பதிவு செய்த நாள்
24
ஜூலை
2013
10:07
நாகர்கோவில்: தாழக்குடியில் உள்ள, தமிழ் புலவர் அவ்வையார் கோவிலில், கொழுக்கட்டை படைத்து, பெண்கள் வழிபாடு நடத்தினர். "சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று, முருக பெருமானை திணறடித்த, பெண் புலவர் அவ்வையார். மொழிப் புலமையால் தமிழுக்கு பெருமை சேர்த்த இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடியில், கோவில் அமைக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் வாழ்ந்து, முக்தி அடைந்த அவ்வையாருக்கு, கோவில் கட்டப்பட்டதாக, வரலாறு கூறுகிறது. ஆண்டு முழுவதும், இங்கு பெண்கள் வழிபாடு நடத்தினாலும், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்து, கொழுக்கட்டை அவித்தும், பாயாசம் வைத்தும், அவ்வையாருக்கு படைக்கின்றனர். மாலை வரை இங்கேயே இருந்து, சமைத்து சாப்பிடுகின்றனர்.
ஆரல்வாய் மொழி: ஆடி முதல் செவ்வாயையொட்டி அவ்வையாரம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கோயில் வளாகத்தில், கூழ், கொழுக்கட்டை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அவ்வையாரம்மன் கோயில், குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் இருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் மலையடிவாரத்தில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோயிலுக்கு அருகில், மயிலாடும்குன்றம் பகுதியில், விநாயகர், முருகன், அகஸ்தியர், போன்ற சன்னதிகளும் உள்ளன. ஆடி செவ்வாய்கிழமைகளில் குமரி, நெல்லை போன்ற மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலிருந்தும், ஏராளமான பெண் பக்தர்கள் அவ்வையாரம்மன் கோயிலுக்கு வந்து அம்மனுக்கு பிடித்தமான கொழுக்கட்டை, கூழ் தயார் செய்தும், பொங்கலிட்டும், அதனை அம்மனுக்கு படையல் இட்டும் வழிபடுவர். அதுபோல், நேற்று ஆடி முதல் செவ்வாய் ஆதலால், அவ்வையாரம்மன் கோயிலில் பெண் பக்தர்கள் குவிந்தனர். கொழுக்கட்டை, கூழ், படைத்து வழிபட்டால் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு திருமணம் ஆகும் என்றும், திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும், குடும்பத்தில் உள்ள துன்பங்கள் விலகி நன்மைகள் பெருகும் என நம்பப்படுகிறது.