பதிவு செய்த நாள்
27
ஜூலை
2013
10:07
திருப்பூர்: திருப்பூரில் கோவில் நிலத்தில், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் "சைட் பிரித்து விற்பனை செய்ய முயன்றது, அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. திருப்பூரில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக, நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான நிலம், புதுப்பாளையத்தில் தெய்வாத்தாள் மற்றும் ரங்கசாமி பெயரில் தலா 3 ஏக்கர்; கோவிந்தசாமி மற்றும் கோவிந்தம்மாள் பெயர்களில் தலா 54 சென்ட் மற்றும் மூகாம்பிகா ரியல் எஸ்டேட் பெயரில் 3.56 ஏக்கர் நிலம் ஆகியன இருந்தது தெரியவந்தது. இந்த நிலத்தின் மொத்த மதிப்பு 40 கோடி ரூபாய். ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்கப்பட்டு, நிலத்தை திரும்ப ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மூகாம்பிகா ரியல் எஸ்டேட் நிறுவனம் மட்டும், தங்கள் பெயரில் இருந்த நிலத்தில், சைட் பிரித்து, அடையாளக்கல் நட்டியுள்ளனர். தற்போது, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் அந்த நிலத்தை மீட்டு, அறிவிப்பு பலகை நட்டுள்ளனர். இந்நடவடிக்கைக்கு இருவர் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் விளக்கம் அளித்தபின், தங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என கேட்டுள்ளனர். அதற்கு வழியில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, "சைட் பிரித்து விற்பனை செய்ய முயன்றது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.