பதிவு செய்த நாள்
06
ஆக
2013
12:08
இந்து சமய அறநிலையத் துறையில், 1959ல் இருந்து, 2010 ஜூலை 1ம் தேதி வரை, 262.42 கோடி ரூபாய், வசூலிக்கப்படாமல் உள்ளது என, மொத்த தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையை சிறப்பு தணிக்கை சீராய்வின் போது, சரி செய்யாவிட்டால், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் அறிவித்து பல மாதங்களாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இழப்பு ஏற்படும் அளவுக்கு, மெத்தனமாகச் செயல்பட்ட அதிகாரிகளில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். மீதமுள்ள அதிகாரிகள் மீதாவது, உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனில், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. வருமானம் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இவற்றில், 34,336 கோவில்கள், ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கும், குறைவான வருமானம் உடையவை. ஆண்டு வருமானம், 10 ஆயிரத்திலிருந்து 2 லட்சம் ரூபாய் வரை உள்ள கோவில்கள், 3,402; ஆண்டு வருமானம், 2 லட்சத்தில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வரை உள்ள கோவில்கள், 557; ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள கோவில்கள், 234.இக்கோவில்களை நிர்வகிக்கும், அதிகாரிகளின் செயல்பாட்டைதணிக்கை செய்ய, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ், த லமை தணிக்கை அதிகாரி, உதவி தணிக்கை அதிகாரி, தணிக்கை அலுவலர்கள் பணிபுரிகின்றனர். தணிக்கை ஆண்டுதோறும், தமிழகத்தில் உள்ள, அனைத்து கோவில்களிலும் தணிக்கை செய்து, அந்த அறிக்கையை, அந்தந்த மண்டல தணிக்கை அதிகாரி சரிபார்த்து, கையெழுத்து போட்ட பிறகு, ஆணையருக்கும், மண்டல இணை ஆணையருக்கும் அனுப்பி வைப்பர். குறிப்பிட்ட தணிக்கை அறிக்கை கிடைத்த, ஆறு மாதத்துக்குள், தணிக்கையாளர்கள், தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இழப்புகளுக்கு தீர்வு காண வேண்டும் என, வணிக வரி மற்றும் அறநிலையத் துறை அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைய துறையில், 1959 ஆண்டு முதல், 2010 ஜூலை 1 வரை, அதிகாரிகளின் கவனக்குறைவால், 262.42 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டது என, மொத்த தணிக்கை அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது. நிலுவை இது தொடர்பாக, 2012, நவம்பர், 20ல், இணை ஆணையர்களுக்கு, ஆணையர் தனபால் எழுதிய கடிதத்தில், "2012, செப்டம்பர் வரை, 7,46,586 தணிக்கை தடைகள், தீர்வு செய்யப்படாமல், நிலுவையில் உள்ளன. இத்தடைகளால், 262 கோடியே, 42 லட்சத்து, 51 ஆயிரம் ரூபாய் நிலுவையில் உள்ளது என, குறிப்பிட்டுள்ளார். "சிறப்பு சீராய்வின்போது, இழப்பீட்டில் குறைந்தது, 33 சதவீதம் தீர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதில் சுணக்கம் ஏற்பட்டால், தொடர்புடைய அலுவலர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இதுவரை யார் மீதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது மட்டுமின்றி, 2010, ஜூலையில், தணிக்கை அறிக்கையில் நிலுவை தொகை குறிப்பிடப்பட்ட போதும், இப்பிரச்னை குறித்து, 2012 செப்டம்பரில் தான், அறநிலையத் துறை ஆணையர், கடிதம் எழுதியுள்ளார். தணிக்கை தடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அனைத்து இணை ஆணையர்களுக்கும், தடைகளை நீக்க உத்தரவிட்டதற்கு முன்னரே, 80 சதவீதத்துக்கான, அதிகாரிகள் ஓய்வு பெற்றனர்; சில அதிகாரிகள் மரணமடைந்தனர். இவற்றில், 20 சதவீத அதிகாரிகள் மட்டுமே, தற்போது பணியில் உள்ளனர். இழப்பு கடந்த, 2005 ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, "அரசுத் துறையில் ஓய்வு பெற்ற நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என, குறிப்பிடப்பட்டுள்ளது. தணிக்கையில் குறிப்பிடப்பட்ட தடைகள் ஏற்படுத்திய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கலாமெனில், பலர் இந்த அரசாணையின்படி, தப்பித்துக் கொள்வர். அது மட்டுமின்றி, அரசின் சார்பில் வழங்கப் படும், சலுகைகளை அனுபவித்தபடி இருப்பர். இதே நிலைமை நீடிக்குமானால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. எனவே, இனிமேலாவது, அறநிலையத் துறை, இப்பிரச்னையில் மெத்தனமாக இருக்காமல், மீதமுள்ள அதிகாரிகள் ஓய்வு பெறுவதற்குள், இழப்பீட்டை சரி செய்ய வேண்டும்.தவறுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள, அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன், இப்பிரச்னையில் சாட்டையை சுழற்ற வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கை.