பதிவு செய்த நாள்
18
ஜூலை
2013
10:07
கோவளம்: கோவளம் கார்மேல் மாதா ஆலயத்தில், 205ம் ஆண்டு தேர் பவனி விழா சிறப்பாக நடைபெற்றது. கோவளத்தில், புகழ் பெற்ற கார்மேல் மாதா ஆலயம் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தேர் பவனி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு, 205வது தேர் பவனி விழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், விசேஷ திருப்பலி, ஆங்கிலம் மற்றும் தமிழில் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, பிரதான விழாவான தேர் பவனி நடந்தது. ஐந்து தனித்தனி தேர்களில் நிக்கல்சமனஸ், அந்தோணியார், சூசையப்பர், இருதய ஆண்டவர் மற்றும் மலர் அலங்காரத்தில் கார்மேல் மாதா ஆகியோர் பவனி வந்தனர். இதில், கிறிஸ்தவர்களும், மத நல்லிணக்க பிரார்த்தனையாளர்களும், மாதாவிற்கு மாலைகள் சாத்தினர். பிரார்த்தனையாக, குழந்தைகளை மாதா மடியில் படுக்க வைத்து எடுத்தனர். பெண்களும், முதியோர்களும் மெழுகுவர்த்தி ஏற்றி, வழி நெடுக நின்று தீப ஒளியுடன் வரவேற்றனர். இரவு, 8:30 மணிக்கு துவங்கிய தேர் பவனி, நேற்று அதிகாலை, ஆலயத்தை வந்தடைந்தது. மாலை, கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெற்றது. செங்கை மறைமாவட்ட ஆலய நீதிநாதன் உட்பட, ஏராளமான மதபோதகர்கள் பங்கேற்றனர்.