பதிவு செய்த நாள்
06
ஆக
2013
12:08
தமிழகத்தில், தரிசன கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரிய வழக்கில், அவ்வாறு வசூலிக்கும் 199 கோயில்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. சிவகங்கை, கண்டனூர் வக்கீல் அருண் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் பழமையான 33 ஆயிரம் கோயில்கள் உள்ளன. கட்டணம் செலுத்துபவர்களை சுவாமி சிலை அருகில் நின்று, வழிபட அனுமதிக்கின்றனர். மற்றவர்களை தூரத்தில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். கோயில்களை ஏ, பி,சி என அறநிலையத்துறை வகைப்படுத்தி உள்ளது. "ஏ பிரிவு கோயில்களுக்குச் சொந்தமாக காலி இடம், தரிசு நிலம், கட்டடங்கள், கடைகள், விடுதிகள், கோயில்களில் 51 தங்க ரதங்கள், 38 வெள்ளி ரதங்கள், மரத்தில் செய்யப்பட்ட 989 ரதங்கள் உள்ளன.கோயில்களை புனரமைக்க, நன்கொடைகள் உட்பட பல்வேறு வகைககளில், வருமானம் வருகிறது. "தங்க அட்டை திட்டம் மூலம் 5 லட்சம் ரூபாய் செலுத்தினால், 20 ஆண்டுகள் தரிசனம் செய்யலாம். அனைத்து கோயில்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு, 10 முதல் 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். திருவிழா காலங்களில், கூடுதலாக வசூலிக்கின்றனர். அர்ச்சனை, அபிஷேகம், தேர் இழுக்க 100 முதல் 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கின்றனர். தரிசனக் கட்டணம் வசூலிக்கும் முறையை, ரத்து செய்ய உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன்: தமிழகத்தில் 36 ஆயிரத்து 546 கோயில்கள், அறநிலையத்துறை கண்காணிப்பில் உள்ளன. 235 கோயில்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. 199 கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோயில்களில், ஒரு கால பூஜை நடக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், மின் கட்டணம் செலுத்துதல், இதர செலவுகளுக்கு வருவாயை பெருக்க வேண்டியுள்ளது. சிலர் வந்ததும், உடனே செல்ல வேண்டும் என்கின்றனர். அவர்களிடம் சேவை கட்டணம் வசூலிக்கப் படுகிறது, என்றார். நீதிபதிகள், "199 கோயில்களையும் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ள வேண்டும். விசாரணை ஆக.,13 க்கு தள்ளி வைக்கப்படு கிறது, என்றனர்.