இறைவன் ஷைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து, தன் அடியார்களைக் காத்து பெரும் கருணை செய்துள்ளான். அவர்களுக்கு நோன்பை கோட்டை போலவும், கேடயம் போலவும் ஆக்கியுள்ளான். நோன்பின் மூலம் சுவனத்தின் (சொர்க்கம்) வாசல்களை அவன் திறந்து விட்டிருக்கிறான். "ரகசிய ஆசைகள் மூலமே ஷைத்தான், மக்களின் மனதில் நுழைகிறான் என்று கற்றுக் கொடுக்கிறான். அந்த ஆசைகளைக் கட்டுப்படுத்தி ஆன்மா தனது மேலான நிலையை உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்துகிறான். அந்த இறைவனுக்கே எல்லாப்புகழும் உரியதாகும். அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ""நோன்பு பொறுமையில் பாதி, பொறுமை இறை நம்பிக்கையில் பாதி, என்று சொல்கிறார்கள். நோன்பின் மாண்பு பற்றி சொல்லும் அவர்கள், நோன்பைத் தவிர்த்து மற்ற செயல்கள் ஒவ்வொன்றும் பத்திலிருந்து எழுநூறு மடங்கு கூலி பெறும். நோன்பு எனக்காக நோற்கப்படு கிறது. அதற்கு கூலி நானே கொடுப்பேன், என்றும் இறைவன் கூறுவதாக குறிப்பிடுகிறார்கள். ""பொறுமையாளர்கள் கூலி கொடுக்கப் படுவார்கள். அவர்களுக்கு கொடுக்கப்படும் கூலி அளவுடையதாக இருக்காது, என்று அல்லாஹ்வும் கூறுகிறான். ஆம்..அளவற்ற கூலியைப் பெற பொறுமையைக் கடைபிடியுங்கள். இன்றைய நோன்பு கால சிந்தனை இதுவே.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.20