பதிவு செய்த நாள்
12
ஆக
2013
11:08
ஓசூர்: ஓசூர் அருகே, 150 ஆண்டுகளுக்கு பின், கோவில் தேர்த்திருவிழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா பக்தி கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து பக்தி பரவசம் அடைந்தனர். ஓசூர் அடுத்த எஸ்.முதுகானப்பள்ளியில், 500 ஆண்டு பழமை வாய்ந்த மல்லிகா அர்ஜூணா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த காலத்தில் விமர்சையாக நடந்தது. 188085ம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்த கோவிலுக்கு சொந்தமான தேர் பழுதடைந்தது. தேரை பழுதுபார்க்க ஊர் பக்தர்கள் முயற்சி எடுக்காமல் இருந்துவிட்டனர். இதனால் கடந்த, 150 ஆண்டாக தேர்த்திருவிழா இந்த கோவிலில் கொண்டாடப்படாமல் இருந்தது. அடுத்து வந்த தலைமுறையினரும், தேர்த்திருவிழா நடத்த முயற்சி எடுக்கவில்லை. கோவிலில் தினசரி பூஜைகள் மட்டும் நடந்து வந்தது. இப்பகுதி மக்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூலி வேலைக்கு செல்கின்றனர். இதனால் அவர்களால் தேரை பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து, தேர்த்திருவிழாவை நடத்த முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் தேர்த்திருவிழா நடத்த முயற்சித்தபோது, ஏதாவது தடங்கல் ஏற்பட்டு தேர்த்திருவிழா தடைப்பட்டு வந்தது. இந்நிலையில், 150 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு கோவில் தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்து பக்தர்கள் தேரை புதுப்பித்தனர். நேற்று இக்கோவில் தேர்த்திருவிழா நடந்தது. நீண்ட காலத்திற்கு பின் இந்த கோவில் தேர்த்திருவிழா நடந்தாதல், எஸ்.முதுகானப்பள்ளி, குந்துமாரனப்பள்ளி, பைரமங்கலம், சேவகானப்பள்ளி, பாரந்தூர், அனுமந்தபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் தேரை அரோகரா பக்தி கோஷம் முழங்கி வடம் பிடித்து இழுத்தனர். தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மல்லிகார்ஷூணா சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேர்த்திருவிழாவையொட்டி, ஊர் பொதுமக்கள் சார்பில் அன்னாதனம் வழங்கப்பட்டது. நேற்று இரவு கோவில் தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. தெப்ப உற்சவத்தில் மல்லிகார்ஷூணா சுவாமி வலம் வந்தார். பக்தர்கள், தெப்பஉற்சவத்தில் வாழை பழம், பூஜை பொருட்களை வீசி, நேர்த்தி கடன் செலுத்தினர்கள். கடந்த, 150 ஆண்டுகளுக்கு பின், நேற்று தேர்திருவிழா நடந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.