பதிவு செய்த நாள்
06
ஆக
2013
11:08
ஈரோடு: காவிரி வெள்ள பெருக்கால், நட்டாற்றீஸ்வரர் கோவிலில் மூன்று கால பூஜை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், காங்கேயம்பாளையத்தில், காவிரி ஆற்றின் நடுவில், நட்டாற்றீஸ்வரர் கோவில் உள்ளது. மறுகரையில், நாமக்கல் மாவட்டம் பட்லூர் உள்ளது. இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிறப்பு, ஆடிப்பெருக்கு, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் அதிகப்படியான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். குறிப்பாக சித்திரை முதல் நாளன்று, மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து, ஒரு லட்சம் பேர் கோவிலுக்கு வருவது வழக்கமாகும். இரு கரையில் இருந்தும், பரிசல் சவாரி மூலம் பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மேட்டூர் அணையிலிருந்து காவிரியில், 1.22 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நட்டாற்றீஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்தால் பரிசல் சவாரி இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டது. இதனால், கோவிலில் மூன்று கால பூஜை செய்வதிலும், தரிசனத்துக்கு பக்தர்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கோவில் குருக்கள் சண்முகசுந்தரம் கூறியதாவது: ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால், பரிசல் சவாரியை நிறுத்திவிட்டனர். அதையும் மீறி நேற்று கலை பரிசலில் கோவிலுக்கு சென்று, 15 நிமிட இடைவெளியில், மூன்று காலை பூஜையை செய்துவிட்டு உடனே திரும்பிவிட்டோம். தண்ணீரின் இழுவை அதிகமாக உள்ளதால், பரிசலில் செல்ல சிரமாக உள்ளது, என்றார். பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கூறியதாவது: ஆற்றில் தண்ணீர் வரும் காலத்தில் கோவிலுக்கு செல்ல ஏதுவாக, பாலம் கட்டுவதற்கு, கடந்த தி.மு.க., ஆட்சியில், 1.86 கோடி ரூபாய் நீதி ஒதுக்கப்பட்டது. பாலம் பணிக்கு நிதி ஒதுக்கீடு போதாது எனக்கூறி பணியை கான்ராக்டர் கைவிட்டதால், மறு டெண்டர் கோரிய நிலையில் திட்டத்தை கிடப்பில் போட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தொகுதி எம்.எல்.ஏ., கிட்டுசாமி, கோவிலுக்கு வந்தபோது, பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இன்று வரையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த ஆடிப்பெருக்கு அன்று பரிசலில் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வந்தனர். இந்தாண்டு கோவிலுக்கு செல்ல முடியாமல் உள்ளது, என்றனர்.