காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் பின்புறமுள்ள கொல்லாசத்திரம் எதிர் வீட்டில், ஆயுர்வேத வைத்தியர் வெங்கட சுப்ரமண்யசாஸ்திரிகள் என்பவர் இருந்தார். தஞ்சை சரஸ்வதிமகால் நூலகத்தில் தலைமைப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற அவர், காஞ்சிப்பெரியவருக்கு சேவை செய்துகொண்டிருந்தார். ஒருநாள், அவரது வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார் காஞ்சி மகாபெரியவர். அப்படியே ஜபம் செய்ய துவங்கி விட்டார். அப்போது கணவருடன் வந்த ஒரு பெண் அழுதபடியே நின்றார். பெரியவர் ஜபம் முடித்து கண் விழித்ததும், அழுகைக்கான காரணம் கேட்டார். க்ஷயரோகத்தால் (டி.பி.) சிரமப்படும் இவரைக் குணப்படுத்துவது கடினம் என டாக்டர் சொல்லி விட்டார், என தெரிவித்தார். வீட்டுக்குள் இருந்த வைத்தியரை பெரியவர் அழைத்து விஷயத்தைக் கூறினார். வாஸாரிஷ்டம் சாப்பிட்டால் நோய் குணமாகும் என வைத்தியர் தெரிவித்தார். அப்போது பெரியவர் அவரிடம், வாஸாரிஷ்டத்திற்குரிய ஸ்லோகம் ஞாபகம் இருக்கா? என்று கேட்டார். அவரோ யோசித்தபடி நின்றார். அப்போது பெரியவர், அந்த ஸ்லோகம் இதுதானே என்றபடி, வாஸாயாம் வித்யமானாயாம் ஆசாயாம் ஜீவிதஸ்யச! ரக்தபித்தீ க்ஷயீகாசீ கிமர்த்தம் அவசீதஸி!! என்றார். மேலும், ஆடுதொடா (ஆடாதொடை) இலை மருந்து இருக்கும்போது, ரத்தத்தில் பித்தம், க்ஷயரோகம், காசநோயால் எதற்காக சிரமப்பட வேண்டும் என்ற விளக்கத்தையும் அளித்தார். இதைக் கேட்ட பிறகு தான், வைத்தி யருக்கே அந்த ஸ்லோகம் நினைவுக்கு வந்தது. ஆடாதொடை இலை கஷாயத்தை அந்த பெண்ணிடம் கொடுத்தார் வைத்தியர். காஞ்சிப்பெரியவர் ஆசியளித்து அனுப்பினார். ஆறுமாதம் தொடர்ந்து கசாயத்தை சாப்பிட கணவரின் நோய் குணமானது. மீண்டும், ஒருநாள் வந்த அத்தம்பதி மகாபெரியவருக்கும், வைத்தியருக்கும் தங்களின் நன்றியைத் தெரிவித்து ஆசி பெற்றனர்.