பதிவு செய்த நாள்
13
ஆக
2013
10:08
ஸ்ரீபெரும்புதூர்:ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில், ஆடி மாதம் நான்காம் வாரத்தை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா, கோலாகலமாக நடந்தது.ஸ்ரீபெரும்புதூர், மூல மண்டபம், அங்காள பரமேஸ்வரி கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு தீப ஆராதனையும் நடந்தது. பக்தர்கள், விரதம் இருந்து கூழ்வார்த்தனர். கச்சிப்பட்டு, தேவி கொள்ளாபுரி அம்மன் கோவிலில், பக்தர்கள் பொங்கல் வைத்து, படைத்து, வழிபாடு நடத்தினர். பலர், அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, அம்மன் வீதி உலாவும், இரவு இன்னிசை கச்சேரியும் நடந்தது.மாத்தூர், பொற்காளியம்மன் கோவிலில், கடந்த 9ம் தேதி, விளக்கு பூஜையும், 10ம் தேதி, வாண வேடிக்கையுடன், தேர் திருவிழாவும் நடந்தது. நேற்று முன்தினம், காலை 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பிற்பகல் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு, தீ மிதி திருவிழாவும் சிறப்பாக நடந்தது. ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பண்ருட்டி, ஆனந்தம்மன் கோவிலில், கூழ்வார்த்தல், பொங்கலிடுதல் நடந்தன. இரவு கும்பம் படையல் போடப்பட்டது.