பதிவு செய்த நாள்
09
ஆக
2013
10:08
பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில், 4 கோடி ரூபாயில் ராஜகோபுரம் மற்றும் பிரகாரம் அமைத்தல் உட்பட திருப்பணிகள் நடந்து வருகிறது. அதே நேரத்தில் கூடுதலாக யானை வாங்கவும் அறநிலையத்துறை முன் வரவேண்டும். தேனி மாவட்டத்தில், அதிகளவில் கோயில் நிலங்கள் உள்ள கோயில்களில், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலும் ஒன்று. பலநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயில். இங்கு முருகன், வள்ளி, தெய்வானையுடனும் மற்றும் பல அவாதரங்களில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சூரியபகவான், சந்திரபகவான், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, பைரவர் உள்ளிட்ட ஏராளமான தெய்வங்கள் உள்ளன. உத்திரப்பிரதேச மாநிலம் காசிக்கு அடுத்தாற்போல், இங்கு ஆற்றின் இரு புறங்களிலும் ஆண் மருதமரம் மற்றும் பெண்மருத மரம் இணைந்திருப்பது அபூர்வம். பங்குனி உத்திர விழா, பிரதோஷ வழிபாடு உள்பட பல விழாக்கள் நடக்கும். முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடந்து வருகின்றன. தற்போது, ராஜகோபுரம் கட்டுவதற்கும் மற்றும் கோயிலில் திருப்பணிக்கும் 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இந்து அறநிலையத்துறை நிர்வாகம் கட்டுமானப்பணிகளை செய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட எந்த கோயிலிலும் யானை இல்லை. பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பகுதியில் திருப்பணியுடன் யானை வாங்குவதற்கு அறநிலையத்துறை நிர்வாகம் முன் வரவேண்டும். யானை கட்டுவதற்கும், அதற்கு தேவைப்படும் உணவுப்பொருட்களான கரும்பு, நெல் உள்ளிட்ட பொருட்கள் கோயில் நிலங்களில் பெறலாம். தேர்த்திருவிழா மற்றும் கோயில் விழாக்களில், யானை புறப்பாடு இருந்தால் விசேஷமாக இருக்கும், என பக்தர்கள் கருதுகின்றனர்