அபிராமிஅம்மன் கோயில் சன்னதி கிழக்கு திசையில் அமைக்க முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2013 11:08
திண்டுக்கல் : புதிதாக நிர்மாணிக்கப்படும் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலின் சன்னதியை கிழக்கு திசையில் அமைக்க திருப்பணிக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்கான கட்டுமான பணி இன்று துவங்குகிறது. அபிராமி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பணி ரூ. 20 கோடி மதிப்பில் நடந்துவருகிறது. அஸ்திவாரத்திற்கான பணி ஏழாயிரம் சதுர அடியில் மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் நிறைவடைந்தது.காளஹத்தீஸ்வரர், ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரர், அபிராமி என்று நான்கு சன்னதிகளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்த வடிவமைப்பு வேறு எந்த கோயில்களிலும் இல்லை என்பதால், கலை நுணுக்கத்துடன் சன்னதிகளை அமைக்க திருப்பணிக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.தெற்கு திசையை நேராக பார்த்தவாறு 200 ஆண்டுகளாக காட்சியளித்து கொண்டிருந்த அபிராமி அம்மன், புதிய சன்னதியில் கிழக்கு திசை நோக்கி அமரும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. திருப்பணிக்குழுவினர் கூறியதாவது: மலைக்கோட்டையின் உச்சியில் உள்ள கோயிலில் அபிராமி அம்மன், கிழக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அதன் பின்னர் அப்போதைய மன்னர் திப்பு சுல்தானால் கீழ்பகுதியில் உள்ள கோயிலுக்கு கொண்டு வரப்பட்டபோது, தெற்கு திசையை பார்த்தவாறு அமரவைக்கப்பட்டார். புதிய சன்னதியில் அவரது முந்தைய நிலையை பிரதிபலிக்கும் வகையில் மீண்டும் கிழக்கு திசையில் பிரதிஷ்டை செய்யப்படுவார், என்றனர். புதிய சன்னதிகளுக்கான கட்டடப்பணி இன்று காலை சிறப்பு வழிபாடு மற்றும் பூஜையுடன் துவங்க உள்ளது.