பதிவு செய்த நாள்
10
ஆக
2013
11:08
வன்னி இலை கொண்டு தினந்தோறும் விநாயகரை அர்ச்சனை செய்தால் பிறவி தோறும் சேரும் பாவச் சுமைகள் குறையுமாம். புருசுண்டி என்ற முனிவரின் சாபத்தால் மந்தாரன் என்பவனும், அவன் மனைவி சமியும் முறையே மந்தாரையாகவும், வன்னியாகவும் மாறிவிட்டார்களாம். வடமொழியில் வன்னி மரத்துக்கு சமி என்று பெயர்.
முன்வினைப்பயனாக இவ்வாறு நேர்ந்துவிட்டதால் விநாயகப் பெருமானிடம் வேண்டியும் சாபம் நீங்கவில்லை. எனவே விநாயகர் மந்தாரைப் பூவையையும், வன்னி இலையையும் தனக்குரிய அர்ச்சனைப் பொருட்களாக அரவணைத்துக் கொண்டு விட்டார் ! இவ்விரண்டாலும் என்னைப் பூஜிப்பவர்கள் சகல பீடைகளும் விலகி எல்லாப் பேறுகளும் பெறுவார்கள் என்று விநாயகரே கூறியதாகக் குறிப்பிடுகிறது விநாயகர் புராணம்.
விஷக் கடிகளால் சருமத்தில் ஏற்படும் புண்களையும், நிறபேதங்களையும் வன்னி மரக்காற்று குணப்படுத்தி விடுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அலர்ஜி, விஷக்கடி முதலான உபாதைகளை நீக்க வன்னிமரத்தின் இலை, காய், பட்டை ஆகியவற்றை உலர்த்தி இடித்துத் தூள் செய்து, தேனோடு கலந்து கொடுக்க வேண்டும் என்கிறது நமது சித்த மருத்துவம். வன்னி இலையை பச்சையாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து இரண்டு வேளை உண்ண சரும நோய்கள் கூட நீங்கிவிடுகிறது.