பதிவு செய்த நாள்
06
ஆக
2013
11:08
கோவை:கோவை கோனியம்மனுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூரிலுள்ள ராஜகோபுரத்தை போல பிரமாண்டமான ராஜகோபுரம் அமைக்கவேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாளைய வேண்டுகோள். பல ஆண்டுகளுக்கு பின், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 2007 அக்., 17ல் கோனியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மண் ஆய்வு உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடந்தன."ஐந்து நிலைகளில், கோபுரம் அமைத்தால் போதும் என்று அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகமும் முடிவு செய்தது. அதன் பின், "ஏழு நிலைகளில் கோபுரம் அமைக்க வேண்டும் என, பேரூராதீனம் சாந்தலிங்கராமசாமி அடிகள் வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில், ஏழுநிலை ராஜகோபுரமாக மாற்றப்பட்டது. அதே போல், ஒன்பது கோபுர கலசங்கள் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர். அதன்படி ஐந்து வரிசைகளில், கோபுர கலசங்களுக்கு பதிலாக ஒன்பது வரிசைகளில் கோபுர கலசங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.நவீன முறையில், தரைப்பகுதியிலிருந்து 11 அடிக்கு ஆழத்தில், கான்கிரீட் அஸ்திவாரம் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 14 வரிகளுக்கு கல்காரத் திருப்பணிகள் நடந்தது. அதன் பின், ஏழு நிலைகளில் செங்கற்களால் சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. இதில் 90 சதவீத சுதை வேலைகள் நிறைவடைந்துள்ளன. கல்காரத்திருப்பணிகள் 27 அடிக்கும், சுதை வேலைப்பாடுகள் 66 அடி உயரத்துக்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரை மட்டத்திலிருந்து 93 அடி உயரத்துக்கு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் வலது ஓரத்தில், பக்தர்கள் உள்ளே சென்று வருவதற்கு கான்கிரீட் தூண்களால் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்பகுதியில், பிரபாவளி அமைத்து, அம்மனின் சுதை சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இனியும் 10 சதவீத பணிகள் மட்டும் மீதமுள்ளன.இதுவரை, ராஜகோபுரத்துக்காக, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு திருப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் கோவில் நிதியிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யப்படவில்லை. அனைத்துப்பணிகளும் பக்தர்கள் உபயமாக கொடுத்த தொகையிலிருந்தே செலவு செய்யப்பட்டுள்ளது.விரைவில், ராஜகோபுரப்பணிகள் நிறைவடையும்; அதன் பின், மகா கும்பாபிஷேக விழா நடைபெறும். கோனியம்மன் கோவில் ராஜகோபுரம் கோவையின் அடையாள சின்னமாக மாறும் என எதிர்பார்க்கலாம்.