பதிவு செய்த நாள்
14
ஆக
2013
10:08
திருத்தணி : அம்மன் கோவில்களில் நடந்த ஜாத்திரை திருவிழாவில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். திருத்தணி, ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள, தணிகை மீனாட்சி அம்மன் கோவில், பைபாஸ் சாலையில் ஆதிபாரசக்தி கோவில், மேட்டுத் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலையில் உள்ள, தணிகாசலம்மன் கோவில், பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி, சித்தூர் சாலையில் உள்ள துர்க்கையம்மன் கோவில், மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில் உட்பட நகராட்சியில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று ஜாத்திரை திருவிழா நடந்தது. விழாவை ஓட்டி, காலை, 8:00 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணிக்கு களிமண்ணால் செய்யப்பட்ட கங்கையம்மனுக்கு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, திருத்தணி பைபாஸ் சாலையில் இருந்து, பேண்டு வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.அப்போது, பெண்கள் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். இரவு, 11:00 மணிக்கு கங்கையம்மன் பெரிய தெருவில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.