பதிவு செய்த நாள்
09
ஜூலை
2013
10:07
மடத்துக்குளம்: கோவில்களிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுக்களை பாதுகாப்பதோடு, படியெடுத்து பார்வைக்கு வைக்க வேண்டும் என மடத்துக்குளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க பல சைவ,வைணவ கோவில்கள் சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டன. அமராவதி ஆற்றங்கரை பகுதியில், இக்கோவில்கள் சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டன. ஆண்டு முழுவதும் பூஜைநடக்கவும் பல நூறு ஏக்கர் நிலங்கள் மன்னர்களால் தானமாக ஒதுக்கப்பட்டது. இதற்கு பின் கோவில் நிர்வாகத்தினர் கோவிலை மட்டும் கவனிக்க தொடங்கினர்.அதன் பின் குத்தகைதாரர்கள் முறையாக குத்தகை வழங்காமல் இழுத்தடிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் கோவில்களுக்கு வருமானம் குறையத்தொடங்கியது. ஆறுகாலப்பூஜை நடந்த கோவில்களில் ஒரு காலபூஜை மட்டும் நடக்கும் நிலை உருவானது. பொதுமக்கள் கூறியதாவது: கருங்கற்கலால் உருவாக்கப்பட்ட(கற்றளி) கோவில்களில் வரலாற்று சிறப்பு மிக்க கல் வெட்டுக்கள் உள்ளன. இந்த கல்வெட்டுக்களில் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் அதன் உரிமைகள், குத்தகை முறைகள், மன்னர் ஆட்சி, வாழ்க்கை, இயற்கை குறித்த அறிவிப்பு, உணவு, உள்ளிட்ட மக்களின் பழக்கங்கள் குறித்த அறிய செய்திகளை பதித்துள்ளனர். அனைவருக்கும் பயன்படும் வகையிலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்கவும் இந்த கல்வெட்டுக்களை படியெடுத்து,பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.