பதிவு செய்த நாள்
26
ஜூலை
2013
10:07
சபரிமலை: சபரிமலையில், புதிய மேல்சாந்தி தேர்வுக்கான விதிமுறைகளை கடுமையாக்கி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, உத்தரவிட்டுள்ளது. விதிகளுக்கு உட்பட்ட விண்ணப்பங்களை, ஆகஸ்ட், 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைப் புறத்தம்மன் கோவிலில், மேல்சாந்தி ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர்வு செய்யப்படுகின்றனர். கார்த்திகை, 1ம் தேதி பதவி ஏற்கும் இவர்கள், அடுத்த மார்கழி இறுதி வரை, அந்த பதவியில் இருப்பர். ஒரு பதவிக்கு, பத்து பேரை, நேர்முகத் தேர்வுக்கு அழைக்கின்றனர். இவர்களில் ஒருவர், ஐப்பசி, 1ம் தேதி, கோவில் வாசலில் குலுக்கல், மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். சபரிமலை மேல்சாந்தி பதவிக்கு, விண்ணப்பிப்பவர்களுக்கான விதிகள், கடுமையாக்கப்பட்டுள்ளன. கேரளாவில் பிறந்து, கேரள கோவில் ஆசாரங்கள் தெரிந்தவர்கள் மட்டுமே, இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்து, முழு நேர தரிசன வசதி கொண்ட கோவிலில், 10 ஆண்டு பூஜை செய்பவர்கள், விண்ணப்பிக்க தகுதி உடையவர். ஏற்கனவே, சபரிமலையில் ஏதாவது ஒரு மேல்சாந்தி பதவியில் இருந்து, ஐந்து ஆண்டு கடந்தவர்கள் இந்த ஆண்டு, விண்ணப்பிக்கலாம். கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள், போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள், தீய பழக்கங்கள் உள்ளவர்கள், நீண்ட நாள் நோய்வாய்பட்டவர்கள், ஊனமுற்றோர், மாரடைப்பு போன்ற பெரிய நோயால் தாக்கப்பட்டவர், தற்போது ஏதாவது நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர், இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியாது என்று, தேவசம் போர்டு அறிவித்துள்ளது.