பதிவு செய்த நாள்
08
ஜூலை
2013
10:07
நாமக்கல்: கீழ்சாத்தம்பூர் விநாயகர், மாரியம்மன், வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 15ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது.நாமக்கல் அடுத்த கீழ்சாத்தம்பூரில், விநாயகர், மாரியம்மன், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ஜூலை, 15ம் தேதி, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு, ஜூலை, 12ம் தேதி, அதிகாலை, 5.30 மணிக்கு, விசேஷ கணபதி, நவக்கிரஹம், மகா சுதர்ஸனம் மற்றும் குபேரலட்சுமி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. 13ம் தேதி காலை, 7 மணிக்கு, காவிரி தீர்த்தம் எடுத்து வரச் செல்லுதல், மாலை, 5.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்பம், புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்பலங்காரம், முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது.ஜூலை, 14ம் தேதி, காலை, 8.30 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, திருமுறை பாராயணம், மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு, கோபுர கலசம் வைத்தல் கண் திறப்பு, மூன்றாம் கால யாக பூஜை, காயத்ரி ஹோமம் நடக்கிறது. இரவு, 9.30 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.ஜூலை, 15ம் தேதி, அதிகாலை, 3 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, திருமுறை பாராயணம், பூர்ணாகுதி, விசேஷ உபசாரங்கள் நடக்கிறது. அதை தொடர்ந்து, அதிகாலை, 5 மணிக்கு, கடம் புறப்பாடு, விமானம் மற்றும் மூலஸ்தான மகா கும்பிஷேகம், கோலாகலமாக நடக்கிறது. அதையடுத்து, மகா அபிஷேகம், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது. விழாவில், 14ம் தேதி இரவு முதல், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.