பதிவு செய்த நாள்
29
ஜூலை
2013
10:07
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலுக்கு 2 கோடி ரூபாய் செலவில் தங்கத் தேர் செய்ய, கலெக்டர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக இருப்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். சிறப்பு மிக்க கோவிலில், பழனி, திருச்செந்தூர், புதுச்சேரி மணக்குளவிநாயகர் கோவில்களில் உள்ளதுபோன்று, தங்கத் தேர் செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, பக்தர்கள் காணிக்கை மூலம், 2 கோடி ரூபாய் செலவில் தங்கத் தேர் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கு முதல்வர் ரங்கசாமி அனுமதி அளித்தார். மேலும், இதற்காக கமிட்டி அமைத்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். கோவிலின் தனி அதிகாரியான மாவட்ட கலெக்டர் தலைவராகவும், கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி உறுப்பினர் செயலராகவும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள், வருவாய்த்துறை தாசில்தார், கணக்கு கருவூல இணை இயக்குநர் ஆகியோர் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இக்கமிட்டி, தேர் செய்ய தேவையான மரம், செப்புத் தகடு, தங்கம், தேர் வடிவமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும். வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர், பர்மா தேக்கு மரங்களை தர தயாராக உள்ளார். அதேபோல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று தேருக்கான செப்பு தகடுகள் வழங்கவும் முன்வந்துள்ளது. தேருக்கான 12 கிலோ தங்கம் தற்போது பக்தர்கள் வழங்கிய காணிக்கையாக கோவிலில் உள்ளது. எனவே, விரைவில் தேர் செய்யும் பணி துவங்கப்பட உள்ளது.
15 லட்சம் செலவில் தேக்கு கதவுகள்: காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவில் ராஜகோபுரத்திற்கு, 7 ஆண்டுகளுக்கு பின் 15 லட்சம் ரூபாய் செலவில் தேக்கு மரத்தால் கதவுகள் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குவதால், இக்கோவிலுக்கு நாட்டின் பல பகுதியில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலை புனரமைத்து, ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டும், அதில் கதவுகள் அமைக்கப்படவில்லை. கோவில் நிர்வாகம் சார்பில் ராஜகோபுரத்திற்கு கதவுகள் செய்ய நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி முயற்சி எடுத்தார். அதையெடுத்து. ராஜகோபுரத்திற்கு 23 அடி உயரமும், 11.5 அடி அகலம் கொண்ட கதவுகள் தயார் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நன்கொடை மூலம் 15 லட்சம் ரூபாய் செலவில் முழுவதும் பர்மா தேக்கு மரத்தால் தயாராகும் இந்த கதவுகளை பாபாநாசம் ஸ்தபதி சாட்சிநாதன் குழுவினர் செய்து வருகின்றனர். கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 7 ஆண்டுகள் முடிந்த நிலையில், ராஜகோபுரத்திற்கு கதவு தயார் செய்யப்படுவது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கதவுகள் தயார் செய்யப்பட்டு வெகு விரைவில் ராஜகோபுரத்தில் பொருத்தப்பட உள்ளது. கதவுகள் தயார் செய்யும் பணியை கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீராசாமி ஆய்வு செய்தார்.