பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
10:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு அன்றாடம் அர்ச்சனை செய்யப்படும், "தங்கமலர்கள் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி காணப்பட்டது; இதைப் பார்த்த பக்தர்கள் மனவேதனை அடைந்தனர். கோவை மாவட்டம், ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. அம்மனுக்கு அன்றாடம் மூன்று கால பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. இது தவிர, தங்கத்தால் செய்யப்பட்ட மலர்களால், அர்ச்சனையும் செய்யப்படுகிறது. இதற்கு, பக்தர்களிடமிருந்து, 100 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. இந்த தங்க மலர்கள், ஆரம்ப காலத்தில், தங்கத்துக்கான மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. தற்போது, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நிறத்தில் காட்சியளிக்கிறது. தங்கமலர் அர்ச்சனைக்கு, நேற்று மதியம் கட்டணம் செலுத்தி சென்ற பக்தர் ஒருவர், கோவில் அர்ச்சகரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், "தங்கம் தான் இப்படி நிறம் மாறிவிட்டது என்றார்.
இது குறித்து, அந்த பக்தர், கோவில் உதவி கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். உதவி கமிஷனர் அனிதாவிடம் கேட்டதற்கு, ""தங்க மலர்களின் நிறம் மாறிவிட்டது உண்மை தான். தங்கநகை மதிப்பீட்டாளரை வரவழைத்து, பரிசோதிக்க உத்தரவிட்டுள்ளேன். 916 தரத்தில், கோவிலுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட தங்கமலர்களின் தன்மை, எப்போதும் மாறாது. ஆனால், இந்த தங்கமலர்களின் நிறமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்படும், என்றார். தங்கமலர்களை கோவிலுக்கு தயாரித்து வழங்கிய, நகைகடை உரிமையாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: கோவிலுக்கு செய்து கொடுக்கும் நகை என்பதால், தூய்மையான, 916 தரத்திலான தங்கத்தில் தான், 108 மலர்களை செய்து கொடுத்தோம். பராமரிக்கும் முறையையும் சொல்லிக் கொடுத்தோம். ஆனால், அர்ச்சகர்கள் சரியாக பராமரிப்பதில்லை. ஆனாலும், தங்கத்தின் நிறம் எப்படி பயன்படுத்தினாலும், மாற வாய்ப்பு இல்லை. நிறம் மாறியதற்கான காரணத்தை அதிகாரிகள் தான் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.