காரைக்கால்: காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதர் கோவிலில் விவசாயம் செழிக்க ஏகாதச ருத்ரஜப ஹோமம் நடந்தது. காரைக்காலில் திருத்தெளிச்சேரி என பழங்காலத்தில் அழைக்கப்பட்ட தலத்தெருவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் மழையின்றி பூமி வரண்டு கிடந்ததால், சிவபெருமான் உழவன் வேடத்தில் வந்து நிலத்தை உழுது விதை தெளித்து கரையேறியதாகவும், அப்போது மழை பெய்ய துவங்கி பின் வறுமை நீங்கி மக்கள் செழிப்புடன் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி ஊற்சவம் நடக்கிறது. விதைத்தெளி உற்சவ பெருவிழா இன்று(29ம் தேதி)நடக்கிறது. விழாவையொட்டி நேற்று காலை மகா கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை நடந்தது. பின், ருத்ர கலச பூஜைகள் மற்றும் ருத்ர பாராயணத்துடன் ஹோமம் ஆரம்பமானது. காலை 11.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாராதனையும், ருத்ர கலச அபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு சிவலோகநாதர் பஞ்சமுக அர்ச்சனை நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.