பதிவு செய்த நாள்
30
ஜூலை
2013
10:07
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா, நேற்று ஆடி அஸ்வினியுடன் விழா துவங்கியது. முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்திருந்து முருகப் பெருமானை வழிபட்டனர்.
சிறப்பு பூஜைகள்: திருத்தணி முருகன் கோவிலில் முக்கிய திருவிழாவான ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று அஸ்வினி நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, மூலவர் முருகப் பெருமானுக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பச்சை மாணிக்க மரகத கல், தங்க கீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில், வள்ளி, தெய்வானை, துர்க்கை, உற்சவர், சண்முகர் மற்றும் ஆபத்சகாய விநாயகர் ஆகிய சன்னிதிகளிலும் சிறப்பு பூஜை நடந்தது. இந்த விழாவில்,
தமிழகம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டனர். சில, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மொட்டை அடித்து, சரணவ பொய்கையில் புனித நீராடி, பக்தி பாடல்கள் பாடியவாறு மலைப் படிகள் வழியாக நடந்து சென்று மூலவரை வழிபட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு: பக்தர்கள் நெரிசல் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு, தனி வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விரைவு தரிசனம் செய்வதற்கு வசதியாக, சிறப்பு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) திருமகள் மற்றும் கோவில் ஊழியர் செய்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.