பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
10:07
அடுத்த மாதம் 21,000 கோவில்களில் சிறப்பு பூஜை: நம் கோவில் திட்டத்தை மூன்றாவது கட்டமாக செயல்படுத்த, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன்படி, அடுத்த மாதம், 21ம் தேதி, ஆந்திராவிலுள்ள, 21 ஆயிரம் கோவில்களில், பூஜை கள் நடத்தப்பட உள்ளன. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், ஆண்டிற்கு ஒரு முறை பூஜை செய்ய முடிவு செய்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம், கடந்த ஆண்டு, ஆடி மாத பவுர்ணமி அன்று, "நம் கோவில் திட்டத்தை துவக்கியது. பக்தர்கள் மனதில், ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தி, தர்ம நெறியை தழைக்கச் செய்வதே, இத்திட்டம் நோக்கம். திருமலை திருப்பதி தேவஸ்தானம் துவக்கிய, இத்திட்டத்தில், ஆந்திர மாநில அறநிலையத் துறையும் இணைந்துள்ளது. கோவில்களில் செய்யப்படும், பூஜைகளுக்கான, அனைத்து செலவுகளையும், திருப்பதி தேவஸ்தானமே ஏற்றுள்ளது. கோவில்களில், பூஜை செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களும், திருமலையில், ஏழுமலையான் சன்னிதியில் வைத்து பூஜை செய்யப்பட்டு, அதன்பின், அனைத்து கோவில்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் கட்டமாக, 13 ஆயிரத்து, 242 கோவில்களிலும், நவம்பர், 28ம் தேதி, இரண்டாவது கட்டமாக, 17 ஆயிரத்து, 500 கோவில்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், வரும், ஆகஸ்ட், 21ம் தேதி, "நம் கோவில் திட்டத்தின் கீழ், 21,000 கோவில்களில், பூஜை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. -நமது நிருபர்-