பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
சேலம்: சேலத்தில், மூன்று ஆண்டாக பூட்டப்பட்டிருந்த கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கோவில் நடை திறக்கப்பட்டது.
சேலம் சின்னக்கடை வீதி, அரச மர பிள்ளையார் கோவில் தெருவில், சென்னப்பர் கோவில் உள்ளது. 150 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில், குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு சொந்தமானதாகும். கோவிலில், தர்மகர்த்தாவை நியமிப்பது தொடர்பாக, மூன்று ஆண்டுக்கு முன், இரு தரப்பினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், கோவில் பூட்டப்பட்டது. இரு தரப்பினரும், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றத்தில், கோவிலை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பராமரிக்க உத்தரவிடப்பட்டது. மூன்று ஆண்டாக பூட்டியிருந்த கோவில், நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சுரேஷ்குமார், தாசில்தார் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில், போலீஸ் உதவி கமிஷனர் ரவிசங்கர், டவுன் இன்ஸ்பெக்டர் சூரியமூர்த்தி உள்ளிட்ட போலீஸார், கோவிலின் பூட்டை உடைத்து, கோவில் திறக்கப்பட்டது. தினமும் பூஜை செய்து, கோவிலில் வழிபாடு நடைபெற உள்ளது. கோவில் பூட்டை திறக்கும் போது, பெண் ஒருவர் திடீரென்று எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகள், அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.