பதிவு செய்த நாள்
06
ஆக
2013
11:08
ஆர்.கே.பேட்டை:பன்னீர், துளசி மாலை மற்றும் சந்தனக்காப்புடன் சுந்தரராஜ பெருமாளுக்கு, திருமஞ்சனம் நேற்று நடந்தது.ஆர்.கே.பேட்டை பகுதியில் உள்ள, சுந்தரராஜ பெருமாள் கோவிலில் தான் வியாச முனிவருக்கு, அவருடைய ஆசிரமத்தில் சுந்தரராஜ பெருமாள் அருள்பாலித்தார். மேலும், அகல்யாவிற்கு சாப விமோசனம் அளித்த சிறப்பும் உண்டு. பல ஆண்டுகளாக பராமரிக்காமல் இருந்த, இக்கோவில், திருப்பதி தேவஸ்தானத்தின் பங்களிப்புடன், கடந்த 1987ல் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், மார்கழி வழிபாடு மற்றும் ஆடி பவித்ரோற்சவம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பவித்ரோற்சவம் மேதினி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 9:00 மணிக்கு, உற்சவர் சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து, பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் உற்சவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், சந்தனக் காப்புடன் துளசி மாலை அணிவித்தும் திருமஞ்சனம் நடந்தது. இதில், சுற்றியுள்ள வைணவ கோவில்கள் சேர்ந்த வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு, மந்திரங்களை ஓதினர். மாலை, 6:00 மணிக்கு உற்சவர் கோவில் வளாகத்தில் எழுந்தருளினார். நாளை ஸ்தாபன திருமஞ்சனமும், அக்ஷாதாரோபணமும் நடக்கிறது. இரவு ஏகாந்த சேவையுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.