பதிவு செய்த நாள்
02
ஜூலை
2013
10:07
காஞ்சிபுரம்: ஆரியம்பாக்கத்தில், சிவன் கோவிலை தொடர்ந்து, பூமிக்குள் புதைந்துள்ள மன்னர்கள் காலத்து பெருமாள் கோவிலை, கல்வெட்டில் கிடைத்த தகவலின் அடிப்படையில், தொல்லியல் துறையினர் மீட்டுள்ளனர். காஞ்சிபுரம் - சுங்குவார்சத்திரம் இடையே அமைந்துள்ளது, ஆரியம்பாக்கம் கிராமம். இக்கிராமத்தின் வடக்கு பகுதியில், மண்ணில் புதைந்துள்ள, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவிலை, கடந்த மாதம் 27ம் தேதி, தொல்லியல் துறையினர் கண்டறிந்து, மீட்டனர். புதைந்திருந்த கோவில் கட்டடத்தில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்களை படி எடுத்துள்ள தொல்லியல் துறையினர், அதை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.
பெருமாள் கோவில்: இந்நிலையில், தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் நாகசாமி, நேற்று அப்பகுதிக்கு சென்று, மீட்கப்பட்ட பழமையான சிவன் கோவிலை பார்வைஇட்டார். பின்னர், கல்வெட்டுக்களில் உள்ள விவரங்களை குறிப்பெடுத்தார். இதில், தற்போது, கண்டெடுக்கப்பட்டுள்ள சிவன் கோவிலின் பின்புறத்தில், 400 மீட்டர் தொலைவில், ஒரு பெருமாள் கோவில் உள்ளது, அதற்கு, கல்யாண வரதராஜர் என்ற பெயர் உண்டு என்று அறியப்பட்டது. மேலும், அதன் அருகில், அழகிரி எனும் பெரிய ஏரியும், கோவிலுக்கு கிழக்கு பகுதியில், அர்த்த மண்டபமும் அமைந்து உள்ளதாக தெரிய வந்தது. இதையடுத்து, குறிப்பிட்ட அப்பகுதியில் உள்ள மண்மேட்டில், தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
புதுப்பிக்கப்படுமா? அப்போது, அங்கு, வரதராஜ பெருமாளின் கற்சிலை பீடத்தில் மீது அமர்ந்த நிலையிலும், அவரது வலது புறத்தில் ஸ்ரீதேவியும், இடது புறத்தில் பூதேவி ஆகியோரின், கற்சிலைகளும் புதைந்திருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து, ஆரியம்பாக்கம் கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில், மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில்கள், மண்டபங்கள் மண்ணில் புதைந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. தொல்லியல் துறை அதிகாரிகள் தினமும், கிராமத்திற்கு வந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோவில்களின் மேற்கூரைகள் மட்டும் இயற்கை சீற்றங்களால் இடிந்து விழுந்திருக்கலாம். ஆனால், கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ள பக்கச்சுவர்கள், இன்னும் சேதமடையாமல் உள்ளன. இந்த கோவில்களை அரசு மீட்டு, புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினார்கள்.