சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள், காஞ்சி மகாபெரியவரின் பிருந்தாவனத்தில் பூஜை நடந்து கொண்டிருந்தது. அங்கே பிரதட்சிணம் (வலம் வருதல்) செய்ய ஒரு அம்மா தினமும் வருவார். எவ்வளவு தடவை சுற்ற முடியுமோ அத்தனை தடவை சுற்றுவார். ஒருமுறை, அவர் பிருந்தாவனம் முன்பு நின்று அழுது கொண்டிருந்தார். ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டார் பெரியவருக்கு அறுபது ஆண்டுகள் சேவை செய்த சந்திரமவுலி கனபாடிகள். என் பெண்ணுக்கு 18 வயதாகிறது. பள்ளிக்கூடம் போய் வருகிறாள். ஒருநாள் உடல்நலமில்லாமல் போனது. டாக்டரிடம் காட்டி ஸ்கேன் செய்ததில், கர்ப்பப்பையில் ஒரு கட்டி இருந்தது தெரிய வந்தது. பத்து நாட்களுக்குள் ஆபரேஷன் செய்ய சொல்லியுள்ளார். வெளியில் தெரிந்தால் ஊரார் என்ன பேசுவார்களோ! ஆபரேஷன் இல்லாமல், இந்த ஆபத்திலிருந்து என் பெண்ணைக் காப்பாற்றும்படி, வாழும் தெய்வமாய் இருக்கிற பெரியவரிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன், என்றார். இவ்வாறு அவர் சொல்லும்பொழுதே பிருந்தாவனம் மேலிருந்து இரண்டு செம்பருத்தி பூக்கள் விழுந்தன. அதை எடுத்த நான், பெரியவரைத் தியானம் செய்து, இந்த பூக்களை உங்கள் மகளுக்கு சாப்பிடக் கொடுங்கள். பெரியவாள் உத்தரவு கொடுத்துவிட்டார், என்றார் கனபாடிகள். அந்த அம்மையாரும் அதை மகளுக்கு கொடுத்தார். மீண்டும் டாக்டரிடம் காட்டிய போது, ஆபரேஷனுக்கோ, மாத்திரைக்கோ தேவையில்லாமல் கட்டிகள் கரைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு, தன் பெண்ணையும் உடன் அழைத்து வந்து பெரியவரின் பிருந்தாவனத்தில்நன்றியுடன் வணங்கிச் சென்றார்.நம்மிடையே உணர்வாய் கலந்து, வாழும் தெய்வமாக நமக்கு அருள் செய்து கொண்டிருக்கிறார்.