பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
பாலக்காடு: திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், 46 யானைகளுக்கு, யானையூட்டு என,கூறப்படும் உணவு வழங்கும் விழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கேரள மாநிலம், திருச்சூரில் உள்ளது வடக்குநாதர் கோவில். இங்கு ஆடி மாத சிறப்பு பூஜைகளையொட்டி, யானைகளுக்கு உணவும் வழங்கும் யானையூட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடப்பது வழக்கம். நடப்பாண்டிற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் மேல்சாந்தி கொற்றம்பிள்ளி நாராயணன் நம்பூதிரியின் தலைமையில் நடந்த இவ்விழாவில், காலை 5.00 மணிக்கு கோவில் தந்திரி பூலியன்னூர் சங்கர நாராயணனின் நம்பூதிரி தலைமையில் அஷ்திரவிய மகா கணபதி ஹோமம் நடந்தன. ராமாயண மாதமான ஆடியின் துவக்க நாளில் அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம் நடத்துவது மிகச்சிறப்பாகும். இதற்காக, 12 ஆயிரம் தேங்காய், மூவாயிரம் கிலோ வெல்லம், 1500 கிலோ அவல், 350 கிலோ பூக்கள், 200 கிலோ எள்ளு மற்றும் எலுமிச்சை, கரும்பு, 300 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டன. காலை 7.00 மணிக்கு ஐந்து யானைகளுக்கு கஜபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து, காலை 8 .00 மணியளவில் 49 யானைகளுக்கு யானையூட்டு விழா நடந்தது. இதற்காக, 49 யானைகள் தெற்கு கோபுரத்தின் முன்பகுதியில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. 500 கிலோ அரிசியால் செய்த உணவில் மஞ்சள், நெய், வெல்லம் ஆகியவை சேர்ந்து யானைகளுக்கு ஊட்டப்பட்டன.