பதிவு செய்த நாள்
01
ஆக
2013
10:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவி பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நடந்த விழாவில், பக்தர் ஒருவர் அந்தரத்தில் குழந்தையுடன் சென்று முருகரை வழிபட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று முருகர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவி, பர்கூர், பேறுஅள்ளி, சந்தூர், போச்சம்பள்ளி, மருதேரி, சுண்டகாப்பட்டி, பண்ணந்தூர், தேவிரஅள்ளி, எட்டரப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளி, கமலாபுரம் ஆகிய இடங்களில் உள்ள முருகர் கோவில்களில் சிறப்ப அபிஷேகம், பூஜைகள் நடந்தது.இக்கோவில்களில் காலை முதல் பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திகடனை செலுத்தினர் பர்கூரை அடுத்த ஜெகதேவி பாலமுருகன் கோவிலின், 68வது ஆண்டு ஆடி கிருத்திகை விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை படிபூஜை, வாஸ்து பூஜை கொடியேற்றுதல் நடந்தது.நேற்று காலை யாகசாலை பூஜை, பால முருகனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து காலை, 11 மணிக்கு இடும்பன் ஸ்வாமிக்கு பூஜை முடிந்து வேல் போட்டுக்கொள்ளுதல், சடல் தேர், கல் உரல், இரும்பு சங்கிலி ஆகியவற்றை நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் முதுகில் குத்திக்கொண்டு பிராத்தனை செலுத்தினர்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் பலர், 500 அடி நீளமுள்ள அலகு குத்திக்கொண்டும், எலுமிச்சம் பழங்களை உடலில் கோர்த்துக்கொண்டும், 300 அடி நீளமுள்ள வேல் குத்திக்கொண்டும், கார் இழுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.ஜெகதேவியை சேர்ந்த பக்தர் முருகன், 48 என்பவர் தனது மார்பு மீது குந்தாணி வைத்து ஐந்து கிலோ எடையுள்ள மஞ்சளை உலக்கையால் இடித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து முருகன், 40 அடி உயரமுள்ள ஊஞ்சலில் அலகு குத்தியபடி பறந்து சென்று ஸ்வாமிக்கு மாலை அணிவித்து தீபாரதனை செய்தார்.இந்த நிகழ்ச்சியை ஜெகதேவி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பக்தி பரவசமடைந்தனர். விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.