பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
10:07
பழநி: புண்ணியம் தேடி பழநி வரும் பக்தர்களுக்கு, பராமரிப்பின்றி குப்பை, கழிவு நீரால் நிரம்பிய வையாபுரிக்குளம், நோய்களை பரிசாக தரும் நிலையில் உள்ளது. பழநியில் புனிதக்குளமாக ஒரு காலத்தில் இருந்தது வையாபுரிகுளம். விவசாயத்திற்கான நீராதாரங்களில் ஒன்று. ஆனால் இன்று, கழிவுநீர், குப்பை தஞ்சமடையும் இடமாக மாறியுள்ளது. கோழிக்கழிவுகள், ஓட்டல் கழிவுகள், மருத்துவனை கழிவுகள், பாலிதீன் பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுபுறச்சூழல் பாதிக்கப்படுகிறது. இது பக்தர்களுக்கு நோய்களை பரப்பும் அபாய நிலையில் உள்ளது. குளத்தை சுத்தப்படுத்தி, தூர்வாரி, நிரந்தரமாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தை சுற்றிலும் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற பொதுப்பணித்துறையினர் முன்வர வேண்டும். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில்,""கழிவுகளை அப்புறப்படுத்த நகராட்சிக்கு கடிதம் தந்துள்ளோம், பாதாள சாக்கடை திட்டம் அமலுக்கு வரும்போது சுத்தம் செய்வதாக கூறுகின்றனர், என்றார். நகராட்சி தலைவர் வேலுமணி கூறுகையில்,""வையாபுரிகுளத்தில் உள்ள கழிவுகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.