பதிவு செய்த நாள்
01
ஜூலை
2013
10:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெருவில், "பார்க்கிங் வசதி குறைவாக இருப்பதால், சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன, இதனால், சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் நடக்க வழி இல்லாமல் திணறுகின்றனர். காஞ்சிபுரம் 10வது வார்டில், பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் சன்னிதி தெருவில், பிரதான நுழைவு வாயில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள், தங்கள் வாகனத்தை நிறுத்த கோவில் பகுதியில் போதிய இடவசதி இல்லை. இதனால், கோவிலுக்கு, சுற்றுலா பயணிகளை ஏற்றி வரும் வாகனங்கள், சன்னிதி தெருவில், இரு பக்கங்களையும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. மேலும், ஆட்டோக்களின் அட்டகாசமும் இங்கு அதிகம். கிழக்குமாட வீதி பகுதியில், தனியார் ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு முறையாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அங்கு ஆட்டோக்களை நிறுத்தாமல், கோவில் முகப்பில், அவர்களாகவே ஆட்டோ நிறுத்தத்தை உருவாக்கி, அடாவடி செய்து வருகின்றனர். இதனால், கோவில் முன் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் தவிக்கின்றனர். கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு போதிய அளவிலான பார்கிங் ஏரியா உருவாக்க வேண்டும். ஆட்டோக்களின் அட்டகாசத்திற்கு, காவல்துறை கண்காணிப்பாளர் ஒரு முடிவு கட்டவேண்டும். இவையே இப்பிரச்னை தீர வழிகளாகும்.