Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவப்பிரகாசம் பகுதி -3 சிவப்பிரகாசம் பகுதி -5
முதல் பக்கம் » சிவப்பிரகாசம்
சிவப்பிரகாசம் பகுதி -4
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
12:06

அறிவினால் அறிந்தயாவும் அசத்துஆதல் அறிதிஎன்றும்
அறிவினால் அறியொணாதேல் ஆவதொன்று இன்மைதொன்மை
அறிவுதான் ஒன்றை முந்தி அதுஅது ஆகக்காணும்
அறிவுகான் அசத்து மற்றஅது அறிவினுக்கு அறியொண்ணாதே

உயிரறிவினால் அறியப்படக் கூடிய உலகத்துப் பொருள்கள் எல்லாம் அசத்துப் பொருள்கள் என்று அறிவாயாக. (அசத்து-நிலையற்றது) எனவே இறைவன் என்பவன் உயிரின் அறிவினால் அறிப்படாதவன் என்பதாயிற்று. அவ்வாறாயின் இறைவன் ஒரு காலத்தும் உயிரால் அறியப்படும் பொருள்கள் நிலையற்றன எனப்பட்டன. நிலைத்த பொருளாகிய இறைவன் உயிரின் அறிவாலே அறியப்படாதவன் என்று அறிக.

அவன் என்றும் அவள் என்றும் அது என்றும் கூட்டியறியப்படும் பொருள்கள் எல்லாம் தோன்றி நின்று அழியும் இயல்புடையன. சைவ சித்தாந்த மெய்ப்பொருள் நூல்களில் எல்லாம் தலைசிறந்து விளங்குகின்ற சிவஞான போதம் இக்கருத்தை வலியுறுத்தியே தொடங்குகின்றது. இங்கே சுட்டியறிவது உயிரின் அறிவு. சுட்டியறியப்படுவன அவயவப்பகுப்பு உடையனவாய்ப் பொறிகளால் அறியப்படுவனவாய் உள்ள உலகத்துப் பொருள்கள். அவை உயர்திணை ஆயின் அவன் என்றும் அவள் என்றும் அஃறிணையாயின் அது என்றும் சுட்டப்படுவன. இப்படிச் சுட்டப்பட்ட பொருள்கள் எல்லாம் நிலையற்றன.

அசத்து என்ற சொல் சைவசித்தாந்தத்தில் நீர் மேல் எழுத்தும், நிகழ் கனவும், பேய்த்தேரும் போல நிலைத்திருப்பது போலத் தோன்றி, நிலையாது அழிந்து போவனவற்றைக் குறிக்கும். இல்லாத பொருளைக் குறிக்காது. உலகத்துப் பொருள்கள் யாவும் காரண வடிவில் இருக்கும் போது வெளிப்பட்டுத் தோன்றா. காரிய வடிவில் வரும் போது அவை சுட்டியறிப்படுவனவாய் வெளிப்பட்டுத் தோன்றும். அவை அழியும் போதும் இல்லாமல் போகாமல் மீண்டும் தத்தம் காரணத்துள் ஒடுங்கும். சைவசித்தாந்தத்தில் முப்பொருள்களும் அதாவது பதி. பசு, பாசம் என்ற மூன்றும் என்றும் நிலைபேறு உடையவை. எனவே இங்கு அசத்து என்று குறித்தது பருப்பொருளாக விளங்குகின்ற உலகத்தையே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நிலையாதவற்றை நிலைத்தன என்று கொள்ளுவது புல்லறிவு என்பார் திருவள்ளுவர்.

நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை(குறள் 331)

கடவுளை என்னால் காணக்கூடவில்லையே. அவனை எனக்குக் காட்டினால் தான் நம்புவேன் என்று கூறும் கொள்ளையினர்க்கு இதுவே தக்கவிடையாதலை நினைவு கூர்க.

உயிரறிவால் காணும் தகைமையன் அல்லன் இறைவன் என்பதனைச் சிவஞான சித்தியார் சுபக்கம்.

அன்னியம் இலாமை யானும் அறிவினுள் நிற்ற லானும்
உன்னிய எல்லாம் உள்நின்று உணர்த்துவன் ஆதலானும்
என்னது யான்என்று ஓதும் இருஞ்செருக்கு அறுத்தலானும்
தன்னறிவு அதனால் காணும் தகைமையன் அல்லன் ஈசன்

என்று கூறுகிறது. திருவாசகத்தின் திருச்சதகத்தில் மாணிக்கவாசகப் பெருமான் அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா, எனைத்து எனைத்தது எப்புறத்தது எந்தை பாதம் எய்தவே என்று கூறுவதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

உயிரறிவால் அறியப்படாத பொருளாயின் இறைவன் என்பவனால் உயிருக்கு ஒருபயனும் இல்லையோ எனின், அவ்வாறன்று இறைவனை அறிய முடியாத தன்மை உயிர் சிற்றறிவுடையது என்பதனால் வந்தது என்க. உயிர் கருவிகளின் துணை கொண்டு சுட்டியறியும் சிற்றறிவுடையது. ஆனால் இறைவனையறியும் ஞானம் என்பது சுட்டறிவும் சிற்றறிவும் கடந்து நிற்பது. பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன் என்று இறைவனை அருள் நூல்கள் கூறும்.

எவ்அறிவு அசத்து அறிந்தது எனில்உயிர் அறியாதுஈசன்
அவ்அறிவு அறியான் அல்லது அசேதனம் அறியாதுஆவி
செவ்விய கருவி கூடித் தெரிவுறாது அருளில் சேர
ஒவ்இரு வகையது என்னில் ஒளிஇருள் ஒருங்கு உறாவே

முப்பொருள்களுள் அசத்து ஆகிய பாசத்தை அறிந்தது எதன் அறிவு? உயிர் தானே அறியும் வல்லமை அற்றது. எனவே அதனால் அசத்தை அறிய இயலாது இறைவன் யாவற்றையும் ஒருங்கே அறியும் பேரறிவாளன். ஆகையால் அவன் அசத்தைச் சுட்டியறியமாட்டான். பாசமோ அறிவற்ற சடப்பொருள். ஆதலால் அதனாலும் அசத்தை அறிய இயலாது. தனித்தனியாக நின்ற முப்பொருள்களும் இவ்வாறு அசத்தை அறிய மாட்டா என்னில் அவை தம்முள் இணைந்து நின்று அறியுமோ என்னும் கேள்வி எழுகிறது. உயிரும் பாசமும் கூடினால் உயிர் தானே அறிய வல்லதில்லை ஆதலாலும் பாசம் அறிவற்றது ஆகையாலும் அவை இரண்டும் கூடி அசத்தை அறியமாட்டா. இறைவனும் உயிரும் கூடிய நிலையில் அசத்தை அறியுமோ எனில், கட்டு நிலையில் இறைவனும் உயிரும் கூடுவதில்லை. இறைவனும் பாசமும் ஒளியும் இருளும் போல ஆதலின் இவ்விரண்டும் கூடி ஓரிடத்தில் இருப்பதில்லை.

முந்திய பாடலில், அறிவினால் அறிந்த யாவும் அசத்தாதல் அறிதி என்று அறிவுறுத்திய ஆசிரியர் அவ்வாறு அசத்தினை அசத்து என்று கண்டு அறிவதற்கு உரியது முப்பொருள்களுள் எது என்ற வினாவை எழுப்பி இப்பாடலில் விடை தருகிறார். முப்பொருள்களும் தனித்து நின்றும் அறிவதில்லை. இரண்டிரண்டாகக் கூடி நின்றும் அறிவதில்லை என்று காட்டுகிறார். அடுத்து வரும் பாட்டில் இதற்குத் தெளிவான விடையும் தருகிறார்.

இப்பாடலில் நான்காவது வரியில் ஒவ்இரு வகையது என்று வருமிடத்தில் உவ்விரு வகையது என்று பட வேறுபாடும் உண்டு. முதல் பாடத்துக்கு ஒத்த இரு வகை என்று பொருள் காண்பர். இரண்டாவது பாடத்தில் உகரம் சுட்டுப் பொருளில் வந்தது. அவ்விரு வகை என்று பொருள் காண்பர்.

சத்து இதுஎன்று அசத்துத்தான் அறியாது அசத்தைச்
சத்துஅறிந்து அகலவேண்டா அசத்துஇது சத்துஇது என்றுஓர்
சத்துஇருள் ஒளி அலாக்கண் தன்மையதாம் அசத்தைச்
சத்துடன் நின்று நீங்கும் தன்மையால் சதசத்து ஆமே

சத்து இது என்று அசத்துப் பொருள் அறியாது. சத்துப் பொருளாகிய ஈசன் அசத்தை அறிந்து அதிலிருந்தும் நீங்க வேண்டுவதில்லை. ஆகையால் அசத்து இது என்றும், சத்து இது என்றும் ஓர்ந்து தெளிந்து அசத்தினைவிட்டு நீங்கிச் சத்தினைச் சார்ந்து பயன்பெற வேண்டியபொருள் இந்த இரண்டும் அல்லாத கதசத்து எனப்படும் உயிரே ஆகும். இது எவ்வாறு எனில், கண்ணாகிய இந்திரியம் இருள் இது என்றும் ஒளி இது என்றும் ஓர்ந்து அறியும் ஆற்றலைப் பெற்று, அவ்விரண்டிலும் வேறாக விளங்குவதைப் போன்றது. சத்துடன் கூடி அசத்தை விட்டு நீங்குவதால் இது சதசத்து எனப்படும்.

அசத்துப் பொருள் அறிவற்றது. ஆகையினாலே சத்துப் பொருளை அறியும் அறிவு அதற்கு இல்லை. இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்கியவனாகிய இறைவன் அசத்தை விட்டுநீங்க வேண்டியத தேவையில்லை. பாசங்கள் இறைவனைப் பற்றும் ஆற்றல் உடையவை அல்ல. எனவே இவ்விரண்டனுக்கும் வேறாகிய உயிர் அசத்தினை விட்டு நீங்குதலும் சத்தினைச் சார்ந்து பயன்பெறுதலும் வேண்டும்.

இதற்கு உவமையாக இருள், ஒளி, கண் ஆகிய மூன்றையும் ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். ஒளி போன்றது சத்துப் பொருள். இருள் போன்றது அசத்துப் பொருள். ஒளியைச் சார்ந்தால் கண் காணும் ஆற்றலைப் பெறுகிறது. இருளைச் சார்ந்தால் காணும் ஆற்றலைக் கண் இழக்கிறது. இந்த இரண்டின் வேறாக நின்ற கண்ணுக்கு, கண் ஒளி என்ற ஆற்றல் உண்டு அவ்ஆற்றல் பொருள்களைக் காண்பதற்கு ஓரளவே துணையாகும். எனவே கதிரவன் ஒளியின் துணை கொண்டே கண்ணால் பொருள்களைக் காண முடிகிறது.

பேரொளிப் பிழம்பாகிய இறைவனின் துணை கொண்டே சிற்றறிவுடைய உயிர் பிறவிப் பெரும்பயனை அடைதல் கூடும் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டது. சிவஞானசித்தியாரில் இக்கருத்து

அறிந்திடும் ஆன்மா ஒன்றை ஒன்றினால் அறிதலானும்
அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறிதலானும்
அறிந்திடும் தன்னையும் தான் அறியாமை யானும் தானே
அறிந்திடுவன் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவன் அன்றே

என்று விளக்கப்படுகிறது.

கண்ணொளி விளக்கு அளித்தும் காட்டிடும் என்னில்முன்னம்
கண்ணொளி ஒன்றும்இன்றாம் விளக்கொளி கலந்து அவற்றைக்
கண்ணொளி அகல நின்றே கண்டிடும் வேறு காணா
கண்ணொளி விளக்கின் சோதி கலந்திடும் கருத்து ஒன்று அன்றே

விளக்கொளி தான் கண்ணிற்கு கொடுத்துப் பொருள்களைக் காட்டும் என்று கொள்ளுதல் தவறாகும். ஏனெனில் அவ்வாறு கொண்டால் கண்ணுக்கு ஒளியில்லை என்றாகும். பொருள்களின் மீதுபடிந்த விளக்கொளியைக் கண்ணொளி அவற்றினின்றும் அகன்று நின்று காணும். அதாவது இருளில் நிற்பான் ஒருவன் கண்களும் இருளுக்குள்ளேயே இருப்பனவாயினும், தொலைவிலே விளக்கொளி படிந்த பொருள்களையும் அவனால் காண இயலும். எனவே கண்ணுக்கு எனத் தனித்த ஓர் ஒளி உண்டு. ஆயினும் விளக்கில்லாவிடத்துக் கண்ணொளி தானே தனித்து நின்று காணும் ஆற்றல் உடையதன்று. கண்ணின் ஒளியும் விளக்கின் ஒளியும் கூடின என்னும் போது அவை இரண்டும் ஒரே பொருள் அன்று தனித்தனிப் பொருள்கள் என்பதே கருத்து.

கண்ணுக்குத் தனக்கென ஓர் ஒளி உண்டு என்றதன் வழி உயிருக்குத் தனக்கென ஓர் அறிவுண்டு என்பது பெறப்பட்டது.

கண் ஒளியைச் சார்ந்தும் இருளைச் சார்ந்தும் முறையே பார்வை பெற்றும், பார்வையற்றும் நிற்பது என்பதனால் உயிர் இறைவனைச் சார்ந்து பேரின்பத்தையும், மலத்தைச் சார்ந்து அறியாமையையும் பெறுதற்கு உரியது என்பது விளக்கப்பட்டது.

விளக்கொளியின் உதவியின்றிக் கண் காண இயலாதது போலத் திருவருளின் உதவியின்றி உயிரும் அறிய இயலாது என்பது உணர்த்தப்பட்டது.

கண்ணொளியும் விளக்கொளியும் கூடும் என்ற போது, இரண்டும் வெவ்வேறு பொருள்களேயன்றி ஒன்று அன்று என்பதன் மூலம் கட்டு நிலையில் இறைவனது உதவி உயிர்க்கு உயிராய் நின்று உணர்த்துமேனும் அவை இரண்டும் அத்துவித நிலையை அப்போது எய்தமாட்டா என்பது கூறப்பட்டது. கண் எல்லாவற்றையும் சுட்டி நின்று அறியும். விளக்கொளி சுட்டாது நின்று எல்லாவற்றையும் காட்டும் என்றும் பொருள் கொள்ளுக.

ஓர்இடத்து இருத்தல் மாயா உருநிறைந்திடுதல் ஒன்றாம்
பேர்இடத்து உறைதல் தானே பிறங்கு அறிவாகி நிற்றல்
சோர்வுடைச் சடம்நிகழ்த்தல் எனும்இவை சொல்லார் நல்லோர்
ஓர்விடத்து உணரும் உண்மை ஒளிதரும் உபலம்போலும்

ஆன்மா ஓர் உடலிலிருந்து அறியும் காலத்து இதயத்தில் புல் நுனியில் தங்கும் பனித்துளி போல இருந்து அறியும் எனச் சிலர் கூறுவர். மற்றும் சிலர் ஆன்மா உடம்பின் அளவு நிறைந்து நின்று அறிந்திடும் என்று கூறுவர். இரண்டும் பெருத்தமற்றன. வேறு சிலர் ஆன்மா என்பது இறைவனைப் போல எங்கும் நிறைந்து அறியும் என்று கொள்ளுவர். இக்கருத்தும் பொருந்தாது. இனிச் சிலர் ஆன்மா அறிவு வடிவாகியே நிற்கும். அதன் முன்னிலையில் கரணங்கள் தொழிற்படும் என்பர். இவர் கருத்தும் பொருத்தமற்றதே. பின்னும் சிலர் ஆன்மா தானே அறியும் வல்லமை உடையது. அதனுக்கு ஒருவர் அறிவிக்க வேண்டுமென்பதில்லை என்பர். இவர் கருத்தும் தவறு வேறு சிலரோ மனம் முதலிய கருவிகள் உயிருக்கு அறிவைத் தருவனவேயல்லாமல் உயிர் அறிவற்றது என்று கொள்வர். இதுவும் தவறான கருத்தே. சைவ சித்தாந்தம் உணர்ந்த நல்லோர் உயிர் உணர்கின்ற தன்மையை ஆய்ந்து பார்த்து அது ஒளி தரும் படிகத்தின் இயல்பு போலச் சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடையது என்பர். மற்றக் கருத்துக்களை சைவ சித்தாந்திகள் ஏற்கவில்லை. உபலம்-படிகம்.

இதயத்தில் பனித்துளி போல இருப்பது ஆன்மா என்றால் உடம்பில் ஊற்று அறிவு இல்லை என்று ஆகும். மேலும் ஓரிடத்தில் இருக்கும் என்றால் ஆன்மாவுக்கு உருவம் உளது எனப்பட்டு அது அறிவற்றதாகவும், அழியும் தன்மை உடையதாகவும் முடியும். இவ்வாறு இக்கருத்து குற்றப்படுவதால் நல்லோர் சொல்லார் என்றார். இவ்வாறே இதன் பின் வரும் கருத்துக்களை மறுக்கும் இடத்தும் நல்லோர் சொல்லார் என்பதனை ஒவ்வோர் இடத்தும் இயைத்துப் பொருள் கொள்ளுக.

மற்றொரு சாரார் ஆன்மா உடல் முழுதும் நிறைந்து நின்று அறியும் என்பர். அப்படியானால் உடல் வளரும் போது ஆன்மாவும் வளரும்.நோய் முதலியவற்றால் உடல் வற்றும் பொழுது ஆன்மாவும் சுருங்கும் எனக் கொள்ளுதல் வேண்டும். நனவு, கனவு, உறக்கம், பேர்உறக்கம், உயிர்ப்படங்கல் ஆகிய ஐந்தும் உயிர்க்கு எவ்வாறு வருகிறது என்பதை விளக்க முடியாது. ஐம்பொறிகளும் புலன்களை ஒரு காலத்தில் நுகராமைக்கு விளக்கம் சொல்ல இயலாது. யானையின் ஆன்மா பெரிது. எறும்பின் ஆன்மா சிறிது என்று கொள்ள வேண்டி நேரும். எனவே இக்கொள்கை பொருந்தாது.

உயிர் இறைவனைப் போல எங்கும் நிறைந்தறியும் என்ற கொள்கையும் பிழையுடையது. ஏனெனில் உயிர் பிறந்து இறந்து வருகிறது. ஐந்தவத்தைப்படுகிறது. புலன்களை ஒன்றொன்றாக அறிகிறதே அல்லாமல் ஒருங்கே அறிவதில்லை. எனவே இக்கொள்கையும் பொருத்தமற்றதே.

ஆன்மா அறிவே வடிவாய் நிற்பது என்று கொண்டால் உறங்கும் காலத்தில் உயிர் இருந்தும் கருவி கரணங்கள் தொழிபடாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்குத் தக்க விடை இன்மையால் இதுவும் பொருந்தாது.

உயிர் தானே அறியும். அதற்கு ஒருவர் அறிவிக்க வேண்டியதில்லை என்னும் கருத்தும் பிழையானது. பொறிகளின் துணையம் உட்கரணங்களின் துணையுமில்லாமல் உயிருக்கு அறிவு நிகழ்வதில்லை என்பதிலிருந்து இவர் கருத்தும் தவறு என்பது தெளிவாகின்றது.

மற்றொரு சாரார் உயிர் அறிவற்றது. அதற்கு மனம் முதலிய கருவிகள் அறிவை விளைவிக்கும் என்பர். மனம் முதலிய கருவிகள் சடம், சடம் ஒரு காலத்தும் அறிவுடைப் பொருள் ஆவதில்லை. அறிவற்ற ஒரு பொருளுக்கு மனம் முதலிய அறிவற்ற பொருள்கள் அறிவினை உண்டாக்கும் என்று கூறுதல் முற்றிலும் பொருந்தாது.

சைவசித்தாந்தத்தின் கொள்கைப்படி உயிர் உணர்த்த உணர்வது அதாவது அறிவித்தால் அறிவது. சத்தையும் அசத்தையும் அறியும் ஆற்றலுடைய சதசத்து. அது சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடையது. இக்கருத்துக்கள் யாவும் இதுவரை கூறப்பட்ட பாடல்களில் தெளிவுற விளக்கப்பட்டன.

எண்ண ஒன்று இலாது அதீதம் எய்திய துரியத்து ஒன்று
நண்ணிடும் சுழுத்தி தன்னில் நயந்துளது ஒன்று பின்னும்
அண்ணிடும் கனவு தன்னில் ஆறேழாம் சாக்கிரத்தில்
கண்உறும் அஞ்சு ஆறாய கருவிகள் காணும் தானே

துரியாதீதம் துரியம் சுழுத்தி கனவு நனவு என்ற வரிசையிலே உயிர் பொருந்தி வரும் காலத்து அதனோடு இணைந்து செயற்படுகிற கருவிகளின் எண்ணிக்கை இப்பாடலில் கூறப்படுகிறது. துரியாதீத நிலையில் ஆன்மா ஆணவ மலத்தால் பற்றப்பட்டு எண்ணுவதற்கு ஒரு கருவியும் இன்றி நின்றிடும். அதனை விட்டு ஆன்மா துரியத்தை அடையும் போது அங்கு பிராண வாயு ஒன்று மட்டும் வந்து பொருந்தும். ஆக அந்நிலையில் உள்ளன இரண்டு பொருள்களாம். துரியத்தை விட்டு நீங்கி ஆன்மா சுழுத்தியை அடையும்போது அவை இரண்டோடு கூடச் சித்தமும் வந்து பொருந்தும். இந்நிலையில் உள்ளன மூன்று பொருள்களாம். சுழுத்தி நிலையை விட்டுக் கனவு நிலைக்கு வரும் போது முற்கூறப்பட்ட மூன்றோடு இருபத்து இரண்டு கருவிகள் வந்து பொருந்தும். சப்த பரிச ரூப ரச கந்தம் என்ற ஐந்தும் வசனம் தானம் கமனம் விசர்க்கம் ஆனந்தம் என்ற ஐந்தும் அந்தக் கரணங்களுள் புத்தி, அகங்காரம், மனம் ஆகிய மூன்றும் (இவை மொத்தம் பதின்மூன்று ஆகின்றன. இவை பாடலில் ஆறேழாம் என்று குறிக்கப்பட்டன. ஆறும் ஏழும் ஆகப் பதின்மூன்று என்று பொருள் கொள்ள வேண்டும்) வாயுக்கள் பத்தில் பிராண வாயு தவிர்ந்த ஒன்பதும் இங்கேயே பொருந்துகின்றன. ஆக இவ்இடத்துப் பொருந்தும் கருவிகள் பதின்மூன்றும் ஒன்பதும் கூட்டி இருபத்திரண்டு. இவையும் ஏற்கனவே கூறப்பட்ட மூன்றும் சேர்ந்து கனவு நிலையில் இருபத்து ஐந்து கருவிகள் உள்ளன. நனவு நிலையில் ஞானேந்திரியங்கள் ஐந்தும் அவற்றின் வழி வருவதான கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகப் பத்தும், இதற்கு முன் கூறப்பட்ட இருபத்து ஐந்துடன் கூடி மொத்தம் முப்பத்து ஐந்து கருவிகள் பொருந்தும்.

இந்தப் பாடலில் ஆன்மா காரிய அவத்தை அடையும் காலத்து ஒவ்வொரு நிலையிலும் அதனோடு பொருந்தி வருகிற கருவிகளை எண்ணிக்கை வகையால் விளக்கினார். அவை நிகழ்வதற்கு உரிய இடம்; துரியாதீதம் எனப்படும் உயிர்ப்படங்கல் முலதாரத்திலும், துரியம் எனப்படும் பேர்உறக்கம் நாபியிலும், சுழுத்தி எனப்படும் உறக்கம் இதயத்திலும், சொப்பனம் எனப்படும் கனவு கண்டத்திலும், சாக்கிரம் எனப்படும் நனவு நுதலிலும் என்று கூறுவர்.

சிவஞான போதத்தில் இங்குக் கூறப்பட்ட முறைமையிலேயே நான்காம் நூற்பாவில் மூன்றாம் அதிகரணத்தில் வருகின்ற எடுத்துக் காட்டு வெண்பாவில்,

ஒன்று அணையா மூலத்து உயிர் அணையும் நாபியினில்
சென்றணையும் சித்தம் இதயத்து மன்றஏய்
ஐயைந்தாம் நல்நுதலில் கண்டத்தின் வாக்காதி
மெய்யாதி விட்டு அகன்று வேறு

என்று மெய்கண்ட தேவநாயனாரால் அருளிச் செய்யப்பட்டது. இப்பாடலுக்குப் பேருரை வரைந்த மாதவச் சிவஞான முனிவர் ஐந்தவத்தை பற்றிய விரிவான விளக்கத்தைச் சிவஞான மாபாடியத்தில் வழங்கியுள்ளார்.

ஆறேழாம் என்று வருகின்ற பாடல் பகுதிக்கு ஆறும் ஏழும் கூடிப் பதின்மூன்றாம் என்றும் ஐஞ்சாறாய என்பது ஐந்தின் வழி வந்த என்றும் பொருள் கொள்ளுவர். இந்நூலின் அறுபத்து மூன்றாவது பாடலின் பொருளையும் இப்பாடலுடன் பொருத்திப் பார்ப்பது நலம் தரும். இது கீழால் அவத்தை எனப்படும்.

இவ்வகை அவத்தை தன்னில் எய்திடும் கரணம் எல்லாம்
மெய்வகை இடத்தில் உற்று மேவுமா கண்டு மிக்க
பொய்வகைப் பவம் அகற்றப் புரிந்திடில் அருளால் ஆங்கே
ஐவகை அவத்தை உய்க்கும் அறிவினால் அறிந்து கொள்ளே.

இந்த முறைமையிலே முந்திய பாடலில் கூறப்பட்ட அவத்தைகள் ஐந்திலும் கருவிகள் கூடியும் குறைந்தும், பொருந்தியும் நீங்கியும் உடம்பின் வெவ்வேறு இடங்களிலே இருந்து அவத்தை வேறுபாடுகளை அடையும் என்பதை அறிக. பொய்யாகிய பிறப்பு இறப்புகளை விட்டு ஆன்மாவை நீங்குவதற்காக இறைவன் தன் பேரருளால் ஐந்து வகை அவத்தைகளையும் உயிருக்கு ஊட்டுவான் என்பதனை ஆசிரியர் உணர்த்த உணர்ந்து கொள்ளுக.

முந்திய பாடலில் கீழால் அவத்தை பற்றி அறிவித்த ஆசிரியர் இந்தப் பாடலில் மத்தியால் அவத்தையும் சுத்தாவத்தையும் பற்றிக் கூறுகிறார். காரண அவத்தைகள் மூன்று காரிய அவத்தைகள் ஐந்து. இவற்றை உறழப் பதினைந்து அவத்தைகள் உள என்று ஆகம நூல்கள் விளக்குகின்றன. மேல் நோக்கி ஏறுவதும் கீழ்நோக்கி இறங்குவதும் இடை நிலையில் நிற்பதும் கருவிகள் கூடி நீங்குவதும் என்பதாக இறைவன் திருவருளால் உயிர் பல நிலைப்படும். அவற்றின் விரிவெல்லாம் தக்க ஆசிரியர் வழிக் கேட்டு உணர்ந்து கொள்ளுவதே மலைவு இன்றி அறியும் நெறி ஆகும்.

இவ்வகை அவத்தை என்று பாடலில் குறிப்பிடப்படுவது காரிய சகலத்தையும் காரிய சுத்தத்தையும் என்பர். கீழ்நோக்கிச் சென்று ஒடுங்குவது பிறவிக்கு வித்தாகும். மேல் நோக்கி ஏறும் முறைமை வினைப்பயன்களை நுகர்வதற்குக் காரணமாதலால் பிறவியை அறுப்பதற்கு அது காரணமாகும்.

இந்தப் பாடல் மத்தியால் அவத்தையும் சகலத்தில் சுத்தாவத்தையும் உணர்த்திற்கு என்பர் பெரியோர்.

நீக்கம்இல் அதீதமாசு நிறைந்த கேவலமாம் நீர்மை
சாக்கிரம் கலாதி சேர்ந்த சகலமாம் தன்மையாகும்
நீக்கமில் இரண்டும் கூடாது ஒழிய ஓர் நிலையில் நீடும்
சாக்கிர அதீதம் சுத்தத் தகைமையது ஆகும் தானே

மாயையினால் ஆகிய கருவிகள் எல்லாம் உயிரை விட்டு நீங்க, நீங்காத ஆணவ மலத்தாலே மறைக்கப்பட்டு மூலாதாரத்திலே பொருந்தியிருக்கும் அதீதம் காரண கேவல அவத்தையின் முறைமை ஆகும், கலை முதலிய தத்துவங்களுடனே கலந்து உயிர் பொருள்களில் படிந்து பிரிவது காரிய சாக்கிர அவத்தையின் முறைமை ஆகும். இவ்விரண்டு தன்மையும் இன்றிக் கேவலம் சகலம் இரண்டிலும் கூடாமல் அருளாகிய ஒன்றுடனே மட்டும் கூடி இரண்டற்ற நிலையிலே உயிர் நிற்பது சுத்தாவத்தையின் சாக்கிர அதீதம் என்பர்.

நீக்கமில் அதீதம் என்பது அறுபதாம் பாடலில் கூறப்பட்ட துரியாதீத அவத்தை. மாசு நிறைந்த கேவலம் என்பது மேலே முப்பத்து மூன்றாவது பாடலில் கூறப்பட்ட மலமன்றி ஒன்றுமில்லை என்னும் கேவல நிலை. இப்பாடலில் இரண்டாம் அடியில் கூறப்பட்ட சாக்கிரம் அதற்கு முந்திய பாடலில் கூறப்பட்ட சாக்கிர நிலை. கலாதி சேர்ந்த சகலம் என்று இங்குக் குறிக்கப்பெறுவது மேலே நாற்பத்து எட்டாவது பாடலில் இனைய பல பிறவிகளில் இறந்து பிறந்து அருளால் இருவினைகள் புரிந்து அருந்தும் இது சகலம் என்ற நிலை. சாக்கிர அதீதம் என்று பாடலில் இறுதி அடியில் கூறப்பட்டது இனிமேல் வரும் எண்பதாவது பாடலில் விளக்கப்படுகிறது.

மருவியமொழியில் ஒன்றும் மாபூதம் ஐந்தில் ஒன்றும்
கருவிகள் நான்கும் நீங்காக் கலாதிகள் ஐந்தும்கூடி
ஒருபுலன் நுகரும் இந்த ஒழுங்கு ஒழிந்து உயிரும் ஒன்றைத்
தெரிவுறாது அவன்ஒழிந்து அத்திரள்களுள் செயல் இலாவே.

உயிர்கள் பொருள்களை அறியும் காலத்து ஐம்பொறிகளுள் ஒன்றும் ஐம்பெரும் பூதங்களுள் ஒன்றும் மனம் புத்தி ஆங்காரம் சித்தம் என்னும் அந்தக் கரணங்கள் நான்கும் தன்னை விட்டு நீக்கமின்றி நிற்கும் கலை முதலிய ஐந்தும் ஆகப் பதினொன்றும் கூடியே அறிந்தும் நுகர்ந்தும் வரும். இவ்ஒழுங்கிலிருந்து நீங்கி உயிரும் பொருளை அடைவதில்லை. உயிராகிய அவனை விட்டு நீங்கிக் கருவித் திரள்களும் தொழிற்படா.

ஐவகையால் உறுபயன்கள் நுகர வரும் காலம் என்று முன்னர் நாற்பத்தொன்றாம் பாடலில் குறிக்கப்பட்ட கலை முதலியன ஐந்தும் பிற கருவிகளைப் போல ஆன்மாவோடு பொருந்தியும் நீங்கியும் வருவனவல்ல. ஆதலால் அவை ஐந்தும் நீங்காக் கலாதிகள் எனப்பட்டன.

மேலே கூறப்பட்ட பதினொன்றினையும் பதினெட்டாகக் கொண்டு சில உரையாசிரியர்கள் பொருள் காண்பர். அவர்கள் கலாதிகள் என்ற சொல் கலை முதலிய வித்தியா தத்துவங்கள் ஏழினையும் குறிப்பதாகக் கொண்டும், அதன் பின் வரும் ஐந்தும் என்ற சொல் சுத்த தத்துவங்கள் ஐந்தினை குறிப்பதாகக் கொண்டும் ஆகப் பதினெட்டும் கூடி உயிர் ஒரு பொருளை நுகரும் என்று கணக்கிடுவர்.

மாதவச்சிவஞான முனிவர் சிவஞான மாபாடியத்தில் இரண்டாம் நூற்பாவில் இரண்டாம் அதிகரணத்தில் மனம் பற்றிய பேருரையிலும், நான்காம் நூற்பாவின் மூன்றாம் அதிகரணத்தில் ஐந்தவத்தை பற்றி வரைந்துள்ள பேருரையிலும் சிவப்பிரகாசத்தின் இந்தப் பாடலை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளமை இங்கு நினையத்தக்கது.

சிதம்பரநாத முனிவர் ஆன்மாவோடு பொருந்துவன கருவிகள் பதினொன்று என்றே கொண்டு கருவிகள் பதினெட்டு எனக்கொள்ளும் ஆசிரியர்களின் உரையை மறுத்தார்.

ஒரு புலனின் நுகர்வுக்கு இந்த ஒழுங்கே துணையாகும் என்றும் இந்த ஒழுங்கில் அல்லாமல் உயிர் ஒன்றை அறியாது என்றும். ஆன்மாவை விடுத்துத் தத்துவங்கள் செயற்படா என்பதும் இப்பாடலால் வலியுறுத்தப்பட்டன.

தனக்கு என அறிவு இலாதான் தான்இவை அறிந்து சாரான்
தனக்கு அறிவுஇலாத வாயில் தான் அறியாது சார
தனக்கு என அறிவுஇலாதான் தத்துவ வன்ன ரூபன்
தனக்கு என அறிவானால் இச்சகலமும் நுகரும் தானே

உயிர் தனக்கென முதன்மையற்ற சிற்றறிவுடைய பொருள். ஆகையால் அது தானாக இத்தத்துவங்களை அறிந்து சார்வதில்லை. அறிவுக்கு வாயிலாக இருக்கின்ற பொறிகளோ எக்காலத்தும் அறிவற்ற சடப் பொருள்கள். எனவே அவை ஆன்மாவை அறிந்து கூடமாட்டா. தனக்கென அறிவில்லாதவன் எனப்படும் உயிர் தன்னையடுத்த ஐந்து நிறங்களையும் தன் வடிவே போல் காட்டும் இயல்புடைய படிகம் போன்றவன். தனக்கு ஒருவர் அறிவிக்க வேண்டாமல் எல்லாவற்றையும் தானே ஒருங்குணர வல்லவனாகிய சிவபெருமானால் உயிர் யாவற்றையும் சார்ந்தும் நுகர்ந்தும் வரும்.

தனக்கென அறிவிலாதான், தத்துவ வன்னரூபன் என்னும் இரண்டு சொல் தொடர்களும் உயிரையும், தனக்கென அறிவில்லாத வாயில் என்பது தளையையும், இறுதி அடியில் தனக்கென அறிவான் என்றது இறைவனையும் உணர்த்துகின்றன.

தனக்கென முதன்மையும் உரிமையும் அற்ற உயிர் தானாக இத்தத்துவங்களைக் கூடி அறியாது. மேலும் அது சார்ந்ததன் வண்ணமாய்ப் படிகம் போல விளங்குமாகையால் அதற்குத் தன்னியல்பாய் நிற்கும் உரிமை இல்லை. சடமாகிய பாசக் கருவிகள் அறிவற்றவை. எனவே உயிரைச் சார அறியாதவை. முப்பொருள்களுள் உயிரும் தளையும் இவ்வாறு விலக்கப்பட்டமையால் ஒழிபு அளவையினால் இறைவனே இவ் விரண்டனையும் கூட்டுவான் என்பதையும், இக்கூட்டத்தால் அவனுக்கு ஒரு பயனும் இல்லையாதலால் சிற்றிவுடைய உயிர் இக்கூட்டத்தின் பயனால் யாவற்றையும் நுகர்ந்து வரும் என்பதும் விளக்கப்பட்டன.

பாடலில் இரண்டாவது வாயில் அறியாசார என்பதைச் சார அறியா என்று மாற்றி வைத்துப் பொருள் உரைக்க, இதற்கு ஒரு பாட வேறுபாடு அறியா சாரா என்பது இப்பாடத்துக்கு அறியா அதனால் சாரா என்று பொருள் காண்க.

பாடலில் நான்காவது வரியில், தனக்கென அறிவானால் என்ற பாடத்துக்கு மாற்றாக தனக்கென அறியானால் என்று மற்றொரு பாடம் உண்டு. முதல் பாடத்திற்கு தனக்கு ஒருவர் அறிவிக்காமல் தானே அறிவானாகிய சிவபெருமான் என்று பொருள் கொள்ளுக. இரண்டாவது பாடத்திற்கு, முற்றறிவுடைய இறைவன் தனக்கென அறிய வேண்டுவது ஒன்றும் இல்லாத பதிப்பொருள் என்று பொருள் கொள்க.

கண்டுஅறி புலன்கள் காணும் கருத்தினால் ஒருத்தன்ஞானம்
கொண்டுஉளம் அறியும் என்னில் கொள்பவன் முதலி ஆகும்
மண்டிய உணர்வு உயிர்க்கா மன்னி நின்று அறியும் என்னில்
உண்டிட வேண்டுவானுக்கு ஒருவன் வேறு உண்டல் ஆமே

கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறியும் புலன்களைக் கொண்டு உயிர் பொருள்களை அறிந்து அனுபவித்து வருகின்ற முறைமை போல, ஒப்பற்ற சிவபெருமானுடைய அறிவைக் கொண்டு உயிர் அறியும் என்று கூறினால் அறிந்து கொள்ளுகிற ஆன்மா முதன்மை உடையது என்று ஆகும். அதாவது பெருமானுடைய பேரறிவு கருவியாக இருக்க உயிரைக், கருவியை ஆள்பவனாகக் கொள்ள நேரும். அவ்வாறு அன்றிச் சிவனுடைய பேரறிவு உயிருக்காக அறிந்து வருகிறதே தவிர உயிர்க்கெனச் சிற்றறிவு தானும் இல்லை என்று கொண்டால் பசித்திருப்பவன் ஒருவனுடைய பசியை ஆற்றுவதற்காக மற்றொருவன் உண்டான் என்பது போல முடியும்.

ஐம்புலன்களும் கருவிகளாக நிற்க அவற்றைப் பயன்படுத்தி உயிர் அறிந்தும் துய்த்தும் வருகிறது. இந்த நிலையில் உயிர்க்கே முதன்மை உள்ளது. செயல்படும் தன்மையும் உயிருக்கேயன்றிக் கருவிகளுக்கு இல்லை. இது போலவே ஒப்பற்றவனாகிய சிவபெருமானுடைய பேரறிவைக் கருவியாகக் கொண்டு உயிர் அறிகிறது என்றால் இங்கேயும் முதன்மை உயிர்க்கே உரியதாகிறது. எனவே இது பொருந்தாது. இந்த நிலையில் சிற்றறிவுடைய உயிருக்காகப் பேரறிவாளனாகிய சிவபெருமான் அறிவிக்க அந்த அருட்கொடையினாலே ஆன்மா அறிகிறது என்று கொள்ளுவதே பொருந்தும். இவ்வாறு கொள்ளும் போது வழங்கும் முதன்மை சிவபெருமானுக்கும் ஏற்கும் நிலைமை உயிர்க்கும் உள்ளதாகும்.

திருவாசகம் சிவபுராணத்தில், அவன் அருளாலே அவன்தாள் வணங்கி, என்றும் அப்பர் பெருமான் தேவாரத்தில் காண்பார் யார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே என்றும் வரும் திருவாக்குகள் இதனை வலியுறுத்தும்

உயிருக்கு முதன்மை உண்டு என்று கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் உயிர்க்கெனச் சிற்றறிவு தானும் இல்லை. பின் எப்படி உயிர் அறிந்தும் அனுபவித்தும் வருகிறது எனக் கேட்பின் பேரறிவே வடிவாகிய சிவபெருமான் உயிரின் பொருட்டு அறிகிறான் என்பதே பொருந்தும் என்று சிலர் வாதிடுவர். இந்தக் கருத்தும் பொருத்தமில்லை என்று மறுக்கிறார் ஆசிரியர். இதனை மறுப்பதற்கு ஓர் உவமையைப் பயன்படுத்துகிறார். பசித்தவன் ஒருவன் இருக்க அவன் பசியை ஆற்றும் பொருட்டு மற்றொருவன் உண்டான் என்பது போன்றது இது. அறியாமையிலிருந்து படிமுறையிலே அறிந்தும் துய்த்தும் வீடு பேறு அடைய வேண்டிய உயிர் தானே அழுந்தி அறியாது எனில் அதனால் வரும் பயனைப் பெறுவதில்லை.

இவ்வாறு இரண்டு கருத்துக்களையும் மறுத்ததனால் சிற்றறிவுடைய உயிர், முற்றறிவுடைய சிவன் அறிவிக்க அறியுமேயன்றி இறைவனின் அறிவைத் தனக்கென உயிர் பயன்படுத்தும் என்பதும், அறிவற்ற உயிருக்காக இறைவனே அறிவான் என்பதும் மறுக்கப்பட்டன.

இருள்நனி இரவி தான்வந்து இரித்தலும் இரவில் எண்ணும்
பொருள்நிலை கண்டு மாந்தர் பொருந்திடு மாறு போல
மருள்நிலை எங்கும் நீங்க மகிழ்ந்து உயிர் தன்னுள் மன்னும்
அருளையும் ஒழியஞாலத்து அறிந்தவாறு அறியும் அன்றே

இரவில் பொருள்களைக் காண இயலாத மாந்தர் செயலற்று இருப்பர். விடியற்காலத்தில் கதிரவன் தோன்றிய வுடனே இருள் நீங்கிப்போம் அந்நிலையில் உலகத்துப் பொருள்கள் மாந்தருக்குக் காட்சிப்படும். அவர்கள் தத்தம் தொழில்களில் ஈடுபடுவர். அப்போது பொருள்களைப் பற்றியும் தங்களது தொழில்களில் ஈடுபடுவர். அப்போது பொருள்களைப் பற்றியும் தங்களது செயல்களைப் பற்றியும் நினைப்பதல்லது, மக்கள் கதிரவனைப் பற்றி, அவன் செய்த உதவியைப் பற்றி நினைப்பதில்லை. கதிரவனால் அன்றோ இருள் நீங்கிற்று அதனால் அன்றோ பொருள்கள் காட்சிக்குப் புலப்பட்டன என்று எண்ணாமல் தாமே யாவற்றையும் செய்வதாக மகிழ்வர். அவ்வாறே ஆணவ மலத்தின் மறைப்பை நீக்குவதற்காக இறைவன் தனது அருளால் உயிர்கள் அறிந்தும் துய்த்தும் வரத் திருவருள் பாலிக்கிறான். ஆனால் உயிர்கள் அறிந்தும் துய்த்தும் வரத் திருவருள் பாலிக்கிறான். ஆனால் உயிர்களோ அவன் திருவருளை மறந்து நான் செய்தேன் பிறர் செய்தார் என்று கருதித் தம் முனைப்போடு செயலாற்றுவர்.

இவ்உவமையில் ஞாயிற்றின் வரவால் இருள் நீங்குவதும், இருள் நீக்கத்தால் பொருள்களின் காட்சியும், அக்காட்சியால் மாந்தர் அவற்றைக் கண்டு பொருந்துவதும் முறையே அருளின் துணையால் அறியாமை நீக்கமும், அதனால் உலகத்துப் பொருள்கள் மீது கொண்ட விருப்பமும் அதனால் திருவருளை மறந்திருப்பதும் பொருத்திக் காட்டப்பட்டன.

கதிரவன் போல இறைவனும் தானாக உயிர்கட்கு உதவும் தன்மையும் தான் மாறுதலடையாது நின்றே உயிர்களையும் உலகத்தையும் செயல்படுத்தும் ஆற்றலும் குறிப்பாக உணர்த்தப்பட்டன.

அறிந்திடும் மனாதி வாயில் ஆனவை அவன் தனாலே
அறிந்திடும் என்றும் ஒன்றும் அறிந்திடா அவைபோல் யாவும்
அறிந்திடும் அறியும் தன்மை அறிந்திடா கன்மத்தொன்மை
அறிந்து அவை நுகருமாறும் அருளுவன் அமலன் தானே

மனம் முதலிய அந்தக் கரணங்களும் பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவையும் ஆன்மாவோடு பொருந்துவதாலே பொருள்களை அறிகின்றன. ஆனால் அவை ஆன்மாவால்தான் அறிகின்றோம் என்பதனை ஒருபோதும் அறிவதில்லை. அதுபோலவே தம்மையும் அவை அறிவதில்லை. இது போன்றே கட்டு நிலையிலும் முத்தி நிலையிலும் இறைவனின் துணை கொண்டே ஆன்மாக்கள் அறிந்து வருகின்றன. ஆயினும் ஆன்மாக்கள் இறைவனால் அறிகிறோம் என்பதை அறிவதில்லை. அவ்வாறு அறியும் முதன்மை தமக்கு இல்லை என்பதையும் அவை அறிவதில்லை. இறைவனே அவற்றின் பழமையான வினைகளுக்கு ஈடாக அவற்றுக்கு அறிவும் நுகர்வும் பொருந்துமாறு கூட்டுகிறான். அந்த இறைவன் அமலன்.

மேல் ஐம்பத்து மூன்றாவது பாடலில் மனாதிகள் தம்மில் மன்னித்தருபயன் நுகர்தலானும் என்பதை இங்கு நினைவு கூர்க. மனம் முதலியனவும் அறிவுப் பொறிகள் ஐந்தும் அறிவுடையன போலத் தோன்றினும் அவற்றுக்கென அறிவில்லை. ஆன்மாவே அவற்றைக் கருவிகளாகக் கொண்டு அறிகின்றது. மெய் வாய் கண் மூக்கு செவி என்பன அளந்தும் அறிந்தும் அறியாதன என்று மெய்கண்ட தேவநாயனார் இதனைக் குறிப்பிடுகின்றார். ஆன்மாவை அறிய மாட்டாததோடு அவை தம்மையும் அறிய மாட்டா.

இதுபோலவே இறைவனும் உயிர்க்குயிராய் நின்று ஆன்மாக்களின் தொன்மை வினைகளை அறிவூட்டி வருகிறான். வினைக்கு ஈடான பயன்களையும் உயிர்கள் நுகருமாறு ஊட்டுகிறான். ஆயினும் அவ்வான்மாக்கள் இறைவனை அறிவதில்லை. இக்கருத்து சிவஞான சித்தியார் சுபக்கத்துள்.

பொறிபுலன் கரணம் எல்லாம் புருடனால் அறிந்து ஆன்மாவை
அறிதரா அவையே போல ஆன்மாக்கள் அனைத்தும் எங்கும்
செறிதரும் சிவன் தனாலே அறிந்திடும் சிவனைக் காணா
அறிதரும் சிவனே எல்லாம் அறிந்தும் அறிவித்தும் நிற்பன்
என்று நன்கு விளக்கப்படுகிறது.

இறைவனுடைய திருவருள் ஆற்றல் ஆன்மாக்களுக்குத் துணையாக அறிந்தும் அறிவித்தும் வினைப் பயன்களை நுகர்வித்தும் வருகின்றது என்றாலும் இறைவன் இவற்றால் தொடக்குறுவன் என்று கொள்ளலாமோ எனக் கேட்பின். எண்குணத்தான் ஆகிய இறைவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் ஆதலால் அவன் தொடங்குறுவதில்லை என்பதை உணர்த்துவதற்காக அவனை அமலன் என்ற சொல்லால் குறித்தார். அமலன்-மலத்தால் பற்றப்படாதவன்.

காட்டிடும் கரணம் ஒன்றும் இல்லையேல் காண் ஓணாதாம்
நாட்டிய இவற்றால் ஞானம் நணுகவும் ஒண்ணா முன்னம்
ஈட்டிய தவத்தினாலே இறைஅருள் உருவாய் வந்து
கூட்டிடும் இவற்றை நீக்கிக் குரைகழல் குறுகும் ஆறே

ஆன்மாவுக்கு உலகத்துப் பொருள்களை அறியக் காட்டுவன கருவி கரணங்களே. அவை இல்லையெனில் உலகத்துப் பொருள்களைக் கூட உயிர்களால் அறிய முடியாது. இக்கருவி கரணங்கள் கூடிய போதும் மெய்ப் பொருளாகிய இறைவனை அணுகவும் ஆன்மாவால் இயலாது. முற்பிறவிகளிலே ஈட்டிய தவத்தினாலே இறைவனே அருள் உருவாய் வந்து இக்கருவி கரணங்களை இவ்வுயிர்கள் தன் திருவடிப் பேற்றை அணுகுமாறு அருள் பாலிப்பான்.

கருவி கரணங்கள் இன்றி உயிர் தனித்துக் கிடந்தபோது அதற்கு அறிவு நிலை ஏற்படுவதில்லை. இது கேவல நிலை. இறைவன் உயிர்களுக்குக் கருவி கரணங்களைத் தந்த போது அவற்றின் உதவியால் உயிர் உலகத்துப் பொருள்களை அறியுமே தவிர மெய்ப்பொருளாகிய இறைவனை அறிய இயலா. இது சகல நிலை.

இந்த இரு நிலைகளிலும் உயிர்களால் இறைவனை அறிய முடியாது எனின் அவனை அறிவது தான் எப்படி? முன்னைப் பிறவிகளிலே செய்த தவத்தின் பயன் வந்து கூடும் போது இறைவனே அருள்மேனி தாங்கிக் குரு வடிவாய் எழுந்தருளி வந்து உயிருக்குத் தன் திருவடியைக் குறுகும் பேற்றை அருளுவான்.

முன்னம் ஈட்டிய தவம் என்பது முற்பிறவிகளிலே உண்மைச் சரியை கிரியா யோகங்களின் மூலமாக எய்திய தவம் என்ற பொருளைத் தந்தது. பெரிய புராணம் கண்ணப்ப நாயனார் வரலாற்றில்,

முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான
அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம்பொங்கி......(102)
என்று கூறப்பட்டதும் இதுவே,

இறைவன் திருவடிவாக எழுந்தருளி வந்து உணர்த்துவதை மூன்று வகையாகக் கூறுவர், தன்மை, முன்னிலை, படர்க்கை என்று முறையே ஒரு மலம் இரு மலம் மும்மலம் உடையார்க்கு அருள்பாலிப்பான் என்பர். பாசஞானம் பசுஞானம் என்ற இரண்டும் இறைவனை அறிவதற்குத் துணையாக மாட்டா. இறைவனின் திருவருளே அவன் திருவடியை அணுகுவதற்கு உயிர்களுக்கு உதவும் என்பதை இப்பாடலில் ஆசிரியர் விளக்கினார்.

பல்நிறம் கவரும் தொன்மைப் படிகநீடு ஒளியும் பன்மை
மன் இலங்கு இயல்பும் தந்த வளர்ஒளி போல வையம்
தன்னகம் பயிலும் நற்சிற் சடங்களின் தன்மை தாவா
நன்னலம் பெற நிறைந்த ஞானமே ஞானம் என்பர்.

தன்னை அடுத்து இருக்கின்ற பொருள்களின் நிறங்களைக் கவர்ந்து கொள்ளும் இயல்புடையது படிகம். அதே நேரத்தில் தன் நிறத்தையும் படிகம் காட்டவல்லது. இந்த இரண்டு இயல்புகளும் படிகத்திற்குக் கதிரவன் ஒளியில் மூழ்கி இருக்கும் போதே உளவாகின்றன. அது போலவே இந்த வையகத்தில் பயின்று வருகின்ற நல்லசித்தும், அசித்தும் ஆகிய இரண்டின் இயல்பையும் பற்றாத உயர்ந்த நலத்தை உயிர்கள் பெறுமாறு வழங்கும் திருவருள் ஞானமே ஞானமாகும் என்பர் பெரியோர்.

இங்கே கூறப்பட்டுள்ள உவமையைச் சற்று ஆழமாக நோக்கிப் பொருள் கொள்ளுதல் வேண்டும். படிகம் தனக்கென ஒரு நிறமற்றதேனும் தனக்கென ஓர் ஒளி உடையது. அப்படிகத்தின் பக்கத்தில் சிவந்த பூக்களை வைத்தால் அப்பூக்களின் நிறத்தைக் கவர்ந்து படிகமும் சிவந்திருப்பது போல் காட்டும். ஆனால் இந்த இரண்டும் நிகழ்வதற்குக் கதிரவனின் பேரொளி துணையாக நிற்க வேண்டும். அதாவது இரவில் படிகம் பக்கத்தில் உள்ள பொருள்களின் நிறத்தைக் கவர்வதில்லை. உயிர் தன்னையடுத்த பாசத்தின் இயல்பையும் காட்டும் தன்னியல்பையும் காட்டும். ஆனால் இவ்வாறு கூறப்பட்ட இரண்டு இயல்புகளும் சிவஞானம் என்னும் பேர் ஒளி இல்லையேல் உயிர்க்கு இல்லையாகும். இக்கருத்து திருவருட்பயனில்,

தன்நிறமும் பல்நிறமும் தானாம்கல் தன்மை தரும்
பொன்நிறம்போல் மன்நிறம்இப் பூ
என்று கூறப்பட்டுள்ளது.

இப்பாடலில் பாசமாகிய சடத்தின் தன்மையைக் குறிப்பதன் மூலம் பாசஞானத்தின் இயல்பைக் குறித்தார். நல்ல சித்துத் தன்மை என்று பசுவினது ஞானத்தின் இயல்பினை எடுத்துரைத்தார். இவை இரண்டும் ஞானம் எனவே கூறப்படினும் இவற்றுக்குத் தன்னுரிமை இல்லாததால் உயிர்கட்கு நன்மை அளிக்க வல்ல சிவஞானமே ஞானம் என்று கூறித் திருவருள் ஞானத்தின் உயர்வை நிலை நிறுத்தினார். மற்ற இரண்டிலிருந்தும் சிவஞானத்தைப் பிரித்து அதன் உயர்வை உணர்த்துவதற்காக நன்னலம் பெற நிறைந்த ஞானமே என்பர். என்று கூறினார். ஆகவே இந்த ஏகாரத்தைப் பிரிநிலை ஏகாரமாகக்கொள்ள வேண்டும் என்று மாதவச் சிவஞான முனிவர் தனது சிவஞான மாபாடியத்தில் விரிவாக விளக்கியுள்ளார். நற்சிற் சடங்களின் தன்மை என்பதை நல்ல சித்து சடம் ஆகிய இரண்டின் தன்மை என்று பொருள் கொள்ள வேண்டும். நல்சில் சடங்கள் என்ற பாடம் பொருத்தமுடையது அன்று.

மாயைமா மாயை மாயா வரும் இரு வினையின் வாய்மை
ஆயஆர் உயிரில் மேவும் மருள்எனில் இருளாய் நிற்கும்
மாயைமா மாயை மாயா வரும் இருவினையின் வாய்மை
ஆயஆர் உயிரில் மேவும் அருள்எனில் ஒளியாய் நிற்கும்

மாயையும் மாயையின் காரியங்களும் இருவினையின் பயன்களும் ஆன்மா எந்நிலையில் நின்றதோ அதற்கு ஏற்றபடி நிற்கும். ஆன்மா மலத்தால் கட்டப்பட்டுப் பசு எனப்பெயர் பெற்று நிற்கும் போது மாயை முதலியன அதனைக் கட்டுவதாகி மலமாகி நிற்கும். ஆன்மா கட்டுக்களை விட்டு நீங்கி அருளோடும் கூடிய போது முற்கூறப்பட்ட மாயை முதலியனவும் பாசம் என்னும் பெயரை நீங்கி அருளேயாக நிற்கும்.

சிவஞான முனிவர் சிவஞான மாபாடியத்துள் இரண்டாம் நூற்பாவுக்குப் பேருரை எழுதும் போது அதன் இரண்டாம் அதிகரணத்தில் சிவப்பிரகாசத்தின் இந்தப் பாடலை எடுத்துக் கூறி மிக விரிவாக விளக்கமும் தருகிறார். வேறு சில உரையாசிரியர்கள் சொற்களை வருவித்துப் பொருள் கண்டமையை மறுக்கிறார். பாட வேறுபாடு கொண்டு சிலர் கூறும் உரைகளையும் தவறு என்று சுட்டிக் காட்டுகிறார். அவற்றின் விளக்கத்தைச் சிவஞான மாபாடியத்தில் காணலாம்.

முனிவரின் கருத்து, சுருங்கச் சொல்லுவதானால், மாயை மாமாயை என்னும் செய்யுளுக்கு மாயை முதலியன மூன்றும் ஆன்மா நின்றபடி நிற்கும் என்பதே செம்பொருள் எனக் கொள்க. இந்தச் செய்யுள் இதற்கு முந்தைய செய்யுளின் தொடர்ச்சி என்பதும் நன்னலம் பெற நிறைந்த ஞானமே ஞானம் என்ற சொற்றொடரை வலியுறுத்துவதற்காக ஆசிரியர் இச்செய்யுளை அருளினார் என்பதும் சிவஞான முனிவரின் கருத்து.

உயிர் சார்ந்ததன் வண்ணமாம் தன்மை உடையது. பிறப்பு நிலையில் மாயை பசுகரணமாய் நின்று உயிரைக் கட்டுப்படுத்துகின்ற நிலையினை இருளாய் நிற்றல் என்றார்.

அதன் பின்னர் இறைவன் திருவருளால் இருவினை ஒப்பும், மலபரிபாகமும், சத்திநி பாதமும் விளையும், வீட்டு நிலையில் மாயை சிவகரணம் ஆகி நின்று உயிருக்கு உதவும். இதனையே ஒளியாய் நிற்றல் என்றார்.

மாயை மாமாயை என்பதற்கு மாயை மாயேயம் என்று வேறு பாடம் கொள்வாரும் உண்டு.

தேசுற மருவும் ஆன்ம தெரிசனம் ஆன்ம சுத்தி
ஆசிலா ஆன்ம ஆகமூன்று ஆகும்மூன்றும்
பாசம் அதுஅகல ஞானம் பற்றல்தான் பணியை நீத்தல்
ஏசில் நேயத்து அழுந்தல் எனும்இவற்று அடங்கும் அன்றே

முந்தைய பாடல்களில் நன்னலம் பெற நிறைந்த ஞானமே ஞானம் என்பதை எடுத்து விளக்கிய ஆசிரியர் இந்தப் பாடலில் அந்த ஞானத்தின் பயன்களைக் கூறுகிறார். ஞானத்தின் பயன்கள் மூன்றாகும். அவை ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, ஆன்ம லாபம்என்பர். ஆன்ம தரிசனம் என்பது ஆன்ம பாசத்தை விட்டு உண்மை ஞானத்தைப் பற்றுவது. ஆன்ம சுத்தி என்பது ஆன்மா தன் செயலை நீத்துத் தன் முனைப்பை அகற்றி இறைவன் திருவருள் வழியில் நிற்பது ஆன்ம லாபம் என்பது ஆன்மா சிவபோகத்தில் அழுந்துவது.
சுத்தாவத்தை ஐந்து வகைப்படும் என்பர். அவை நின்மல சாக்கிரம், நின்மல சொப்பனம், நின்மல சுழுத்தி, நின்மல துரியம், நின்மல துரியாதீதம் என்பன. இவ்வைந்தனுள் முதல் இரண்டையும் பயனில ஆதலின் விட்டுவிட்டுப் பின் மூன்றையும் கூறுவது இப்பாடல்.

உண்மை அதிகாரத்தின் முதல் பாடலில் தாம் கூறப்புகும் பொருள்களை ஆசிரியர் வகுத்துரைக்கிறார், அவற்றுள் பொங்கு ஒளி ஞான வாய்மை என்பது இதற்கு முந்திய இரண்டு பாடல்களாலும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதன் பனய என்ற தலைப்பிலே வருவதாகிய ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, ஆன்ம லாபம் மூன்றும் இப்பாடலில் சுப்பட்டன. இதன் பின்வரும் பாடல்களில் இந்த மூன்றும் விளக்கப்படும். நேயம் என்பதற்குப் பதில் ஞேயம் என்ற ஒரு பாட வேறுபாடும் உண்டு. ஞேயம் என்பது காட்சிப் படுபொருள் என்று பொருள் தரும்.

தன்அறிவு அதனால்ஏதும் தனக்குஅறிவு இல்லையேனும்
தன்அறிவு வாகஎல்லாம் தனித்தனி பயன் அருந்தும்
தன்னறிவு அறியும் தன்மை தன்னாலேதனை அறிந்தால்
தன்னையும் தானே காணும் தான்அது ஆகிநின்றே

ஆன்மா சிற்றறிவுடையது ஆதலால் எதையும் தன் அறிவினாலே தானே அறிகின்ற ஆற்றல் அதற்கு இல்லை. ஆயினும் பொறி புல்னகளின் வாயிலாக வரும் இன்பத் துன்பங்களை ஒவ்வொன்றாக நுகர்ந்து அவற்றையெல்லாம் தானே அறிந்து அனுபவிப்பதாக எண்ணிவரும் உண்மையில் தன் அறிவுக்கு அறிவிக்கும் சிவஞானப் பெரும் பொருள் ஒன்று உண்டு என்பதை உணர்ந்து தன் முனைப்பை விட்டுத் தானே அதுவாகி நின்று அறியத் தொடங்கினால் தன்னைத்தான் அறியும் ஆற்றல் ஆன்மாவுக்கு விளைகிறது.

மாயையின் காரியங்களாகிய பொறி புலன்களோடு கூடி அல்லாமல் ஆன்மா பொருள்களை அறிந்து அனுபவிக்க இயலாது. அப்போதும் ஆன்மாவின் அறிவு சிற்றறிவு ஆதலால் சிவபெருமானின் பேரருள் அறிந்து அறிவித்தால் அன்றி ஆன்மாஎதனையும் அறிவதில்லை. இவ்வுண்மை தெளியாத நிலையில் ஆன்மா தானே அறிந்தும் அனுபவித்தும் வருவதாகத் தவறாகக் கருதிக்கொள்ளுகிறது. இத்தவறான கருத்தின் அடிப்படையில் தத்துவக் கூட்டங்கள் வேறு. தான் வேறு என்று அறிகின்ற அறிவு, அதாவது ஆன்மா தான் ஒரு தனிப் பொருள் என்றும் உடல் கருவி முதலிய பொருள்கள் தன்னின் வேறானவை என்றும் அறிகின்ற அறிவு, அதற்கு இல்லை.

பின் எப்போது ஆன்மா தன்னை அறியும் அறிவைப் பெறும்? பக்குவ முதிர்வால் தனது கருவி கரணங்கள் சடப்பொருள் எனவும் அவை தன்னின் வேறாவன என்றும் தனக்கு அறிவித்து வழி நடத்துவது திருவருளே என்றும் தெளிந்து தன்முனைப்பற்றுத் திருவருளிலே அடங்கி நிற்கும்போது தனது உண்மையான இயல்பைத் திருவருள் உணர்த்த உணரும், சிவஞான சித்தியாரின் ஆசிரியர் அருள்நந்திசிவம் இக்கருத்தை,

அறிந்திடும் ஆன்மா ஒன்றை ஒன்றினால் அறிதலானும்
அறிந்தவை மறத்த லானும் அறிவிக்க அறிதலானும்
அறிந்திடும் தன்னையும் தான் அறியாமை யானும்தானே
அறிந்திடும் அறிவன் அன்றாம் அறிவிக்க அறிவன் அன்றே  (பாடல் 233)
என்ற பாடலில் எடுத்துரைக்கிறார்.

பட்டினத்துப் பிள்ளையார் பதினோராம் திருமுறையில், தமது திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில்,

ஞானநாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும்
என்னையும் கண்டேன் பிறரையும் கண்டேன்
நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னை
நின்னைக் காணா மாந்தர்
தன்னையும் காணாத் தன்மை யோரே

என்று எடுத்துரைப்பதும் இக்கருத்தினையே, தெய்வத்திருவருள் கைவந்து கிடைத்தலின் இந்த அறிவு உயிருக்கு உளதாகிறது என்பது இப்பாடலால் உணர்த்தப்பட்டது. இதனை ஆன்ம தரிசனம் என்பர்.

தத்துவம் ஆன வற்றின் தன்மைகள் உணரும் காலை
உய்த்து உணர்ந்திட உதிப்பது ஒளிவளர் ஞானம் ஆகும்
அத்தன்மை அறியும் ஆறும் அகன்றிட அதுவாய் ஆன்மா
சுத்தமாம் சுத்த ஞானத்து ஒருமுதல் தோன்றும் அன்றே.

ஆன்மா தத்துவங்களுடைய தன்மைகளை உணரத் தொடங்கும் போது ஒவ்வொன்றையும் உய்த்துணர்ந்து வரும். அகத்தத்துவங்கள் தன்னின் வேறானவை என்றும் அவை சடம் என்றும் அறிகின்ற போது அங்கே உதிப்பது ஒளி மிகுந்த ஞானமாகும். இந்த ஞானமே திருவருள். அத்திருவருளோடு கூடி ஆன்மா தான் காண்கின்ற தன்மையையும் மறந்து தன் முனைப்பற்று நிற்கும் போது ஆன்ம சுத்தி நிகழ்கிறது. அவ்வாறு ஆரூயிர்த் தெளிவு நிகழும்போது ஒளிவளர் ஞானம் என்று குறிக்கப்பட்ட திருவருளுக்கு முதலாகத் திகழ்கின்ற சிவம் வெளிப்பட்டுத் தோன்றும்.

மேலே அறுபத்து நான்காம் பாடலில் தத்துவ வன்ன ரூபன் என்று ஆசிரியரால் குறிப்பிடப்பட்ட ஆன்மா ஆன்ம தரிசனம் நிகழும் போது தத்துவங்கள் வேறு தான் வேறு என்ற உண்மையை உணருகிறது. இவ்வுண்மையை உணரும் போது ஆன்மாவினிடத்திலே ஒளிவளர் ஞானம் உதிக்கிறது. அதுவே சிலத்தைப் பற்றிய மெய்யுணர்டு. அதனையே திருவருள் என்று குறிக்கிறோம். இத்திருவருள் குணம் ஆதலால் அதனை உடைய குணி ஆகிய தனி முதல்வன் காட்சியளிக்கிறான். அந்தக் காட்சி எப்போது நிகழும் என்னில் எல்லாம் அற என்னை இழந்த காலம் என்று பெரியோர் கூறுகிற தன்முனைப்பற்ற போது நிகழும் என்பர். இது தற்போதம் இழத்தல் என்று குறிக்கப்படும்.

ஆன்மா அறிபவன்(ஞா. தா) ஆன்மாவின் சிற்சத்தி(ஞானம்) சிவபரம் பொருளே அறியப்படுபொருள்(ஞேயம்) முதல் இரண்டு அடிகளில் அறிவு விளக்கமும் பின் இரண்டு அடிகளில் உயிர்க்குப் பேரின்ப விளக்கமும் எவ்வாறு விளையும் என்பது இப்பாடலில் விளக்கப்பட்டன. இதனால் ஆன்ம சுத்தி உணர்த்தப்பட்டது.

உறைதரும் உணர்வும் அன்றி அதன்முதல் உள்ளது என்று இங்கு
அறைவது என்என்னில் அண்ணல் அருள் எனும் அதுவே அன்றி
நிறைஒளி முதல்அது அன்றி நின்றிடா நிமலன் ஆகும்
இறையவன் முதல் அவன்தன் இலங்கு அருள் சத்திஆமே

தத்துவங்களின் வேறாக ஆன்மா தன்னை அறியும். அவ்வாறு அறிவிப்பது திருவருள் என்று கூறியது பொருந்தும். அதன்மேலும் அந்த ஞானத்துக்கும் முதலாக ஒரு பொருள் உண்டு என்று கொள்வானேன். என்று கேட்பின் அருள் என்னும் ஞானம் குணம். குணம் மட்டிலும் தனித்து நிற்காது. குணத்தையுடைய பொருள் ஒன்று உண்டு. அப்பொருளே சிவம். சிவபரம் பொருள் அனாதியே பாசங்களில் நீங்கி நின்மலப் பொருள். எனவே இறைவன் முதல்வன். அவனுடைய விளக்கம் நிறைந்த அருள், சத்தியாகும்.

அண்ணல் அருள் என்று இப்பாடலில் இரண்டாவது வரியில் குறிப்பிடப்படும் சொற்களுக்கு அண்ணலினது அருள் என்று பொருள் கொள்ள வேண்டும். அண்ணல் ஆகிய சிவம் உடையான். அவனது உடைமை அருள். சிவனும் அருளம் தனித்து நிற்பதில்லை.

கதிரவன் முதல் கதிரவனின் ஒளி அம்முதலின் உடைமை. கதிரவன் இல்லாமல் ஒளி தோன்றாதவாறு போல, ஒளியின் துணை கொண்டல்லது கதிரவன் தோற்றப்படாதது போல இறைவனும் அவனது சத்தியாகிய திருவருளும் பிரிப்பின்றி நின்று உயிர்களுக்குப் பெருங்கருணை பாலிக்கும் என்பதை இதன் மூலம் உணர்த்தினார்.

இக்கருத்து சிவஞான சித்தியார் சுபக்கத்தில்
அருளது சத்தி ஆகும் அரன் தனக்கு அருளை இன்றித்
தெருள் சிவம் இல்லை அந்தச் சிவம் இன்றிச் சத்தி இல்லை
என்று கூறி விளக்கப்பட்டுள்ளமையை இங்கு நினைவு கூர்க.

சுத்தமாம் சத்தி ஞானச் சுடர் ஆகும் சிவம் ஒழிந்து அச்
சத்திதான் இன்றாம் முன்னைத் தகவு இலா மலங்கள் வாட்டி
அத்தனை அருளும் எங்கும் அடைந்திடும் இருள் அகற்றி
வைத்திடும் இரவி காட்டும் வளர்ஒளி போல் மகிழ்ந்தே

முந்திய பாடலில் நிறை ஒளி முதலது அன்றி நின்றிடா என்று கூறப்பட்ட பகுதியை ஆசிரியர் இந்தப் பாடலில் விளக்கியருளுகிறார், சிவம் ஆகிய கதிரவன் இல்லாமல் சுத்த ஞானமாகிய ஒளி வீசுவதில்லை. காலைப் பொழுதில் கதிரொளி தோன்றி உலகெங்கும் கவிந்திருந்த இருளை நீக்கிக் கதிரவனைக் காட்டுவது போலச் சத்தியாகிய பேரொளி உயிர்களைத் தோற்றமில் காலம் தொட்டே பற்றியிருந்த தகவற்ற ஆணவம் முதலிய மலங்களை வாட்டி நீக்கிச் சிவமாகிய சூரியனை மகிழ்ந்து உணர்த்தியருளும்.

சத்தி ஞானத்தின் பிழம்பாகும். சிவம் என்னும் முதல் இல்லையேல் இந்தப் பேரொளியும் இல்லை. ஏனெனில் சத்தியும் சிவனும் தம்முட் பிரிவனவல்ல.இந்த நிலையை அபின்னமாய் நிற்றல் என்பர். உயிர்களைப் பிணிப்புக்கு உட்படுத்துவதாலும் அறியாமையாலும் அழுத்துவதாலும் மலங்களைத் தகவு இலா மலங்கள் என்றார்.

கதிரவன் புறத்து இருளைப் போக்குகின்றான். பகல் போய் மாலை வந்ததும் உலகில் மீண்டும் இருள் கவிந்து கொள்ளுகிறது. இவ்வாறே நாள் தோறும் தொடர்ந்து நடந்து வருவதால் எங்கும் அடைந்திடும் இருள் அகற்றி வைத்திடும் இரவி எனக் குறிப்பிட்டார் ஆசிரியர். புறத்து இருளை நீக்கும் கதிரவனைப் போல் அல்லாமல் அகத்து இருளை நீக்கும் சிவஞானப் பேரொளி மலங்களாகிய இருளை மீண்டும் வந்து தாக்காதவாறு தீர்த்தலில் அதனை தகவு இலா மலங்கள் வாட்டி என்றார். மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே ஆட்கொள்ள வல் சித்திஆகையினால் அகற்றி என்பதை விட வாட்டி என்பது பொருத்தமாகும்.

சத்தி அருள்வது அத்தனை அத்தன்-தந்தை. எனவே சத்தியைத் தாய் என்று சொல்லாமலே உணர வைத்தார்.

புகல்அரும் அசத்தர் தம்பால் பொருந்திய அலகையே போல்
அகிலமும் உணரும் ஈசன் அருள்உயிர் மேவ லாலே
சகலமும் நிகழவேண்டும் தலைவன் ஐந்தொழிலும் தானே
இகல்அற இயற்றல் வேண்டும் என்றது நன்றி இன்றே

பிசாசு பிடித்தவர்கள் தம் அறிவை இழந்து அந்தப் பிசாசின் குணமும் செயலும் கொண்டு திரிவதைப் பார்க்கிறோம். எல்லா வல்லமை
யும் உள்ள பேரறிவாளனாகிய சிவபெருமானுடைய அருள் உயிரிலே பொருந்தினால், பேய்க்கு உள்ள தன்மை பிடியுணர்வர்க்கும் விளைவது போல, சிவனின் அருள் பெற்றவர்கள் சிவனைப் போலவே யாவற்றையும் ஒருங்கே அறிய வேண்டும் என்றும், சிவனது ஐந்தொழில் ஆற்றும் வல்லமை அந்த உயிர்க்கும் உண்டாக வேண்டும் என்றும் கொள்ளுவது பொருந்தாது.

இந்தப் பாடலில் சிவசமவாதிகள் கொள்ளும் கருத்தை எடுத்துக் கூறி அவர்கள் கூற்றுப் பொருந்தாது என்று கூறி மறுக்கிறார். பிசாசினால் பிடிக்கப்பட்டவர்கள் பிசாசின் குணமும் தொழிலும் கொண்டவர் ஆவது போலச் சிவன் அருளைப் பெற்ற உயிர்கள் சிவனைப் போலவே முற்றுணர்வும் உடையவராகி ஐந்தொழிலும் இயற்ற வேண்டும் என்பது சிவசமவாதிகள் கருத்து. அது பொருந்தாது என்று இப்பாடலில் கூறிவிட்டு, இதையடுத்த பாடலில் அக்கருத்தை, எடுத்துக் காட்டு மூலம் ஆசிரியர் மறுத்து உரைக்கிறார், எனவே இப்பாடலின் பொருள் வருகின்ற பாடலோடு இயைத்து உணரத்தக்கது.

இன்றுநோக்கு உரை நடக்கும்
இயல்புஇலோர்க்கு இயை வாய்ந்து
நின்றதோர் அலகை நேர்ந்தால்
நிகழ்வதுஎன் அதுபோல் உள்ளத்து
ஒன்றிய உணர்வு தம்பால்
உள்ளது நிகழ்த்தும் ஈசன்
தன்தொழில் நடத்தும் மேனி
தனக்குஎனக் கொண்டு தானே.

குருடனும் ஊமையும் முடவனும் ஆகிய ஒருவனை அவ்வுறுப்புக் குறைகள் இல்லாத பேய் ஒன்று பற்றிக்கொள்ளுமானால் என்ன நிகழும்? அவனுக்குப் பேச்சுவராது காண முடியாது நடக்கவும் இயலாது. ஏனெனில் இக்குறைபாடுகள் அவனிடத்தில் ஏற்கனவே உள்ளன. ஆதலால் அவனை விட்டு அவை நீங்கா. ஆன்மாவின் இடத்திலே பொருந்திய அருள் அதன் இச்சை ஞானம் கிரியைக்கு ஈடாக அறிவித்து நிற்குமே அன்றி அதற்கு மேல் வேறு எதனையும் ஆன்மா பெறுதல் இயலாது. இறைவன் திருமேனி கொண்டு தனக்குரிய ஐந்தொழில்களை ஆற்றுவதைப் போல ஆன்மா ஆற்றுதல் இயலாது.

திருவருள் ஆன்மாக்களின் விழைவு அறிவு செயல்களைத் தடுத்து நின்ற மலத்தை அகற்றி, அவற்றிற்கு இறைவனைக் காட்டும் பேருதவியைச் செய்கிறது. அவ்வளவே தவிர ஆன்மாக்களை இறைவனோடு ஒத்தவையாகச் செய்யும் என்று கொள்ளுவது தவறு. ஏனெனில் இறைவன் அருள் திருமேனி கொண்டு ஐந்தொழிலை இயற்றுகின்றான்.

சிவஞான சித்தியாரில் உம்பர் பிரான் உற்பத்தி ஆதிகளுக்கு உரியன் உயிர் தானும் சிவானுபவம் ஒன்றனுக்கும் உரித்தே (பாடல் 319) என்று கூறப்படுவதும் இதுவே.

இவ்விரண்டு பாடல்களும் இடைப்பிறவரல் போன்று ஓர் ஐயத்தினை நீக்கின என்று பெரியோர் கொள்வர்.

இந்நிலை தன்னில் மன்னி எய்திடும் கலாதி போதம்
தன்அளவு அறிந்து நிற்கும் தகவுஇலா நலங்கள் நீத்த
அந்நிலை கரணம் ஆகா வகை அதில் அறிவு அடங்கி
மன்னிட வியாபி யாய வான்பயன் தோன்றும் அன்றே.

சகல நிலையில் ஆன்மா தன்னைச் சார்ந்த கலை முதலிய தத்துவங்களால் வருகின்ற வரையறைக்குட்பட்ட அறிவோடு தனக்கெய்தியவற்றை அறிந்து நிற்கும். தகவற்ற மலங்கள் நீங்கிய நிலையில் அது திருவருளோடு சேர்ந்து நிற்கும். அந்நிலை சுத்த நிலை ஆகும். சுத்த நிலையில் ஆன்மா கரணங்கள் ஏதும் கொள்ளாது. திருவருள் வெளிக்குள் ஆன்மா அடங்கி நிலை பெறும். அப்போது வரையறையற்ற வியாபக ஞானம் என்னும் பயன் விளங்கித் தோன்றும்.

இப்பாடலை எழுபத்து ஐந்தாம் பாடலில் முன்னைத்தகவு இலாமலங்கள் வாட்டி எனக் கூறப்பட்டதனோடு ஒருங்கு வைத்துப் பொருள் காணுதல் வேண்டும். இந்நிலை என்பது இந்தச் சகல நிலை என்று பொருள் தந்து நின்றது. எனவே அணிமைச் சுட்டால் குறிப்பிடப்பட்டது. அந்நிலை என்றது சகலத்தின் நீங்கிய சுத்த நிலையைக் குறித்தது. எனவே சேய்மைச் சுட்டால் குறிப்பிடப்பட்டது.

திருவருள் தன்னையும் ஆன்மாவையும் பாசங்களையும் இன்ன தன்மைய என்று காட்ட ஆன்மா அவற்றைக் காண்பது ஆன்ம தரிசனம் ஆன்மா தன் முனைப்பு அற்றுத் திருவருளிலே மூழ்கி நிற்கின்ற நிலைஆன்ம சுத்தி. தன் முனைப்பு அற்றமையால் ஆன்மாத் தன் பணி நீத்தது. அந்த நிலையில் இறைபணி நிற்கும் இயல்பை எய்தியது. அவ்வாறு எய்தவே ஆன்ம லாபம் என்னும் வியாபியாய வான்பயன் தோன்றும். ஆன்மாவுக்கு இதனினும் மேலான பேரின்பப் பயன் வேறில்லை என்பதை உணர்த்த வான் பயன் என்றார் ஆசிரியர்.

தன் முனைப்பு அடங்கினால் அன்றி வினைத் தொடக்கு அறாது. அறாதவரை புலன்வழிச் செல்லும் தன்மை ஆன்மாவை விட்டு நீங்காது. அது நீங்குவதற்குத் தன் பணி நீத்தலும் இறைவன் பணி நிற்றலும் கட்டாயமாகத் தேவை. இவ்வாறு கூறுவதால் இப்பாடலில் பாச நீக்கமும் சிவப்பேறும் உணர்த்தப்பட்டன.

அடைபவர் சிவமேஆகும் அதுஅன்றித் தோன்றும் என்ற
கடன் அதுஏன் என்னில் முன்னம் கண்டிடார் தம்மைப் பின்னும்
தொடர்வுஅரும் அருளினாலும் தோன்றுமா காணார் ஆயின்
உடையவன் அடிசேர் ஞானம் உணர்தல் இன்று அணைதல் இன்றே

ஆன்மா திருவருள் வழிச் சென்று சிவத்தை அடையும் காலத்தில் அது சிவமே ஆதல் வேண்டும். அதுவன்றி மற்றொரு வான்பயன் தோன்றும் என்று கூறுதல் எவ்வாறு பொருந்தும்? எனக் கேட்பின் திருவருட்பேற்றுக்கு முன்னும் தன்மையறியாத ஆன்மாக்கள், அப்பேற்றின் பின்னர்த் தொடர்வதற்கரிய ஞானத்தின் துணை கொண்டும் தம்மை உள்ளவாறு காணாவாயின் இறைவனின் திருவடி ஞானத்தை உணர்வதும் இல்லை, அணைவதும் இல்லை.

இதற்கு முந்திய பாட்டில், வான்பயன் தோன்றும் என்று கூறப்பெற்றிருப்பதைப் பற்றியே இங்கு வினா எழுப்பப்படுகிறது. சிவத்தை அடைந்த பிறகு உயிர் சிவத்தோடு கலந்து பொருந்தி இரண்டற நிற்கும் என்று கொள்ளல் ஆகாதா? அதன் பிறகும் வேறு ஒரு பயன் தோன்றும் என்று ஏன் கூறப்பட்டது?

சைவ சித்தாந்தத்தில் முப்பொருள்களும் என்றும் உள்ளவை. எனவே இவற்றில் எந்த ஒரு பொருளும் இல்லாத நிலை கட்டு நிலையிலும் இல்லை; வீடு பேறு நிலையிலும் இல்லை. வீடு பேற்று நிலையில் உயிர் உயிராகவே நின்று இறைவனின் பேரின்பத்தை என்றும் அநுபவித்துக் கொண்டிருக்கும். அந்தப் பேரின்ப அநுபவம் தான் வானய பயன்.

கட்டு நிலையில் தன்னையும் அறிய இயலாத ஆன்மா இறைவனை அறியாதிருந்தது. அதற்குக் காரணமாக அமைந்தது ஆன்மாவைப் பற்றியிருந்த மலம்.

முத்தி நிலையில் தன்னை அறிந்து அருளையும் அறிந்து வீடு பேற்றினைப் பெறும். நான் இது என்று தன் உண்மைத் தன்மையை அறிய இயலவில்லை ஆயின் எவ்வாறு அருளை அறியும்? எவ்வாறு அருளை அடையும்? தன்னையே அறியாத போது அடிசேர் ஞானத்தை உணர்தலும் இல்லை.

பெறுவானும் பேறும் இல்லையெனில் சாயுச்சியம் என்னும் சொல்லுக்குப் பொருள் இல்லை.

பொற்புறு கருவி யாவும் புணராமே அறிவிலாமல்
சொற்பெறும் அதீதம் வந்து தோன்றாமே தோன்றி நின்ற
சிற்பரம் அதனால் உள்ளச் செயல் அறுத்திட உதிக்கும்
தற்பரம் ஆகி நிற்றல் சாக்கிராதீதம் தானே.

பொலிவுமிக்க கருவிகள் யாவும் பொருந்தாமலும், ஆணவ மலத்தால் மறைப்புண்டு அதீத அவத்தைப் பட்டு அறிவிலாமல் கிடவாமலும் இரண்டையும் கடந்த நிலையில் ஆன்மாவிடத்திலே உயர்ந்ததாகிய சிற்பரம் தோன்றும். அதன் துணை கொண்டு தன் பணி நீத்து இறைபணி நின்று ஞானவடிவாய் நிற்கவே தற்பரம் ஆகிய சிவத்துடன் நிலை பெற நிற்கும் சாக்கிர அதீதம் தோன்றும்.

கேவல அவத்தை என்பது பொற்புறு கருவிகள் எதுவும் புணராமல் இருக்கும் நிலை. கருவிகள் பொருந்தும் போது கேவல அவத்தை நீங்குகிறது. சகல அவத்தை தொடங்குகிறது. இது இரவு நீங்கிப் பகல் தொடங்குவது போன்றது. உயிருக்கு இந்த இரண்டு அவத்தைகளும் உள. கேவல அவத்தையில் ஆணவத்தில் கட்டுண்டு காரிருளில் கிடந்த உயிருக்குச் சகல அவத்தை வந்தவுடன் உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள் ஆகிய பலவும் வந்து பொருந்துகின்றன. ஒரு வகையில் சகல அவத்தை கேவல அவத்தையை விட உயர்ந்தது. ஏனெனில் ஆன்மாவின் அறிவு இங்கு சிறிதே வெளிப்படுகின்றது. ஆயினும் சுத்த அவத்தையிலும் சகல அவத்தை கீழ்ப்பட்டதே. இதுவரை சகல அவத்தையை விளக்கினார் ஆசிரியர். அவர் பயன்படுத்திய சொற்றொடர் பொற்புறு கருவி யாவும் புணராமே என்பது.

அதை அடுத்துக் கேவல அவத்தையைக் குறித்து அறிவிலாமை சொற்பெறும் அதீதம் வந்து தோன்றாமே என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். முன் கூறப்பட்ட சகல நிலையும் இப்போது கூறப்பட்ட கேவல நிலையும் இல்லாது. இதனினும் உயர்ந்த சுத்த நிலைமை அடைவது விழிப்புடன் இருக்கும் ஆன்மாக்களுக்கே எய்தற்பாலது இல்லை எனில் கேவலமும் சகலமும் மாறி மாறித் தோன்றி பிறப்பும் இறப்பும் எய்தி உயிர் உழன்று கொண்டே இருக்கும்.

கேவலத்தையும் சகலத்தையும் நீங்கிய பக்குவம் உடைய ஆன்மாக்களுக்குத் தோன்றுவது சிற்பரம். சித் அறிவு, பரம்-மெய், சிற்பரம் என்ற சொல் மெய்யுணர்வாகிய சிவஞானத்தைக் குறிக்கும்.

மேலே நாற்பத்தொன்பதாவது திருப்பாடலில் ஞானக் கூத்தன் ஒரு மூர்த்தி கொடுகுறுகி மோக, நீடிய கேவல சகலம் நிகழாவாறு, நிறுத்தி மலம் அறுக்கும் அது நிலையார் சுத்தம் என்று ஆசிரியர் கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது.

சிற்பரம் அதனால் உள்ளச் செயல் அறுத்தல் என்பது ஆன்மா சிவஞானத்தின் துணை கொண்டு தான் அதில் அடங்கித் தனக்கென ஒன்று இன்றி ஏகனாகி இறைபணி நிற்றலைக் குறித்தது. திருஉந்தியாரில் திருவியலூர் உய்யவந்த நாயனார்.

நம்செயல்அற்று இந்த நாம் அற்றபின் நாதன்
தன்செயல் தானே என்று உந்தீபற
தன்னையே தந்தான் என்று உந்தீபற

என்றதும் இருக்கருத்தே பற்றி. தற்பரமாய் நிற்றல் என்பதை அந்தப் பரமாகியே நிற்றல் என்பர். அநந்தியமாய் நிற்றல். அத்துவிதமாய் நிற்றல். ஊன் கெட்டு உயிர் கெட்டு என் உள்ளமும் போய், நான் கெட்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ என்ற திருவாசகம் இந்த உண்மையை உணர்த்தும்.

சாக்கிராதீதம் என்பது கேவலம் சகலம் இரண்டையும் நீங்கி நனவிலேயே அதீத நிலையை அடைதல்.

ஒடுங்கிடா கரணம் தாமே ஒடுங்குமாறு உணர்ந்து ஒடுக்க
ஒடுங்கிடும் என்னில் நின்றது ஒடுங்கிடா கரணம் எல்லாம்
ஒடுங்கிடா ஒடுங்க உள்ள உணர்வுதான் ஒழியும் வேறாய்
ஓடுங்கிடில் அன்றி மற்ற உண்மையை உணரொணாதே

முந்தைய பாட்டில் பொற்புறு கருவி யாவும் புணராமே என்று கூறியதற்கு விளக்கம் தருகிறார் ஆசிரியர்.

கருவி கரணங்கள் உலக நுகர்விலும் அதன் வழியாக வினை ஈட்டத்திலும் தாமே ஓடும் இயல்புடையன. அவற்றை ஒருவன் ஒடுக்கிக் கொள்ளுகிற முறையை உணர்ந்து ஒடுக்கினால் அவை அவ்வாறு வரம் பின்றி ஓட மாட்டா என்று சிலர் கொள்வர். அப்படி உணர்வு கொண்டு கரணங்களை ஒடுக்குவ தென்பது இயலாதது. தான் இவற்றை ஒடுக்குகிறேன் என்ற உணர்வு உள்ள வரையில் அங்கே ஆன்ம போதம் எனப்படும் உயிரின் அறிவு ஒடுங்கவில்லை என்பதே உண்மை. உயிருக்கு வாயிலாகிய கரணங்கள் ஒடுங்குகிற போது ஆன்மாவிற்கு அறிவு கெட்டு அது கேவல நிலையை அடையும் என்பது தான் உண்மை. பின் எந்த ஒடுக்கம் உயர்ந்தது எனின் கேவலம் தோன்றாதவாறும் முனைப்போடு ஒடுங்காதவாறும் சிவனுடைய பேரின்பத்தில் தன்னை உட்படுத்திக் கொண்டு அதனுள் தன் முனைப்பற்று நிற்பதே சிறந்ததாகும். சிவஞானத்தில் தம்மை ஒடுக்கிக் கொள்ளாதவர்க்கு இவ்வுண்மை உணர இயலாததாகும். 105

கரணங்களை ஒடுக்குகிறேன் என்று கருதுகிற பொழுதே ஒடுக்குகிறவன் நான் என்ற உணர்வு தலையெடுக்கிறது. அந்த உணர்வுதான் உயிரின் தன் முனைப்பு. தன் முனைப்பு அறாத போது ஒடுக்கம் என்ற சொல் பொருளற்றுப் போகும்.

அல்லாமல் கரணங்கள் உண்மையிலேயே ஒடுக்கப்பட்டுவிட்டால் ஆன்மா கேவல நிலையை அடைந்து விட்டது என்பதுதான் பொருள். ஏனெனில் கேவல நிலையில் இருக்கின்ற உயிர் அறிவற்று விழைவற்று ஆள்வினையற்றுக் கிடந்தது. அப்போது உயிர் அறியாமையே வடிவாகக் கிடந்தது. இறைவன் தன் பெருங்கருணையால் உயிருக்கு உடல் கருவி முதலியவற்றைத் தந்து அதன் அறிவைச் சற்றே விளங்குமாறு திருவருள் பாலித்தான். மீளவும் அக்கேவல நிலையை அடைவது உயிருக்கு முன்னேற்றம் அன்று பின்னடைவே

பின் எப்படித்தான் பொற்புறு கருவியாவும் புணராமை நிகழும்எனக் கேட்பின் மேற்கூறப்பட்ட இரண்டு நிலைகளுக்கும் மேலாய் உண்மை எனப்படும் சிவானுபவத்தில் தோய்ந்து தன்முனைப்பும் அற்று நிற்றலே கருவிகள் புணராத உண்மையான ஒடுக்கம் என்கிறார்.

பற்றிடும் கருவி யாவும் படர்ந்து உணர்வு அளிக்கும் காலை
உற்று அறிந்திடுவது ஒன்றின் உணர்வினின் உண்மை ஆகும்
மற்றது பகல் விளக்கின் மாய்ந்திட வருவது உண்டேல்
பெற்றிடும் அதனை மாயப் பிறப்பினை அறுக்க லாமே

உயிரின் அறிவு விழைவு ஆள்வினை ஆகியவை புறத்தில் உள்ள பொருள்களைக் கருவிகளின் வாயிலாகச் சென்று படர்ந்து, பற்றி உயிருக்கு அறிவு நிகழ்கிறது. அவ்வறிவு சுட்டறிவு எனப்படும் வரையறைக்குட்பட்ட அறிவு. இதனை ஏகதேச அறிவு என்பர். நட்ட நடுப்பகலில் கதிரவனின் ஒளி விளங்கித் தோன்றும் ஓரிடத்தில் ஏற்றி கைவைக்கப்பட்ட கைவிளக்கு எவ்வாறு ஒளி மடங்கி நிற்கிறதோ அதுபோல இறைவனின் பேரொளியில் உயிரின் அறிவு மடங்கி நிற்கின்ற நிலையினை எய்தப் பெற்றால் அதுவே மாயப் பிறப்பினை அறுப்பதற்கு வழியாகும்.

மேலே எண்பதாவது பாடலில், அறிவிலாமை சொற்பெறும் அதீதம் வந்து தோன்றாமை என்பதற்கு இந்தப் பாடலில் ஆசிரியர் விளக்கத்தைத் தருகிறார். பெறும் கரணங்களால் அறியப்படும் அறிவு எல்லைக்குட்பட்டது. அது கைவிளக்கின் ஒளி போன்றது. சிவப்பேரின்பம் என்பது கதிரவனின் பேரொளி போன்றது. பேரொளியில் ஏற்றிவைத்த விளக்க அணைந்து போவதும் இல்லை. அல்லது தன் ஒளியை இழப்பதும் இல்லை. ஆனால் எல்லையற்ற ஒளிக்குள்ளே தானும் ஒரு துளி ஒளிச்சுடராய் நின்று தன்முனைப்பற்று நிலைபெறுகிறது. இந்த உவமை சிவப்பேரின்பத்தில் அழுந்திய உயிர் தன் முனைப்பற்று அருளில் தோய்ந்து நிற்பதற்கு ஆசிரியரால் எடுத்துக்காட்டப்படுகிறது.

பசு ஞானம் சிற்றறிவு. சுட்டறிவு அது கைவிளக்குப் போல உயிரறிவைக் குறித்தது. சிவஞானம் முற்றறிவு. வியாபக அறிவு. அது நண்பகல் கதிரவனைப் போல் பதி ஞானம் எனப்படும் சிவஞானத்தைக் குறித்தது. சிவஞானத்தில் திளைத்தவர்களே தோன்றி நின்று அழிவதாகிய பிறப்பினை அறுக்கும் உபாயத்தை அறிந்தவர்கள் ஆவார்கள்.

திருமந்திரத்தில் ஒத்திட்டு இருக்க உடம்போடு உயிர்தான் செத்திட்டு இருப்பர் சிவயோகியார்களே (121) எனக் கூறப்படுவது இதுவே.

மற்றது பகல் விளக்கில் என்பதை மற்றதும் பகல் விளக்கில் என்று பாடம் கொள்வாரும் உளர்.

 
மேலும் சிவப்பிரகாசம் »
சைவசித்தாந்த மெய்ப்பொருளியலை விளக்குகின்ற அடிப்படை நூல்கள் மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும். ... மேலும்
 
பொது அதிகாரம்- பதி இலக்கணம் பலகலை ஆகமம்வேகம் யாவையினும் கருத்துப்பதிபசுபாசம் தெரித்தல் பதிபரமே ... மேலும்
 
அன்னியம்ஆனவை உணர்த்தி அனன்டயமாய் நிறைந்தஅறிவு அறியாமையினாலும் அருள்நிலவும் காலம்தன்னில் அவனே ... மேலும்
 
முந்திய ஒருமை யாலே மொழிந்தவை கேட்டல் கேட்டல்சிந்தனை செய்தல் உண்மை தெளிந்திடல் அது தானாகவந்தவாறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar