்தில் எட்டாம் நூற்பாவில், ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பு மாதலன்றிப் புண்ணிய பாவமிரண்டினும், அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து விடுவோனதறிவின் கண் அவ்விரு வினையும் அவ்வாறொப்ப நிகழ்தலே ஈண்டு இருவினையொப்பு என்பதற்குப் பொருள் என நுண்ணுணர்வால் கண்டு கொள்க. என்றருளிச் செய்துள்ளார், எனவே ஒரு நல்வினை மற்றொரு தீவினையை அழிக்காது என்பதே சைவசித்தாந்தம் கூறும் கருத்தாகும்.

இந்நூல் இயற்றிய ஆசிரியர் உமாபதி தேவநாயனார் சங்கற்ப நிராகரணத்துள் சைவவாதி சங்கற்பத்துக்கு நிராகரணம் கூறுகின்ற இடத்து

அருவினை தூக்க உருவினை நில்லாது
ஒருவினை புரிகால் இருவினை ஆகா
ஒப்புறுமாறு செப்புக (சங்கற்பநிராகரணம் 20-22-24)

இதுபோலவே இவ்வாசிரியர் இயற்றிய மற்றோரு நூலாகிய திருவருட்பயனில் நீடும் இருவினையும் நேராக நேர் ஆதல், கூடும் இறை சக்தி கொளல் (51) எனவும் ஏன்றவினை உடலோடு ஏகும் இடை ஏறும் வினை, தோன்றில் அருளே சுடும் எனவும் கூறப்பட்டுள்ளவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

இக்கருத்துக்களை ஒரு சேர வைத்து நோக்கினால் ஒரு நல்வினையால் மற்றொரு தீவினை கழிக்கப்படுவதில்லை. என்பதும் வினை நீங்குவதற்கு இறைவன் திருவருளே துணை நிற்க வேண்டும் என்பதும் புலனாகும். சமய குரவர்களான திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும், இறைவன் திருவடி இணைகளை இறுகப்பற்றிக் கொண்டவர்களுக்கு வினைகள் வேரோடு அறும் என்று பல இடங்களில் அறிவுறுத்தி அருளியுள்ளமையையும் கருதினால் வினைகளை முற்றிலும் துடைப்பவன் இறைவனே என்பதும் தெளிவாகும்.

எனவே இப்பாடலின் உட்கிடை திருவருளால் அன்றி வினைப்பயன்கள் துடைக்கப்படா என்பதும் அழியாத வினைகள் அடுத்த பிறவிக்குப் பயனாய் வந்து விளையும் என்பதுமே ஆகும்.

மோகம்மிக உயிர்கள் தொறும் உடனாய் நிற்கும்
மூலஆணவம் ஒன்று முயங்கி நின்று
பாகம்மிக உதவுதிரோ தாயி ஒன்று
பகர்மாயை ஒன்றுபடர் கன்மம் ஒன்று
தேகம்உறு கரணமொடு புவன போகச்
செயல்ஆரும் மாமாயைத் திரட்சி ஒன்று என்று
ஆகமலம் ஐந்து என்பர் ஐந்தும் மாறாது
அருளென்பது அரிது என்பர் அறிந்து ளோரே

உயிர்கள் தோறும் தோற்றமில் காலம் தொட்டே அறிவை மறைத்துக் கொண்டு உடனாக நிற்கும் மூலமலமாகிய ஆணவ மலம் ஒன்று. உயிரோடு கலந்து நின்று அதற்குப் பக்குவம் ஏற்படுமாறு உதவுகின்ற திரோதாயி ஒன்று, சொல்லப்பட்ட மாயை ஒன்று, உயிர்தோறும் படர்ந்து நிற்கும் கன்மம் ஒன்று, உடல் கருவி உலகு நுகர்ச்சிப்பொருள் என்று கூறப்படும் மாயையின் காரியமான மாயேயம் ஒன்று. ஆக மொத்தம் ஐந்து மலங்கள் உள என்பர். இந்த ஐந்து மலங்களும் ஒழியாமல் இறைவன் அருள்பாலிப்பது என்பது நிகழாது என்று அறிஞர் கூறுவர்.

இப்பாடல் உயிர்களைப் பற்றி நிற்கும். ஐந்து மலங்களையும் விரித்துக்கூறி விளக்குகிறது. எல்லாப் பெருங்கேட்டிற்கும் காரணமாகி உயிர்களின் அறிவை முற்றிலும் மறைத்தும் தோற்றமில் காலம் தொட்டே உயிரோடு இயைந்தும் நிற்பதாகிய ஆணவமலத்தை முதலில் கூறினார். ஆணவமலத்தை வலி இழந்து போகுமாறு செய்வதற்காக உயிரோடு பொருந்தி நின்றும் உயிரின் அறிவை மயக்கியும் மலபரிபாகம் எய்திய போது உயிர்களுக்குக் கருணை மழை பொழிவதாகிய திரோதானத்தை அடுத்துக் கூறினார். மேல் இருபதாம் பாடலில் இது போலவே இரண்டையும் இணைத்துக் கூறியதைக் காண்க. உள் பொருளாய்ச் சொல்லப்பட்டதும் விடியுமளவும் விளக்குப் போல் நின்று உயிரின் அறிவைச் சற்றே விளக்கி வருகின்றதும் ஆகிய மாயா மலத்தை மூன்றாவது கூறினார். நல்வினை தீவினை என்றும் புண்ணியம் பாவம் என்றும் இன்பத் துன்பம் என்றும் பலவகையால் வேறுபட்டு உயிர்கள் அனைத்திலும் படர்ந்து நிற்கும் கன்ம மலம் ஒன்று. மாயையின் காரியங்களாகிய உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள்கள் என்று விரிந்து தோன்றும் மாயையின் காரியங்கள் ஆகிய மாயேயம் ஒன்று. ஆக மொத்தம் மலங்கள் ஐந்து என்று அறிந்துளோர் கூறுவர்.

மாயையின் காரியங்கள் மாயைக்குள்ளேயே அடங்கும் எனினும் உயிரைப் பிணிக்கும் செயலில் மாயையும் அதன் காரியங்களும் தம்முள் வேறுபட்டு நிற்கும். ஆதலால் அவை இரண்டையும் தனித்தனியாகக் கூறினார்.

இறைவனின் மறைப்பாற்றலாகிய திரோதான சத்தி உயிர்கள் பக்குவப்படும் வரையிலும் அவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆதலால் அதுவும் மலங்களில் ஒன்று என்று உபசரித்துக் கூறப்படும்.

ஆணவம் கன்மம் மாயை என்று மூன்று மலங்களே கூறப்படுவது பெரு வழக்கு. எனினும் அவற்றோடு திரோதானம் மாயேயம் இரண்டையும் கூட்டி மலங்களை ஐந்தாகக் கூறுவதும் மரபு. திருவாசகம் நீத்தல் விண்ணப்பத்தில் இருபத்து ஒன்பதாவது பாடலில் மலங்கள் ஐந்தால் சுழல்வன் தயிரில் பொரு மத்து எனவே என்று மாணிக்கவாசகர் அருளிச் செய்கிறார். குமரகுருபர முனிவர் கந்தர் கலிவெண்பாவில், பஞ்ச மலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறு என்று மலங்களை ஐந்தாகக் கூறுகிறார்.

ஓங்கிவரும் பலஉயிர்கள் மூன்று அவத்தை பற்றி
உற்றிடும் கேவலம் சகலம் சுத்தம்என உணர்க
ஈங்குவரும் கலாதியொடுகுறி உருவம்ஒன்றும்
இன்றிமலம் அன்றிஒன்றும் இல்லைஎனும் இயல்பாம்
ஆங்குஅறிவை அறிவுஅரியன் அறிகருவி அணையா
ஆதலினால் இருள்மருவு மலர்விழிபோல் அதுவாய்
நீங்கும்வகை இன்றிநித்த வியாபகமாய் அங்கண்
நிற்பது கேவலம் என்று நிகழ்த்தும் நூலே.

மேன்மேலும் உயர்ந்து வருகின்ற எண்ணற்ற உயிர்கள் மூன்று நிலைகளைப் பொருந்தி வரும். இம்மூன்று நிலைகளும் முறையே கேவலம் சகலம் சுத்தம் எனப்படும். இந்த வாழ்வு சகல நிலை ஆகும். இவ்வாழ்வில் உயிரைப் பொருந்திய கலை முதலியனவும் குறியும் உருவமும் ஏதும் இல்லாமல் ஆணவத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்னும்படி இவ்வுயிர் தனித்து இருக்கும் நிலை கேவல நிலை எனப்படும். அந்த நிலையில் உயிர் அறிவுடைப் பொருளாய் இருந்தும் தன்னையே அறிய மாட்டாத தாய், பிற பொருள்களை அறிவதற்குத் தேவையான கருவிகள் கூடாமல் இருப்பது ஆதலால் பிறவற்றையும் அறிய மாட்டாததாய் இருக்கும், செறிவான இருளிலே நிற்பான் ஒருவனுடைய கண் எவ்வளவு தான் மலர விழித்துப் பார்த்தாலும் இருளே ஆக இருப்பது போல இருள் மலமாகிய ஆணவ மலமேயாய் நிற்கும். ஆணவ மலத்தில் இருந்து நீங்கும் வகை இல்லாமலும் பிறப்பு இறப்பு இல்லாமையால் நித்தமாகவும், முழுவதும் ஆணவத்தினால் மறைக்கப்பட்டு நிற்கும். அருள்நூல்கள் உயிரின் இந்த நிலையைக் கேவல அவத்தை என்று கூறும்.

அவத்தை-நிலை, கேவலம் சகலம் சுத்தம் ஆகிய மூன்றும் நிலைகளையும் முறையே இருள் நிலை மருள் நிலை அருள் நிலை என்பர். இம்மூன்று அவத்தைகளும் காரண அவத்தைகள் எனப்படும். கேவல நிலையைப் புலம்பு என்றும் குறிப்பர். அதற்குத் தனிமை என்று பொருள். கேவல நிலையை விளக்குகின்ற சிவஞான சித்தியார்.

அறிவு இலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்களோடும்
செறிவு இலன் கலாதி யோடும் சேர்வுஇலன் செயல்கள் இல்லான்
குறியிலன் கருத்தா அல்லான் போகத்தில் கொள்கை இல்லான்
பிறிவுஇலன் மலத்தினோடும் வியாபி கேவலத்தில் ஆன்மா என்று கூறுகிறது. அதனையும் இப்பாடலுடன் இயைத்துப் பொருள் தெளிக,

குறி என்றது நுண்ணுடலையும், உருவம் என்றது பருவுடலையும் குறிக்கின்றன. மலமின்றி ஒன்றுமில்லை எனும் இயல்பாய் என்றது, கேவல நிலையில் உள்ள உயிருக்குத் தான் கடிய தொழில் ஆணவத்தால் கட்டுண்டு கிடக்கிறோம் என்று தெரியும் வன்மையும் இல்லாதிருப்பது பற்றி, ஆணவத்தோடு அத்துவிதமாய் நிற்கின்ற நிலையைக் குறித்தது.

குற்றமற்ற கண் ஆனாலும் இருளில் பொருள்களை அறியும் தன்மை கண்ணுக்கு இல்லை. ஆணவ இருளில் முற்றிலும் மூழ்கி நிற்பதால் உயிருக்குத் தன்னை ஆறியும் அறிவும் இல்லை. அறிகருவிகளுடன் உயிர் பொருந்தாத நிலையே கேவல நிலை. ஆகையினாலே அந்நிலையில் உயிர் பிற பொருள்களையும் அறியுமாறில்லை. கட்டு நிலையிலிருந்து நீங்கும் வகையினையும் உயிர்கள் அறிய மாட்டா. ஆணவ மலத்தினோடும் வியாபித்து நித்தப் பொருளாக உயிர் இருளில் அழுந்தி இருப்பது கேவல நிலை என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது.

இன்மைமலம் மாயைகன்மம் என்றுஇரண்டே இறைதான்
இலங்குபல உயிர்களும்முன் புரிந்த இருவினையின்
தன்மைகளால் எவர்களுக்கும் தனுகரணம் புவனம்
தந்திடும்இங்கு அதனாலே இருபயனும் சார்ந்து
கன்மம்எலாம் நேராக நேர் ஆதல் மருவக்
கடவுள் அருளால் எவையும் கழித்திடுவன் அதனால்
பின்மலம் ஆனவை அணுகா பெருகுஒளி முன்புஉளதே
பெற்றிடும்என்று இத்திறும்என் பேசும் ஆறே

இருள்மலம் அல்லது ஆணவ மலம் என ஒன்று இல்லை. மாயை கன்மம் என்ற இரண்டே மலங்களாகக் கொள்ளத் தக்கன. முன் செய்த நல்வினை தீவினைக்கு ஈடாக இறைவன் உயிர்களுக்கு உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள்களை வழங்கியருளுவான். அவ்வாறு வழங்கப்பட்ட இவற்றைக் கொண்டு இருவினைப் பயன்களை உயிர்கள் அனுபவிக்கும். அப்போது இருவினை ஒப்பு நிகழும். அதனால் வினை முழுவதினையும் இறைவன் கழித்திடுவான் அதன் பின் மாயை கன்மம் என்று கூறப்பட்ட இவ்விரண்டு மலங்களும் உயிர்களை வந்து அணுகா. இந்நிலையில் உயிர்கள் தமக்குரிய பேரொளியைப் பெற்றுத் திகழும் என்று சிலர் கூறுவார்கள். அவர்கள் கூற்றுப் பொருந்துமா?

ஆணவ மலம் என ஒன்று உண்டு என்பதும் அதனாலேயே உயிர்களுக்கு அறியாமையும் பிறப்பு இறப்புக்களும் இவற்றின் தொடர்பாக வருகிற இன்பத்துன்பங்களும் உளவாகும் என்பதும் சைவசித்தாந்தம் கூறும் முறைமை. இதற்கு மாறாக ஆணவ மலம் என்பதொன்று இல்லை. மாயை கன்மம் ஆகிய இரு மலங்களே உள்ளன. அவற்றின் பயனே உயிர்களுக்கு இன்பத் துன்ப மயக்கங்கள் என்று ஐக்கியவாதசைவர் முதலிய சில தத்துவ நெறியாளர்கள் கொள்ளுகிறார்கள். அவர்களின் கருத்து இப்பாடலில் கூறப்பட்டு. இதை அடுத்த பாடலில் ஆசிரியரால் மறுக்கப்படுகிறது.

மாயைமுதல் எனவினையின் பான்மைமுதல் எனவே
மன்னுபனை விதைமரபின் மயங்கும்மலம் சுத்தற்கு
ஏயும்நெறி என்கொல் அதன் இயல்புஆயின் முத்தி
என்பதுஎன் மற்றுஇவைநிற்க இரும்கலாதி உணர்வாய்
மேயபினர்த் தன்உருவம் விளங்காமை விளங்கும்
மிகும்உலகம் தனில் என்னில் இவை விடுங்கால் உணர்வுள்
தோயும்நெறி இலதாதல் அறியாமைஎன நீ
சொல்லியது மலம் என்பர் துணிந்துளோரே

முதலில் தூயதாய் இருந்த உயிரை மாயையும் கன்மமும் வந்து பற்றின எனின் இவை இரண்டுள் உயிரை முதலில் பற்றியது மாயையா கன்மமா? என்ற கேள்வி பிறக்கிறது. பனை முந்தியதா விதை முந்தியதா என்ற கேள்வி வரம்பின்றி ஓடுவதைப்போல இக்கொள்கையும் மயக்கத்தைத் தரும். இம்மலங்கள் இரண்டும் தூய ஆன்மாவை ஏன் வந்து பற்றின? இவை இரண்டும் இடையில் பற்றவில்லை. அவை ஆன்மாவில் இயற்கையாக உள்ளன என்று கூறினால் இயற்கை என்பது என்றைக்கும் அழிவில்லாதது ஆதலால் இந்த இரு மலக் கட்டிலிருந்தும் வீடு பேறு என்ற ஒன்று இல்லாததாய் முடியும். மேலும் கலை முதலியவை உயிரை வந்து பொருந்திய பின் பிற பொருளை அறிகின்ற அறிவைப் பெறுகிற உயிர், தன்னை அறியாமல் இருப்பானேன். மாயைதான் இத்தகைய அறியாமையைச் செய்தது என்றால் கலை முதலியன நீங்கிய விடத்துத் தன்னைத்தான் உணருகிற ஆற்றல் விளைய வேண்டும் அன்றோ? அப்போதும் உயிரைத் தடுப்பது அறியாமையே என்று நீ மறுமொழி கூறுவாயானால் நீ சொல்லும் அந்த அறியாமையே ஆணவ மலம் என்று விடையிறுப்பர் தெளிந்து துணிந்த அறிவுடையோர்.

மாயை, வினை என்று இரண்டே மலங்கள் உள்ளன என்ற கொண்டால் எழும் சிக்கல்களை இப்பாடலில் வினா விடை முறையில் ஆசிரியர் விடுவிக்கிறார். உடல் கருவி முதலியன வினைக்கு ஈடாக வருவன என்னும் போது வினை முந்தியதாகிறது. வினை ஆற்றுவதற்கு உயிருக்கு உடல் தேவைப்படுகிறது. அப்படியானால் உடல் மாயையின் காரியம் ஆதலால் மாயை முந்தியதாகிறது. இது எவ்வாறு உளதெனில் பனை முந்தியதாபனையின் விதை முந்தியதா என்ற கேள்வி அறாவழக்காய், வரம்பின்றி ஓடுவதைப் போன்றது.

முந்தின கேள்விக்கு விடையாக மாயையும் கன்மமும் உயிரை இடையிலே வந்து பற்றவில்லை. அவை இரண்டும் உயிரின் இயல்புகள் என்று விடையிறுத்தால் இயல்புகள் அழிவதில்லை. இயல்புகள் அழிந்தால் பொருளே அழியும். ஆதலால் கட்டிலிருந்து நீங்கிய வீடுபேறு என்பதே இல்லாமல் போகும். அந்நிலையில் முத்தி நிலை என்ற பேச்சுக்கே இடமில்லை.

இவை தவிர, கலை முதலியவை மாயையின் காரியங்களாய் உயிரை வந்து பற்றிய பின்னரும் உயிர் உலகத்துப் பிற பொருள்களை அறிகின்ற ஆற்றல் பெறுகிறதேயன்றித் தன்னைத்தான் அறியும் ஆற்றலற்று இருக்கிறது என்பதையும் காண்கிறோம். தன்னைத்தான் அறியும் ஆற்றல் என்பது ஆன்மரூபம் எனப்படும். அதற்கு விடையாக மாயை விரிந்து பரந்த பொருள் ஆதலால் ஆன்மாவின் இயல்பை மறைத்து மயக்குகிறது என்று விடை சொல்லக் கூடும். அவ்வாறாயின் கலை முதலியவை நீங்கிய காலத்தே உயிர் தன்னைத்தான் அறிய இயலவில்லையே அதற்குக் காரணம் என்ன என்ற வினா எழுகிறது.

உயிரின் அறியாமை அது தன்னைத்தானே உணர மாட்டாது தடுத்து நிற்கின்றது என்று விடை சொல்வாய் ஆயின் அந்த அறியாமையே சைவசித்தாந்தத்தில் ஆணவம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது என்று தெளிந்து துணிந்த அறிவுள்ளோர் விடையிறுப்பார்கள்.

விதை முந்தியதோ பனை முந்தியதோ என்ற கேள்வி வடமொழி வழக்கில் தாலபீஜ நியாயம் என்று வழங்கப்படும். தாலம்-பனை பீஜம்-வித்து.

 
மேலும் சிவப்பிரகாசம் »
சைவசித்தாந்த மெய்ப்பொருளியலை விளக்குகின்ற அடிப்படை நூல்கள் மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும். ... மேலும்
 
அன்னியம்ஆனவை உணர்த்தி அனன்டயமாய் நிறைந்தஅறிவு அறியாமையினாலும் அருள்நிலவும் காலம்தன்னில் அவனே ... மேலும்
 
அறிவினால் அறிந்தயாவும் அசத்துஆதல் அறிதிஎன்றும்அறிவினால் அறியொணாதேல் ஆவதொன்று இன்மைதொன்மைஅறிவுதான் ... மேலும்
 
முந்திய ஒருமை யாலே மொழிந்தவை கேட்டல் கேட்டல்சிந்தனை செய்தல் உண்மை தெளிந்திடல் அது தானாகவந்தவாறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar