கும்மிடிப்பூண்டி:புதுகும்மிடிப்பூண்டி எல்லையம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவில் அமைந்து உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வெகு விமரிசையாக திருவிழா நடைபெறும். நேற்று முன்தினம் இந்த ஆண்டிற்கான ஆடி திருவிழா நடைபெற்றது. கோவில் மூலவர் சன்னதி, உட்பிரகாரம், வெளி மண்டபம் என, அனைத்து பகுதிகளும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட அம்மன், சிம்ம வாகனத்தில், திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.திருவீதி உலாவின் போது, கண்கவர் வாண வேடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவில் வளாகத்தில் நாள் முழுவதும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, திருவிழாவை கண்டு அம்மனை தரிசித்தனர்.