தர்மபுரி: தர்மபுரியில் நடந்த திருமலா திருப்பதி தேவஸ்தான ஊஞ்சல் உற்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி டான் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் திருமலா திருப்பதி தேவஸ்தானம், மதுரை அகில பாரத ஹரிதாஸ சாகித்ய பிரச்சார சமிதி, தர்மபுரி ஸ்ரீ மாருதி சேவா சமதி சார்பில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் ஊஞ்சல் உற்வசம் நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை, 5.30 மணிக்கு சுப்ரபாத சேவாவும், காலை, 7.30 மணிக்கு திருஞ்சமன சேவாவும், 9.30 மணிக்கு தோமாள சேவாவும் நடந்தது. இதில் திருமலையிலிருந்து வந்த பட்டாச்சாரியர்கள் உற்சவ மூர்த்திக்கு திருமலையில் நடக்கும் வைதீக முறையில் பல்வேறு சிறப்பு அபிஷேகங்களை நடத்தினர். தொடர்ந்து ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 5.30 மணிக்கு ஊஞ்சல் சேவா நிகழ்ச்சியில் ஸ்வாமி அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் விழாகுழுவின் சார்பில் பல்வேறு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அமைச்சர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுரகர்கள் தொழிலதிபர்கள், பள்ளி கல்லூரி தாளாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி சாலை விநாயகர் கோவில் ரோட்டிலும், விழா நடக்கும் இடத்திலும் போலீஸார் அதிகளவில் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்.