பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில், பயங்கரவாதிகள் தாக்குதல் திட்டத்தை முறியடிக்க, 30 லட்ச ரூபாயில், அதிநவீன கண்காணிப்பு கருவி பொருத்தப்பட உள்ளதாக, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு, மேற்கு வாசலில், "மெட்டல் டிடெக் டோர் பிரேம், கேன்ட் டிடெக் கருவி மூலம் பக்தர்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதுதவிர, கோயில் பிரகாரத்தில் 16 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த கோயிலில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கை செய்தது. அதிநவீன கேமிரா, மெட்டல் டிடெக் டோர் பிரேம் வைக்க, போலீசார் அறிவுறுத்தி, நேற்று முதல், பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இதன்படி, கோயிலில் முதல் தீர்த்த கிணறு அருகே, மெட்டல் டிடெக் டோர் பிரேம் அமைத்து, நீராட செல்லும் பக்தர்களை சோதனை செய்த பிறகே, அனுமதிக்கின்றனர். கோயில் இணை கமிஷனர் கூறியதாவது: பாதுகாப்பிற்காக, 30 லட்சம் ரூபாயில் அதிநவீன கண்காணிப்பு கருவி, வாங்கப்பட உள்ளது. கிழக்கு, மேற்கு வாசல், அம்மன் சன்னதி, முதல் தீர்த்த கிணறு பகுதியில் அதிநவீன மெட்டல் டிடெக் டோர் பிரேம் அமைக்க உள்ளோம். செக்யூரிட்டிகளுக்கு கூடுதலாக ஏழு, "கேன்ட் டிடெக் கருவிகள் வழங்கப்படும். கூடுதலாக 16 கேமராக்கள் அமைக்க, இடம் தேர்வு செய்து, சில நாட்களில் பொருத்துவோம், என்றார். ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மோகன்ராஜ் கூறுகையில், ""பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், கடற்கரை பகுதிகள் போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்படும், என்றார்.