பதிவு செய்த நாள்
07
ஆக
2013
11:08
ஓசூர்: கெலமங்கலம் கிராம தேவதை பட்டாளம்மன் கோவில் ஆடி அமாவாசை பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். ஆடி அமாவாசையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், நேர்த்தி கடன் பூஜைகள் விமர்ச்சையாக நடந்தது. சுற்றுவட்டார ஒன்பது கிராம ஆண், பெண் பக்தர்கள் விரதம் இருந்து தீச்செட்டி, கஞ்சி செட்டி ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கிராம தேவதையை வழிப்பட்டனர். மேலும், அலகு குத்தி, அந்தரத்தில் விமானத்தில் பறந்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். விழாவையொட்டி காவடியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தன்னார்வ அமைப்பினர் சார்பில், நீர் மோர் பந்தல், அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் கமிட்டி தலைவர் சென்ன பசப்பா, முன்னாள் தர்மகர்த்தா ராஜேந்திரன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடாஜலபதி, டவுன் பஞ்சாயத்து தலைவர் செய்யத் அசேன், மஞ்சுநாத், அ.தி.மு.க., நகர செயலாளர் திம்மராயப்பா, கோவில் கமிட்டி உறுப்பினர் சிவபிரகாஷ், செந்தில்குமார், ராஜப்பா மற்றும் பலர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கெலமங்கலம் இன்ஸ்பெக்டர் (பொ) பாஸ்கர், எஸ்.ஐ., கண்ணன், மற்றும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.