பதிவு செய்த நாள்
14
ஆக
2013
02:08
தெய்வத்தினுடைய அருளோ உதவியோ இல்லாவிட்டால், எந்தக் காரியமும் நடைபெறாது. இதை ஒரு சிலர்தான் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வார்கள். மற்றையோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். மகாபாரதத்திலேயே - கண்ணன் தெய்வம் என்பதை உணர்ந்த பாண்டவர்கள், கண்ணன் துணையுடன் வெற்றி பெற்றார்கள். அந்தக் கண்ணனே கையேந்தாத குறையாக, பிச்சை கேட்காத குறையாக, தானே தேடிப் போய் துரியோதனைக் கண்டு பாண்டவர்களுக்காக பாதி ராஜ்யம் கேட்டும், துரியோதனன் அந்தக் கண்ணனை அவமானப்படுத்தி அனுப்பினானே தவிர, கண்ணன் சொல்லை ஏற்கவில்லை. கண்ணன் தெய்வம். அவர் பேச்சைக் கேள்! என்று பீஷ்மர் முதலானோர் சொல்லியும், இடையன் அவன் என்று எகத்தாளம் பேசினான் துரியோதனன். முடிவு - எல்லோரும் அறிந்ததே!
தெய்வமான கண்ணன் எந்த பேதாபேதமும் பார்க்கவில்லை. தெய்வமாக ஏற்றனர் பாண்டவர். துரியோதனனோ தெய்வத்தை ஒதுக்கிவிட்டு, அதன் படைகளை மட்டும் பெற்றான். பலன் என்ன? இதோ! தெய்வமான கண்ணனே தர்மரிடம் ஒரு மாபெரும் வீரனைப் பற்றிச் சொல்லி விவரிக்கப் போகிறார். ஏன்? யாரது? தர்மர், ராஜசூய யாகம் செய்யத் தீர்மானித்தார். அதிலுள்ள சாதக பாதகங்களை எல்லாம் கண்ணன் சொல்லிக்கொண்டு வந்தார். அப்போது ஜராஸந்தனுடைய ஆற்றலை எல்லாம் சொன்ன கண்ணன், அப்படிப்பட்ட அந்த ஜராஸந்தனைக் கொன்றால்தான், நீங்கள் ராஜசூய யாகத்தைச் செய்ய முடியும். அவனை வதம் செய்வது சுலபமல்ல. ஆலோசனை செய்து ஒரு முடிவுக்கு வாருங்கள்! என்றார்.
தர்மபுத்திரர் உடனே, கண்ணா! ராஜசூய யாகம் செய்யும் எண்ணத்தையே விட்டுவிடலாமா என்று இருக்கிறேன் நான். பீமனாலாவது அல்லது அர்ஜுனனாலாவது ஜராஸந்தனைக் கொல்ல முடியுமா என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி உண்டாகிறது. கண்ணா, அந்த ஜராஸந்தனைப் பற்றி விரிவாகச் சொல்லுங்கள்! நீங்கள் எப்படி, இவ்வளவு காலமாக அவனை விட்டுவைத்தீர்கள்? எனக் கேட்டார். அதற்குக் கண்ணன் சொன்ன வரலாறு இது! மகத தேசத்து அரசன் பிருஹத்ரதன். ஏராளமான படைகளைக் கொண்ட தலைசிறந்த வீரன் அவன். அதனாலேயே, தனக்குச் சமமான வீரன் எவனும் இல்லை என்ற கர்வமும் அவனுக்கு உண்டு. அழகு, பலம், செல்வம் ஆகியவற்றில் முழுமையானவள். அவன் பிரகாசிப்பதில் சூரியன், பொறுமையில் பூமாதேவி, கோபத்தில் யமன், செல்வத்தில் குபேரன் என்றெல்லாம் பெருமை கொண்டவன். அந்த அரசனுக்கு இரண்டு மனைவிகள். அவர்கள் இருவரும் காசி மன்னரின் பெண்கள். இரட்டையராகப் பிறந்தவர்கள். மன்னன் பிருஹத்ரதன் தன் மனைவியரிடம், உங்கள் இருவரிடமும் நான் எந்தவிதமான வேறுபாடும் காட்டமாட்டேன். சரிசமமாக நடத்துவேன்; அன்பு செலுத்துவேன் என்று சத்தியம் செய்து கொடுத்தான். அதன்படியே நடந்தான்.
இளமை, அறிவு, அரசன் என்னும் பதவி, அழகும் இளமையும் நற்குணங்களும் நிறைந்த மனைவியர் என எல்லாம் இருந்தும் மன்னன் பிருஹத்ரதனுக்குக் குழந்தை இல்லை. அதற்கான பலப்பல ஹோமங்கள், குழந்தைச் செல்வம் அருளும் புத்திர காமேஷ்டி யாகங்கள் எனப் பலவிதமாகவும் செய்தும் பலன் இல்லை. வரவர மன்னனுக்கு தன் மனைவியர் மேல் வெறுப்பு வந்தது. அந்த வெறுப்பு ஒரு விபரீதமான முடிவை எடுக்கும்படியாக மன்னனைத் தூண்டியது. மன்னன் மனைவியரோடு காட்டுக்குப் போகத் தீர்மானித்துவிட்டான். மந்திரிகள் எவ்வளவோ தடுத்துப் பார்த்தார்கள். வேண்டாம் மன்னா! ராஜ்யத்தில் இருந்து அரசாட்சி செய்வதை விட்டுவிட்டுப் போகாதீர்கள் என மன்றாடினார்கள்.
மன்னனோ அதையெல்லாம் மறுத்துவிட்டு, மனைவியரோடு காட்டுக்குப் போய்விட்டான். மன்னனின் மனக்குறையானது அந்தக் காட்டில்தான் தீரப்போகிறது என்பதை மன்னனும் உணரவில்லை; மந்திரிகளுக்கும் தெரியவில்லை. நாம் விரும்பும்போது அவற்றைக் கொடுக்காமல் இருப்பதும், நாம் விரும்பாதபோது அவற்றைக் கொடுப்பதும் -இறைவன் செயல். கேள்வி கேட்க, நமக்கு என்ன உரிமை இருக்கிறது? எதை எதை, எவ்வெப்போது, எப்படி எப்படிக் கொடுக்கவேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியாதா என்ன? ஆமாம்! அவ்வளவு நாட்கள் மகப்பேறு வேண்டி விரும்பி யாகம், ஹோமம் முதலானவற்றைச் செய்தும் பலன் கொடுக்காத இறைவன், மன்னன் வெறுத்துப்போய் காட்டுக்குப் போனபோது, மன்னனுக்கும் அவன் மனைவியருக்கும் மாங்கனி ஒன்றின் மூலம் மகப்பேறை அளிக்கப்போகிறார்! எப்படி?
காட்டுக்குப்போன மன்னன், அங்கே கவுதம வம்சத்தைச் சேர்ந்த கக்ஷீவான் என்பவருடைய பிள்ளையான சண்ட கவுசிகர் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவ்வளவுதான்! அவர் நிறைந்த தவம் உள்ளவர். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அருள் செய்யக்கூடியவர். நாமெல்லாம் போய் அந்த சண்ட கவுசிகர் காலில் விழலாம் வாருங்கள் என்று மன்னன் மனைவியரோடு போய், மாமுனிவரின் கால்களில் விழுந்தான். பொறுமையான பணிவிடைகளால் அவரை மகிழச் செய்தான். சண்ட கவுசிகர், மன்னா ! உட்கார்ந்து கொள்! வேத வல்லுனர்களுடனும் மனைவியருடனும் சேர்ந்து எதற்காக இங்கே வந்திருக்கிறாய்? மனக்குறை என்ன ? எனக் கேட்டார். மாமுனிவர் கேட்டதும், மன்னன் தன் மனதில் இருந்ததை எல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டான். மாமுனிவரே! மகப்பேறு இல்லாத குறைதான் எனக்கு! பிள்ளையில்லாத எனக்கு ராஜ்யத்தால் என்ன பலன்? இப்படிப்பட்டவனுக்குப் புகழும், முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய பித்ரு சிராத்தமும் அழிந்து போய்விடுமே! அதனால்தான், இங்கே காட்டில் மனைவியரோடு தவம் செய்வதற்காக வந்திருக்கிறேன் என்றான் மன்னன்.
அதைக் கேட்ட முனிவர், மன்னா ! தவத்தில் சிறந்தவனே! உன் செயல்கள் என்னை மகிழ்வடையச் செய்கின்றன என்றார். முனிவரின் உள்ளம் கரைந்தது. அப்படியே அங்கிருந்த மாமரத்தடியில் தியானம் செய்ய உட்கார்ந்தார். சற்று நேரத்தில் அவர் மடியில் ஒரு மாம்பழம் விழுந்தது. அதைச் சற்றுநேரம் மந்திரம் சொல்லி மந்திரித்தார். பிறகு மன்னனிடம் அதை அளித்து, மன்னா பிருஹத்ரதா! திரும்பிச் செல்! இதுதான் உனக்குப் புத்திரன். நாட்டுக்குப் போய் நல்ல முறையில் குடிமக்களைப் பாதுகாத்து வா! அரசர்களுக்கு அதுதான் தவம்! யாகங்களைச் செய்து இந்திரனைத் திருப்தி செய். உனக்குப் பிறக்கப்போகும் பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்து ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிட்டு, அதன்பிறகு நீ தவம் செய்ய காட்டுக்கு வா. இனி உனக்குப் பிறக்கப்போகும் பிள்ளைக்கு எட்டு வரங்கள் தருகிறேன். வேதம் படித்த அந்தணர்களிடம் பக்தியோடு இருப்பது, யுத்தத்தில் பிறரால் வெல்லப்படாமை, புத்திக்கூர்மை, எதிர்பாராமல் வரும் விருந்தாளிகளிடம் அன்போடு இருப்பது, ஏழைகளிடம் தனிப்பட்ட கவனம் செலுத்தி அவர்களைப் பாதுகாப்பது, மிகுந்த உடல்வலிமை, உலகத்தில் என்றும் இருக்கக்கூடிய புகழ், குடிமக்களால் விரும்பிப் பாராட்டப்படும் தன்மை என்னும் இந்த எட்டு வரங்களையும் உன் பிள்ளைக்குக் கொடுக்கிறேன் என்று சொல்லிக் காட்டை விட்டு வெளியேற மன்னனுக்கு உத்தரவு இட்டார். மன்னனும் முனிவரை வணங்கி, அவர் அளித்த மாங்கனியைக் கையில் கொண்டு மனைவியருடன் நாட்டுக்குத் திரும்பினான்.
அதெல்லாம் சரி! முனிவர் கொடுத்தது ஒருபழம்தானே? மன்னன் தன் இரண்டு மனைவியரில் யாரிடம் அதைக் கொடுப்பான்? இரண்டு மனைவியரையும் ஒன்றுபோல நடத்துவேன். எந்தவிதமான வேறுபாடும் பார்க்கமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான் அதனால்..... மன்னன், அருந்தவ முனிவர் அளித்த மாம்பழத்தை மனைவியரிடம் முழுதாக அப்படியே ஒப்படைத்து விட்டான். அதாவது, பழத்தைப் பங்கு போட்டுக்கொள்ளவேண்டிய பொறுப்பை மனைவியரிடமே விட்டுவிட்டான். அந்த இரு மனைவியரில் ஒருவராவது, இந்தா! இந்த மாம்பழத்தை நீயே முழுமையாக உண்! என்று சொல்லிவிட்டு அடுத்தவரிடம் கொடுத்திருக்கலாம். ஆனால், இருவருமே விட்டுக் கொடுக்கவில்லை. நாமாக இருந்தால் இப்படித்தான் சொல்வோம். ஆனால், இதற்கு வியாஸர் வேறொரு காரணம் கூறுகிறார். அந்தப் பெண் அரசிகள் இருவரும், மாம்பழத்தைத் தந்த முனிவரிடம் உள்ள மரியாதையாலும், தங்கள் கால வேறுபாட்டாலும், மாம்பழத்தை இரண்டு பாகங்களாகச் செய்து உண்டார்கள்.
முனிவர்களின் வாக்கு தவறாது என்பதற்காகவும், அந்தக் காரியம் முக்கியமாக நடக்க வேண்டி இருந்ததாலும், கனி உண்டதன் காரணமாக அரசியர் இருவருக்கும் கரு உண்டாயிற்று. மன்னன் மகிழ்ச்சி அடைந்தான். பிரசவ காலம் நெருங்கியது. விபரீதம் வெளிப்பட்டது. அரசிகள் இருவரும் ஓர் உடம்பின் இரண்டு துண்டங்களைப் பெற்றார்கள். இரண்டுக்கும் உயிர் இருந்தது. ஒரு கண், ஒரு கால், ஒரு கை, அரை வயிறு, அரை முகம் என இரண்டு (உடம்பின்) துண்டங்களைக் கண்டு, அரசிகள் நடுங்கினர். சகோதரிகளான அந்த இருவரும் பயத்தோடு தங்களுக்குள் ஆலோசனை செய்து, உயிருள்ள அந்த உடம்பின் இரு துண்டங்களையும் மிகுந்த துயரத்தோடு விட்டுவிட்டார்கள். அந்த இரண்டு துண்டங்களையும் வேலைக்காரப் பெண்கள் ஓடிவந்து எடுத்து நன்றாக மூடி, வெளியே எறிந்துவிட்டு வந்தார்கள். வெண்பட்டுத் துணியால் மூடப்பட்ட அந்த இரண்டு துண்டங்களும் நாற்சந்தியில் கிடந்தன. அப்போது...
மாமிசம், ரத்தம் ஆகியவற்றை உண்ணும் ஜரை என்ற ராட்சஸி, உயிருள்ள அந்த இரண்டு உடல் துண்டங்களையும் கண்டாள். விதியால் தூண்டப்பட்ட அவள், அந்த இரண்டு உடல் துண்டங்களையும் உண்பதற்காக எடுத்து ஒன்றுசேர்த்தாள். அதே விநாடியில் அதிசயம் நிகழ்ந்தது அங்கே! ஜரையால் சேர்க்கப்பட்ட அந்த உடலின் இரு துண்டங்களும் ஒன்றுசேர்ந்ததும், முழு உருவமுள்ள ஒரு ராஜகுமாரன் உண்டானான். அதைப் பார்த்ததும் அரக்கிக்கே ஆச்சரியம் தாங்கவில்லை. வஜ்ஜிரத்தால் செய்யப்பட்டதைப் போல இருந்த அந்த ராஜகுமாரனை, இப்போது அரக்கியால் தூக்க முடியவில்லை. மிகுந்த கனமுள்ளவனாக இருந்தான். அதேசமயம் அந்தக் குழந்தை, அரக்கியின் சிவந்த கையைப் பலமாகப் பிடித்து தன் வாயில் வைத்துக்கொண்டு கோபத்துடன் மழைமேகம்போல கர்ஜனை செய்தான். அந்த ஓசை கேட்டு, அந்தப்புரத்தில் இருந்தவர்கள் எல்லாம் பரபரப்போடு அரசனுடன் வெளியே வந்தார்கள். குழந்தை பெற்ற பச்சை உடம்போடு அரசிகள் இருவரும் வெளியே ஓடிவந்தார்கள். அவர்களையெல்லாம் பார்த்த அரக்கி நடந்ததை எல்லாம் உணர்ந்தாள். இந்த அரசன் மகாத்மா, தர்மவான். இவன் பிள்ளையான இந்தக் குழந்தையைக் கொல்லக்கூடாது என்று நினைத்தாள். உடனே, ஒரு மானிடப் பெண் வடிவம் கொண்டு கையில் குழந்தையுடன் மன்னனை நெருங்கினாள்.
பிருஹத்ரதா! உனக்கு இந்தக் குழந்தையைக் கொடுக்கிறேன், வாங்கிக்கொள்! முனிவரின் ஆசிர்வாத பலத்தால் உன் இரு மனைவிகளுக்கும் பிறந்து, வேலைக்காரிகளால் தூக்கி எறியப்பட்ட இந்தக் குழந்தை என்னால் காப்பாற்றப்பட்டான் என்று சொல்லி, குழந்தையை நீட்டினாள் ஜரை. உடனே ஓடோடிப் போய் குழந்தையை வாங்கிய இரு அரசிகளும், அதைக் கண்ணீரால் நனைத்தார்கள். அதைப் பார்த்து மன்னன் மகிழ்ந்தான். தங்க நிறத்தோடு மானிட வடிவில் இருந்த அரக்கியைப் பார்த்து, செந்தாமரை மலரில் இருக்கும் செல்வியைப் போன்ற நிறம் கொண்டு எனக்குப் பிள்ளையைத் தந்தவளே! மங்கள ரூபியே! உன்னைப் பார்த்தால் ஒரு தேவதையைப் போலத் தெரிகிறது. யார் நீ? சொல்! என வேண்டினான். வந்தவள் வாய் திறந்தாள். மன்னா! நீ நலம் அடைவாய். நான் ஜரையெனப்படும் அரக்கி. நினைத்த வடிவம் எடுப்பேன். உன் அரண்மனையில் பூஜிக்கப்பட்டு சுகமாக வாழ்ந்தேன். பிரம்ம தேவரால் கிருகதேவி எனும் பெயரோடு படைக்கப்பட்ட நான், மனிதர்களின் வீடுகளில் எல்லாம் எப்போதும் வசிக்கிறேன். தீயவர்களை அழிப்பதற்காக, மிகுந்த அழகோடு நான் வீடுகளில் வைக்கப்படுகிறேன். இளம் வடிவம் கொண்டவளும் குழந்தையை ஏந்தியவளுமான என்னை, எவன் பக்தியுடன் சுவரில் எழுதிவைப்பானோ அவன் வீடு தழைத்து விளங்கும். இதற்கு மாறாக இருந்தால் கெடும்.
உன் வீட்டில் ஏராளமான புத்திரர்களுடன் கூடியவளாக என்னைச் சுவர்களில் எல்லாம் எழுதி வைத்தார்கள். வாசனை மிகுந்த தூபங்கள், ஒளிவீசும் தீபங்கள், வாசனைப் பூக்கள், பட்சணங்கள், வகைவகையான உணவு எனப் பலவற்றாலும் என்னை வழிபட்டார்கள். அதற்குப் பிரதி உபகாரம் செய்வதற்காகத்தான், உன் பிள்ளையின் உடல் துண்டுகள் இரண்டையும் சேர்த்தேன். அவை தெய்வச் செயலாலும் உன் பாக்கியத்தாலும் ஒரு குழந்தையாக ஆயின. இந்த விஷயத்தில் நான் ஒரு காரணம் மட்டுமே! மேரு மலையையும் தின்னக்கூடிய எனக்கு, உன் குழந்தை எந்த மூலை? உன் வீட்டில் செய்த வழிபாட்டால் நான் சந்தோஷம் அடைந்துதான், உன் பிள்ளையை உனக்குத் திரும்பக் கொடுத்தேன். இந்த உலகத்தில் இவன், என் பேரினால் புகழ்பெற்றவனாக இருப்பான் என்று சொல்லி அங்கிருந்து மறைந்தாள் ஜரை. மன்னனும் அவன் மனைவியரும் குழந்தையுடன் அரண்மனைக்குத் திரும்பினார்கள். குழந்தைக்குச் செய்யவேண்டிய ஜாதகர்மா முதலியவற்றைச் செய்தார்கள். தன் நாடான மகத நாடு முழுவதும் ஜரை என்னும் அந்த அரக்கிக்கு மகோத்ஸவம் கொண்டாடும்படி கட்டளையிட்டான் மன்னன். அத்துடன், இந்தக் குழந்தை ஜரை என்னும் அரக்கியால் சேர்க்கப்பட்டதன் காரணமாக, ஜராஸந்தன் என்று அழைக்கப்படட்டும் என்று குழந்தைக்குப் பெயரும் சூட்டினான்.
ஜராஸந்தன், நெய் சொரியப்பட்ட யாக அக்னியைப் போல வளர்ச்சியும் பலமும் பெற்றான். வளர்பிறை சந்திரனைப் போல வளர்ந்து இளமைப்பருவம் அடைந்தான். அப்போது, ஜராஸந்தனின் பிறப்புக்கு முக்கியக் காரணமாக இருந்த சண்ட கவுசிக முனிவர் மகத தேசத்துக்கு வந்தார். அவரை வரவேற்று முறைப்படி பூஜித்த அரசன், தன் மகனான ஜராஸந்தனை அவரிடம் ஒப்படைத்தான். முனிவருக்கு மனம் மகிழ்ச்சி அடைந்தது. மன்னா! உன் பிள்ளையான இந்த ஜராஸந்தன், நான் ஏற்கனவே வரமாகத் தந்த எல்லாவற்றையும் அடைவான். அழகு, தைரியம், பலம் ஆகியவற்றில் தலைசிறந்தவனாக விளங்கும் இவனை எதிர்ப்பவர்கள் நாசம் அடைவார்கள். தேவர்களின் ஆயுதங்கள்கூட இவனுக்குத் தீங்கு செய்யாது. எல்லா அரசர்களும் இவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பார்கள். அனைத்துக்கும் மேலாக இந்த ஜராஸந்தன், திரிபுர சம்ஹாரம் செய்தவரும் பாவத்தைப் போக்குபவருமான சிவபெருமானை நேருக்கு நேராகப் பார்ப்பான் என்று சொல்லிவிட்டு தவம் செய்யப் போய்விட்டார்.
சிறிது காலம் ஆனது. ப்ருஹத்ரதன் தன் மகன் ஜராஸந்தனுக்குப் பட்டாபிஷேகம் செய்து அவனிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்துவிட்டு, மனைவியருடன் காட்டுக்குப் போய்விட்டான். ஜராஸந்தன் அரசனானதும், அரசர்கள் அனைவரையும் வெற்றிகொண்டு, அவர்களைத் தனக்கு அடங்கியவர்களாகச் செய்தான். காலம் பல கடந்தது. காட்டில் தவம் செய்துகொண்டிருந்த ஜராஸந்தனின் பெற்றோர்கள் சொர்க்கத்தை அடைந்தார்கள். ஏற்கனவே சண்ட கவுசிகர் ஜராஸந்தனுக்கு எட்டு வரங்கள் கொடுத்திருந்தார். அதன்படியே ஜராஸந்தன் நல்ல முறையில் ஆட்சி செய்துவந்தான். கொஞ்ச காலத்தில், ஜராஸந்தனுக்கும் கண்ணனுக்கும் பகை உண்டாகும்படியான நிகழ்ச்சி ஒன்றை காலம் அரங்கேற்றியது. கம்சன் இறந்ததை ஒட்டி நடந்த நிகழ்ச்சி இது! கம்சன், ஜாரஸந்தனின் பெண்களைத் திருமணம் செய்துகொண்டிருந்தான். அதாவது ஜராஸந்தன், கம்சனுக்கு மாமனார். கம்சனைக் கண்ணன் கொன்றபிறகு அவன் மனைவியார் இருவரும் ஜராஸந்தன் கால்களில் போய் விழுந்து, அப்பா! உங்கள் மருமகனைக் கண்ணன் கொன்றுவிட்டான் என்று சொல்லிக் கதறினார்கள். அப்போது முதல் ஜராஸந்தன், கண்ணன் மீது விரோதம் கொண்டான். கிரிவ்ரஜம் என்ற இடத்திலிருந்து ஜராஸந்தன் தன் கதாயுதத்தைத் தொண்ணுற்றொன்பது தடவை சுற்றி எறிந்தான். அப்போது கண்ணன் மதுராவில் இருந்தார். ஜாரஸந்தன் வீசிய கதாயுதம் 99 யோஜனை (1 யோஜனை-ஏறத்தாழ 12 கி.மீ) தூரம் தாண்டி மதுராவுக்கு சமீபத்தில் விழுந்தது. அதைப் பார்த்த மக்கள், கண்ணனிடம் போய்த் தெரிவித்தார்கள்(கதை விழுந்த அந்த இடத்தை கதாவஸானம் என்று அழைக்கிறார்கள்).
ஜாரஸந்தன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அவர் அருளைப் பெற்று. ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தான். அந்த யாகம் மிகவும் விசித்திரமானது. நூறு அரசர்களை வென்று, அவர்களைக் கொண்டுவந்து பலியிடும் யாகம் செய்வது எனத் தீர்மானித்திருந்தான் ஜராஸந்தன், அதன்படியே 84 அரசர்களைக் கொண்டுவந்து ஓரிடத்தில் அடைத்து வைத்தான். கிரிவ்ரஜம் (மலைக்கூட்டம்) எனப் பெயர்பெற்ற அந்த இடத்தை, புருஷ வ்ரஜமாகச் (மக்கள் கூட்டம்) செய்தான். 16 அரசர்கள்தான் தேவை, அவர்களையும் கொண்டுவந்துவிட்டால், மொத்தமாக நூறு பேரையும் பலியிட்டு யாகத்தைச் செய்ய வேண்டியதுதான் பாக்கி! இதற்காக அவன் அவ்வப்போது போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். போர் வெறிபிடித்த அந்த ஜராஸந்தனிடம் இருந்து தம் மக்களைப் பாதுகாப்பதற்காகக் கண்ணனும் பலராமனும் ரைவதக மலை மீது, குசஸ்தலி என்னும் இடத்தில் ஓர் அழகான நகரத்தை உருவாக்கி மக்களை எல்லாம் அங்கே இருக்கச் செய்தார்கள். ஜராஸந்தனுக்கும் கண்ணன் முதலானவர்களுக்கும் கடுமையான, இடைவிடாத யுத்தம் மூன்று வருடங்கள் நடந்தது. ஜராஸந்தனைப் பற்றிய இந்தத் தகவல்களை எல்லாம் தர்மரிடம் சொன்ன கண்ணன், அப்பப்பா! என்ன கடுமையான யுத்தம் அது! அந்த ஜராஸந்தனை ஜெயித்தால் ஒழிய, தர்மரே! நீங்கள் ராஜசூய யாகம் செய்ய முடியாது. பீமனையும் அர்ஜுனனையும் என்னுடன் அனுப்புங்கள். நாங்கள் மூவருமாகப் போய் ஜராஸந்தனை முடித்துவிட்டு வருவோம் என்றார். தர்மர் அப்படியே செய்தார்.
கண்ணன், பீமன், அர்ஜுனன் மூவரும் ஸ்நாதகப் பிராமண வேஷம் பூண்டார்கள். பிரம்மச்சாரியாக குருகுலத்தில் இருந்து கல்வியை முடித்து குருவினால் விடை கொடுக்கப்பட்டு இன்னும் இல்லறத்தை ஏற்காத நிலையிலுள்ள பிராமணர்கள் ஸ்நாதகப் பிராமணர்கள் எனப்படுவார்கள். அந்த வடிவத்தோடு மரவுறி அணிந்து, தர்பைகளை எடுத்துக்கொண்டு கண்ணன், பீமன், அர்ஜுனன் மூவரும் ஜராஸந்தனுடைய மகத நாட்டை நோக்கிச் சென்றார்கள். வழியெல்லாம் ஜராஸந்தனின் வீரம், பலம் அவன் நகரத்தின் இடங்களைப் பற்றிய தகவல்கள் எனப் பல்வேறு விதமாகச் சொல்லிக்கொண்டு போகிறார் கண்ணன். மூவருமாக மகத நாட்டை அடைந்ததும், அங்கே அலங்காரமாயிருந்த சைத்யகம் என்னும் குன்றின் சந்து வழியாகச் சென்றார்கள். அப்போது அவர்களின் முன்னால் வீர முரசுகள் மூன்று எதிர்ப்பட்டன. அவை ஒருமுறை ஒலித்தால், அந்த ஓசை ஒரு மாத காலம்வரை கேட்கும். அப்படிப்பட்ட அந்த முரசங்களை உடைத்துவிட்டு, கண்ணன் முதலானோர், கோட்டை வாயிலை விட்டுவிட்டு, அலங்காரமாக இருந்த சைத்யகக் குன்றை நெருங்கி அதை உடைத்தார்கள்; மிகுந்த உற்சாகத்தோடு நகரத்துக்குள் நுழைந்தார்கள். அதே நேரத்தில் அந்நகரத்தில் அபசகுனங்கள் உண்டாயின. அதைக் கண்ட தேவ வல்லுனர்கள் ஜராஸந்தனிடம் போய், ஏதோ கேடு விளையப்போவதாக எச்சரித்தார்கள். அப்போது யானைமேல் அமர்ந்திருந்தான் ஜராஸந்தன். அவனுக்குத் தீமை விலகுவதற்காக, அந்தணர்கள் எல்லாம் தீப ஆரத்தி எடுத்துச் சுழற்றினார்கள்.
ஜராஸந்தன் பார்த்தான். தீங்குகளும் தோஷங்களும் விலகுவதற்காக உபவாசம் இருந்து விரதத்தைத் தொடங்கினான். தவறுகள் செய்துவிட்டு, அவற்றின் பாதிப்புகளில் இருந்து தப்புவதற்காக அறைக் கதவுகளைச் சார்த்திவிட்டுத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு உள்ளேயே இருந்தால் தப்பமுடியுமா என்ன? நாம் செய்த வினைகள் தேடி வந்து நம்மைப் பாதித்துவிடாதோ? ஜராஸந்தனுக்கும் அந்நிலைதான் ஏற்பட்டது. அவன் என்னதான் உபவாசம் இருந்து விரதம் இருந்தாலும், அவன் செய்த வினைகள் அவனை விடுமா? அவை கண்ணன், பீமன், அர்ஜுனன் என்ற மூவரையும் அவன் நகரத்துக்கே வரவழைத்திருக்கின்றனவே! நகரத்துக்குள் நுழைந்த கண்ணன் முதலான மூவரும், அங்கே கடைவீதியில் இருந்த வெண்மையான ஆடைகள், பூமாலைகள், குண்டலங்கள் முதலானவற்றை அவர்களாகவே பலவந்தமாக எடுத்து அணிந்து கொண்டார்கள். அவர்களைப் பார்த்து அந்த நகரத்து மக்கள் எல்லோரும் ஆச்சரியம் அடைந்தார்கள். போர்க்களத்தில் பிரகாசிக்கும் நீண்ட கைகள் சாந்து, அகில் ஆகியவற்றை அணிந்த அகன்ற மார்பு ஆகியவற்றுடன் ஸ்நாதகப் பிராம்மணர் வேஷத்தில் இருந்த அவர்களைப் பார்த்தால், ஏன் ஆச்சரியப்பட மாட்டார்கள்? அந்த ஆச்சரியப்பட்டவர்களை எல்லாம் கண்டும் காணாததுபோல் போய்க்கொண்டிருந்த கண்ணன் முதலான மூவரும் ஜராஸந்தனின் இருப்பிடத்தை நெருங்கினார்கள். அங்கும் வாசல் வழியாக நுழையாமல், பக்கவாட்டில் ஏறிக் குதித்து உள்ளே போனார்கள். அங்கே மக்கள் இருந்த மூன்று கட்டுகளையும் தாண்டி, ஜராஸந்தனை நெருங்கினார்கள். அவர்களைப் பார்த்ததும் ஜராஸந்தன் அவர்களுக்கு விசேஷமான மரியாதை கொடுத்து முறைப்படி பூஜித்தான் உங்களுக்கு நல்வரவு ஆகட்டும் என்றும் சொன்னான்.
அப்போது பீமனும் அர்ஜுனனும் மவுனமாக இருந்தார்கள். பேசவே இல்லை. கண்ணன் பேசினார்: சக்கரவர்த்தியே! இவர்கள் இருவரும் இப்போது ஒரு விரதத்தில் இருக்கிறார்கள். நள்ளிரவுக்கு முன் பேசமாட்டார்கள். அதன்பிறகு உன்னுடன் பேசுவார்கள் என்றார். அவர்கள் மூவரையும் தன் யாக சாலையிலேயே தங்கச் செய்துவிட்டு, ஜராஸந்தன் தன் அரண்மனைக்குச் சென்றான். நள்ளிரவு நெருங்கியது, ஜராஸந்தன் யாக சாலைக்குப் போய், தான் தங்க வைத்திருந்த மூவரையும் பார்த்தான். யுத்தத்தில் அனைவரையும் ஜெயித்து வீராதி வீரனாக இருந்தாலும், ஸ்நானப் பிராமணர்கள் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டால் அர்த்த ராத்திரி வேளையிலும் அவர்களை எதிர்கொண்டு அழைப்பதை ஜராஸந்தன் விரதமாக வைத்திருந்தான் என்பது உலகப் பிரசித்தம் என வியாஸாசார்யார் இங்கே ஜராஸந்தனைப் புகழ்கிறார். ஜராஸந்தனைப் பார்த்ததும் கண்ணன் முதலான மூவரும் மன்னா, மங்கலம் உண்டாகட்டும்! நலம் உண்டாகட்டும்! என்று வாழ்த்தினார்கள். அப்போது அவர்களை சற்றுநேரம் உற்றுப் பார்த்த ஜராஸந்தன் திகைப்போடு உட்காருங்கள்! என்றான். மூவரும் உட்கார்ந்தார்கள். சத்தியம் தவறாதவனான ஜராஸந்தன், ஸ்நாதகப் பிராம்மணர்களுக்குத் தகாத ஆடம்பர, அலங்கார வேடத்தில் இருந்த அவர்களைப் பார்த்து இகழ்ச்சியோடு பேசத் தொடங்கினான்.
நீங்கள் எல்லாம் யார்? மானிட உலகில் ஸ்நாதக விரதம் பூண்டிருக்கும் பிராம்மணர்கள், இப்படிப் பூமாலை சூடி சாந்து எல்லாம் அணிய மாட்டார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். உங்கள் கைகளில், வில்லின் நாண்கயிறு உராய்ந்த காய்ப்பு மிகவும் அழுத்தமாகத் தெரிகிறது. இது க்ஷத்திரியர்களின் அடையாளம்! இருந்தும் உங்களைப் பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். வெள்ளாடை உடுத்தி இப்படி வெளிப்படையாகப் பூக்களையும் சந்தனத்தையும் அணிந்திருப்பவர்கள் க்ஷத்திரியர்கள்தான் என்று எனக்கு நன்றாகவே தெரியும். யார் நீங்கள்? உண்மையைச் சொல்லுங்கள்! வழியல்லா வழியில் இந்நாட்டுக்குள் நுழைந்திருக்கிறீர்கள்? எனக் கேட்டான். அதன்பிறகு கண்ணன் எதையுமே மறைக்கவில்லை. உண்மையைச் சொல்லிவிட்டார்.
மன்னா! ஏராளமான அரசர்களை, நீ பலியாகக் கொண்டு வந்திருக்கிறாய். அவர்களையெல்லாம் ருத்திர பகவானுக்குப் பலி கொடுக்க நீ தீர்மனித்திருக்கிறாய், மனிதர்களைக் கொன்று யாகம் செய்வதை ஒருபோதும் கண்டது இல்லை. கொடுமையான குற்றத்தைச் செய்துவிட்டு, அதன்பிறகும் நீ உன்னை நல்லவனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாய். உன்னைத் தவிர வேறு ஆண்பிள்ளையே இல்லை. நீ மட்டும்தான் வீரன் என்று கர்வம் கொண்டிருக்கும் உன்னைக் கொல்வதற்காகவே நாங்கள் வந்திருக்கிறோம். சிறையில் அடைத்து வைத்திருக்கும் அரசர்களையெல்லாம் விடுதலை செய்து உன் குடும்பத்தாருடன் நலமாக வாழ். இல்லையென்றால் யமலோகத்துக்குப் போ! என்று சொல்லி, தங்கள் மூவரின் உண்மையான பெயர்களையும் சொல்லிவிட்டார். கண்ணனின் வார்த்தைகளைக் கேட்டதும், ஜராஸந்தன் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான்.
கிருஷ்ணா! நான் என்ன கம்ஸன், பூதனை முதலானவர்களைப் போலவா? இதுவரையில் நீ கொன்றவர்களைப் போல, என்னையும் நினைத்துவிட்டாயா? இடையன் நீ! என்னிடம் பயந்துகொண்டு, நாடோடியைப் போல பிறந்த பூமியான மதுராவைவிட்டு ஓடிப்போனவன் நீ! என் மருமகனான கம்சனைக் கொன்றதற்காக, உன்னை இப்போதும் கொன்று பழி தீர்த்துக்கொள்கிறேன் பார்! உன்னை மட்டுமல்ல, உன்கூட வந்திருக்கும் சக்தியற்ற இந்த பீமனையும் அர்ஜுனனையும், ஒரு சிங்கம் சிறு பிராணிகளைக் கொல்வதைப் போலக் கொல்வேன் என்று சொல்லி கர்ஜித்தான். கண்ணன், ஜராஸந்தா! வீணாகக் கத்தாதே, நீ வாயால் சொன்னதை, செய்கையால் நடத்திக் காட்டு. உன்னையும், உன் பிள்ளைகளையும், உன் மந்திரிகளையும் இதோ இந்த பீமனும் அர்ஜுனனும் கொன்றுவிடுவார்கள். நீ இனிமேல் உன் நகரத்துக்குத் திரும்பிப் போகமாட்டாய் என்றார். ஜராஸந்தன் பின்வாங்கவில்லை, போர்களத்தில் எத்தனையோ வீரர்களை வென்றவன் நான். உங்களைக் கண்டா பயப்படுவேன்? எப்படிப்பட்ட யுத்தத்துக்கும் நான் தயார் என்று சொன்னான். அத்துடன் தன் பிள்ளையான ஸஹதேவன் என்பவனுக்கு ராஜ்ய பட்டாபிஷேகம் செய்துவைக்க உத்தரவிட்டு, பீமனுடன் அர்ஜுனனுடனும் போர் செய்யத் தீர்மானித்தான்.
ஜராஸந்தன் போர் செய்யத் தீர்மானித்துவிட்டதை உணர்ந்த கண்ணன், ஜராஸந்தனைப் பார்த்து, மன்னா! எங்கள் மூவரில் எந்த ஒருவனோடு நீ யுத்தம் செய்ய விரும்புகிறாயோ, அவனுடன் யுத்தம் செய்யலாம், நாங்கள் தயார் என்றார். ஜராஸந்தன், இந்த பீமனுடைய பலத்தைப் பற்றி நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே, பீமனுடன் யுத்தம் செய்கிறேன் என்றான். அப்போது அரண்மனை புரோகிதர் கோரோசனை, பூமாலை முதலான மங்கலத் திரவியங்களையும், களைப்பைத் தீர்த்து மயக்கத்தைப் போக்கும் மூலிகைகளையும் எடுத்துக்கொண்டு வந்தார், ஜராஸந்தனுக்குக் கோரோசனை தடவி, மலர் மாலைகளை அணிவித்தார். ஜராஸந்தன் ஒரு கர்ஜனை செய்துவிட்டு தலையில் இருந்த கிரீடத்தைக் கழற்றி, தலைமுடியை நன்றாக வாரிக்கொண்டான். அதன்பிறகு பீமனைப் பார்த்து பீமா! உன்னுடன் யுத்தம் செய்வேன். உன்னிடம் நான் தோற்றுப்போனால்கூட அது எனக்குப் பெருமைதான் என்றான். யுத்தம் தொடங்கியது. ஜராஸந்தனுக்கும் பீமனுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. வியாஸர் இப்போரைப் பல நாட்களில் வர்ணிக்கிறார். போர்களத்தில் நாமே நின்று, அதைப் பார்ப்பதைப் போன்ற அற்புதமான வர்ணிப்பு அது! அவர் வர்ணித்த அந்தப் போர்முறையில் இருந்து ரசமான ஒரு தகவலைப் பார்க்கலாம்.
ப்ருஷ்ட பங்கம், சம்பூர்ண மூர்ச்சை எனும் பூர்ண கும்பம் திருமண பீடம், பூர்ண யோகம், முஷ்டிகம் எனும் முறைகளில் எல்லாம் யுத்தம் செய்தார்கள். ப்ருஷ்ட பங்கம்: முதுகைத் தரையில் படும்படியாகத் தள்ளி எதிராளியை வீழ்த்தி அவமானப்படுத்துவது. திருண பீடம்: நார் முதலியவற்றால் கயிறு திரிப்பதைப் போல, ஒருவருக்கொருவர் கை, கால்களைப் பின்னிக்கொண்டு யுத்தம் செய்வது. பூர்ண யோகம்: தலை முதல் கால் வரையில் முழு உடம்பையும் சேர்த்து இறுகப் பிடித்து அணைத்து, எதிராளிக்கு அசதியை உண்டாகி அடிப்பது. முஷ்டிகம்: ஓரிடத்தில் குத்துவதைப் போல போக்குக் காட்டி மற்றோர் இடத்தில் குத்துவது (யுத்தத்தில் நடை பெற்ற போரின் வகைகளையும் பெயரிட்டு வியாஸர் வர்ணித்திருப்பது ஓர் அபூர்வமான தகவல்).
ஜராஸந்தனுக்கும் பீமனுக்கும் நடந்த அந்த யுத்தத்தைக் காண்பதற்காக, அவ்வூர் மக்கள் அங்கே ஆயிரக்கணக்கில் குவிந்தார்கள். கார்த்திகை மாத முதல் தேதியன்று ஆரம்பித்த ஜராஸந்த-பீம யுத்தம், பதினைந்து நாட்களுக்கு நடந்தது. இரவு பகலாக ஓய்வில்லாமலும் உணவில்லாமலும் நடந்த ஓர் ஆக்ரோஷமான யுத்தம் அது! பதினைந்தாவது நாள். கண்ணன், பீமனை உற்சாகமூட்டி வேகப்படுத்தினார். பீமா! உன்னிடம் இருக்கும் தெய்வீக சக்தியையும், வாயு பகவானுடைய பலத்தையும் இப்போது வெளிப்படுத்து. வீரனும் கெட்டவனுமான இவனை நீதான் கொல்ல வேண்டும். எங்களுக்கும் இவனுக்கும் கோமந்தம் என்னும் இடத்தில் போர் நடந்தபோது, ஜராஸந்தன், பீமனால் கொல்லப்பட வேண்டியவன் என்று அசரீரி சொன்னது. அதனால்தான் அப்போது இவனை உயிரோடு விட்டோம். ஆகையால் உன்னைத் தவிர வேறு யாராலும் இந்த ஜராஸந்தனுக்கு மரணம் விதிக்கப்படவில்லை. வாயு பகவானைத் தியானித்து இவனை உடனே கொல் பீமா! என்றார். பீமன் அப்படியே செய்தான்.
ஜராஸந்தனைப் பிடித்துத் தூக்கி, சுழற்றித் தன் முழங்கால்களால் அவன் முதுகை அழுத்தி ஒடித்து, பீமன் பயங்கரமாகக் கூச்சலிட்டான். அந்தக் கூச்சல் கேட்டு அந்த ஊரிலிருந்த அனைவரும் நடுங்கினார்கள் அப்போது கண்ணன் பீமனைப் பார்த்து, ஜராஸந்தனைக் குறிப்பிட்டு அவனைக் கொல்வதற்காக, ஒரு கோரையை எடுத்து இரண்டாகக் கிழித்து உணர்த்தினார். உடனே, பீமன் ஜராஸந்தனின் காலைப் பிடித்து அவனை இரண்டாகக் கிழித்து போட்டான். வெற்றி கர்ஜனையும் செய்தான். மகிழ்ச்சிக் கெக்கலிப்பு. ஆனால், அந்த மகிழ்ச்சி ஒருசில விநாடிகள்கூட நீடிக்கவில்லை. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக, கிழித்துப் போடப்பட்ட ஜராஸந்தன் உடம்பின் இரு பாகங்களும் ஒன்றுசேர்ந்தன. ஜராஸந்தன் மறுபடியும் எழுந்து கைகளைத் தட்டி பீமனுடன் போர் செய்தான். கடும்போர் நடந்தது. நடந்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கண்ணன், ஜராஸந்தன் வதத்துக்கு உண்டான வழியைக் குறிப்பிடுவதற்காக ஒரு கோரையை எடுத்து இரண்டாகக் கிழித்து, கால் மாற்றிப் போட்டு பீமனுக்கு காண்பித்தார். கண்ணன் காட்டிய குறிப்பை பீமன் இம்முறை உணர்ந்துகொண்டான். வேகமாகச் செயல்பட்டு, ஜராஸந்தனை இரண்டாகக் கிழித்து, கால் மாற்றிப் போட்டான். ஜராஸந்தன் வாழ்நாள் முடிந்தது.
நல்லவரான தந்தை, உத்தமமான முனிவரின் ஆசி, மகத நாட்டுக் காவல் தெய்வமான ஜரையின் அருள், எட்டு விதமான வரங்கள், சக்கரவர்த்திப் பதவி என எல்லாம் இருந்தும், ஜராஸந்தன் ஏன் எப்படி முறையற்று மாண்டு மண் தரையில் கிடக்க வேண்டும்? மேற்கொண்ட அனைத்தினாலும் விளைந்த ஆணவமே காரணம். அதற்கும் மேம்பட்ட நிலையை அடையவேண்டும் என்ற வெறியே காரணம்! அதை அடைவதற்காக 100 அரசர்களை வெட்டிப் பலி கொடுத்து யாகம் செய்வேன் என்று மூர்க்கத்தனமாக வேண்டிக்கொண்டு, 86 அரசர்களைப் பிடித்துச் சிறையில் போட்டுவிட்டு மீதி 14 அரசர்களுக்காக அலைந்ததே காரணம். இவ்வாறு ஜராஸந்தன் அழிவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், பாண்டவர்கள் வாழ்வதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருந்தது. அது தெய்வமான கண்ணனைத் துணையாகக் கொண்டதுதான். இல்லாவிட்டால், ஒருக்காலும் தர்மர் ராஜசூய யாகம் நடத்தி இருக்க முடியாது.
ஜராஸந்தன் வரலாற்றையே மற்றொரு விதமாகப் பார்த்தால், இந்தக் காலத்துக்கு மிகவும் பெருத்தமாக இருக்கும். ஜராஸந்தன் தலைசிறந்த வீரன், வரங்கள் பல பெற்றவன். அவனை வீழ்த்தினால்தான் தர்மரால் ராஜசூய யாகம் நடத்த முடியும் அவனை அழிப்பது சுலபமில்லை-இது கண்ணன் தர்மரிடம் சொன்ன வார்த்தைகள். இதைக் கேட்டதும் தர்மர் என்ன செய்திருக்க வேண்டும்? கண்ணா! எப்படியாவது நடந்தாக வேண்டும் என்ற சொல்லி முழுப் பொறுப்பையும் தூக்கி, கண்ணன்மீது சுமத்தியிருக்க வேண்டும், அடுத்து கண்ணனாவது, தர்மரே! நான் இங்கிருந்தபடியே ஒரு விநாடியில் ஜராஸந்தனை அழித்து விடுகின்றேன் என்று சொல்லி, தன் தெய்வீக சக்தியால் ஜராஸந்தனை அழித்திருக்க வேண்டும். அப்படி ஏதும் நடக்கவில்லை! மாறாக, பீமனையும் அர்ஜுனனையும் என்னுடன் அனுப்பு, பீமனால் ஜராஸந்தன் கொல்லப்படுவான் எனக் கண்ணன் கேட்க தர்மரும் அனுப்பி வைத்தார், ஜராஸந்தனிடம் போன பிறகும், கண்ணன் அங்கே தானே நேரடியாக யுத்தத்தில் ஈடுபடவில்லை. பீமன்தான் போரில் ஈடுபட்டான். முழு பலத்தையும் வெளிப்படுத்திப் போரிட்டான். தெய்வமாகிய கண்ணன் காட்டிய குறிப்பை உணர்ந்து பீமன் செயல்பட்டான், வெற்றி பெற்றான். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உண்டான பாடத்தை, இதைவிட அழகாக யாரும் சொல்லிவிட முடியாது. தர்மர், பீமனைக் கண்ணனுடன் அனுப்பினார். பீமன், ஜராஸந்தனுடன் கடுமையாகப் போரிட்டான். கண்ணன், குறிப்பு காட்டினார். பீமன் அதை உணர்ந்து செயல்பட்டு வெற்றி பெற்றான் என்று உழைப்பின் அவசியத்தையும், தெய்வத்தின் துணையையும் ஜராஸந்தன் மூலம் மகாபாரதம் நமக்கு உண்ர்த்துகிறது.