ஆடி அமாவாசை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2013 11:08
கன்னியாகுமரி:ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நேற்று லட்சகணக்கனோர் புனித நீராடி பலிகர்ம பூஜை நடத்தி வழிபட்டனர். இறந்த தங்களது முன்னோர்களின் நினைவாக ஆடி அமாவாசை, மற்றும் தை அமாவாசை போன்ற புனித நாட்களில் ஆறு. நதி, கடல் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி, பலி தர்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டால் அவர்களின் ஆன்மா சாந்தியடைவதோடு, முன்னோர்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை தினமான நேற்று கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் இருந்தே குவிந்த லட்சகணக்கானோர் புனித நீராடினர். பின்னர் 16 கால் மண்டப கடற்கரை பகுதிகளில் அமர்ந்திருக்கும் வேத விற்பணர்களிடம், முன்னோர்களின் நினைவாக எள், அரிசி, பூ போன்றவைகளால் தர்பணம் செய்து அவற்றை வாழை இலையில் வைத்து தலையில் சுமந்தபடி கடலின் கிழக்கு திசைநோக்கி நின்று புனித நீராடி தர்பணம் செய்தனர். பின்னர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு சென்று அம்பாளை வழிபட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு பகவதியம்மன் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு கோயிலில் வழக்கமாக நடைபெறும் விஸ்வரூபதரிசனம், நிர்மால்யபூஜை, அபிஷேகம், தீபாராதனை, நைவேத்ய பூஜை, உஷபூஜை உள்ளிட்டு பூஜைகளை முடித்து 5 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை ஆகியவை நடந்தது. இரவு 8.30 மணிக்கு வெள்ளிகலைமான்வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 11 மணிக்கு முக்கடலில் அம்மனுக்கு ஆராட்டும் நடந்தது. பின்னர் கோயில் கிழக்கு வாசல் நடைதிறக்கப்பட்டு அம்மன் கோயில் பிரவேசம் செய்தார். காலைபதம் பார்த்த கற்கள்: முக்கடல் சங்கமத்தில் புனித நீராட அதிகாலையில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதியில் உள்ள கற்கள் அகற்றப்படாததோடு பாசிபிடித்து காணப்படுவதால் ஏராளமான பக்தர்கள் பாறையில் வழுக்கி கீழே விழுந்தனர். மேலும் கடலில் உள்ள கூர்மையான கற்கள் கலை பதம் பார்த்ததால் பலர் ரத்தகாயங்களுடன் சென்றனர்.