பதிவு செய்த நாள்
21
ஆக
2013
12:08
புண்ணியத் தலத்திலும்கூட பாவ எண்ணங்கள் ஒரு நாளாவது அடங்காவிட்டால் குற்றம் உங்களுடையதே தவிர, அவர்களுடையது அல்ல. அருகில் வருபவர்கள் அனைவரையும் அடித்துச் செல்லும் ஆன்மிக அலையை எழுப்பு! என்றார் சுவாமி விவேகானந்தர். தீர்த்தத் தலங்கள், நமக்குள்ள ஆன்மிகத் தன்மையைப் பெருக்கிக் கொள்ளும் இடங்களாகக் கூறப்பட்டுள்ளன. யாத்திரைத் தலங்கள் தானங்களுக்கும் சேவைகளுக்குமான இடங்களாக நமது கலாச்சாரம் கூறுகிறது. பல தலங்களில் அதிக எண்ணிக்கையில் ஆசிரமங்களும் சத்திரங்களும் உள்ளன. அங்கு யாத்திரீகர்களுக்கு உணவும் உறைவிடமும் இலவசமாக வழங்கப்படும். நமது பாரம்பரிய போன்றவைஉள்ளூர் கலைஞர்கள் தங்களது திறமைகளை யாத்திரைத் தலங்களில் காட்டி, அந்தந்தப் பகுதிகளின் கலை மற்றும் வணிகம் மேம்பட உதவுகின்றன. பாரம்பரிய வழக்கப்படி, யாத்திரையானது நன்கு தொடங்கி நன்கு முடிவதற்கு, பலரின் ஆசிகளை வேண்டிப் பலவற்றைத் தானம் வழங்கும் தானம் என்ற நிகழ்ச்சியுடன் தொடங்கும். யாத்திரையின் முடிவில் திரும்பி வந்த பிறகு, தாங்கள் கொண்டு வந்த பிரசாதங்களை ஒரு பூஜை நடத்திப் பிறருடன் பகிர்ந்து கொள்வதும் உண்டு.
ஆங்கில ஆட்சி வரும் வரை, தஞ்சையை ஆண்ட மகாராஜாக்கள், தஞ்சாவூரிலிருந்து காசி வரையிலும் ஒவ்வொரு கிராமத்திலும் சத்திரங்கள் கட்டி தஞ்சையின் அபரிமிதமான நெல் வளர்ச்சியின் மூலம் யாத்ரீகர்களுக்கு உதவினர். யாத்திரீகர்கள் தங்கி உணவு உண்ணவும், வயதானவர்கள் அதிக காலம் தங்கவும், பிரசவ காலம் நெருங்கிய தாய்மார்கள் சத்திரத்திலேயே குழந்தை பெற்று பல நாட்கள் தங்கவும், துரதிருஷ்டவசமாக வழியில் இறப்பவர்களுக்கு அந்திமக் கிரியைகள் செய்யவும் வசதிகள் செய்து தரப்பட்டன. அது போன்ற பெரிய அளவிலான தர்மங்கள் நடக்கும் பெரிய சத்திரங்களும், ஆசிரமங்களும் இலவசமாகத் தங்கவும் மற்றும் உணவு வசதியுடன் கூடிய பல ஹிந்து யாத்திரைத் தலங்கள் பாரதம் முழுவதும் இன்றும் உள்ளன. ஆன்மிக உயர் அனுபவங்கள் பெறுவதற்குப் பொருளாதாரத் தாழ்வு நிலை ஒரு தடையாகிவிடக் கூடாது என்பதே இதிலுள்ள அடிப்படைத் தத்துவம். சமீபத்திய உத்தராகண்ட் வெள்ளமும், தொடர்ந்த பேரழிவுகளும் நமது தலங்களின் நிலைமை மற்றும் நிர்வாகம் பற்றி கடந்த இரு மாதங்களாகப் பேசப்பட்டு வருவது, சுற்றுலாவா? என்பதே.
புனித யாத்திரை மேற்கொண்டவர்களுக்கு இது எதைத் தெரிவிக்கிறது? இந்துக்களால், புனிதமான நதி மற்றும் புண்ணிய க்ஷேத்திரங்களைத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வணிக எனும் பெயரால் இவ்வாறு யோசிக்காமல் கேலிக்குள்ளாக்குவதை நாம் எப்படி அனுமதித்தோம்? யாத்திரைத் தலத்தின் பொறுப்பை யாத்திரீகர்களிடமே கொடுத்து விடுவதா? இது போன்ற சவால்களும், கேள்விகளும் வெகுஜன இந்துக்களுக்கு நிவாரணம் மற்றும் உதவும் நோக்கத்தில் வந்துள்ள அரசாங்க மற்றும் மற்ற நிறுவனங்களின் ஆளுமைக்கு உட்பட்டவை அல்ல. தலங்களின் புனிதத் தன்மையானது யாத்திரீகர்கள் ஒவ்வொருவரும் தங்களுடன் எடுத்துச் செல்லும் ஒன்று. நமது வாழ்க்கைமுறைகளும் நவீன தொழில் நுட்பங்களும்கூட அந்தந்த தலங்களின் சாந்நித்தியத்தை விழுங்கிவிடுகின்றன. புனித நதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் ஏற்படுத்தும் விளைவுகளை நாம் அறிவோமா? சுற்றுச் சூழலுக்கு மாறாக, தலங்களில் தங்குமிடங்கள் கட்டுவதால் ஏற்படும் விளைவுகளை நாம் விளங்கிக் கொள்கிறோமா? கரைபுரண்டோடும் நதிகளின் அருகில் தங்குபவர் களும், பழக்கதோஷத்தால் காசு தந்து பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் வாங்கும் ஆச்சரியமான அவலம் பற்றி எப்போதாவது நினைத்துப் பார்க்கிறோமா?
யாத்திரைத் தலங்கள், வளர்ச்சி மையங்கள் என்று அங்கு கட்டுப்பாடற்ற வகையில் நிலங்களில் முதலீடு செய்ய அனுமதிப்பது, யாத்திரையின் லட்சியமான தியாக மனப்பான்மை யோடு கூடிய சேவையை மறக்கடித்து, யாத்திரையால் உண்டாகும் பாரம்பரியப் பொருளாதார முறைகளையும் நசித்து விடுகிறது என நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வோர் இந்துவின் வீட்டிலும் சிறிய குடத்தில் போற்றிப் பாதுகாக்கப்படும் கங்கை நதி, அதன் கரையில் உயிர்நீத்தல் உயர் பிறவிகளைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படும் புண்ணிய நதி ஆகும். அப்படிப்பட்ட நதியின் இயற்கையான போக்கைத் தடுத்து, அதை நவீனமயமாக்கல் மற்றும் வளர்ச்சி என்னும் காரணங்களைக் காட்டி, குழாய்கள் மூலம் பயணிக்கச் செய்து நமது பாரம்பரியமான அடிப்படைத் தத்துவத்தையே முரண்பாடான வகையில் மாற்ற முனைந்துவிட்டோம்! புனிதம் என்பது வெளிப்புறத்தன்மைகளுக்கு அப்பாற்பட்டது என வாதிடலாம். எனினும், நமது தலங்களின் புனிதத்தன்மையைக் குப்பைத் தொட்டிகளும், கழிவுநீர்களும் கலக்கும் நதிகளினிடையில் எவ்வாறு செயல்படுத்த முடியும்? புனிதத்தையும் ரம்மியமான காட்சி அழகையும், மின்சார உற்பத்தி மற்றும் சேவைகளுக்காக இழந்துவிட்டோமே! மரங்களின் உதவியால் நீரைச் சேமித்து சமவெளிப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று அவற்றிற்கு ஜீவசக்தி அளிக்கும் மண்ணின் சக்தியை, ஆறுகளின் கரையோரங்களில் பல மைல்களில் வளர்ந்திருந்த மரங்களை வெட்டிச் சாய்த்து வீணாக்கிவிட்டோமே!
இந்தச் சமீபத்திய பேரழிவிற்கு நாமே காரணம்! நம் கவனக்குறைவின் காரணமாக 10,000 உயிர்கள் பலியாக வேண்டுமா? இதற்கு முன்பு அங்கு யாத்திரை சென்றவர்கள், அங்கு நடந்த சுற்றுப்புறச் சீரழிவுகளைக் காணாது விட்டதால், அவர்களும் பொறுப்பாளிகள் இல்லையா? நிதி அளிப்ப தும் மனதில் உள்ள பக்தியையும் விஞ்சி நாம் யாத்திரைத் தலங்கள் குறித்து ஓர் உயர் பொறுப்பை மேற்கொள்வதும் தேவை இல்லையா? இமாலய சுனாமி என்ற இந்தப் பேரழிவிற்கு தேசமே வருந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் இந்நேரத்தில், நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அது, சுவாமிஜி கூறியபடி, அந்தத் தலங்களை மறுசீரமைத்து அவற்றில் ஆன்மிகப் பேரலைகளை நிரப்ப வேண்டும். அதன் மூலம் சேவையும், தியாகமும் கவின்மிகு காட்சிகளினூடே காணப்பட வேண்டும்; அவை ஆன்மிக வளர்ச்சிக்கு ஏற்ற இடங்களாக உருவாக்கப்பட வேண்டும். க்ஷேத்திரங்கள், வெறும் சுற்றுலாத் தலங்களாகவும் மக்களின் தற்காலிக மகிழ்ச்சிக்காகப் பயணிக் கும் இடங்களாகவும் மாற்றப்படுகின்றன என்பது குறித்து கண்டும் காணாத போக்கை இந்து சமுதாயம் கைவிட வேண்டும். யாத்திரையின் மகத்துவம் வழிவழியாய் வந்த நமது சமுதாய மறுமலர்ச்சியின் சின்னம். அது யாத்திரையில் பெறும் மகிழ்வைவிட மிக உயர்ந்தது. நாம் எதைச் செய்தாவது அந்த உயர் தன்மையை மீட்டெடுக்க வேண்டும். செய்வோமா? இனி யாத்திரை புறப்படும் முன் தலங்களில் குப்பைகளைப் போடுவதில்லை. பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை. அத்தலத்தின் புனிதத்திற்கு என்னால் எந்த ஊறும் ஏற்படாது. இறைச் சிந்தனை யுடன் என்னால் இயன்ற ஆன்மிக அலையை எழுப்புவேன் என்று சபதம் ஏற்போம். சுனாமி இனி ஒருமுறை வராமல் தடுக்க இதுவே வழி.