பதிவு செய்த நாள்
08
மார்
2011
03:03
இப்படியும் ஒரு கொடியவனா? கேவலம், பெண்ணின்பத்திற்காக உலகையே ஜெயித்து தருவதாகக் கூறுகிறானே? இப்படிப்பட்ட மனநிலையில், சீதாதேவி ஒரு துரும்பை எடுத்து தனக்கும், ராவணனுக்கும் நடுவில் போட்டாள். அவளுக்கு அவனைக் கண்டு நடுக்கம் ஒருபுறம் இருந்தாலும், ராமனுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவள், அவரையே சரணடைந்தவள் என்ற முறையில் அவனது அறிவின்மையைக் கண்டு சற்றே நகைத்து அவனுக்கு பதிலளித்தாள். பெண்ணின்பத்திற்காக அலைந்து திரியும் மனித ஜென்மங்களுக்கு அவளது வார்த்தைகள் பெரும் பாடம்.ஏ ராவணனே! என்னிடத்தில் என்ன உனக்கு ஆசை...ஏன் உன் மீது உயிரையே வைத்திருக்கும் பல மனைவியர் இருக்கின்றனரே! அவர்களிடம் நீ சுகத்தை தேட வேண்டியது தானே! நான் நற்குலத்தில் பிறந்தவள். விதேகராஜர்களின் வம்சத்தை பற்றி நீ அறிவாயா? புகுந்த இடமோ சூரிய வம்சத்தைச் சார்ந்தவர்களின் இல்லம். என் கணவர் சர்வலோகநாதனான ராமமூர்த்தி. அடேய்! என் பிற ஆண்களை கனவில் கூட நினையாதவள், என்று சொல்லித் தொடர்ந்தாள். இந்த இடத்தில் ஸ்ரீராமனும், சீதையும் எந்தளவுக்கு மனமொத்திருந்தனர் என்பதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக காட்டலாம். கோதாவரி நதிக்கரையில் ராமனும், சீதையும் உலவிக் கொண்டிருந்தனர். அப்போது ராமன் திடீரென சிரித்தாராம். சீதைக்கு அவரது சிரிப்பின் காரணம் புரியவில்லை. இக்காலப் பெண்கள் என்றால், ஏன் சிரித்தீர்! யாரை நினைத்து சிரித்தீர்! பைத்தியமா? என்று தங்கள் சந்தேகங்களை வாரி இறைத்து வதைத்து எடுத்து விடுவார்கள்.சீதாதேவி அப்படியில்லையே! கணவர் என்ன செய்தாலும் அவள் எதிர்த்துப் பேசமாட்டாள். அக்காலத்து பெற்றோர் பெண்களை அந்தளவுக்கு அடக்கத்துடன் வளர்த்திருந்தனர். அதே நேரம் அவரது சிரிப்புக்கான காரணம் எப்படியும் தெரிந்தாக வேண்டும் என்ற ஆவலும் உந்தித் தள்ளியது.
சற்றுதூரம் சென்றாயிற்று. இப்போது, சீதாதேவி சிரித்தாள்.ராமபிரான் அவளிடம், ஏன் சீதா சிரித்தாய்? என்றார். அதோ! அந்த யானைக்கூட்டங்கள் செல்கிறதே! அவை உங்கள் நடையழகைக் கண்டு வெட்கப்பட்டு தலை குனிந்து செல்கின்றன. அதைப் பார்த்து சிரித்தேன், என்றாள்.இப்போது தைரியம் வந்து விட்டது. கேள்வி கேட்டாலும் தப்பில்லை என்ற உணர்வுடன், ஆமாம்...சற்று முன் தாங்களும் சிரித்தீர்களே! என்ன காரணம்? என்றாள்.வேறொன்றுமில்லை! உன் முன்னால் சென்றதே அன்னப்பறவை கூட்டம். அவை, உன் நடையழகைக் கண்டு வெட்கத்துடன் தலை குனிந்தன. அதனால் சிரித்தேன், என்றார். ஆக, இருவருமே நடையழகைக் கண்டு தான் சிரித்திருக்கிறார்கள். இதைத்தான் கருத்தொற்றுமை என்பது. தம்பதிகளின் மன ஓட்டம் ஒன்றாக இருக்கும்போது, அங்கே இன்பத்திற்கு குறைவே கிடையாது. சீதாதேவி தொடர்ந்தாள்.ராவணா! ஒருவன் தன் மனைவியிடம் திருப்தியடையாமல், பிற பெண்கள் மீது இச்சை கொள்வான் என்றால், அது தற்காலிக சுகத்தைத் தரலாமே தவிர, அவனது ஆயுளையும், செல்வத்தையும், உடலழகையும், மனைவி, மக்களையும், நீ மன்னன் என்ற முறையில் உன்னையே நம்பி வாழும் சக ராட்சஷர்களையும் அழித்து விடுமே! இதை உணரும் புத்தி உனக்கு இல்லையா? அல்லது உன் நாட்டிலுள்ள சாதுக்கள் உனக்கு புத்தி சொல்ல முன்வரவில்லையா? இங்கே விபீஷணன் போன்ற உயர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லியும் நீ கேட்கவில்லையா? என்றவள் இன்னும் தொடர்ந்தாள். ராவணா! உன்னிடமிருக்கும் செல்வத்தைக் கொண்டு என்னை மயக்கப் பார்க்கிறாயே! நான் அந்த மகாவிஷ்ணுவின் பத்தினியல்லவா? அவர் எங்கே பிறக்கிறாரோ அங்கே மகாலட்சுமியான நானும் பிறக்கிறேன்.
சூரியனை விட்டு எப்படி பிரகாசத்தை பிரிக்க முடியாதோ, அதுபோல், என்னை விட்டு ஸ்ரீராமனைப் பிரிக்க இயலாது. ஆண்யானையை விட்டு பிரிந்து தவிக்கும் பெண் யானையை அதனுடன் சேர்த்து வைப்பது போல், நீயும் ராமனிடம் சென்று அவரை வணங்கி, என்னை அவரிடத்தில் சேர்த்து விடு. நானும், உன் உயிரைப் பறிக்காமல் இருக்க அவரிடத்தில் சிபாரிசு செய்கிறேன். அவர் மகாபுருஷர். தன்னைச் சரணடைந்தவர்களை மன்னிக்கும் சுபாவம் அவரிடம் இருக்கிறது. அதனால், உன் உயிராவது பிழைக்கும், என்றாள்.இப்படி ஒரு பெண் ஏளனமாகப் பேசினால், சாதாரண மனிதனுக்கே கோபம் வரும். ராவணன் அசுரன், சர்வ அதிகாரமும் படைத்தவன். மனிதர்களை தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றவன்...அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வராதா என்ன?ஏ சீதா! இதோ பார்! நான் உன் மீது ஆசை வைத்திருக்கிறேன் என்ற ஒரே காரணத்துக்காகத் தான், நீ இவ்வளவு பேசியும் உன்னை உயிரோடு விட்டு வைத்திருக்கிறேன். உலகத்தில் எந்தப் பொருள் மீது ஒருவனுக்கு பிரியம் ஏற்படுகிறதோ, அந்தப் பொருளால் அவனுக்கு கெடுதியே நேர்ந்தாலும் கூட அதன் மீதான ஆசை அதிகரிக்கத்தான் செய்கிறது. நீ பேசிய ஒவ்வொரு வார்த்தைக்காகவும் உன்னை சித்ரவதை செய்ய என் கைகள் துடிக்கின்றன. உன் புருஷன் ஒரு கபட வேடதாரி. அவனிடம் பிரியம் வைத்திருப்பதாக சொல்கிறாயே! இதற்காக உன்னைக் கொன்றிருக்க வேண்டும். இதோ பார்! எனக்கு இசைய உனக்கு பன்னிரெண்டு மாதம் கெடு வைத்தேன். அதில் பத்து மாதங்கள் ஓடிவிட்டன. இதோ பார்! இன்னும் இரண்டே மாதம், அதற்குள் சம்மதிக்காவிட்டால், உன்னை என் சமையல்காரர்கள் காலை உணவுக்கு கறியாக்கி விடுவார்கள், ஜாக்கிரதை, என மிரட்டினான்.அப்போது தேவ கன்னியரும், கந்தர்வக்கன்னிகளும் சீதையின் முன்பு ரகசியமாகத் தோன்றினர்.