பதிவு செய்த நாள்
08
மார்
2011
03:03
நட்பு என்பது வாழ்வில் மிக முக்கியமான ஒன்று. மகளை ஒருவனுக்கு திருமணம் முடித்துக் கொடுப்பவர், வேலை, குடும்பப் பின்னணி இவையெல்லாம் நன்றாக இருந் தாலும் கூட, மிக முக்கியமாக விசாரிப்பது அவனது நண்பர்களைப் பற்றித்தான். யாருடன் சேர்கிறானோ, அவனைப் பொறுத்தே ஒருவனது குணநலன் அமைகிறது. அதனால், ராமனின் நட்பைப் பற்றி அக்கறையுடன் விசாரித்தாள் சீதா.அடுத்து, அவளே சொன்னாள்.என் ராமனைப் பற்றி எனக்குத் தெரியும். அவரிடம் அவரது அன்னை கவுசல்யா மிகுந்த பற்று வைத்திருந்தார். தந்தை தசரதர் அவரைப் பிரிந்த துக்கத்தில் உயிரையே விட்டார். மற்ற உறவினர்களும் அவர் மீது கொண்ட அன்பிற்கு குறைவில்லை. ஆனாலும், இவர்களையெல்லாம் விட அவர் என் மீதே அதிக பாசம் வைத்திருந்தார், என்கிறாள்.மகனுக்கு திருமணம் முடித்ததும், மருமகளும், மகனும் சந்தோஷமாக இருக்கப் பொறுக்காத மாமியார்கள் இந்த வரிகளை அவசியம் படிக்க வேண்டும். ஒரு பெண் தன் பெற்றவர்களை விட்டுவிட்டு புதிய இடத்துக்கு வருகிறாள். கணவனையே நண்பனாக, உறவினனாக, தாயாக, தந்தையாக ஏற்றுக் கொள்கிறாள். அவனைச் சார்ந்தவர்களை தன் பந்துக்களாக உரிமை கொண்டாடுகிறாள். இப்படி எல்லார் மீதும் பிரியமாக இருக்கும் மருமகள், தன் மகனோடு ஐக்கியமாகி தங்களை குடும்பத்தை விட்டு விரட்டி விடுவாளோ என பயந்தே பல மாமியார்கள் கொடுமைகளை அரங்கேற்றி விடுகிறார்கள். சீதாதேவியே தன் மாமியார், மாமனார், புகுந்த வீட்டு உறவை விட தன் மீது தன் கணவன் பாசம் வைக்க வேண்டும் என்று தானே எதிர்பார்க்கிறாள்! சுந்தரகாண்டத்தை மேலோட்டமாக படிக்காமல் ஆழ்ந்த உள்ளர்த்தத்தோடு படிக்க வேண்டும். அதிலுள்ள கருத்துக்களை சிந்திக்க வேண்டும். அவ்வாறு செய்தால் குடும்ப ஒற்றுமை பலப்படும். என்றும் சிரிப்பும் கும்மாளமுமாக வாழ்க்கை கழியும்.ஆஞ்சநேயர், இப்போது சீதாதேவியின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அம்மா! தங்கள் கணவர் தாங்கள் இருக்குமிடத்தை அறியவில்லை. இனி, நான் போய் சொன்னதும், அவர் வானரப்படைகளுடன் வந்து தங்களை மீட்டுச் செல்வார். அவரால் இந்தக் கடலைத் தாண்டி வர முடியுமா என்ற சந்தேகமே தங்களுக்கு வேண்டாம். அவர் பராக்கிரமசாலி. அவர் நல்ல உணவு வகைகளை சாப்பிடுவதில்லை. பழம், கிழங்கு முதலானவையே அவரது உணவு. காட்டிலே வசிக்கும் பூச்சிகள் அவரைக் கடிக்கும் உணர்வு கூட இல்லாமல் சோகமே வடிவாக இருக்கிறார். தூக்கம் மிகவும் குறைந்து விட்டது. தூங்கினாலும் வாய் சீதா என்றே கூறுகிறது. இதுகேட்ட சீதா மிகவும் வருத்தப்பட்டாள்.ஆஞ்சநேயா! விதி மிகவும் சக்தி வாய்ந்தது. அயோத்திக்கு மன்னனாக வேண்டிய சகல ஐஸ்வர்யங்களும் பொருந்திய ராமனாக இருந்தால் என்ன! அவரது மனைவியான நானாக இருந்தால் என்ன! சாதாரண பிரஜையாக இருந்தால் என்ன! விதிக்கு தப்புபவர் யாரும் கிடையாது. அதையே நாங்கள் இப்போது அனுபவிக்கிறோம், என்றாள்.பாருங்களேன்! ராமனாக பூமிக்கு வந்தவர் சாட்சாத் மகாவிஷ்ணு. அவரைச் சுமந்த ஆதிசேஷன் லட்சுமணன். லட்சுமி தாயாரே சீதா. தெய்வங்களாக இருந்தாலும் கூட, மானிடப் பிறப்பெடுத்து அவஸ்தைப்பட வேண்டும் என்ற விதியிருந்தால் அதை மாற்ற யாராலும் முடியாது என்பது இதன் உட்பொருள். அதனால், நமக்கு கஷ்டம் வரும்போது கலங்கக்கூடாது. அது என்ன செய்து விடும் என்று மோதிப்பார்க்க வேண்டும். கலியுகம் என்றாலும் கூட, இங்கும் கூட ஒரு சில நல்லவர்கள் உண்டு. அவர்கள் ஆஞ்சநேயரைப் போல் நமக்கு துணை வருவார்கள். என்ன நடந்தால் என்ன! ஆண்டவனிடம் பாரத்தைப் போட்டு விட்டு நம் வழியில் போய்க்கொண்டிருக்க வேண்டும்.சீதா தொடர்ந்தாள்.ஆஞ்சநேயா! நீ ராமனிடம் செல். ராவணன் என்னை அவனது மனைவியாக்கிக் கொள்ள ஒரு வருடம் அவகாசம் தந்திருக்கிறான்.
பத்து மாதங்கள் முடிந்து விட்டன. இன்னும் இரண்டு மாதத்திற்குள் என் கணவர் இங்கு வந்து என்னை அழைத்துச் செல்லா விட்டால், நான் உயிரை விடுவேன் என அவரிடம் சொல்லிவிடு. ராவணனின் சகோதரன் விபீஷணன், என்னை விடுவிக்கும்படி அண்ணனுக்கு புத்திமதி சொல்லியிருக்கிறான். அதையும் அவன் லட்சியம் செய்யவில்லை. விபீஷணனின் மனைவி சுரஸை, இந்தத் தகவலை தன் மூத்தமகள் அனலை மூலமாக எனக்கு சொல்லியனுப்பினாள். எனவே, நான் ராவணனால் சிரமப்படப் போவது நிச்சயம். அதற்குள் அவர் வந்து என்னை மீட்டுவிடுவார் என்றே கருதுகிறேன், எனச்சொல்லி கண்ணீர் வடித்தாள். ஆஞ்சநேயரும் மனம் கலங்கி, தாயே! கவலையை விடுங்கள். தங்களை மீட்டுச் செல்ல ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தான் வரவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? என் முதுகில் அமர்ந்து கொண்டால் கணநேரத்தில், நான் தங்களை அவரிடம் கொண்டு சேர்த்து விட மாட்டேனா? என்றார்.இதைக் கேட்டு சீதைக்கு கோபம் வந்துவிட்டது. நீ குரங்கு என்பதையும், உன் குரங்கு புத்தியையும் காட்டிவிட்டாய் அல்லவா? என்னை நீ கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறுவது நகைப்பையே வரவழைக்கிறது. மிகச்சிறியவனான நீ என்னை எப்படி அங்கே கொண்டு சேர்க்க முடியும், என்று கேட்டாள். ஆஞ்சநேயருக்கு அவமானமாகப் போய்விட்டது.என்னை ஒருவர் கூட இப்படி அவமானமாகப் பேசியதும் இல்லை, என் சக்தியை சந்தேகப்பட்டவரும் இல்லை என்று மனதில் நினைத்தபடியே, பொறுமையுடன், தாயே! என்னை நீங்கள் சாதாரண குள்ளக்குரங்கு என்று நினைக்கிறீர்கள். இதோ பாருங்கள்! என்றார். அப்போது அவரது உருவம் வானத்தையும், பூமியையும் அடைத்த வகையில் மிக உயரமானது. ஆஞ்சநேயரின் அந்த விஸ்வரூபம் கண்டு சீதா ஆச்சரியப்பட்ட போது, அன்னையே! உங்களை இந்த இலங்கை மண்ணோடு பெயர்த்துக் கொண்டு செல்லும் ஆற்றல் கூட என்னிடம் உண்டு. என்னை சந்தேகிக்காதீர்கள், என்றார். சீதா உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனாள். அவசரப்பட்டு ஆஞ்சநேயனை திட்டிவிட்டோமே என்று மனதுக்குள் சலித்தாள்.