பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
10:07
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் அமைந்துள்ள பழமலை நாதர் எனும் விருத்தகிரீஸ்வர் கோவிலின் சிறப்புகளை தொகுத்து உள்பிரகாரத்தில் எழுதும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிரசித்தி பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலின் பெருமைகளை பக்தர்கள், சிவனடியார்கள், பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கோவில் உள்பிரகாரத்தில், ஆயில் பெயிண்டால் எழுதும் பணி நடந்து வருகிறது. அதில், தேரோடும் திருச்சுற்று, கைலாய திருச்சுற்று, வன்னியடி திருச்சுற்று, அறுபத்து மூவர் திருச்சுற்று, பஞ்சவர்ண திருச்சுற்று என ஐந்து திருச்சுற்றுகள். கிழக்கு கோபுரம், மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் கண்டராதித்தன் கோபுரம் என ஐந்து கோபுரங்கள். இந்திர நந்தி, வேத நந்தி, ஆத்ம நந்தி, மால்விடை நந்தி, தர்ம நந்தி என ஐந்து நந்திகள். மணிமுக்தாறு, அக்னி தீர்த்தம், சக்ர, குபேர, நித்யானந்த கூபம் என ஐந்து தீர்த்தங்கள். நித்திய ஐந்து வழிபாடுகள், பஞ்ச தீப வழிபாடுகள், மாதாந்திர ஐந்து சிறப்பு வழிபாடுகள், வருடாந்திர ஐந்து சிறப்பு விழாக்கள், ஐந்து தேர்கள், மாசிமகப் பெரு விழாவில் சிவனின் ஐந்து தொழில்கள், ஐந்து விநாயகர், பழமலை நாதர் காட்சியளித்த ஐந்து திருத்தலங்கள், பழமலை நாதரை வழிபட்ட ஐந்து தேவர்கள், பழமலை நாதரை வழிபட்டு கவுச்சிய நிலையை அடைந்த ஐவர், பழமலை நாதரை வழிபட்ட ஐந்து முனிவர்கள், ஐந்து வெளி மண்டபங்கள், ஐந்து உள் மண்டபங்கள், பழமலை நாதரை வழிபட்டு பாடிய ஐவர் என 30 விதமான ஐந்து சிறப்புகளை தொகுத்து எழுதப்படுகிறது. இதனை கோவிலுக்கு வரும் பக்தர்கள், சிவனடியார்கள், பொது மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.